சமீப காலமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போதே பல இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகின்றனர்.
பாடிபில்டிங் துறை என்பது பெயருக்குத்தான் ஆரோக்கியம் சார்ந்த துறை. இதனுள் இருக்கும் பலரும் ஆரோக்கியமாக இல்லை என்பதே உண்மை. சராசரி மனிதர்களிடையேகூட ஆரோக்கியத்துக்காக உடற்பயிற்சிக்கூடத்துக்குச் செல்வோரைவிட அர்னால்ட் போலத் தசைகளைப் பெரிதாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செல்கின்றனர். நவீன வாழ்க்கைமுறையில் ஆறே மாதங்களில் அர்னால்ட் ஆகிவிட முடியாது என்கிற யதார்த்தத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் பலரும் வழிதவறிப்போய் ஸ்டெராயிட்ஸ் எடுத்துக்கொள்கின்றனர்.
ஸ்டெராயிட்ஸ் எடுத்துக்கொண்டால் தசைகள் பெரிதாகும் என்பது உண்மைதான். ஒருவர் பாடிபில்டிங் காம்படீஷன் செல்கிறார் எனும்பட்சத்தில் மட்டும் ஸ்டெராயிட்ஸ் எடுக்கலாம். காம்பட்டீஷன் முடிந்ததுமே PCT (Post Cycle Therapy) சென்று உடலுள்ள ஸ்டெராயிட்ஸை வெளியேற்றிவிடுவது அவசியம். அதை நீண்ட காலத்துக்கு உடலிலேயே தங்க அனுமதிக்கும்போதுதான் அது நச்சுத்தன்மையாக மாறுகிறது.
ஸ்டெராயிட்ஸை உடலிலிருந்து நீக்கிய பின் தசை இழப்பு உண்டாகும். ஸ்டெராயிட்ஸ் எடுக்கும்போது இருந்த உடல் அதன் பிறகு இருக்காது. இது ஒருவரை உளவியல் ரீதியாக பாதிக்கும். தங்கள் உடலை அப்படிப் பார்ப்பதை பலவீனத்தின் அடையாளமாகக் கருதிக்கொள்வார்கள். இதனால் மனம் வராமல் பலர், ஸ்டெராயிட்ஸை உடலிலேயே தங்க விடுபவர்களும் உண்டு.
சராசரி மனிதரால் அதிகபட்சமாகவே ஆண்டுக்கு சுமார் 6 முதல் 7 கிலோ வரை மட்டுமே மசுல்ஸ் வளர்க்க முடியும். அதுவும் எளிதானதல்ல; நல்ல மரபுவழிப்பண்பியல் வேண்டும். தவறாமல் வாரத்திற்கு ஐந்திலிருந்து 6 நாட்கள் தீவிர உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். ஒருவேளை எதிர்பார்த்த ரிசல்ட் வந்தாலுமேகூட உங்களைவிடச் சிறந்த உடல்வாகு வைத்திருக்கும் இன்னொருவரைப் பார்த்துப் பொறாமைப்படவே செய்வீர்கள். இதற்குப் பெயர் ‘பாடி டிஸ்மார்பியா’. ஆரோக்கியமாக உணவு உட்கொண்டு இந்த ரிசல்ட்டை பெற்றாலும் ஒரு பாடிபில்டருக்கு இருக்கும் உடல்வாகிலிருந்து 30% கூட எட்ட முடியாது என்பதே கசக்கும் உண்மை.
ஒருவர் தொடர்ந்து ஸ்டெராயிட்ஸ் எடுத்து வந்தால் அவரின் டெஸ்டாஸ்டிரோன் அளவு சரியும். செக்ஸ் வாழ்க்கை அடி வாங்குவது உட்பட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பாடிபில்டிங் என்பது ஒரு விளையாட்டுத்துறை. இதில் பெரிய உச்சம் தொட்டவர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து உயர்ந்திருக்கிறார்கள். அவர்களின் கட்டுமஸ்தான உடலைப் பார்த்து மாயை கொண்டு பிற துறையைச் சேர்ந்த சராசரி மனிதர்கள் இதில் விழுவது சரியல்ல.
Comentarios