top of page
Search
Writer's pictureBalu

செகாவின் கடைசி ஷாம்பெயின்

“ஒருவன் மது அருந்த ஏங்கினால் அவனால் கடலளவு மது அருந்த முடியும். ஒருவன் மது அருந்தினால் அவனால் இரண்டு கோப்பைகள் மட்டுமே அருந்த முடியும். மனிதன் எதனை அடைந்தான் என்பதைவிட எதனை அடைவதற்காக ஏங்குகிறான் என்பதால் ஆனவன்”

  • ஆன்டன் செகாவ்


செகாவ் மதுவை எப்போதுமே கொண்டாட்டத்தின் வடிவமாக மட்டுமே பார்த்திருக்கிறார். அவர் மரணப்படுக்கையிலிருக்கும்போது அவருடன் டாக்டர், நண்பர் சுவோரின் மற்றும் மனைவி ஓல்கா நிப்பர் ஆகியோர் இருந்தனர். ஏதாவது வேண்டுமா என்று டாக்டர் கேட்கும்போது ‘ஷாம்பெயின் அருந்தலாமா? எவ்வளவு நாட்கள் ஆகிறது!’ என்கிறார் செகாவ். இந்தச் சம்பவத்தை அமெரிக்க சிறுகதை எழுத்தாளர் ரேமண்ட் கார்வர் தனது ’Errand’ கதையில் மிக அழகாக எழுதியுள்ளார்.


அந்தக் கதையில், செகாவ் ஷாம்பெயினைக் கேட்டதும் சுவோரின் ஆர்டர் செய்கிறார். அப்போது ஒரு இளம் பணியாள் கலைந்த தலைமுடியுடன், அயன் செய்யாத சட்டையை அணிந்தபடி ஷாம்பெயினைக் கொண்டு வந்து கொடுக்கிறான். மூவரும் ஜூலை 2ம் தேதி அதிகாலை அந்நாளுக்கான முதல் கோப்பை மதுவை அருந்துகின்றனர். அதுவே செகாவின் The Last Supper. சில நேரத்தில், யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது செகாவின் உயிர் பிரிகிறது. ஓல்கா தனது நாட்குறிப்பில் ‘செகாவ் அவ்வளவு சந்தோஷமாக இந்த உலகை விட்டுப் பிரிந்தார். இறந்த பிறகு அவரது முகத்தில் புன்னகை மிளிர்ந்துகொண்டிருந்தது. அவர் உண்மையில் ஒரு குழந்தை போல் தோற்றமளித்தார்’ என்று எழுதியிருக்கிறார்.


ரேமண்ட் கார்வரின் கதை, செகாவ் இறந்த பிறகும்கூடத் தொடர்கிறது. அந்த இளம் பணியாள் மதுக்கோப்பைகளை எடுத்துச் செல்வதற்காக மீண்டும் அழைக்கப்படுகிறான். அப்போது அவனது தலைமுடி நன்றாகச் சீவியும், ஆடைகள் அயன் செய்யப்பட்டு கச்சிதமாகவும் உள்ளன. எழுத்தாளர்களுக்கு உயிருடன் இருக்கும்போதும், மறைந்த பிறகும் மக்களிடமிருந்து கிடைக்கும் மரியாதை எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.


‘Champagne’ என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதியிருக்கிறார் செகாவ். பிடிக்காத வேலையைத் தினமும் செய்துகொண்டிருக்கும் ஒரு சலிப்பான மனிதன், புத்தாண்டு மாலையில் அன்றாடத்தின் மாறுதலுக்காக ஷாம்பெயின் வாங்கிக் கொண்டு மனைவியுடன் மது அருந்த ஆர்வத்துடன் வீடு திரும்புகிறான். ஷாம்பெயினைத் திறக்கும்போது ஓப்பனர் தடுக்கி கீழே விழுந்துவிடும். மீண்டும் அதை எடுத்துத் திறந்து இரண்டு கோப்பைகளில் மதுவை ஊற்றி வைப்பான். அப்போது ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியிடம் என்னவென்று கேட்க,


“இப்போ என்ன பண்ண?” என்பாள் மனைவி.

“ஓப்பனர் கீழே விழுந்திருச்சு, எடுத்து ஓபன் பண்ணேன்”

“கெட்ட சகுனம்!”

“என்ன பேச்சு இது? குடி, சீர்ஸ்!”

“இல்ல, நிஜமாதான். இது கெட்ட சகுனம். ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப்போகுது”


மனைவியின் இந்தப் பேச்சால் அவனது புத்தாண்டு மாலையும் வீணாகிவிடும். அவன் மட்டுமே தனியாக ஷாம்பெயின் அருந்தவிட்டு நள்ளிரவில் பனி பொழியும் சாலையில் நடக்கச் சென்றுவிடுவான். அப்போது அவனுக்கு வீட்டில் நடந்த சம்பவத்தைப் பற்றிய யோசனைகள் தோன்றும். ‘மனைவி ஏன் அவ்வாறு சொல்கிறாள்? அதிலென்ன கெட்ட சகுனம்? ஏதோ நடக்கக்கூடாதது நடக்கப்போவதாகச் சொல்கிறாளே! அப்படி என்ன நடந்துவிடப் போகிறது? இதற்குமேல் என் வாழ்க்கையில் நடப்பதற்கு வேறு என்ன இருக்கிறது? அதான், எல்லாவற்றையும் பார்த்தாயிற்றே. ஒருவேளை நான் என் மனைவியை இழந்துவிடுவேனோ! அப்படி நடந்தால் அது கெட்ட சகுனமல்ல; ரொம்பவும் நல்ல சகுனம். கெட்ட சகுனம் என்று அவள் குறிப்பிட்டது என்னவாக இருக்கும்!’ இவ்வாறு அவனது எண்ணங்கள் நீள்கின்றன.


அதிகாலை வீடு திரும்பிய சில நேரம் கழித்து, அவர்களுடைய வீட்டிற்குப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிக்க மனைவியின் தூரத்துச் சொந்தக்காரர்களில் ஒருவரான 40 வயது பெண் வருகிறார். கதாநாயகன் அந்த 40 வயது பெண்ணை அப்போதுதான் முதன்முறையாக நேரில் காண்கிறான். அவனுக்கு அந்தப் பெண்ணுக்கும் ஒருவர்மீது ஒருவருக்கு ஆரம்ப நிலை ஆர்வம் எழுகிறது. அவர்கள் சேர்ந்து ஷாம்பெயின் அருந்துகின்றனர். அவர்களுக்கு இடையில் பற்றிக்கொண்டிருக்கும் காமத் தீயின் நெடி மனைவியின் நாசிக்கு எட்டிவிடுகிறது. அவள் நினைத்தது போலவே நடக்கக்கூடாத கெட்ட சகுனம் நடந்துவிட்டது. ஆனால் அது அவளுக்கு மட்டுமேயான கெட்ட சகுனம். அவளுடைய நம்பிக்கை பொய்க்கவில்லை. உண்மையில், இந்தக் கதையில் மனைவியின் எண்ணத்தை மூடநம்பிக்கை என்று முத்திரை குத்திய கதாநாயகன்தான் தோற்றுப்போனவன்.


‘காதலின் சிறப்பம்சமாக செகாவ் சித்தரிப்பது என்னவென்றால் அது பெரும்பாலும் கைகூடி வராமல் போவதுதான். இரு பாலருக்கும், எந்தத் திருப்தியையும் அது அளிக்கவில்லை என்பதைத் தன் சிறுகதைகளில் செகாவ் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்’


  • கி. நடராஜன்


ஃப்ரென்ச் சிறுகதை ஆசிரியர் மாப்பசானின் தாக்கத்தில் செகாவ் சில கதைகளை எழுதியுள்ளார். செகாவின் ‘Peasant Wives’ கதையிலுள்ள பெண் கதாபாத்திரங்களின் குற்றவியலை மாப்பசானின் ‘The Signal’ கதையிலும் பார்க்கலாம். செகாவின் ‘In the Dark’ கதையின் இருளை மாப்பசானின் ‘The Conservatory’ கதையில் உணர முடியும். மாப்பசானின் ‘The Useless Beauty’ கதையின் தாக்கத்திலிருந்துதான் ‘The Beauties’ கதை பிறந்ததாக எஸ்.ரா ‘செகாவ் வாழ்கிறார்’ நூலில் குறிப்பிடுகிறார். அதேபோல், உலகப் புகழ்பெற்ற ‘The Diamond Necklace’ கதையிலிருந்து செகாவ் இரண்டு கதைகள் எழுதியிருப்பதாக இலக்கிய ஆய்வாளர் V.S.Pritchett, ’Chekhov - A Biography’ நூலில் விவரிக்கிறார். ‘An Upheavel’ மற்றும் ‘The Chorus Girl’ ஆகிய இரு கதைகளும் நெக்ளஸை வைத்து எழுதப்பட்ட கதைகள்.


மாப்பசானின் சிறுகதைகளை செகாவ் விரும்பிப் படித்ததைப் போல, டால்ஸ்டாயின் செவ்வியல் படைப்புகளைப் படித்து நண்பர்களிடம் விவாதித்தார். செகாவ், புனின், கார்க்கி ஆகியோர் ஒன்று கூடினாலே அவர்கள் பேசுவது டால்ஸ்டாயின் கதைகளைப் பற்றியதாகத்தான் இருக்கும். டாஸ்டாயின் ‘அன்னா கரீனினா’ நாவல் தொடராக வெளிவந்த காலத்தில் ரஷ்ய உலகமே அதனைத் தொடர்ந்து படித்து விவாதித்து வந்தது. அது செகாவுக்கு மிகவும் பிடித்தமான நாவல். ஆனால் அவர் அக்கதையின் இறுதியில் முரண்பட்டார். ஓர் இலக்கிய கதாபாத்திரத்தை டால்ஸ்டாய் மத ரீதியாகக் கையாண்டதால் அந்த முறை செகாவுக்குப் பிடிக்கவில்லை. பெரும்பாலான வாசகர்களும் அந்நாவலின் முடிவை டால்ஸ்டாயின் திணிப்பு என்றே கருதினர். இன்று வரையில் ‘அன்னா கரீனினா’வின் முடிவு பேசுபொருளாக இருந்து வருகிறது.


‘அன்னா கரீனினா’ வெளியான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு செகாவ் ஒரு கதை எழுதுகிறார். அந்தக் கதாநாயகியின் பெயரும் ‘அன்னா’தான். அதனை டால்ஸ்டாய் நாவலின் தாக்கத்திலிருந்து எழுதினார் என்றே சொல்லாம். ஆனால் முடிவை மட்டும் செகாவ் தான் நினைத்ததைப் போல் எழுதினார். கதையில் மணமான இரு முக்கிய கதாபாத்திரங்களும் வேறு காதலுறவிலிருந்தாலும் அவர்களைத் தன் கதையில் தண்டிக்காமல் ஓர் உன்னத கடவுளைப் போல வாழவிட்டார். ரஷ்ய இலக்கிய விமர்சகரான வ்ளாமிடிர் நபகோப் அக்கதையை முதலில் செகாவின் சிறந்த கதை என்றார். பிறகு, 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தலைசிறந்த காதல் கதை என்று எழுதினார். சில நாட்களில், உலகில் எழுதப்பட்ட மிகச்சிறந்த சிறுகதை இதுவே என்றார் நபகோவ். அதுதான், தமிழில் ‘நாய்க்காரச் சீமாட்டி’ என்று மொழிபெயர்க்கப்பட்ட ‘A Lady with a Dog’. தற்கால வாசகனாலும் அக்கதையில் ஒரு நெருக்கத்தை உணர முடியும்.


‘Chekhov is a mater of understatement, of concealed meaning, of twilight scenes and of prose as compressed as poetry whose heroes don’t want what they want’


  • Andrei Voznesensky


தனது சகோதரர் மிகைலுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் செகாவ் இவ்வாறு குறிப்பிடுகிறார்:


‘To Marry is interesting only for Love; to marry a girl simply because she is nice is like buying something one does not want at bazar solely because it is of good quality.

The most important rivet in family life is love, sexual attraction…’


இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டதை ’Verotchka’ என்ற தலைப்பில் கதையாக எழுதியுள்ளார். சுற்றத்தாரால் மதிக்கப்படும், ரசிக்கப்படும் ஓர் இளம் பெண்தான் வெரோட்ச்கா. அவளுக்கு 30 வயது ஆள் ஒருவன் மீது காதல் வருகிறது. அவனுக்கும் வெரோட்ச்காவைப் பிடித்திருந்தாலும், அவன் அவளது காதலை ஏற்கவில்லை. சமூகம் வெரோட்ச்கா மீது நல்மதிப்பையும் அவன் அறிவான். அவளுடன் இணைந்து வாழ்வது போன்ற கற்பனைகளைச் செய்து பார்த்தாலும், கடைசி வரையில் வெரோட்ச்காவின் காதலை அவன் ஏற்கவே இல்லை. காரணம் : (இப்போது மீண்டும் செகாவ் தன் சகோதரர் மிகைலுக்கு எழுதிய கடிதத்தை வாசியுங்கள்)


இதேபோல, தனது மனைவி ஓல்கா நிப்பர் ‘வாழ்வின் அர்த்தம்’ பற்றிக் கேட்டதற்கு, செகாவ் இவ்வாறு பதில் கடிதம் எழுதினார்:


‘It is like asking what a carrot is. A Carrot is a carrot and nothing more is known.’


செகாவ் இப்படித்தான் தன் வாழ்விலும் எழுத்திலும் செயல்பட்டார். அவருக்கு வாழ்க்கையின் மீது எவ்வித கேள்விகளும் இல்லை. வாழ்க்கை அவருக்கு எதைக் கொடுத்ததோ அதனைப் புகார்களின்றி ஏற்றுக்கொண்டார். “எனக்கு அரசியல், தத்துவ, மத ரீதியான நிலைப்பாடு எதுவுமில்லை. நான் மாதாமாதம் அவற்றை மாற்றிக்கொண்டிருப்பதால், எனது கதாநாயகர்கள் எப்படிக் காதலிக்கிறார்கள், திருமணம் செய்துகொள்கிறார்கள், குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள், இறந்து போகிறார்கள் என்பதைப் பற்றியும் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றியும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்கிறேன்” என்கிறார் ஆன்டன் செகாவ்.


செகாவைத் தேடித் தேடி வாசிக்கும் ஒருவன் தனது வாழ்வின் மிகச் சிறந்த பகுதியாக, தீரா வேட்கையுடன் திரிந்த அந்த ஓராண்டைத்தான் சொல்வான். அந்தச் சுகத்தில் திளைக்கும் கடைசி மனிதன் சாகும்வரை செகாவ் வாழ்ந்துகொண்டிருப்பார்.




122 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page