top of page
Search
Writer's pictureBalu

வீழ்தலை உணர்தல்


"சலிப்புணர்வுக்கு மட்டுமே நீ பழகிட்டா இந்த உலகத்துல உன்னை எதுவும் ஆட்கொள்ளாது" - நாவலிலிருந்து...

சமீபத்தில் ஜெயமோகனின் தன்னை கடத்தலும், சாருவின் தேகமும் படித்து முடித்தேன். இரண்டிலும் பொதுவாய் அறியப்பட்ட செய்தி உடல் என்பது வெறும் ஊர்திதான். உடல் பற்றிய குற்ற உணர்வு கொள்ளுதல் வேண்டாம். உடலைக் கடந்து முன் செல்லலே அவசியமானது என்று. அதன் தொடர்ச்சியாக சொனாட்டா படித்தேன். உடல், காமம், குற்றவுணர்வு கொண்ட ஒருவனின் அகச்சிக்கலில் மீள்தல், இருப்பின் உண்மையைத் தேடுதல் ஆகிய கருவிலிருந்து நாவல் வளர்கிறது.

ருத்ரா!! இந்த பெயர் நானாக இருக்கிறது. ருத்ராவின் அகச்சிக்கல் என்னுடையதுதான். ஆம், பெரிய, மிகப்பெரிய பாலை வனம் இன்மை, ஒன்றுமில்லா உணர்வு, அதை மறக்கச் செய்யும் நீரோடையாக காம உணர்வு. ஆனால் அது வெறும் கானல் என்பது பார்த்த உடன் புரிவதில்லை. தாகம் அடங்கியதும் குற்றவுணர்வின் தவிப்பு அதை உணர வைக்கும். ஆனாலும் அது முடிவதில்லை. மூளையின் பெரும்பாதி நாளைய நாளின் அதன் வாசத்திற்கு காத்துக்கொண்டிருக்கும். பெண் பெண் என்ற அதன் தவிப்பு, தர்க்கத்தின் அத்தனை விளக்கத்தையும் தள்ளி வைக்கக்கூடியது. ருத்ராவில் என்னை உணர்ந்தேன். காதல் கிட்டாத போதும் பழகும் பெண்ணிடம், காதலிக்க நினைக்கும் பெண்ணிடம் உறவு என்ற நிலை இல்லாமலே நான் அவள் காதலன்தான் என்ற எனது கற்பனை காதலிலும் கலந்து இருப்பதும் என்னவோ ருத்ராவின் வாசனைதான்.

மீட்சியைப் பெறத் துடிக்கும் தருணங்களிலும், கலையின் உணர்வு அதை மீள்தலும் மீளாமல் இருக்க வைத்தலும் என்ற நிலைதான் போல.

சரி, தவறு, புனிதம், உண்மை என்ற எதுவும் கலையில் இருப்பதில்லை. கலையில் கிடப்பவனின் வாழ்வும், கலையை நோக்கி கரம் நீட்டுபவனின் எதிர்காலமும் இப்படித் தத்தளிப்பில் உலாவி உலாவி வெளியே வருவதுதானோ!

நாவலில், " கிடைப்பது அதீதமாயினும் போதாமையின் சிக்கலுக்கு உள்ளாவதே அடிமைத்தனத்தின் முதன்மைப் பண்பு" என்ற வரி நிறையத் தர்க்க ரீதியான யோசனையில் மூழ்கடித்தது. போதாமை, இயலாமை, தாழ்வுணர்வு , இருத்தலின் அவசியம் என்ன போன்ற கேள்விகள் சிக்கலானவை. அவை வெற்றியையும் தோல்வியையும் இன்பத்தையும் துன்பத்தையும் குறித்து எந்த ஒரு பிரக்ஞை கொண்டிருக்கவிடுவதில்லை. எதற்காக வாழ்வு, எதற்காகக் காதல் ,எதற்காகக் கனவு என்று ஒரு புறமும், கலை, காதல், காமம் என்ற இவற்றின் மீது தீவிர ஆர்வத்தை இன்னொரு புறமும் நம் அகத்தில் உதிக்க விடுகிறது. இருத்தலே எண்ணம். எண்ணமே இருத்தல்.

எந்தவொரு வீரிய செயல்பாட்டையும் செயல் உணர்வையும் உணர்ச்சி புறம் சார்ந்து நோக்காமல் விலகி நின்று பார்க்கும் திறம் உன்னிடம் உள்ளது பாலு. உன் எழுத்தில் அதன் திறம் சிறந்து விரிந்து இருக்கிறது. நாவலிலும் ருத்ரா அதை ஆமோதிக்கிறான்.

"உன்னை இன்பத்தில் ஆழ்த்தியவற்றில் மூழ்கித் திளைத்ததால்தான் இருத்தலியல் சிக்கலுக்கு ஆளானாய். மனிதன் சிக்கலின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதைவிட அபத்தம் எதுவும் இருக்கிறதா?" - நாவலிலிருந்து.

இதைத் திரும்பத் திரும்ப எனக்குள் கேட்டுக் கொண்டே இருந்தேன். அதற்கான தெளிவையும் நாவலிலிருந்தே பெற்றுக் கொண்டேன்.

"ஒன்றிலிருந்து விடுபட அதிலிருந்து தப்பி ஓடுவதற்குப் பதிலாக அதை உடன் வைத்துக்கொண்டு அலட்சியம் காட்டுவதே சிறந்ததாக இருக்குமென நினைத்தேன்." - நாவலிலிருந்து...

ருத்ராவின் மீட்சி எனக்கு நம்பிக்கையும், வலுவையும் சேர்த்திருக்கிறது. நன்றி ருத்ரா நன்றி பாலு.

(இதற்கு முன் உனது எந்த கதையும் படித்ததில்லை. விரைவில் முன்பு எழுதியதையும்
படிக்க ருத்ரா என்னைத் தூண்டி உள்ளான். படிப்பேன்)

"நாம் எதற்கு அடிமையாகியிருக்கிறோமோ அது மகிழ்ச்சியைச் சிதைக்கும். அழுத்தத்தைத் துறக்க எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே மேலும் அழுத்தத்தை உண்டாக்கும். இன்பமும் மகிழ்ச்சியும் வெவ்வேறு பொருள் கொண்ட சொற்கள்." - மீண்டும் நாவலிலிருந்து...


32 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page