“Why are women... so much interesting to men than men are to women?' என்று விர்ஜினியா வுல்ஃபின் வரி ஒன்று உண்டு. இதை வாசிக்கும்போதெல்லாம் பெண்களின் சுவாரசியங்களை ஆண்கள் கண்டுகொண்ட அளவுக்குப் பெண்கள் ஆண்களுடையதைக் கண்டுகொள்ளவில்லை என்றுதான் தோன்றும். இதனால்தான் பெண்களை வர்ணித்து எழுதப்பட்ட அளவுக்கு ஆண்களை வர்ணித்து எழுதப்படவில்லை. கே.ஆர்.மீரா போன்ற மிகச்சிலர்தான் இதில் விதிவிலக்கு.
அவரது ‘மீராசாது’ குறுநாவலின் ஓரிடத்தில் இப்படி எழுதப்பட்டிருக்கும்:
‘கலவி மாதவனுக்குப் ஒரு புனிதச் சடங்காக இருந்தது. எனக்கு மாதவனின் மார்பு நினைவுக்கு வந்தது. பெரியதொரு பறவையின் நெஞ்சைப் போல மென்மையாகவும் கதகதப்பாகவும் இருந்தது அது. அவனுடைய நெஞ்சில் இறகு போலவோ துளசி இலை போலவோ நான் வாடிக்கிடந்தேன்.’
கே.ஆர்.மீராவின் எழுத்தில் ஆண்கள் மீதான எள்ளல் இருப்பது உண்மைதான். அந்த ஒரே காரணத்துக்காக அவரை பெண்ணிய எழுத்தாளர் என்று வகைப்படுத்திவிட முடியாது. அவர் பெண்ணியத்தை (Feminism) எழுதியதைவிடப் பெண்மையை (Feminine) எழுதியிருக்கிறார். அவரின் கதாநாயகிகள் அனைவரும் ஆண்களைக் கொண்டாடுபவர்களாகவும், வர்ணிப்பவர்களாகவும், அவர்களின் பிள்ளையை வயிற்றில் சுமக்க ஏங்கிப் பெற்றுப் போடுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவர் அளவுக்கு ஆண்களை வர்ணித்த பெண் எழுத்தாளர் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். சமீபத்தில் அகராதியின் ‘மரக்குரல்’ குறுநாவல் தொகுப்பிலும் இப்படியான ஓர் அம்சத்தைக் கண்டேன். அந்தத் தொகுப்பின் ‘நனவிலி’ கதையில் வரும் பெண், ஆணின் சட்டையை மீறித் தெரியும் நெஞ்சு முடி ஈர்ப்பதாகச் சொல்வாள். இப்படியான பெண்மைப் பார்வை (Female Gaze) இலக்கியத்துக்கே புதிது என நினைக்கிறேன். அல்லது நான் வாசித்த வரையில்!
கே.ஆர்.மீரா காதலையும் ஆன்மிகத்தையும் இணைத்துப் பார்க்கிறார். அவருடைய எல்லாக் காதலும் அல்லது காதலர்களும் கடவுளின் நவீன உருவாக இருக்கின்றனர். ‘மீராசாது’வில் வரும் மாதவன் கிருஷ்ணனைப் போலவும், ‘கருநீலம்’ குறுநாவலின் கதாநாயகன் சிவனைப் போலவும், ‘யூதாஸின் நற்செய்தி’ குறுநாவலின் நாயகனான தாஸ் யூதாஸாகவும் இருக்கிறார்கள். இதுவே கதைக்குப் பல அடுக்குகளைச் சேர்க்கிறது.
பொதுவாக நாவலில் கதையோடு சேர்ந்து இன்ன பிற எழுத்து வடிவங்கள் நிறைந்திருக்கும். உதாரணமாக ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலில் கதை, நாடகம், கவிதை, சிறுகதை, கட்டுரை என எல்லா வடிவங்களும் எழுதப்பட்டிருக்கும். ‘சொனாட்டா’வில் கதையும் தத்துவமும். ஃப்ரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ நாவல் முழுவதுமே கொஞ்சம் கதையும் நிறையக் கவிமொழியுமாக நிறைந்திருக்கும். கே.ஆர்.மீரா தன் படைப்புகளில் கதையை மட்டுமே முன்னிறுத்துகிறார். அவரின் ‘அந்த மரத்தை மறந்தேன் மறந்தேன் நான்’ குறுநாவலின் முதல் பத்தியைக் கீழே தருகிறேன்:
‘அப்பா ஒருமுறை ராதிகாவை வழியில் ஓரிடத்தில் மறந்துவிட்டுப் போய்விட்டார். அவளுக்கு அன்று பத்து வயது. சிறுநீர் கழிப்பது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்புப் பலகை வைத்திருக்கும் ஒரு சிறு காத்திருப்புக் கூரையின் கீழ் அவளை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு அப்பா பக்கத்திலிருந்த மதுவருந்தும் பாருக்குப் போய்விட்டார். குடித்த பிறகு அப்பா அவ்விடத்தில் பெயர் பெற்ற வேசியை நினைவு கூர்ந்தார். ராதிகாவை மறந்தார். வேசியின் வீட்டில் அன்று காவல்துறையின் ரெய்டு நடந்தது. அப்பாவைக் காவலர் கைது செய்தனர்’
சுமார் பத்து பக்கங்களுக்கு எழுத வேண்டிய சம்பவங்களை வெறும் ஒரே பத்தியில் எழுதிச் செல்கிறார் கே.ஆர்.மீரா. ஆனால் இச்சம்பவங்களின் ஆழமான உச்ச கணங்களைக் கதையின் பிற்பகுதியில் சேர்த்துச் சொல்லும் உத்தியைக் கையாள்கிறார். இதுவே அவரது எழுத்தைத் தனித்துவமாக்கிவிடுகிறது.
ஒரு மொழிபெயர்ப்பு நூலைத்தான் வாசிக்கிறோம் என்று எண்ண முடியாதளவுக்கு நேர்த்தியாக இருந்தது மோ.செந்தில்குமார் மற்றும் சிற்பி பாலசுப்ரமணியத்தின் மொழிபெயர்ப்பு. சந்தேகத்துக்கு இடமின்றி கே.ஆர்.மீராவை எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் பட்டியலில் வைக்கிறேன். வெறும் கருத்தியலை மட்டுமே நிறைத்திருப்பாரோ என்ற தயக்கத்துடனே இவரது படைப்புலகத்துக்குள் சென்றேன். அப்படிச் சென்ற என்னை இவரின் எழுத்து புரட்டிப் போட்டுவிட்டது.
Comments