top of page
Search
Writer's pictureBalu

‘முகமூடிகளின் பள்ளத்தாக்கு’ (கடிதம்)

அன்புள்ள பாலுவுக்கு,


நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் அனைவரும் நலமா? சில வாரங்களாக உங்களிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவும், சில கேள்விகளைக் கேட்கவும் நினைத்துக்கொண்டே இருந்தேன். முக்கியமாக ‘முகமூடிகளின் பள்ளத்தாக்கு’ புத்தகத்தைப் பற்றி சிலவற்றைப் பேசவும், இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவும் இந்தக் கடிதத்தை இப்பொழுது எழுதுகிறேன்.


‘முகமூடிகளின் பள்ளத்தாக்கு’ புத்தகம் வந்தவுடன் பொறுமையாகவே படிக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் புதிராகவே கதை எனக்கு இருந்ததால் மந்தமாகவே படித்துக்கொண்டிருந்தேன். போகப் போகக் கதை என்னை வேகமாகப் படிக்க நகர்த்திச் சென்றது. அதிகமாக ஹைலைட்டர் பயன்படுத்தும்படி இருந்தது.


புத்தகத்தைப் படித்தவுடன் ஒரு புதிய விதமான புத்தகத்தைப் படித்த ஒரு அனுபவம் கிடைத்தது. முக்கியமாக இந்தக் கதை சொல்லப்பட்ட விதம் மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஏனென்றால் கதை முடிந்தவுடன் முதலில் உள்ள அத்தியாயங்களை மீண்டும் படிக்கத் தூண்டச் செய்தது. இந்தப் புத்தகத்தைப் பற்றி எனக்குச் சில கேள்விகளும் குழப்பங்களும் இருப்பதால் சில பகுதிகளாகப் பிரித்து எழுதி உள்ளேன்.


முதலில் கேள்விகளைக் கேட்டுவிடுகிறேன்.


1. இந்தப் புத்தகத்தில் நான் மிகுந்த ஆவலோடு காத்திருந்தது, ஏன் பள்ளத்தாக்கைவிட்டு வெளியேறினார் என்ற காரணத்தைப் படிப்பதற்காகவும், ஓமின் சத்தியத்திற்காகத் தன் உயிரையும் மாய்க்கத் தயாராக இருக்கும் அவர் அப்படிச் செய்ததற்கு என்ன காரணம் என அறியவும் ஆவலாக இருந்தது. ஆனால் அந்தக் காரணத்தை அறிந்துகொண்டதும் அது ஒரு பெரிய காரணமாக எனக்குத் தோன்றவில்லை. உங்களுக்கு எப்படி இருந்தது?


2. அவர் செய்த ஒரே தவறு உலைக்களத்தில் அவளைப் பற்றி கேட்பதும், அவள் நினைவாக இருந்துகொண்டு அது பொய் என்று சொல்லி அவரை அவரே ஏமாற்றிக்கொண்டதுதான். இருப்பினும், இதை அவர் சுலபமாகத் திருத்திக்கொள்வார் என்றுதான் நினைத்தேன். இவை காட்டிலும் அவரின் சத்தியமே அதிக மடங்கில் மேலோங்கி இருந்தது. அதனால்தான் எனக்கு அவ்வாறு தோன்றியது. கடைசியாக அவர் பள்ளத்தாக்கு விட்டு வெளியேறும்போது அவர் மனநிலையை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. உங்களுக்குப் புரிந்ததைப் பகிரவும்.


3. இந்தப் புத்தகத்தை எப்படிச் சரியாகப் புரிந்துகொள்வது என்பது பற்றிக் குழப்பமாகவே இருக்கிறது. பள்ளத்தாக்கில் அவர்கள் வாழும் வாழ்க்கை சமத்துவமாகவும், எந்தத் தொழில் செய்பவர்களும் சமம் என்பதை உணர்ந்தும், தங்கள் உடலையும் மனதையும் கடுமையாக உழைத்துத் தூய்மையாகப் பார்த்துக்கொள்வதிலும், முக்கியமாக தங்களின் சமத்துவத்திற்காகவே வாழ வேண்டுமென்றும் நினைக்கிறார்கள். அதில் ஏதேனும் ஒரு குழந்தை அல்லது எந்த ஒரு மனிதனும் தன் விருப்பப்படியோ ஆசைப்படியோ வாழ இயலாது என்ற நிலை உருவாகிறது. மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.


அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அவர்கள் விரும்பிய வாழ்க்கைக்குள் சுதந்திரத்துக்குள் நுழைவது அத்துமீறல் ஆகத் தோன்றுகிறது. உலக நன்மைக்காகச் செய்யும் இந்த அத்துமீறலைச் சரி என்று ஏற்றுக்கொள்ளலாமா?


புத்தகத்தின் தாக்கங்கள்


ஒவ்வொரு புத்தகத்தைப் படிக்கும்போதும் அதிலுள்ள ஏதேனும் ஒரு பிழைகளை நம் வாழ்வில் நாமும் செய்திருப்போம். ஒரு புத்தகத்தில் அந்தப் பிழைகளைப் படிக்கும்போது என்னை நானே அவமானமாய் கருதுகிறேன். ‘முகமூடிகளின் பள்ளத்தாக்கில்’ அதிக பக்கங்களில் நான் அவமானங்களைச் சந்திக்கும்படி இருந்தது. இதில் உடலுழைப்பைப் பற்றி நிறைய வரிகள் கூறப்பட்டுள்ளது. மிக முக்கியமாக ‘ஆன்மா என்னும் அன்பைச் சரியாகச் செய்யக்கூடிய வில்லாகத்தான் உடல் இருக்க வேண்டும்’ என்ற வரி. என்னை மிகவும் யோசிக்க வைத்தது.


‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ புத்தகத்தைப் படித்த பிறகு பேருந்தில் செல்லும்போது மிக கவனத்தோடுதான் செல்வேன். (புத்தகத்தின் தொடக்கத்தில் அந்தப் பெண்ணின் எண்ணங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது)


இதுபோல ஒவ்வொரு புத்தகத்தைப் படித்த பின் எனக்குள் நான் மாறிக்கொண்டிருப்பது அறியாமல் இருந்தேன். ‘முகமூடிகளின் பள்ளத்தாக்கில்’ உடலுழைப்பைப் பற்றிப் படித்த பிறகு நீங்கள் ஏன் இவ்வாறு உடலுழைப்பு செய்கிறீர்கள் என்று அறிந்துகொண்டேன்.


நானும் என் உடலை உழைக்க முடிவெடுத்தேன். சில வாரங்களுக்குப் பின் அது தோல்வியில் முடிந்தது. இருப்பினும், தினமும் நான் அதனைச் செய்ய நினைப்பேன். ஆனால் முடியாது. அப்போதெல்லாம் எனக்குள் ஒரு குற்றவுணர்வு ஏற்படும். ஒவ்வொரு முறை முயன்றும் அது தோல்வியில் முடியும்போது அந்தத் தோல்வியைக் கையாள்வதும், என்னை நான் கட்டுப்படுத்த முயன்று தோல்வி அடையும்போதும், இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடித்த பின்னும் எனக்குள் ஏதோ ஒரு முழுமையடையாத திருப்தி இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும். அது மிகவும் வேதனையானது. அடுத்த புத்தகத்தைக்கூட என்னால் படிக்க முடியவில்லை.


ஒரு புத்தகத்தை வெறும் படித்து மட்டுமே அதனைக் கடந்து சென்றுவிட முடியாது என்பது எனக்கு அப்போது புரிந்தது. ‘சில சமயங்களில் ஒரு பொறியிலிருந்து தப்புவதற்கான முக்கியமான வழி அதில் சிக்கிக்கொள்வதுதான்’ என்ற வரிகளின்படி, நான் WFH விட்டு வெளியேறி வந்தபின் என் குற்றவுணர்வைச் சரிபடுத்திவிடுவேன் என்றும், அதுவரையில் அந்தப் பொறியில் மாட்டி இருக்க முடிவெடுத்துவிட்டேன்.


அதன் பின் உங்களை நினைத்து நான் பெருமிதம் கொண்டேன். நீங்கள் உங்களைக் கட்டுப்படுத்திச் சரியாக இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று. வாழ்த்துகள்.


இந்தப் புத்தகத்தைப் படைத்த தருணுக்க்கு நன்றி; மிகச்சிறப்பாக மொழிபெயர்த்துள்ள சாருவுக்கு நன்றி. மிகச்சரியான நேரத்தில் பரிந்துரைத்த உங்களுக்கும் நன்றி.

என்றும் அன்புடன்,

த.நவீன்குமார்

Love You



*


அன்புள்ள நவீன்,


இங்கு எல்லோரும் நலம். அங்கும் அப்படியே என நம்புகிறேன்.


‘முகமூடிகளின் பள்ளத்தாக்கு’ நாவலைப் பற்றி நீங்கள் எழுதியது மகிழ்ச்சி. ஏனெனில் இந்நூலைப் பற்றித் தமிழில் குறிப்புகளைக் காண்பதே அரிது. ஆங்கிலத்தில் பிரபல பத்திரிகையான இந்துஸ்தான் டைம்ஸ்கூட மதிப்புரை எழுதியிருக்கிறது. எனக்குத் தெரிந்து, தமிழ் வாசகனுக்கு உங்கள் கடிதமே முதல் கட்டுரையாகக்கூட அமையலாம். நானும் இந்நூலைப் பற்றி யாரேனும் ஏதேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேடினேன். அராத்து மட்டும் ஒரு சில பக்கங்கள் மட்டும் படித்து சாருவுக்கு வியாபாரமாக வேண்டுமென்பதற்காக சில புகழ் மொழிகள் எழுதியிருக்கிறார். சாருவைத் தவிர யாருக்கு வேண்டும் அந்தப் புகழ் மொழி? ஒரு நூலை வாசித்த பிறகு அதன் நுண்ணியங்களை உரையாடுவதே அந்நூலுக்கு நாமளிக்கும் மதிப்பு.


‘முகமூடிகளின் பள்ளத்தாக்கு’ படித்ததிலிருந்து எந்த நூலையும் படித்துச் சிலிர்க்க முடியவில்லை. அப்படிப்பட்ட இலக்கிய மாயம் அரிதாகவே நடக்கும் என்பார்கள். இதை மிஞ்சக்கூடிய படைப்பை வாசிக்க நேர்ந்தால்தான் அதை இலக்கியம் என்றே மனம் ஏற்கும் நிலையில் இருக்கிறேன்.


இது நீங்கள் எழுதிய கடிதமாகவும் அதற்கு நான் எழுதும் பதில் கடிதமாகவும் பார்க்க வேண்டாம். நீங்கள் எண் போட்டுக் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் என்னிடம் பதிலில்லை. எனவே இது என் மதிப்புரையாகவே இருக்கப்போகிறது. உங்களுக்கு எழுந்த எந்தச் சந்தேகங்களும் எனக்கு எழவில்லை என்பதால்தான் என்னிடம் பதிலில்லை என்கிறேன். நாம் முற்றிலும் வேறு கண்ணோட்டங்களில் வாசித்திருக்கிறோம். ஒரு நாவலை நூறு பேர் படிக்கும்போது அது நூறு நாவல் ஆகும் என்று ஒரு வாசகம் உண்டு. அதற்கேற்ப இது நிகழ்ந்திருக்கிறது.


உங்கள் குழப்பங்களுக்குச் சாருவின் வார்த்தைகளால் விளக்கமளிக்க முடியும். சாரு இந்நாவல் தமிழில் வெளியானபோது ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொல்லி, எழுதி விளம்பரம் செய்தார். “நமக்கு நல்லது நினைப்பவர்களால் நமக்கு ஏற்படும் தீங்கைப் பற்றியதே இந்நாவல்”. முதன்முறையாக நாவலை வாசித்ததும் சாரு சொன்னது எந்த இடத்தில் நியாயப்பட்டது என்று யோசித்தேன். என் யோசனைக்கான தீர்வாக உங்கள் கேள்விகள் இருந்தன. இதேகாரணமாகக்கூட அந்த Pathfinder பள்ளத்தாக்கைவிட்டு ஓடியிருக்கலாம். இது இப்படித்தான் என ஏற்றுக்கொள்வது வாசிப்பவரின் சுதந்திரமே.


நான் முற்றிலும் இந்நாவலை வேறு விதத்திலிருந்து படித்தேன். படித்தவரையில் போர் பற்றி அல்லாத, Masculinity பற்றி எழுதப்பட்ட இலக்கியம் இது. தருண் அதற்காக ஒரு புதிய உலகையே உருவாக்கியிருக்கிறார். வாசிப்பனுபவமும் வேறு மாதிரியாகவே இருந்தது. இதன் ஒவ்வொரு பக்கங்களைக் கடந்து போகும்போது ஒரு செட் புஷ்-அப்ஸ் எடுத்தது போல் உணர்ந்தேன். இதே நாவலை கடந்தாண்டு வாசித்திருந்தால் இவை எதுவும் புரிந்திருக்காது. அவர்கள் அனைவரும் அந்நியர்கள் போல் இருந்திருப்பார்கள். ஆனால் இந்நூல் என்னைத் தேர்ந்தெடுத்த விதத்திற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். மிகச்சரியான நேரத்தில் படித்ததாலேயே என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது. நான் உங்களுக்குச் சொல்வதும் அதுவே. நீங்கள் வைத்த இலக்கை அடைந்தபின், இதுதான் மீட்சி என்பதை மனப்பூர்வமாக உணர்ந்த பின் ‘முகமூடிகளின் பள்ளத்தாக்கை’ மீண்டும் வாசித்துப் பாருங்கள். அது உங்களுக்குப் பல விடைகள் அளிக்கும். அதுவரை உங்களுக்கான சந்தேகம் அப்படியே இருக்கட்டும்.


நீங்கள் சொல்வது போலவும், சாரு சொல்வது போலவும் எனக்கு வஃபதார்கள் செய்வது அத்துமீறலாகப் படவில்லை. அப்படியே அத்துமீறலாய் இருந்தாலும் உலக நலனுக்காக நம் நலனுக்காக அது சரி என்பது என் வாதம். இப்போது இணையத்தில் சில சோம்பேறி இளம் ஆண்கள் ‘Stay Hard, Stay out of your comfort zone’ என்ற வாசகத்தைக் கிண்டல் செய்து மீம் போடுவதைப் பரவலாகப் பார்க்கலாம். ஆண்கள் சொகுசாக இருப்பதற்காகப் பிறந்தவர்கள் அல்ல; கடுமையாக உழைக்கவே படைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை நம்புகிறேன். ஒருநாள் சாலையில் நடந்துபோகும்போது சுற்றிப் பாருங்கள். இந்த உலகை உருவாக்கியது யார்? அவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டியது யார்? இளம் சோம்பேறிகளின் பேச்சைக் கேட்டு சொகுசாகவே வாழ்ந்துகொண்டிருந்தால் மகத்தான காரியங்களைச் செய்ய முடியாது. நான் எழுதிய வரியொன்று நினைவிற்கு வருகிறது. ‘ஒட்டுமொத்த தேசமும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிட்டால் அந்நாடு அண்டை நாட்டால் கைப்பற்றப்படும்’. எனவே வஃபதார்கள் எதிர்பார்ப்பதைப் போல, ஓம் கருணையின்றி கோருவதைப் போல மிகச்சிறந்தவற்றையே ஆண்கள் கொடுக்க வேண்டும்.


சாரு இந்நாவலைச் சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரும் கட்டாயம் படித்தே ஆக வேண்டிய நாவல் என்றார். நான் அப்படிப் பரிந்துரைக்க மாட்டேன். இது வெறும் ஆண்களுக்கான நாவல். அனைத்து ஆண்களும் படித்தே ஆக வேண்டும்.


பிறகு இரண்டு விஷயங்கள். உடலுழைப்பின் தொடக்கத்தில் வலியையும், தோல்வியையும் உணர்வது இயல்பே. நம் தசைகள் அதற்குப் பழகியிருக்கவில்லை என்பதுதான் அதன் பொருளே அன்றி அதற்குப் பெயர் தோல்வி அல்ல. முதல் ஒரு மாதத்திற்குத் தாங்க முடியாத வலி இருக்கும். வலிக்கிறது என்பதற்காக உடற்பயிற்சியை விட்டுவிட்டால் மீண்டும் ஜீரோவிலிருந்துதான் தொடங்க வேண்டும். கிட்டத்தட்ட CA தேர்வு எழுதுவது போல. எனவே வலிக்கு மருந்தாக மீண்டும் வலியைத்தான் கொடுக்க வேண்டும். நம் உடலை அதற்குப் பழக்க வேண்டும். இரண்டாவது மாதத்தில் அந்த வலி பழகிவிடும். மூன்றாவது மாதத்திலிருந்து நம் தசை பளு தூக்குவதற்குத் தயாராகிவிடும். எனவே உடனடியாக விட்டதைத் தொடருங்கள்.


இன்னொரு விஷயம், ஏதோ ஒரு விஷயம் நம்மைப் பொறியிலிருந்து மீட்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். அது சரி வராது. நான் இதே மாதம் கடந்தாண்டும் WFHதான் செய்தேன்; இந்தாண்டும் அதேதான். எனவே சூழல் எப்படியிருக்குமென நம்மால் சொல்லவே முடியாது. நான் எனது பெரும்பாலான நேரத்தைக் கழிப்பது என் அறையில்தான். என்னுடைய மிக மோசமான நாளினையும் இதே அறையில் கழித்திருக்கிறேன். தன்னம்பிக்கையை அதிகம் உணர்ந்ததும் இதே அறையில்தான். எனவே புறம் ஒரு பொருட்டல்ல; அகத்தைச் சரி செய்துவிட்டால் எல்லாமே மாறிவிடக்கூடிய அதிசயத்தை விரைவில் நீங்கள் கண்டுணர வாழ்த்துகிறேன்.



அன்புடன்,

பாலு





106 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page