வயிறு நிறைவின்றியும், விதைப்பை நிறைந்தும் இருக்க வேண்டுமெனச் சொல்வார்கள். மெலிந்தவனான நான் உடற்பயிற்சிக்கூடத்துக்குச் செல்ல ஆரம்பித்ததிலிருந்து வயிறு நிறைவின்றி இருந்ததே இல்லை. உடல் எடை கூட்டுவதற்காக மூன்று வேளை கார்போஹைட்ரேட்ஸ் உணவு, பாலுடன் கலந்து புரத சம்ப்ளிமென்ட் என வயிற்றுக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பேன். சுமார் 55 கிலோ இருந்த காலகட்டத்தில் தினமும் 3,000 Calories வரை சாப்பிட்டிருக்கிறேன். அவற்றைச் சர்க்கரைப் பொருட்களின்றி எடுத்துக்கொள்வதால் போதுமென நினைக்குமளவு சாப்பிட வேண்டும். புரத மில்க்ஷேக்கில் 1,000 Calories தேற்றிவிடுவேன். பயிற்சிக்கூடத்தில் ‘One more Rep’ என நண்பர்கள் ஊக்கமளிப்பது போலச் சாப்பிடும்போது ‘One more bite’ என எனக்கு நானே ஊக்கமளித்து தினசரி 5 முட்டை தோசை சாப்பிட்ட காலம் உண்டு.
சாப்பிட்ட பிறகு அவற்றை செரிமானம் செய்ய உடல் படும் பாட்டைச் சொல்லி மாளாது. கார்போஹைட்ரேட்ஸ் உட்கொண்டாலே அதீதமாகத் நீர்த்தாகம் எடுக்கும். ஆகவே அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். தூங்கும்போதும் மூன்று முறையாவது விழித்துக்கொள்வேன். 1-2 மணி நேரம்கூட தண்ணீர் குடிக்காமலோ, சிறுநீர் கழிக்காமலோ இருக்க முடியாது. இச்சுழற்சியைத் தவறவிட்டு என்றேனும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகி அவதிப்படுவேனோ என்கிற பயத்தால் நீரை உட்கொள்வதிலும், வெளியேற்றுவதிலும் கவனத்துடனேயே செயல்படுவேன். உண்ட மயக்கம், அகால விறைப்புத்தன்மை என மனமும் கார்போ ஹைட்ரேட்டால் ஓரிடத்தில் நிலைகொள்ளாது.
ஈராண்டுகளாகப் புரத சப்ளிமென்ட் எடுத்து வந்து, இப்போது அதன்மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது. 24 கிராம் புரதம் இருப்பதாகச் சொல்லி வெறும் 18 கிராம் புரதத்தை மட்டுமே நிறைக்கும் சப்ளிமென்ட் துறைகளின் ஸ்கேம் ஒருபுறம். மற்றொரு பிரச்சினை அவற்றின் விலை. சந்தையில் ஒரு கிலோ புரத சப்ளிமென்ட்டின் குறைந்தபட்ச விலையே சுமார் ரூ.2,000க்கு விற்கப்படுகிறது. தினமும் ஒரு ஸ்கூப் அளவில் எடுத்தால்கூட சரியாக ஒரு மாதத்தில் தீர்ந்துவிடும். கணக்குப் போட்டால் 24 கிராம் புரதம் வருவதாகச் சொல்லப்படும் ஒரு ஸ்கூப் புரத சப்ளிமென்ட்டின் விலை ரூ.66. அதே அளவிலான புரதத்தை எந்தக் கலப்படமுமில்லாமல் வெறும் ரூ.20க்கு 4 முட்டையில் எடுத்துவிடலாம்.
எனவே புரத சப்ளிமென்ட்டை முற்றிலுமாக கைவிட்டேன். ஏற்கெனவே நாளுக்கு 5 முட்டைகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கையை 10 ஆக உயர்த்திவிட்டேன். காலையுணவாக 5, இரவுணவாக 5 எனச் சாப்பிடுவதால் மதியம் ஒருவேளை மட்டுமே கால் கிலோ கோழிக்கறியுடனான கார்போஹைட்ரேட்ஸும் காய்கறிகளும். இப்படிச் சாப்பிடுவதால் பசித்த நிலையிலேயே இருக்க முடிகிறது. அது போதாமையின் நிறைவின்மை அல்ல; புரதம் ஈட்டுத் தரும் ஆற்றலின் நிறைவின்மை. பசியோடு இருப்பவனுடைய வேகத்தைப் பற்றி ‘விக்ரம்’ படத்தில் ரோலெக்ஸ் சொல்வார் இல்லையா! அப்படியான நிலைதான்.
நானிருந்ததில் சிறந்த டயட் இதுவே. புரதமும் பயிற்சியும் உண்டாக்கும் உடற்சூட்டைத் தணிப்பதற்குக் கொஞ்சம் தயிரும் மோரும் எடுத்துக்கொள்கிறேன். உடலுக்குத் தேவையான ஆரோக்கிய கொழுப்பு முட்டையிலிருந்து கிடைப்பதால் தூக்கம் மிகச்சரியான ஆழத்திலும் அளவிலும் இருக்கின்றது. நானே நினைத்தாலும் 8 மணி நேரத்துக்குக் குறைவாகவோ கூடவோ உறங்க முடியாத கச்சிதம். எழுந்ததும் கூர்மையான விழிப்பு. புரத சம்ப்ளிமென்ட்டும் கிரியாட்டினும் எடுத்த சமயத்தில் தூக்கிய பளுவைவிட முட்டைகள் உண்பதால் இன்னமும் அதிக எடை தூக்க முடிகிறது.
இன்று சர்வதேச முட்டை தினம் என்பதால் அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க இதையெல்லாம் எழுதுகிறேன். முட்டை மட்டும் இல்லாவிட்டால் உலகில் பல உயிர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மாய்ந்திருக்கும்.
Comments