2021க்குப் பிறகு வாழ்வில் ஒரு கடினமான காலத்தைக் கடந்த இரு மாதங்களில் சந்தித்தேன். வேலையின்மை, உடற்பயிற்சியின்மை, கட்டுப்பாடின்மை, ஒழுக்கமின்மை என எல்லாமும் என் ஆளுமைக்கு எதிரான வாழ்க்கைமுறையில் உழன்று தவித்தேன். பணத்தின் அருமையைக் கற்றுக்கொண்டதைவிட குடும்பம் ஏன் ஒருவனுக்கு இன்றியமையாதது என்பதையும் புரிந்துகொண்டேன்.
காசு இல்லாததால் நண்பர்களுடனான சந்திப்பைத் தவிர்க்கும் அவலமும் நேர்ந்தது. கடன் வாங்காத குறை. யாரேனும் பண உதவி தரும்போது எதுவும் பேச முடியாமல் கூசி நின்று அதனைப் பெற்றுக்கொண்டேன். காசு கொடுத்த மறுகணமே, “அவ்ளோதான். இதை இதோட மறந்திடணும். நாளைக்கு எதுவும் பேசக்கூடாது” எனச் சொல்லும் பெரிய மனதுடையவர்களைச் சம்பாதித்திருக்கிறேன் இந்த இடைப்பட்ட காலத்தில்.
நேரத்தை வீணாக்கக்கூடாது என்பதற்காகத் துணிச்சலாக ஒரு முடிவை எடுத்தேன். ஒரு நூல் வெளியாக உள்ள வேளையில் அடுத்த நாவலை எழுதத் தொடங்கிவிட்டேன். முன் எப்போதும் இவ்வாறு செய்ததில்லை. அமெரிக்காவில் இம்மாதம் நாவல் எழுதும் மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது முடிக்கமுடியாமல் கூப்பில் கிடக்கும் நாவலை முடிப்பதற்கான சபதம் எடுக்கும் மாதம். நம்மூர் ஆட்கள் சுய இன்பத்திலிருந்து ஒதுங்கியிருப்பது போல எழுத்தாளர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் இது. ஆனால் என் நாவல் ஒன்றும் கூப்பில் கிடக்கவில்லை. அக்டோபர் முழுவதும் தொடர்ந்து எழுதிய அதே வேகத்துடன் நவம்பரில் அடியெடுத்து வைக்கிறேன். நாவலை டிசம்பருக்குள் முடிப்பதாக உத்தேசித்திருந்த நிலையில், இம்மாதத்துக்குள் நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளேன். இப்படியொரு மாதத்தை கவனத்தில் கொண்டு வந்தது எழுத்தாளர் அபிலாஷ்.
அதுமட்டுமின்றி நம்மூர் ஆட்களைப் போலக் காமத்திலும் சுய கட்டுப்பாட்டினை கடைப்பிடிக்கப்போகிறேன். கடந்த இரு மாத ஒழுக்கமின்மையை ஈடுசெய்யும் விதமாக அடுத்த நான்கு மாதங்களுக்கு விரதம். கொண்டாட்டத்தின் காலம் எதிர்நோக்கி அழைக்கிறது.
அடுத்த நூல் டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியாகிவிடும். கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்தப் புத்தகக் காட்சியின் சென்சேஷனலாக இருக்கும் என் உள்மனம் சொல்கிறது. பார்ப்போம்! எல்லாம் வாசகர்கள் அளிக்கும் வரவேற்பில்தான் உள்ளது. எனது முதல் இரு நூல்களுக்கு வெளியீட்டு நிகழ்வு என எதுவும் இருந்ததில்லை. ஆனால் இம்முறை நிச்சயம் அந்தத் தவற்றைச் செய்ய மாட்டேன். நிச்சயம் அதற்கொரு நிகழ்வு நடக்கும். நண்பர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெறப் போகிறேன். உரையாடப் போகிறேன். முரண்களை ஏற்று பதிலளிக்கப்போகிறேன். ஒரு வித்தியாசமான நிகழ்வுக்குத் திட்டமிட்டு வருகிறேன். எல்லாம் கைகூட வேண்டுகிறேன்.
அக்டோபர் தொடங்கிய விதமும் முடிந்த விதமும் வெவ்வேறாய் இருந்தன. எப்போதும் ஒரு மாதத்தைத் தொடங்கும்போது பெரும் புத்துணர்ச்சியுடன் தொடங்குபவன் நான். ஆனால் ஒருவித சோர்ந்த மனநிலையுடன்தான் அக்டோபரில் அடியெடுத்து வைத்தேன். ஆனால் மாத இறுதியில் ஒரு நற்செய்தி. மீண்டும் பணி சென்று உழைக்கப்போகிறேன் என்கிற உந்துதல். மீண்டும் உடற்பயிற்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு என என் ஆளுமைக்குத் திரும்பிவிட்டேன். “கன்னி ராசிக்கு அக்டோபர் இறுதி வரை சனிப்பெயர்ச்சியாம்டா. மாச கடைசில எல்லாம் நீங்கிடும்” என அம்மா சொன்னது பலித்துவிட்டதோ எனத் தோன்றுகிறது.
Sani peyarchi elle, Raghu, kedhu peyarchi