top of page
Search
Writer's pictureBalu

சொனாட்டா - அகிலன் அவதானிப்பு


சொனாட்டா ஒரு இசைக் கலைஞனின் தன்மீட்சியைப் பேசுகிறது. கிணற்றில் விழுந்து அடியாழம் வரை சென்று மீண்டும் மேலெழுந்து வருகிற ஒரு வாழ்வை விவரிக்கிறது.

நாவலில் வரும் ருத்ரா, நவீன யுகத்தின் பிரதி. ஆரோக்கிய தாஸ் முந்தைய சமூகத்தின் ஓர் ஆல்ஃபா ஆண். இருவருடைய கதைகளும் நமக்கு விவரிக்கப்படுகின்றன. இந்த இரு கதாபாத்திரங்களின் முரண்களின் வழியே நாம் நம்முடைய இடத்தை கண்டறிந்து கொள்ளலாம்.

ஆரோக்கிய தாஸ் ஒரு குழுத் தலைவனுடைய இடத்தில் இருக்கிறான். உடலையும் மனதையும் கட்டுக்கோப்பில் வைத்திருக்க முயல்பவன். ருத்ரா, இன்டர்நெட் இன்பங்களுக்கு அடிமையாகியும் சுய பச்சாதாபத்தாலும் தன்னையே வருத்திக் கொள்கிறவன். இருவரும் பெண்களை தங்கள் வாழ்வில் எதிர்கொள்கிற விதமும் வேறுவேறு வகையாக இருக்கின்றன.

பாலு உருவாக்குகிற உலகத்தின் பெண்கள் முதிர்ச்சியும் பக்குவமும் நிறைந்தவர்கள். சொனாட்டாவிலும்  நிறையப்  பெண்கள் வருகிறார்கள். எனக்கு மானசியைப் பிடித்திருந்தது. உதாரணமாக ருத்ரா ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறான். எந்த ஒரு பெண்ணும் உனக்கு அடிமையாக இருக்கிறேன் என்பதைப் புகழ் மொழியாக, காதலாக ஏற்றுக் கொள்வாள். ஆனால் மானசிக்கு தெரியும். எது ஒருவனை அடிமையாக்குகிறதோ அதில் இருந்து மீளும் போது அதை வெறுக்கச் செய்வான். ஆகவே அவள் அதை ஏற்க மாட்டாள்.

இந்த நவீன வாழ்க்கை நமக்கு அளித்திருக்கிறவற்றில் எதை எடுப்பது என்பதை விடவும் எதைத் துறக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது.

யூட்யூப், இன்ஸ்டாகிராம் அல்காரிதங்களால் நுண்ணுணர்வும் பொறுமையும் அற்ற ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. இங்கே தீர்வை அல்ல; எது பிரச்சனை என்பதையே சொல்ல வேண்டியிருக்கிறது. சொனட்டா அதைச் சொல்கிறது.

நூற்றுக் கணக்கான tabகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிற ஒரு பிரௌசரில் இருந்து எக்ஸிட் நோக்கிச் சொல்லும் துணிவு ஒரு சிலருக்கு வாய்க்கிறது. பாலுவுக்கு அது இருக்கிறது.
வாழ்த்துக்கள் பாலு.

அகிலன் தேசிங்கு

***


இன்ஸ்டாகிராமில் ஒரு கும்பல் இன்னும் என்னை பெண் வெறுப்பாளன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில், எனது பெண் கதாபாத்திரங்கள் Intelligent ஆக இருக்கிறார்கள் என்கிற அகிலனின் அவதானிப்பு முக்கியமானது.

பாலு



16 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page