நேற்று காலை எழுந்ததிலிருந்து மாலை வரை தீவிர குழப்பத்தில் உழன்று தவித்தேன்.
கல்லூரி சேர்ந்தபோது இயக்குநராகும் கனவோடு காட்சித் தொடர்பியல் படிப்பை எடுத்துப் பயின்றேன். பட்டப்படிப்பை முடிக்கும் முன்பே என்னால் ஒரு மாபெரும் தியாகத்தை திரைத்துறைக்காகச் செய்ய முடியாதென்பதைப் புரிந்துகொண்டேன். என் நண்பர்கள் உதவி இயக்குநர்களாகப் பட்ட பாடுகளைப் பார்த்து அவர்களின் துயரக் கதைகளைக் கேட்டதனாலேயே அந்தத் துறை மீது ஒரு விலக்கம் வந்தது. இது முற்றிலும் ஒரு பகடையாட்டம் என்பதை மிக இளம் வயதிலேயே உணர்ந்துகொண்டு அங்கிருந்து வந்துவிட்டதாகத் தோன்றுகிறது.
உதவி இயக்குநர்களாக நண்பர்கள் பட்ட அவமானங்களைக் கேட்டுவிட்டு, ‘இதெல்லாம் எதற்காக? ஒரு கதை சொல்வதற்காக!’ என்பதை உணர்ந்தபோது நான் தேர்ந்தெடுத்த பாதை இலக்கியம். உதாரணமாக, ‘சொனாட்டா’ எனது கனவுப் படைப்பு எனும்பட்சத்தில் அதை திரைப்படமாகச் சாத்தியமாக்க ஒரு தசாப்தமாவது தேவைப்பட்டிருக்கும். ஆனால் வெறும் ஓராண்டில் அதை ஒரு இலக்கியப் படைப்பாக என்னால் கொண்டு வர முடிந்துவிட்டது. அதுமட்டுமின்றி, அதிலிருந்து முழுமையாக வெளியேறி அடுத்த நாவலையே எழுதிவிட்டு என் பதிப்பாளருக்கு அனுப்பிவிட்டேன். இங்கு நான் நினைத்த கதையை எவரின் தலையீடின்றியும் முழு சுதந்திரத்தோடு சொல்ல முடிகிறது. திரைத்துறையில் கிடைக்கும் புகழும் பொருளும் அங்கீகாரமும் இங்கில்லை என்றாலும் இது தரும் மனநிறைவு அலாதியானது.
படிப்புக்கான வேலையைச் செய்ய வேண்டுமென நினைத்தபோது ஊடகத்துறை எனக்கொரு வாய்ப்பளித்தது. கூடவே எழுதும் வேட்கை இருப்பதனால் செய்தித்துறையில் கற்றுக்கொண்டு பணியாற்றினேன். ஆனால் ஐடி துறையில் தொடக்க ஊழியன் பெறும் ஊதியத்தைவிட செய்தித்துறையில் பழந்தின்று கொட்டை போட்டவன் பெறும் சம்பளம் குறைவு. இங்கு எல்லோரின் நிலையும் ‘கற்றது தமிழ்’ பிரபாவினுடையதுதான். இதுபற்றி என் முந்தைய மேலதிகாரி ஒருவருடன் அடிக்கடி உரையாடியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர், “இன்னைக்கு எழுத்துக்கு இருக்கிற மரியாதையைவிட மொகத்துக்கு இருக்கிற மரியாதை அதிகம். என்னத்தையாவது பண்ணி ஃபேஸ் வேல்யூவை அதிகப்படுத்திக்கோ. மீடியால ஒரு அறிவும் இல்லாதவன்லாம் வெறும் முகம் ஏற்படுத்தித் தர பாப்புலாரிட்டி வெச்சே மாசம் லட்சக்கணக்குல சம்பாதிச்சிக்கிட்டு இருக்கானுங்க” என்பார்.
1980ல் அமெரிக்காவில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தபோது IBM எட்டு பில்லியன் டாலர் நஷ்டமடைந்து மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது. இந்த இழப்பை ஈடு செய்ய எவ்வித முன்னறிவிப்புமின்றி மூன்று லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது அந்நிறுவனம். உலக வரலாறு சந்தித்த முதல் பெரும்பணிநீக்கம் அதுவே. ஊழியர்கள் இத்தையொரு சகிக்க முடியாத துரோகமாக உணர்ந்தனர். தனியார் நிறுவனங்களானாலும் ‘பணி நிரந்தரம்’ என்கிற கோட்பாடு கடைப்பிடிக்கப்பட்ட 80களில் இப்படியான பணிநீக்கம் என்பது மோசமான நிர்வாகத்திறனாக மதிப்பிடப்பட்டது. But Today it’s strictly business.
ஐடி, ஊடகம் போன்ற துறைகளில் பணி நிச்சயமின்மை இருப்பதால் முதன்முறையாக எதிர்காலம் குறித்து அதிகம் சிந்திக்கத் தொடங்கினேன். இப்போது பெறும் சம்பளம் போதுமானதாக இருந்தாலும் முன்னேற்றத்தைக் குறித்த சுய சந்தேகங்கள் இருந்தன. திருமணச் சந்தை மாற்றம், வாழ்க்கைமுறை மாற்றம், நகரமயமாக்கலின் தாக்கம், சார்ந்திருப்போரின் உலகியல் இச்சைகள் என எல்லாமுமே சேர்ந்து ஒருவனைப் பணத்தையே விரட்டச் சொல்வதால் ஏற்படுகின்ற பதற்றம் இது! அதிகம் சம்பாதிக்கும் ஐடி ஊழியர்களுடன் போட்டி மனோபாவமும் பொறாமையும் உண்டானது. இருப்பதைவிட்டுப் பறப்பதற்கு ஆசைப்பட்டு தொப்பென்று கீழே விழவும் செய்தேன்.
தற்போது பணியாற்றி வரும் நிறுவனத்தில் திடீர் பணிநீக்கம் அறிவிக்கப்பட்டிருந்ததால் மீண்டும் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தை வேதாளம் போல மண்டையில் ஏறி ஆக்கிரமித்தது. திடீரென்று ஒரு யோசனை. ஏன் ஊடகத்துறையை முற்றிலும் விடுத்து வேறொன்றிற்கு மாறக்கூடாது? அம்மா அதற்கான அறிவுரைகளை வழங்கினார். அதன்பேரில் ஒன்றிரண்டு நபர்களைச் சந்தித்து ஆலோசனை பெற்றதில் அவர்கள் முழு ஊக்கத்தை அளித்திருந்தாலும், ‘என்னால் இந்த நீண்ட ஆற்றைக் கடந்துவிட முடியுமா?’ என்ற சுய சந்தேகம்! நான் மாற நினைத்த துறையில் பணியாற்றி வரும் பள்ளித் தோழி ஆபிதாவைச் சந்தித்தபோது, “இது ஆறல்ல; பெருங்கடல்” என எச்சரித்தாள். அவளுடன் உரையாடிய அந்த ஒரு மணி நேரம் பெரும் திறப்பை அளித்து எல்லாக் குழப்பங்களிலிருந்தும் விடுவித்தது. ஊடகத்துறையிலேயே மேற்கொண்டு முன்னகரும் உத்வேகத்தை அளித்தது.
என் மனம் தடுமாறும்போதெல்லாம் நான் நாடிச் செல்லும் ஒருவர் எழுத்தாளர் சரவணன் சந்திரன். அச்சமயங்களில் அவரின் சொல்லுக்கு முழுவதும் கட்டுப்பட்டுவிடுவேன். எதிர்காலம் சார்ந்த என் அதிதீவிர குழப்பத்தை உணர்ந்துகொண்டு அவர் சொன்ன ஒன்றை மறக்கவே மாட்டேன். “நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது எனக்கு மீன் சாப்பிடவே பிடிக்காது. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்குப் புரியுதா?” என்றார். அடுத்த நொடியே புரிந்துவிட்டிருந்தது. அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, “வாழ்க்கை ஒரு படகு மாதிரி. அது பொறுமையா போய் ஒரு எடத்தை அடையும். நாம அதுல ஏறிக்கணும், அவ்வளவுதான். நாமதான் கேப்டன் ஆஃப் தி ஷிப்னு நினைச்சிடக்கூடாது. லைஃப் அவ்ளோ ப்ரெடிக்டபில் இல்ல ராஜா” என்றார்
அவர் சொன்னதைப் பற்றி நண்பர் தீனனிடம் பேசிக்கொண்டிருந்தேன். “T20WC ஃபைனல்ல விராட் கோலி ஆடின மாதிரி லைஃப்ல ஆடுங்க, பாலு. இப்போ நிலைமை சரியில்ல. அதுனால அடிக்க சான்ஸ் எடுத்து விக்கெட் விட்டுடாதீங்க. முதல்ல க்ரீஸ்ல நின்னு ஆடுங்க. Half century அடிச்சுட்டு தன்னம்பிக்கையை வளர்த்துக்கோங்க. அப்புறம் உங்களுக்குன்னு ஒரு டைம் வரும். அப்போ Accelerate பண்ணுங்க” என்றார்.
ரபாடா, யான்சென் பந்துகளில் விராட் கோலி அடித்த அவ்விரு சிக்ஸர்களைவிட நடு ஓவர்களில் அவர் அடித்த ஒற்றை ரன்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
Comments