அப்போது எனக்குத் தென்மேற்கு ரயில்வே நிலையத்தில் வேலை இருந்தது. நான் வேலை செய்யும் இடத்தைச் சுற்றி பதினைந்து மைல்களுக்கு மனிதர்கள், பெண்கள், உணவகம் என எதுவும் கிடையாது. அதை வைத்தே எனது வேலை வாழ்க்கை எப்படிப்பட்டது என நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அந்த நாட்களில் நான் இளமையாகவும், பலமாகவும், மயக்க நிலையிலும் அதே நேரம் முட்டாளாகவும் இருந்தேன். ரயில்களின் ஜன்னல்களும், யூதர்கள் அருந்திய வோட்காவும் எனது வேலை கவனத்தைச் சிதறடித்தன. சில சமயங்களில் ஜன்னலில் ஒரு பெண்ணின் தலை தென்படும். மேலும் ஒரு பெண் சிலை போல அசையாமல் நின்று ரயில் கிட்டத்தட்டக் கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக மாறும் வரையில் அதைப் பார்த்துக் கொண்டிருப்பாள்; அல்லது நிலை தெரியாத அளவிற்கு வோட்காவை அருந்தியிருப்பாள். நான் வடக்கைப் பூர்வீகமாகக் கொண்டவன். கோடையின் புனிதமான அமைதி, வெட்டுக்கிளிகளின் சத்தம், யாராலும் மறைக்க முடியாத வெளிப்படையான நிலவொளி ஆகியவை என்னை மென்கவித்துவசோகத்திற்கு உள்ளாக்கின; மற்றும் குளிர்காலத்தின் வெண்மை, நீண்ட இரவுகள் மற்றும் ஊளையிடும் ஓநாய்கள் ஆகியவை கெட்ட கனவுகளைப் போல் என்னை ஒடுக்கியது. ஸ்டேஷன் அருகே பலர் வாழ்ந்து வந்தனர்: என் மனைவி, நான், ஒரு காது கேளாத தந்தி எழுத்தர் மற்றும் மூன்று காவலாளிகள். என் உதவியாளர், மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ஊருக்குச் சென்றான். போகும்போது அவனது சம்பளத்தை வாங்கி சேமித்து வைக்கும் உரிமையை என்னிடம் விட்டுச் சென்றான். எனக்குக் குழந்தைகளோ விருந்தாளிகளோ யாருமில்லை. மற்றபடி, மாதத்திற்கு ஒருமுறை மட்டும் அதிகாரிகளைச் சந்தித்து வந்தேன்.
நானும் என் மனைவியும் ஒரு புத்தாண்டைக் கொண்டாடியது எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் மேஜையில் அமர்ந்துகொண்டு சோம்பலாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். நான் ஏற்கெனவே ஐந்து கோப்பைகள் வோட்காவை அருந்திவிட்டு, தப்பிக்க முடியாத எனது சலிப்புணர்வைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன். அருகில் அமர்ந்திருந்த என் மனைவியின் கண்கள் என்னை விழுங்கிக்கொண்டிருந்தன. அழகான கணவனைத் தவிர இவ்வுலகில் தனக்கு எதுவுமே இல்லாத பெண்ணைப் போல அவள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் என்னை எக்கச்சக்கமாகக் காதலித்தாள். அவள் நேசித்தது எனது அழகையோ அல்லது ஆன்மாவையோ அல்ல; எனது பாவங்கள், கொடுமைகள், சகிப்புணர்வு மற்றும் நகைப்புணர்வற்ற தன்மை ஆகியவற்றைக் காதலித்தாள்.
சலிப்புகளுக்கு மத்தியிலும் நாங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக நள்ளிரவு வரை காத்திருந்தோம். மழைக்காலத்தில் ஸ்டேஷன் மேலாளரிடம் கட்டிய பந்தயத்தின் மூலம் வென்ற இரண்டு ஷாம்பெயின் கோப்பைகளை மேஜை மீது வைத்திருந்தேன். நாங்கள் அமைதியாக அமர்ந்தபடி சுவர்க் கடிகாரத்தையே பார்த்திருந்தோம்.
பன்னிரண்டு மணி ஆக ஐந்து நிமிடங்களே மிச்சமிருந்த சமயத்தில் பாட்டிலின் மூடியைத் திறந்தேன். நான் போதையிலிருந்ததாலா அல்லது பாட்டில் ஈரமாக இருந்ததாலா எனத் தெரியவில்லை - நான் அதைத் திறக்கும்போது கை நழுவி கீழே விழுந்துவிட்டது. ஒரு கோப்பை ஒயின் மட்டும் கீழே சிந்தியிருக்கும்; அதற்குள் பாட்டிலை எடுத்துவிட்டேன்.
"ஹேப்பி நியூ இயர்!" என்று சொல்லிவிட்டு இரு கோப்பைகளிலும் ஒயினை நிரப்பினேன். "குடி!"
என் மனைவி கோப்பையைக் கையில் எடுத்தபடி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் அச்சவுணர்வு நிறைந்திருந்தது.
"பாட்டில கீழே போட்டதானே?" என்றாள்.
"ஆமா. அதுக்கென்ன?"
"கெட்ட சகுனம்," என்று சொல்லி, கோப்பையை மேஜைமீது வைத்துவிட்டாள். "கெட்ட சகுனம். இது வருஷம் நமக்கு ஏதோ கெட்டது நடக்கப்போகுது"
"என்ன பேசுற நீ? படிச்சவதான? ஏன் இப்படிப் பட்டிக்காடு மாதிரி பேசுற? மூடிட்டுக் குடி”
"ஆமா நான் பட்டிக்காடுதான் ஆனா… நமக்கு ஏதோ நடக்கப்போகுது! நீ வேணா பாரு"
அவள் ஒயினை அருந்தவேயில்லை. திரும்பி யோசனையில் மூழ்கினாள். நான் மூடநம்பிக்கையைப் பற்றி சில பழமையான விஷயங்களைச் சொல்லிவிட்டு, அரை பாட்டில் குடித்தேன். பின்னர் அறையைவிட்டு வெளியே சென்றேன்.
அழகான உறைபனி இரவு. நிலாவும் இரு வெண்மையான மேகங்களும் எதற்காகவோ காத்திருந்ததைப் போல் தோன்றின. அங்கிருந்து வந்த ஒளி, அவ்வளவு மென்மையாகப் பூமியைத் தழுவின.
நான் ரயில்வே மேம்பாலத்தில் நடந்தேன்.
"லூசுப்பெண் கெட்ட சகுனமாகவே இருந்தாலும் நமக்கு என்ன தீங்கு நேரிடப் போகிறது? ஏற்கெனவே எல்லாத் தீங்குகளும் நடந்துவிட்டன. அதான் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேனே. இதற்கு மேல் என்ன தீங்கு இருக்கிறது?"
உறைபனியால் சூழப்பட்ட ஒரு பாப்லர் மரம், நீல நிற இருளில் பெரிய போர்வையைப் போல் காட்சியளித்தது. என்னைப் போலவே அதுவும் தன் தனிமையை உணர்ந்தது போல், வெட்கத்துடனும் சோகத்துடனும் என்னைப் பார்த்தது. அதைப் பார்த்துக்கொண்டே நீண்ட நேரம் நின்றேன்.
"பயனற்ற சிகரெட் முனை போல என் இளமை வீணாகிவிட்டது. நான் சிறு பிள்ளையாக இருந்தபோதே என் பெற்றோர் மறைந்துவிட்டனர்; பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன், நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எனக்குக் கல்வியும் குழந்தையும் வாய்க்கவில்லை. பிடித்த இடம், பிடித்த உறவினர்கள், பிடித்த நண்பர்கள், பிடித்த வேலை என எனக்கு எதுவுமில்லை. நான் எதற்கும் லாயக்கற்றவன்; கஷ்டங்களையும் தோல்விகளையும் தவிர எதையும் அறியாதவன். இதற்கு மேல் எனக்குக் கெட்ட சகுனம் ஆவதற்கு என்ன இருக்கிறது?"
தூரத்தில் ரயிலின் சிகப்பு விளக்கு எரிந்தது. அது என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. கசப்பான எனது எண்ணங்களை ரயிலின் முழக்கம் வெளிப்படுத்துவதாகத் தோன்றியது.
"இதற்கு மேல் கெட்ட சகுனம் ஆவதற்கு என்ன இருக்கிறது? என் மனைவியை இழந்துவிடுவேனோ? அது கெட்ட சகுனம் ஒன்றுமில்லை. என் மனைவியை நான் நேசிக்கவேயில்லை. ஒன்றும் அறியாத பையனாக இருந்தபோது அவளை மணந்துகொண்டேன்; நான் இப்போது இளமையில் துள்ளிக்கொண்டிருக்கிறேன். அவளுக்கோ வயதாகிவிட்டது. அவளது பொலிவற்ற கண்களில் என்ன வசீகரம் இருக்கிறது? அவளுடன் பேருக்காக இணைந்திருக்கிறேன். என் இளமை வீணாகிறது. பெண்கள் ரயில் ஜன்னல்களில் மட்டும் நட்சத்திரங்களைப் போல என் கண்களுக்கு முன்னால் பறக்கின்றனர். காதலை நான் அனுபவித்ததேயில்லை. என் ஆண்மை, தைரியம், உணர்ச்சிகள் அழிந்து போகின்றன. . . . குப்பை போல் தூக்கி எறியப்படுகின்றன"
ரயில், கர்ஜனையுடன் என்னைக் கடந்து அதன் சிவப்பு விளக்குகளின் பிரகாசத்தை ஒளிரச் செய்தது. ஸ்டேஷனில் சிறிது நேரம் நின்றுவிட்டு மீண்டும் கிளம்பியது. ஒன்றரை மைல் நடந்து பிறகு நானும் வீடு திரும்ப முடிவெடுத்தேன். மென்கவித்துவசோக எண்ணங்கள் என்னை வாட்டியபடியிருந்தன. ஆனாலும் என் எண்ணங்களை இன்னும் இருண்டதாகவும் மேலும் மனச்சோர்வுடைய செய்யவும் நான் முயன்றேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. புத்திசாலித்தனமற்றவர்களுக்கு, தாங்கள் பரிதாபகரமானவர்கள் என்ற உணர்வு நேர்மறையான திருப்தியைத் தரும். மேலும் அவர்கள் தங்களது சொந்த பொழுதுபோக்கிற்காக தங்களைத் துயரத்திற்கு உள்ளாக்கிக்கொள்கின்றனர். எனது எண்ணங்களில் உண்மையும் அபத்தமும் ஒருசேர இருந்தது. ஆனாலும் என் கேள்வியில் ஏதோ சிறுபிள்ளைத்தனமான எதிர்ப்பு இருந்தது: "இதற்கு மேல் என்ன தீங்கு நேரிடப் போகிறது?"
"எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்; பணத்தை, ஆரோக்கியத்தை. தினமும் மேலதிகாரிகளால் கண்டிக்கப்படுகிறேன், பசியுடன் இருக்கிறேன். வேறு என்ன இருக்கின்றன? அவமதிக்கப்பட்டுள்ளேன், அவமானப்படுத்தப்பட்டுள்ளேன், . . . சமயங்களில் பிறரை அவமதித்துள்ளேன். நான் குற்றவாளி அல்லன்; குற்றம் செய்வதற்குக்கூட லாயக்கற்றவன்."
அந்த இரு வெண்மையான மேகங்களும் நிலவிலிருந்து பிரிந்து தனித்தனியாக நின்றுகொண்டு மென்மையாக ஏதோ பேசிக்கொண்டன. அது நிச்சயம் நிலவுக்குக் கேட்டிருக்காது.
என் மனைவி வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தாள். அவள் கண்கள் புன்னகைத்தன. முகம் முழுவதும் இன்பத்தால் பிரகாசித்தது.
"உங்கிட்ட ஒன்னு சொல்லனும்! சீக்கிரம் ரூம் போய் நல்ல ட்ரெஸ்ஸா போட்டுக்கோ. நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வராங்க"
"யாரு?"
"நடால்யா ஆன்டி. இப்போதான் ட்ரெயின் இறங்கிருக்காங்களாம்."
"யாரு நடால்யா?"
"சீமான் அங்கிளோட வைஃப். உனக்கு அவங்களைத் தெரியாது. அவங்க வரது எனக்கே ஆச்சரியமாதான் இருக்கு. நீ அவங்ககிட்ட ரொம்ப கடிஞ்சிக்காத நிகலாய். அவங்களே பாவம். சீமான் அங்கிள் மோசமானவர். கன்ட்ரோல் ஃப்ரீக். அவரோட சேர்ந்து வாழுறதெல்லாம் கஷ்டம். அவங்க மூனு நாள்தான் நம்மளோட இருக்கப் போறாங்களாம்"
என் மனைவி தன் சர்வாதிகார மாமாவைப் பற்றி இன்னும் நிறைய முட்டாள்தனமாகச் சொன்னாள்; ஆன்டியை வரவேற்பதற்காக ஒரு புதிய ஆடையை உடுத்திக்கொண்டேன்.
மையிட்ட கண்களுடன் கூடிய ஒரு பெண் மேஜையில் அமர்ந்திருந்தார். என் வீட்டின் மேஜை உட்பட அனைத்துப் பொருட்களும் அப்பெண்ணின் முன் புதியவையாகத் தோன்றின. அவளது புன்னகை, வாசனைத் திரவியம், பார்வை, கண்மை, பேசும் விதம் -- ஆஹா! மதிக்கத்தக்கப் பெண். இவள் கணவனிடமிருந்து தப்பிப் பிழைப்பதில் பிழையே இல்லை.
"என் சொந்தத்துல இவ்ளோ பெரிய ஆள் இருக்காருன்னு தெரியாமப் போச்சே!" என்று அவள் என்னைப் பார்த்து வியந்து புன்னகைத்தார்.
"எனக்கும் இவ்ளோ அழகான ஆன்டி இருக்காங்கன்னு தெரியாமப் போச்சு" என்றேன்.
இரவுணவு மீண்டும் தொடங்கியது. இரண்டாவது பாட்டிலிலிருந்து ஆன்டி, அரை கோப்பையை ஒரே மூச்சில் விழுங்கினாள். என் மனைவி அறையை விட்டு வெளியே சென்றாள். என் எதிரில் மதுவும் மாதுவும்! அந்தப் பாடல் நினைவிருக்கிறதா?
பூவே
காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னைக் கொஞ்சம் மழையில் உன் வாசம்’
அதன்பிறகு என்ன நடந்ததென நினைவில்லை. காதல் எப்படித் துவங்கும் என்பதை அறிந்துகொள்ள ஒருவர் நாவலைத்தான் வாசிக்க வேண்டும்; ஆனால் என்னால் சிறிய பாடல் வரிகளின் மூலமே வெளிப்படுத்திவிட முடியும்:
கெஞ்சும்
நெஞ்சம் உன்னைக் கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே என்னைக் கொல்லாதே’
வெறித்தனமான சூறாவளி ஒன்று என்னை ஓர் இறகு போலப் பறக்கச் செய்தது. அந்த உணர்வு நீண்ட காலம் நீடித்தது. ஓர் இருண்ட தெருவில் அது என்னை மிதக்கச் செய்தது.
இப்போது சொல்லுங்கள், இதற்கு மேல் என்ன கெட்ட சகுனம் நிகழ்ந்துவிடப் போகிறது?
Comments