இம்மாதத்தில் என்றோ ஒருநாள் மணம் முடித்திருப்பாய்! தேதி தெரிவிக்காமல் திருமணம் செய்துகொண்டதற்கு முதலில் நன்றி; பிறகு வாழ்த்துகள். நம்மை நேசித்தவர் பிரிவுக்குப் பின் அழைப்பிதழ் தராமல் மணம் புரிந்துகொள்வதில் ஒரு சாதகமும் பாதகமும் இருக்கிறது. நான் எந்நாளில் துயரில் மூழ்குவதென அறியாமல் ஒவ்வொரு நாளும் குழம்பிப் போகிறேன். எந்நாளில் அழ வேண்டுமென்று அறியாமல் தினமும் அழாதிருக்கிறேன். வழக்கம் போல முழு ஆற்றலுடன் இயங்குகிறேன். உனது புதிய வாழ்க்கை தொடங்கிவிட்டதென்கிற என் கணிப்புகூட சலனமேற்படுத்தாமல் வெறும் தகவலாய் எஞ்சுகிறது.
நான் என்னை ஒருபோதும் சராசரியாய் எண்ணிக்கொண்டதே இல்லை. ஆனால் அன்பே, நம் காதலில் மிகச் சாதாரணனாய் மட்டுமே இருந்திருக்கிறேன். அதுவே நம் பிரிவுக்கு வழிவகுத்துவிட்டிருந்தது. என் ஆளுமைச்சாவிலிருந்து புத்துயிர்க்க செய்ததால் நம் பிரிவை எண்ணிப் புகாரில்லை. காலத்தை நாம் வீணடித்துவிட்டதாய் மட்டும் என்றுமே எண்ணிவிட வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன், சின்மணி. பிராப்தத்திற்கு இசைந்துகொடுக்கும்போது காதலின் சிதைவு நம்மை மேன்மைப்படுத்தும். அன்பின் வெளிச்சத்தையும் இருண்மையையும் முழுமையாய் அனுபவித்த கர்வத்தைத் தந்ததற்காக உனக்கு என்றுமே கடமைப்பட்டிருக்கிறேன்.
‘நீயே என் கடைசிக் காதலாய் இருக்கிறாய்’ என்பதை எண்ணி மகிழ்வதா வருந்துவதா? எல்லாம் முடிந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. அதன் பின் என்னிடமிருந்து என்னை மீட்பதற்கே ஓராண்டுகள் கழிந்தன. பாலுவின் புதிய ஆளுமை பெண்களைச் சந்திக்காமலில்லை. கடற்கரை மணலில் அவர்களின் பாதச்சுவடுகளைப் பதிய வைக்காமலில்லை. திரையரங்கின் இருளில் கைகளைக் கோர்த்து முத்தமிடாமலில்லை, நித்தியமான இரவுகளில் அவர்களைப் புணராமலில்லை. ஆனால் என் காதலே, எவருமே உன் பிரத்யேக இடத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்பது என்னை மேலும் வருந்தச் செய்கிறது. எவருக்காகவும் என் கண்ணீர்த்துளிகள் வழிந்தோடவில்லை, எவரிடமும் கெஞ்சி மன்றாடவில்லை, எவரையும் அதிகாரம் செய்வதில்லை, அடிபணிவதுமில்லை. நான் அப்பெண்களின் எல்லைகளைப் பூரணமாய் மதிக்கும் அந்நியன் மட்டுமே. அவர்களைச் சீண்ட விரும்பாதவனாய், அவர்களின் மனங்களைப் புண்படுத்த முடியாதவனாய் மாறிப்போனபோதுதான் காதல் என்னிலிருந்து வற்றிப்போயிருந்ததை உணர்ந்து திடுக்கிட்டேன்.
நீ சென்ற பின் எல்லாமே கணக்குவழக்குகளாய் மாறிப்போய்விட்டன. இப்படிப்பட்ட பெண்தான் வாழ்க்கைத்துணைக்குச் சரி வருவார் என எவரோ போட்டுக்கொடுத்த கணக்குக்குப் பின் ஓடத் தொடங்கினேன். சிறு தொலைவில் மூச்சிரைத்து நின்றுவிட்டு காலணிகளைக் கழட்டி தூர எரிந்தேன். எனக்கு முன் லட்சக்கணக்கானோர் அந்தக் கணக்கைத் துரத்தி ஓடுவதை முறுவலுடன் காண்கிறேன். எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறேன்!
இப்போதெல்லாம் காதலர்களைக் கண்டால் பொறாமை ஏற்படுவதில்லை; தனியர்களைக் காண்கையில் பரிதாபமும் தோன்றுவதில்லை. காதலில் கற்பனாவாதியாய் இருந்த ஒருவன் உணர்வற்று விறைந்துபோயிருப்பதைக் காணும்போது உனக்கு வியப்பாய் இருக்கலாம். அதை எண்ணி என்றேனும் நீ தாழ்வுணர்ச்சியும் கொள்ளக்கூடும். வருந்தாதே கண்ணே, காதலை அருகில் சென்று காண்பவன் அது வெறும் பகடையாட்டம் என்பதை உணர்வான். நான் விளையாடுவதை நிறுத்துக்கொண்ட முன்னாள் சூதன். சூதிலிருந்து மீண்டவன் சூதால் அழிய விரும்புவதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
என்னைப் போலவே நீயும் வேறொருவரைக் காதலிக்காததை எண்ணி எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. இவ்வகையில் நாம் ஒருவருக்கொருவர் பெரும் சங்கடங்களை அளித்துக்கொள்ளவில்லை. ஆனால் உன் மண நாளினை நினைத்துப் பலநாள் அஞ்சியிருக்கிறேன். இப்பெருங்கடலை எங்ஙனமேனும் கடந்துவிட வேண்டுமென நான் வகுக்காத வழிகளே இல்லை. என்னை அச்சப்படுத்திய அவ்வொருநாள் நானறியாமல் கடந்துபோகச் செய்ததற்காக மீண்டுமொருமுறை நன்றி.
உன் எல்லா நிராகரிப்புகளும் என்னைச் சினம் கொள்ளச் செய்தன. அது என்னை மேலும் பலம் கொண்டவனாய் மாற்றியது. எனவே நீ வகுத்த எல்லைகளுக்கும் நிராகரிப்புகளும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். போலி நம்பிக்கைகள் வழக்கமாகிவிட்ட நவீனக் காலத்தில் உன் பிடிவாதத்தின் மதிப்பு பொன்னுக்கு நிகர் பெண்ணே! இல்லையெனில் முன்னாள் காதலியின் திருமண நாளன்று ஒருவன் எவ்வகையிலும் நின்றுவிடாமல், சோர்ந்துபோகாமல் ஊக்கத்துடன் செயல்பட முடியுமா, சொல்? அஞ்சி நடுங்கிய அளவுக்கு இப்பருவம் மோசமானதல்ல. ஒரு சொட்டு விழிநீர் சிந்தவில்லை, ஒரு துயரப்பாடல்கூட என் செவிகளில் ஒலிக்க அனுமதிக்கவில்லை. இந்தத் துடிப்பும் ஆற்றலும் ஊக்கமும் நீயின்றி சாத்தியமில்லை அன்பே!
தினசரி உடற்பயிற்சி செய்வதால் வியர்வை வடிகின்றன. ‘ஓட்டத்தின்போது உடலிலிருந்து வியர்வை வடிவதால் கண்ணீருக்கு இடமிருப்பதில்லை’ என்கிற வாங் கார்-வாயின் வசனம் உனக்கு நினைவிருக்கிறதுதானே? வாங் கார்-வாய் படங்கள் உன்னை நினைவுபடுத்துவதால் அவற்றைத் தவிர்த்து வருகிறேன். நீ என்னைக் காணத் தவிர்த்ததற்குப் பழிதீர்க்க வேறு வழியில்லை.
இங்கிருந்து நம் பாதைகள் திசை மாறுகின்றன. ஒருபோதும் இணையாத வகையில் அவை வெவ்வேறு எல்லைகளை எட்ட உள்ளன. இரு திசைகளிலும் அடைமழை பொழிய வேண்டும். இரு பாதைகளிலும் பூக்கள் மலர வேண்டும். நிலவு தேயாத தேசமொன்றில் நீடூழி வாழ்ந்திடுக; அந்நிலவின் சொச்சத்தை என்றேனும் அண்ணாந்து பார்ப்பேன்.
Kommentare