இறந்த மீன் மட்டுமே அதன் இயல்பில் செல்லும் என ஆப்பிரிக்கப் பழமொழி ஒன்று உண்டு. ஊரடங்கு ஆரம்பமானதிலிருந்து என் மனதும் உடலும் இறந்த மீனைப் போல் எந்தப் பிடிமானமுமின்றி அதன் போக்கில் போய்க்கொண்டிருந்தன. துல்லியமாகச் சொல்வதானால் 2021ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி என் வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுத்தேன். எனது புத்துயிர்ப்புப் பயணம் டால்ஸ்டாயின் பிறந்தநாளிலிருந்து தொடங்கியது.
முடிவெடுத்த மறுகணமே மீண்டு விடுவதா மனிதனின் இயல்பு? பல தோல்விகளைக் கோரக்கூடிய பெரும் போராட்டமல்லவா இந்த சாகச பயணம்! ஒவ்வொரு நாளும் அகத்தின் சவால்களை எதிர்கொண்ட காலம் அது. அப்போதுதான் இக்கதையை மனதில் ஒரு விதையாய் நட்டு வைத்தேன். கூடுதலாக புதிய சவால் ஒன்றை முன்வைத்துக்கொண்டேன். உடல்ரீதியாகத் தயாராகாத வரை எதையும் எழுதக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். இந்நாவலின் ஒவ்வொரு சொற்களும் பல மைல் ஓடி, பளு தூக்கி, கடினங்களைத் தழுவி வியர்வையால் எழுதப்பட்டவை.
இரு ஆண்டுகளுக்கு முன்பு எனக்குப் பதற்றம் (Anxiety) இருந்தது. அப்போது நான் அதை அணுகிய விதமே வேறு. இலக்கியத்தைத் தீவிரமாக வாசிப்பவன் மற்றும் எழுதுபவன் என்கிற முறையில் அதைக் கவித்துவ வேதனையாக மட்டுமே அணுகினேன். ஆனால் அறிவியல் என்னை இத்துன்பத்திலிருந்து மீட்டெடுத்தது. சகல இன்ப, துன்பங்களும் உடலில் தோன்றும் ரசாயன மாற்றம் என அறியும்போது கிடைக்கக்கூடிய விடுபடல் அளப்பரியது.
நான் ஒரு ப்யானோ கலைஞனும்கூட. இறை நம்பிக்கை இல்லாத இசைக் கலைஞர்களையே பார்க்க முடியாது. நாத்திகம் இசைக்கு எதிரானது என்பதாலும், கல்வி பயின்ற பருவத்தில் தீவிர நாத்திகனாக இருந்திருக்கிறேன் என்பதாலும்கூட என்னால் இசையில் தேர்ந்தவன் ஆக முடியாமல் போயிருக்கலாமெனத் தோன்றுகிறது. நம்மை மீறிய சக்தி எதுவுமில்லை என்று எண்ணுபவனுக்கு இசை கைகூடாது.
எப்பேர்ப்பட்ட நாத்திகனாக இருந்தாலும் மனம் ஒன்றை தெய்வமாக கருதும். எனது இறை இசையாய் இருந்தது. கடவுள் முன் நிற்கும் எவனாலும் பிரக்ஞையுடன் இருக்க முடியாது. தன்னிலை மறக்கச் செய்யாத எதுவும் தெய்வமாகாது. இசை அதைச் செய்தது.
இருப்பினும் பேரிடர் காலத்தில் பலவீனப்பட்டிருந்தபோது அதிலிருந்து மீள இசை, இலக்கியம் என எந்தக் கலையும் உதவவில்லை. பலவீனத்தை வென்றெடுப்பதற்கு பலத்தால் மட்டுமே முடியும். 2021ம் ஆண்டின் ஒவ்வொரு நாளும் என்னை நினைத்து வெட்கிக்கூசி பொழுதைத் தொடங்குவேன். என்னைப் பற்றிய எனது அபிப்பிராயம், எதற்கும் லாயக்கற்றவன் என்பதாகத்தான் இருந்தது. இப்போது அப்படியல்ல; ஒரு சுய பெருமிதம், கர்வம். செய்வதற்குப் பல பணிகள். அடைவதற்குச் சில இலக்குகள். இசையிலிருந்து வேறு தெய்வத்திற்குத் திரும்பிவிட்டேன். இதைச் சாத்தியமாக்கிக்கொடுத்தது உடல் பலம்.
இசையை வழிபடுபவனாய் இருப்பினும் முழுநேர இசைக் கலைஞன் ஆக முடியாததை எண்ணி எனக்கு எந்த வருத்தமுமில்லை. இசைக் கலைஞர்கள் இசையைத் தேர்ந்தெடுப்பார்கள்; படைப்பாளிகளை இசைதான் தேர்ந்தெடுக்கும்.
பேரிடர் காலத்துக்குப் பிறகு அகக்கொந்தளிப்புக்கு உள்ளான பல்லாயிரக்கணக்கானோர் மீட்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. வாழ்வு அளிக்கும் எல்லா சவால்களையும் அச்சமின்றி, ஓடி ஒளியாமல் நேருக்கு நேர் சந்தித்து எதிர்கொண்டுவிடலாம் என்கிற வீராப்பு பிறந்திருக்கிறது. நான் ஓர் இறந்த மீன் அல்ல என்று நிரூபிக்கும் அகங்காரத்திலிருந்து பிறந்ததுதான் இந்த ‘சொனாட்டா’.
இந்நாவலின் இளம் நாயகனான ருத்ராவில் ஒளிந்திருப்பது பாலுவா? ஆம், ருத்ரா மட்டுமல்ல; பிரதாப், ஆரோக்கிய தாஸ், சிறில் ஆகிய கதாபாத்திரங்களிலும் என்னைக் கொஞ்சமேனும் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. இதில் சொல்லப்பட்டிருப்பது தனிமனிதனின் இருத்தலியல் சிக்கல் மட்டுமல்ல; ஒரு தலைமுறையின் பிரச்சனை.
இந்நாவல் உருவாவதற்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்த நண்பர் பாரி தமிழ்செல்வன், தீனன் கதிரவன், ஸ்ரீதேவி ஆகியோருக்கு மனப்பூர்வமான நன்றி. இந்நூலை வெளியிடும் எதிர் வெளியீடு பதிப்பகத்துக்கு நன்றி. பதிப்பாளர் அனுஷுக்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்நாவல் வெளியாவதற்கு முன்பே நான் ஈட்டிய பெரும் செல்வம் என்றால் அது சரவணன் சந்திரன் அண்ணன்தான். ‘அஜ்வா’ நாவலின் தாக்கத்தால் ‘சொனாட்டா’ எழுதுவதற்கு முன்பே இதற்கு சரவணன் சந்திரன்தான் முன்னுரை எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். அது சாத்தியமான சந்தோஷத்தைவிட எனக்கு குரு கிடைத்துவிட்ட நிறைவால் பூரித்துப் போகிறேன்.
Comments