மேட்ச் ஃபிக்ஸிங், பெட்டிங் செய்து பணமீட்டுவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைவிட சகலகலா வல்லவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. சமீப காலத்தில் பொருளாதாரத்தில் வலுவிழந்ததிலிருந்து ஊர் சுற்றிக் கடன் வாங்கியிருக்கிறது பிசிபி. அவர்கள் பணம் சம்பாதிக்கும் முக்கிய வழியாக ஃபிக்சிங் உருவெடுத்துள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் வீரர்கள் ஐந்து மாதங்கள் சம்பளம் இல்லாமல் விளையாடுவதாகப் படித்தேன். வீரர்களுக்கும் வாரியத்துக்கு ஆயிரத்து எட்டு முரண் இருக்கும் நிலையில்தான் அவர்கள் உலகக்கோப்பை சுற்றுப்பயணத்துக்கே வந்தார்கள். கடந்த இரு ஆசியக் கோப்பைகளில் பாகிஸ்தானின் ஆட்டம் மோசமாக இருந்ததால் பாபர் அசாம் மீது அழுத்தம் மலையளவு கூடிக்கொண்டே போனது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் கைகோர்த்துச் செயல்படும் சட்டவிரோதமான பெட்டிங் கம்பெனி ஒன்று சமீபத்தில் பாபரையும் ரிஸ்வானையும் அணுகியதாக ஒரு கட்டுரை படித்தேன். பாபருக்கு ரூ.25 கோடியும், ரிஸ்வானுக்கு ரூ.10 கோடியும் பேரம் பேசியுள்ளனர். சம்பளமே இல்லாமல் விளையாடி வருபவர்களுக்கு இந்தத் தொகை இமாலயம்தான். இருவருமே இந்த ஆஃபரை மறுத்துள்ளனர்.
பிசிபியின் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். போட்டியை வழக்கம் போல் வெற்றி பெறும் நோக்கத்தில் ஆட வேண்டும். ஆனால் அவர்கள் கேட்டுக்கொள்ளும் குறிப்பிட்ட பந்தில் நோ-பால், வைட், ஃபுல் டாஸ் போன்ற பந்துகளை வீச வேண்டும். அதன்மூலம் கல்லா கட்டுவதே அவர்களின் வணிக நோக்கம். இதற்கும் உடன்படாததுதான் பாபர் அசாமுக்கும் பிசிபிக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது. ‘பாகிஸ்தானின் சட்டையில் ஃபிக்ஸிங் என்கிற சேற்றுக் கரை இத்தனை ஆண்டுகளாய் அழியாமல் பதிந்திருக்கிறது. இனிமேலும் சகதியில் கால் வைக்கத் தயாராக இல்லை’ என்கிற புரட்சிகர அணுகுமுறையைத்தான் பாபர் கையில் எடுத்தார்.
பிஎஸ்எல் தொடரில் Wolf777 என்ற பெட்டிங் கம்பெனியின் லோகோவை தனது கிட்டில் இடம்பெறுவதை முழுமையாக மறுத்தார் முகமது ரிஸ்வான். நம்மூர் ஜாம்பவான்கள் சர்வசாதாரணமாக ட்ரீம் 11 விளம்பரத்தில் நடிக்கிறார்கள். ஆனால் பாபர், ரிஸ்வான் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் ரணத்தை ஆற வைப்பதற்காகவே இதிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். பெட்டிங் சார்ந்த எந்த அவச்சொல்லும் இந்தியா மீது படியாததால் நம் ஆட்களுக்கு இது வெறும் வியாபாரம்.
பாபர் அசாம் பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து விலகியது எதிர்பார்த்ததுதான் என்றாலும், அவரின் முடிவு மனமுடைய வைத்தது. முகமது ரிஸ்வான் கேப்டனானால் தலைமை நன்றாக இருக்கும். எனக்குப் பிடித்த வீரன் என்றாலும் தலைமை ஷடாப்கானிடம் போனால் பாகிஸ்தான் மீண்டும் பழைய பன்னீர்செல்வமாக மாறிவிடும்.
Comments