தனிமையை இருவகையாகப் பிரித்து எழுத்தாளர் ஜெயமோகன் ‘இரு பெருநிலைகள்’ உரையில் பேசியிருக்கிறார். ஒன்று, இருத்தலியலின் தனிமை. அவர் காலத்தில் தொடங்கி என் தலைமுறையினர் வரை பலரும் தங்களின் அடையாளமாகக் கொள்ளும் தனிமை இது. தன் செயல்களாலோ செயலின்மையாலோ இவ்வுலகம் ஒரு மாற்றத்தையும் சந்திக்கப்போவதில்லை எனும் நிஹிலிஸ்டுகளின் தனிமையும்கூட. இதனாலேயே இருத்தலியல் சிக்கலால் தனித்திருப்பவர்கள் மீது எப்போதும் ஒவ்வாமை உண்டு.
இன்னொரு வகை தனிமை, பேராண்மையானது (Masculinity). இதை வேங்கையின் தனிமை என்கிறார் ஜெயமோகன். ‘முதற்கனல்’ நாவலில் பீஷ்மரைக் குறிக்கும் வகையில் தனிப் பகுதியாகவே வேங்கையின் தனிமையை எழுதியிருக்கிறார். பீஷ்மர் வனவாசம் சென்றடையும் இடம் அது. நாவலை வாசித்து முடித்த அன்றைய தினமே இந்த உரையைக் கேட்க நேர்ந்ததால் என் சிந்தனையை மிகச்சரியாகத் தொகுத்துக்கொள்ளவும் முடிந்தது.
மகாபாரதம் பற்றிய சிறு அறிமுகமும் இல்லாதவனாக, ஆசான் வழியாகவே அறியும் நிறைவைப் பெறுவதற்காகவே ‘வெண்முரசு’ தொடரை வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அண்மையில் சந்திக்கும் நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் பீஷ்மரைச் சொல்லிச் சிலிர்க்காமலில்லை. ‘இன்னும் அர்ஜுனன், கர்ணன் போன்ற முதன்மை பாத்திரங்கள் எவரும் வரவில்லையெனினும், பீஷ்மரே மயிர் கூசச்செய்கிறார்’ என்று வியந்து வருகிறேன். ‘முதற்கனல்’ நாவல் எவரையும் மையமாகச் சுற்றி நிகழவில்லையென்றாலும், பீஷ்மரே இதன் நாயகர். அவர் எங்கோ கொல்லப்படப்போகிறார் என்று அறிந்தே அவருக்காக சிந்துவதற்கான கண்ணீரைத் தேக்கி வைத்திருக்கிறேன். ஆனால் பீஷ்மரின் பேராண்மை அவற்றை வறண்டுபோகச் செய்கின்றன.
அம்பையை விடுவித்தபோது அவள் கண் வழி தெரியும் பீஷ்மரின் தொலைவுருவமே அவர் நாயகராக உருவெடுக்கும் இடம். பிறகு அது அவரின் பெருமனமல்ல; வெறும் தந்திரமென அம்பையின் காதலனான சால்வ மன்னன் வாயிலாக அறியுமிடத்தில் பேராண்மை கோருவது அந்தத் தந்திரம்தானெனவும் புரிகிறது.
‘தேவவிரதனான பீஷ்மர் பாவம் பார்த்து விடுவித்தவளை என்னால் ஏற்க முடியாது. நீ விரும்பினால் என் அந்தப்புரத்தில் வாழமுடியும் உனக்கு மணிமுடியும் செங்கோலும் மட்டும்தான் இருக்காது’ என சால்வ மன்னன், மீண்டு வந்த அம்பையை நிராகரிக்கிறான். தன்னுடைய காதலனைக் கீழ்மகனாகக் காட்டித் தந்த தந்திரவாதியான பீஷ்மரை அம்பை வெறுத்து, அவனைக் கொல்லத் துடிக்கிறாள். உண்மையில், அம்பைக்கு பீஷ்மர் ஒரு தீங்கும் இழைக்கவில்லையெனினும் அவளுக்குள் பகையைத் தூண்டுவதும், தலைவிரித்தாடிச் சலனமடைய வைப்பதும் பீஷ்மரின் நிதானமான பேராண்மை மட்டுமே.
‘இரு பெருநிலைகள்’ உரையில் இதுபோன்ற ஆன்மிக பேராண்மையான தனிமைவாதிகளால் துணையை வைத்துக்கொள்ள முடியாது என்கிறார். அவ்வரியைக் கேட்டதுமே நானெழுதிய ‘சொனாட்டா’ நாவலின் ஆரோக்கிய தாஸ் நினைவுக்கு வந்து போனார். குடும்பத்தைக் காப்பது ஒரு வகையான ஆண்தன்மை என்றால், எவருடனும் ஒன்ற முடியாமல் பெருஞ்செயல்களில் மட்டுமே ஈடுபடுவது மற்றொரு வகை. பேராண்மை வீழ்ச்சி கொண்ட நவீனக் காலத்தில் இரண்டுக்குமே இடமுண்டு. ஆனால் ஜெயமோகனின் அந்தக் கூற்றிலிருந்து பார்த்தால் பீஷ்மரைப் புரிந்துகொள்ள முடியும். காமத்திலிருந்து வாழ்நாள் விரதமிருப்பதாக பீஷ்மர் முடிவெடுத்த கணத்திலேயே அவரின் ஆண்மை பலமடங்கு பெருகுகிறது.
சினம் கொண்ட அம்பை, தன் மறுபிறவியான சிகண்டியை ஏவி பீஷ்மரைக் கொல்லச் சொல்கிறாள். இருளடைந்த வனப்பகுதியில் பீஷ்மரை அவரென அறியாத சிகண்டி, அவரிடமே போர்த்தந்திரங்களைக் கற்கிறான். தன்னைக் கொல்வதற்காகவே ஒவ்வொரு கணமும் உயர் வாழ்பவனுக்குத் தன்னுடைய போர்த்தந்திரங்கள் அனைத்தையும் கற்பிக்கும் பீஷ்மரின் பேராண்மைக்கு இணை எதுவுமே இல்லை.
“என்னை வணங்கி வடமீன் நோக்கி அமர்வாயாக!” என்றார் பீஷ்மர். சிகண்டி அவர் பாதங்களை வணங்கியபோது அவனுடைய புழுதி படிந்த தலையில் கைவைத்து “வீரனே நீ உன் இலக்கை அடைவாய். அடைந்தபின் ஒருகணமும் வருந்தமாட்டாய். வீரர்களுக்குரிய விண்ணுலகையும் அடைவாய்” என்று வாழ்த்தினார்.
இதுவே ‘முதற்கனல்’ நாவலின் உச்சம்.
留言