top of page
Search
Writer's pictureBalu

விமர்சகன்



‘...வில்லனின் நல்லவன் பிம்பத்தைக் குறைத்தவாறும், நாயகனின் கெட்டவன் பிம்பத்தைக் கூட்டியுமிருந்திருக்கலாம். இருவருக்கும் இவ்வளவு சிக்கல்கள் நிறைந்த கதாபாத்திர வடிவமைப்புகள் இருந்ததால் நாயகியே நம் கவனத்தை அதிகம் ஈர்க்கிறார். கதையின் தார்மீக அடித்தளத்தைச் சகிக்க முடியவில்லையெனினும், இதுவே அந்நடிகையின் சிறந்த கதாபாத்திரமாகும். அதிர்ச்சிகரமான த்ரில்லர் படத்தின் இறுதியில் அழகியலை வலிந்து திணிப்பது அவசியம்தானா? தொடர்ந்து த்ரில்லர் படங்களாகவே இயக்கிக்கொண்டிருக்கும் இயக்குநர், அடுத்த படத்திலாவது தன் பாணியிலிருந்து கொஞ்சம் விலகினால் நன்று!’


சமீபத்தில் வெளியாகியிருந்த வேற்று மொழி படத்திற்கான விமர்சனத்தை எழுதி முடித்தான் பிரதீப். தன் அனைத்துக் கட்டுரைகளுக்கும் கடைசி வரியை எழுதிவிட்டு உடனே மடிக்கணினியை மூடி வைத்துவிடுவான். அதைச் சரிபார்த்துத் தொகுக்கும் வேலையை அடுத்த நாளுக்கு ஒத்திப் போடுவான். அதன் பிறகே அந்த விமர்சனக் கட்டுரை வலைத்தளத்தில் பதிவேற்றப்படும்.

பெருமூச்சுடன் படுக்கையில் பாய்ந்தான் பிரதீப். வேற்று மொழி படத்தின் விமர்சனக் கட்டுரை எழுதியதால் அவனுக்கு நிறைவாகவும் திருப்தியாகவும் இருந்தது. தமிழ்ப் படங்களுக்கு எழுதுவதைப் போல் தயாரிப்பாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு உத்தரவுக்கு அடிபணியாமல் செயல்படும் சுதந்திரம் வேற்று மொழி படங்களுக்கு எழுதுவதில்தான் கிடைக்கிறது. தமிழ்ப் படங்களையும், அதற்கு விமர்சனங்கள் எழுதுவதையும் அவன் வெறுக்கவே செய்தான். என்ன செய்வது, மூளை இருக்கும் அதே உடலில்தானே வயிறும் இருக்கிறது. பணம் கொடுக்க மறுக்கும் தயாரிப்பாளர்களின் படங்களுக்கு மட்டும் அவன் அவனாகச் செயல்பட்டான். அதனால் அவனுக்கு ‘எதிர்மறை எண்ணங்கள் கொண்ட விமர்சகன்’ என்ற பெயரே கிடைத்தது. என்ன செய்வது? ஆண்டுக்கு வெளியாகும் நூறு படங்களில் பத்து படங்களை மட்டுமே திரையரங்கில் பார்த்துவிட்டு அதில் ஐந்து படங்களை அங்கீகரிக்கும் ஜனரஞ்சக பார்வையாளர்கள் எல்லோரும் நேர்மறையாளர்கள். நூறு படங்களையும் திரையரங்கில் பார்த்து, தொன்னூறுக்கும் மேற்பட்ட படங்களை விமர்சித்துவிட்டு ஒன்றிரண்டு படங்களை மட்டுமே அங்கீகரிக்கும் இவன் எதிர்மறையாளன். விமர்சனங்களுக்குத் தயாராய் இல்லாதவர்களோ அல்லது அதற்கு அஞ்சுபவர்களோ ஏன் திரைப்படங்கள் எடுக்க வேண்டும், பார்க்க வேண்டும் அல்லது உரையாட வேண்டும்?

சமூக ஊடகங்களின் பிரபல விமர்சகர்களில் ஒருவன் பிரதீப். ஆனால் அவன் சக தமிழ் விமர்சகர்களை ‘விமர்சகர்கள்’ என்று ஒத்துக்கொள்ளவே மாட்டான். தமிழ்த் திரைத்துறைக் கலைஞர்களை ‘படைப்பாளி’ என்றே ஏற்றுக்கொள்ள முடியாதவனால் எப்படி ஃபாஸ்ட் ஃபுட் கருத்துச் சொல்பவர்களை மட்டும் விமர்சகர்களாக ஏற்றுக்கொள்ள முடியும்? வெளியாகும் திரைப்படங்கள் குறித்த அவனது எந்தக் கருத்துகளும் சக விமர்சகர்களுடன் ஒன்றிப் போனதே இல்லை.


அர்த்தயாம நேரத்தில் உறக்கம் கொள்ளாமல் அப்பார்ட்மன்ட் அறையின் மேல்மாடத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் பிரதீப். இளைப்பாறத் துடிக்கும் அவன் கண்களில் காத்திருத்தலின் சுவடும் இருந்தது. அப்பார்ட்மன்ட் வாசலில் காரின் வெளிச்சம் நுழைவதைக் கண்டதும் அக்கண்களில் குழந்தைகளுக்கு உண்டாகும் பெறுதலின் இன்பம்! கைப்பையுடன் அவள் காரிலிருந்து இறங்கியதும் ட்ரைவர் சீட்டிலிருப்பவரிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டுக் கார் கதவைச் சாத்தினாள். தன் தாமத வருகையின் காரணத்தைக் காலை புறப்படும்போதே பிரதீப்பிடம் தெரிவித்திருந்தாள் மதுமிதா. வீட்டுக்கு வந்ததும் கழிவறைக்குப் போனவள், ‘துணியெல்லாம் மிஷின்ல போட்டியா?’ என்று இவனைக் கேட்டாள். அவன் அக்கேள்விக்குப் பதிலளிக்கவுமில்லை; அவள் பதிலை எதிர்பார்த்தும் அவ்வாறு கேட்கவில்லை. வெறும் சம்பிரதாயக் கேள்வி. தான் யாருடனோ இருக்கிறோம் என்று மனதிற்குச் சொல்லிக்கொள்ளும் சுய ஆறுதல். கழிவறையிலிருந்து அலம்பிய முகத்தைத் துடைத்தபடி வெளியே வந்தாள்.

“ஸ்க்ரீனிங் நடந்துதா? படம் எப்படி? டெக்னிக்கலி நல்லா வந்திருக்கா? நாளைக்கு ப்ரீமைர் நடக்கும்ல?” என்ற பிரதீப்பின் தொடர் கேள்விகளை எதிர்கொண்டாள்.


“ரொம்ப நல்லா வந்திருக்கு. நாளைக்கு ஏதும் ப்ளான் இல்லைல உனக்கு? படத்தைவிட நீ எழுதப் போகும் ரைட்-அப்-க்குத்தான் ரொம்ப எக்ஸைட்டடா இருக்கேன்”


“ஹ்ம்ம். டியூரேஷன் என்ன?”


“30 மினிட்ஸ். நல்ல ரீச் கிடைச்சா இதையே பைலட்டா வெச்சுப் படம் பண்ணிரலாம்னு சொல்லியிருக்காரு. பார்ப்போம்! க்ரிட்டிக்ஸ், ஆடியன்ஸோட ரெஸ்பான்ஸ் பொறுத்துத்தான் இருக்கு!”


“பதட்டமா இருக்கியா என்ன? நல்லா நடிச்சிருக்கல? Ofcourse you would’ve nailed it, like your previous performance; or even better”


“நீ என்கூட இருக்கும்போது எனக்கென்னடா பயம்?” என்று சொல்லிக்கொண்டே அவளும் படுக்கையில் குதித்துப் பிரதீப்பைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். மதுவின் தீண்டலில் போதையேறிப்போன அவனது உடல், காமத்தின் வானில் பறக்கத் துவங்கியது. சற்று முன்பு மனமாற அடைந்த ‘திருப்தி’யை இப்போது உடலாறவும் அடைய வேண்டுமென நினைத்தான். மதுவின் மாதவிலக்கால் கடந்து நான்கு நாட்களாகக் கலவி கொள்ளாத பசி அவனுக்கு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. மதுவுடன் ஒன்றாய் சேர்ந்து வாழத் தொடங்கியதிலிருந்து சுய இன்ப பழக்கத்தையும் கைவிட்டிருந்தான். தனித்திருந்த காலத்தில் அளவு மீறி சுய இன்பத்தில் ஈடுபட்டதால் லௌகீக வாழ்க்கையின் ஆரம்பக் கால கலவியின்போது PE, ED போன்ற பிரச்னைகளை அவன் எதிர்கொள்ள நேர்ந்தது. அதற்கான பயிற்சிகளை அவன் தொடர்ந்து மேற்கொண்ட பிறகே இருவரது உடல்களும் ஒரே ராகத்தில் இசைக்கத் துவங்கின. எனவே இப்போதெல்லாம் குறிப்பசியைப் போக்கிக்கொள்ள அவன் மதுமிதாவை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. மெதுவாக தன் கைகளைக் கொண்டு அவளுடைய முலைக்காம்புகளை வருடத் தொடங்கியதும் அவள் தடுத்துவிட்டாள். “இன்னுமா முடியலை?”


“நாளைக்குக் காலைல இல்லைன்னா மதியம் முடிஞ்சிரும். ஈவ்னிங் ஸ்க்ரீனிங் முடிச்சிட்டு நைட் ஜாலியா வந்து பண்ணலாம். இப்போ தூங்கலாமா? டயர்டா இருக்கு!” என்றாள்.


அடுத்த நாள் மாலை, ஸ்க்ரீனிங் ஸ்டுடியோவின் வாசலில் நடிகை மதுமிதா, விமர்சகன் பிரதீப், படக்குழுவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் சிறப்புத் திரையிடலுக்காகக் காத்திருந்தனர். பிரதீப்புக்கும் படத்தின் இயக்குநருக்கும் போலிப்புன்னகை பரிமாறல் நடந்தது. அந்த இயக்குநரின் முந்தைய குறும்படத்தைப் பிரதீப் பாராட்டியே எழுதியிருந்தாலும், அவருக்குப் பிடித்த நடிகரைக் கிழித்துத் தொங்கவிட்ட காரணத்தால் இவன்மீது வெறுப்பைச் சுமந்துகொண்டிருக்கிறார். பிரதீப்புக்கு எந்தப் படைப்பாளிகள்மீதும் தனிப்பட்ட முறையில் கோபம் கிடையாது. விதிவிலக்கில் யாருடனாவது சின்னஞ்சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தால் அதைத் திரையரங்க வாசலில் கழட்டிவிட்டுதான் படம் பார்க்கச் செல்வான்.


காட்சி தொடங்கியது. படத்தின் கதாநாயகன் திரைத்துறையில் நடிகனாக வேண்டுமென்ற லட்சியத்தோடு இருக்கிறான். முதல் படம் நடித்த பிறகே திருமணம் செய்துகொள்ளும் வைராக்கியத்துடன் அலைகிறான். ஒரு படம் நடித்துவிட்டால் ‘நடிகன்’ என்ற நிலையை எட்டிவிட முடியாது என்கிற உண்மை அவனுக்குப் புரியவில்லை பாவம்! அவனுடைய இந்த வைராக்கியத்தைக் காதலி எதிர்க்கிறாள். அவள் வீட்டில் திருமண பேச்சுகள் எழுந்த வண்ணம் உள்ளன. தன் காதலனுடன் வைத்துக்கொண்ட பாதுகாப்பற்ற கலவியினால் சில நாட்களில் கர்ப்பமடைகிறாள். பெற்றோரின் ஒப்புதலுடன் அவர்களுக்குக் கல்யாணமாகிறது. சீமந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், நீண்ட நாட்களாக மறைத்து வைக்கப்பட்ட உண்மை ஒன்றைத் தன் கணவனிடம் வெளிப்படுத்துகிறாள். அது என்னவெனில், திருமணத்திற்கு முன் அவர்கள் வைத்துக்கொண்ட கலவியின்போது அவள் பில்ஸ் எடுக்க மறுத்திருக்கிறாள். எங்கே வீட்டில் தன்னை வேறு யாருக்காவது கட்டிக் கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இந்த சூழ்ச்சியை நிகழ்த்தியிருக்கிறாள். சரியான பூனை அவள். அவர்களது திருமண உறவில் பிளவு ஏற்படுகிறது - குழந்தை பிறக்கிறது - அவன் இன்னும் நடிகனாகவில்லை - அவள் அவனுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கிறாள் - அவள்மீதிருந்த கோபத்தை இவன் மறக்கிறான் - மன்னிக்கிறான் - படம் முடிகிறது.


எப்படி ஒரு பெண்ணின் வசப்படுத்தலைக் காதலின் பெயரில் மகிமைப்படுத்த முடிகிறதென்ற கோபம் பிரதீப்புக்கு ஏற்பட்டது. மனிதனின் இருண்ட பக்கத்தை முக்காடால் மூடும் பழமைவாத வேலையைத்தான் இந்த இயக்குநரும் செய்திருக்கிறார். இது முழுநீளத் திரைப்படமாக மாறினால் அதைவிடப் பார்வையாளர்களுக்கு இழைக்கப்படும் அல்லது திணிக்கப்படும் அவலம் வேறென்னவாக இருக்கும்? இவ்வாறான எண்ணங்களுடன் அரங்கத்திலிருந்து கூட்டத்துடன் கூட்டமாக வெளியே வந்தான் பிரதீப்.


நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு பற்கள் தெரியும் புன்னகையுடன் வெளியே வந்தாள் மதுமிதா. அவளைப் பார்க்கும்போது பிரதீப்புக்குப் பயமாக இருந்தது. கடைசியாக அவள் நடித்த ஹாரர் படத்தைப் பார்த்தபோதுகூட அவன் இவ்வளவு பயம் கொள்ளவில்லை. கைக்குட்டையால் நெற்றியில் வடிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டான். ஒருவேளை படத்தில் பார்த்தது போல் நிஜத்திலும் மதுமிதாவுக்கு அவ்வாறு தோன்றினால்...? அதற்கு நான் மறுப்பு தெரிவித்தாலோ தாமதித்தாலோ அவளும் அந்த யுக்தியைக் கையாண்டால்...? முதல் வேளையாக அவளிடம் திருமணம் குறித்துத் தெளிவாகப் பேசிவிட வேண்டும். தங்களிடையே நிகழப்போகும் வாதம் இக்குறும்படத்தின் பாதைகளில் பயணித்தால் முதல் வேளையாகத் தயங்காமல் இவ்வுறவிலிருந்து வெளியேறிவிட வேண்டும்! எப்படியும் இப்படத்தில் கதை கேட்டுத்தான் நடித்திருப்பாள். கதாபாத்திரத்தின் அபாயகரமான யோசனை இவளுக்குக் காதலின் எண்ணமாகவே தோன்றியிருக்கும். அவளும் இதைச் செய்யத் தயங்க மாட்டாள் என்பதில் என்ன நிச்சயம்? இக்கதாபாத்திரத்தில் வாழ்ந்தவள்தானே அவள். வாழ்ந்தவளா! அவள் இப்படத்தில் நடிக்கவே இல்லை; இதில் எங்கிருந்து வாழ! உண்மையில் அவளுடைய நடிப்பின்மீது அக்கரை கொண்டவனாக இருந்தால் அவளது நடிப்பைப் பாரபட்சமின்றி விமர்சித்தே ஆக வேண்டும். இல்லையெனில், இதனை நடிப்பென்று நம்பிக்கொண்டு அவள் வேடிக்கை நடிகையாகக் காலத்தை ஓட்ட வேண்டியிருக்கும். தன் அலாதி அழகையும் அரைகுறை நடிப்பையும் கொண்டு கண்டிப்பாகப் பிரபலமடைவாள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதன் பிறகு நூறு நாட்கள் வேலைத் திட்டத்திற்குப் பங்கேற்பாளராக அழைக்கப்படும் அவலத்தை நினைத்தால்… தேவையில்லாமல் தன் காதலியின் பெயர் குப்பைத்தொட்டியில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருப்பதை நினைக்கவே அவனுக்குக் கசப்பாக இருந்தது. “படம் எப்படி?” என ஆர்வத்துடன் வினவினாள் மது.


“நான் கொஞ்சம் யோசிக்கனும்” என்றான் பிரதீப். இவன் சொன்னதை எதிரில் நின்றுகொண்டு நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த இயக்குநர் கேட்க நேர்ந்தது. பிரதீப்பின் அந்தப் பதிலே அவருக்குப் போதுமானதாக இருந்தது.


மதுவும் பிரதீப்பும் முன்னிரவில் வீட்டிற்குச் சென்றனர். பிரதீப் நேராக மடிக்கணினியைத் திறந்து ஃபேஸ்புக்கையும் Word Document-ஐயும் திறந்தான். மது நேராகக் கழிவறைக்குச் சென்றாள். ஆனால் முகத்தை அலம்பிக் கொள்ளவில்லை. திரையிடலுக்காக உடுத்தியிருந்த உடையையும் நெக்ளஸையும் மாற்றாமல், வெளியே வந்து கட்டிலில் அமர்ந்து தன் கைப்பேசியைத் திறந்தாள். விமர்சனத்தை எழுதத் தொடங்கும் முன் மதுவை ஓரப்பார்வை பார்த்தான் பிரதீப். உடலுறவு கொள்வதற்கான ஆயத்தத்தையும், விமர்சனத்தைப் படிப்பதற்கான ஆவலையும் மதுவின் விழிகள் ஒருசேர வெளிப்படுத்தின. கழுத்திலிருக்கும் நெக்ளஸைக் கழட்டாமல் அவளைப் புணர வேண்டுமென்ற எண்ணத்துடன் அவன் விமர்சனம் எழுதுவதை அடுத்த நாளுக்கு ஒத்தி வைத்தான். இப்போதைக்கு ஃபேஸ்புக்கில் குறும்படத் திரையிடல் பற்றிய சின்ன அறிமுகத்தை மட்டும் பதிவிட்டான். அதைப் பார்த்த மது, தன் கைப்பேசியில் அவனுடைய ஃபேஸ்புக் பக்கத்திற்குள் நுழைந்தாள். அவன் பதிவிட்டதை முதல் ஆளாகப் படித்தாள்.


‘முச்சந்தி சாரல்’ குறும்படத்தின் சிறப்புத் திரையிடலில் கலந்துகொண்டேன். படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வந்திருந்த பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றார் நடிகை மதுமிதா.


மற்ற விவரங்கள் நாளை.


கணினியை மூடிவிட்டு மெதுவாகக் கட்டிலுக்கு வந்து மதுவை முத்தமிட்டான். அவள் இவனுடைய கூந்தலின் பின்புறத்தை இறுக்கப் பிடித்துக்கொண்டு நாவால் நடனமாடினாள். ஆடைக்குள் ஒளிந்திருந்த அவனது தேகத்தை தன் விரல் நகங்களால் வருட, பிரதீப்பின் உடல் ரோமங்கள் சிலிர்த்தன. மது அவனுடைய இடது காதைக் கடித்து காயமாக்கினாலும், அவனுக்கு அது சுகமாகவே இருந்தது. அவளது கன்னங்களிலும் இதழிலும் மாறி மாறி முத்தங்களைப் பதித்தான். அவளைச் சுவைத்தவாறு கொஞ்சம் கொஞ்சமாகக் கழுத்துக்கு இறங்கினான். நெக்ளஸால் பன்மடங்கு எழில் கூடியிருந்த அக்கழுத்தைக் கடித்து ருசித்தான். மதுவின் தேக காந்தம் அவனைக் கீழ் நோக்கி இழுத்தது. மார்பகத்தில் விறைத்திருந்த அவளது முலைக்காம்பை தன் ஊறும் நாவில் சுவைக்கப்போகும் சமயத்தில் அவள் தடுத்துவிட்டுச் சொன்னாள்: ‘மத்ததெல்லாம் நாளைக்கு’

(ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் சிறுகதைகளுக்கான ஐடியாக்களை டைரிக்குறிப்பில் குறித்துக்கொள்வார். அப்படி அவர் குறித்து வைத்து, சிறுகதையாக எழுதாமல் போன ஐடியா இது. இக்கதையை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்)





47 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page