முடிந்தவரையில் சமூக வலைதளங்களைத் தவிர்த்து வருகிறேன். ஏற்கெனவே சொன்னதுபோல மொத்தமாகச் சேர்த்தே ஒரு நாளுக்கு 20 நிமிடங்கள்தான் பயன்படுத்துகிறேன். ஆனால் 9 மணி நேர அலுவலகப் பணிக்காக 3 மணி நேரமாவது ட்விட்டர் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் ஊடகங்களை மட்டுமே அதில் பின்தொடர்கிறேன்; சில சினிமா மற்றும் கிரிக்கெட் நிபுணர்களையும்.
ட்விட்டர் முன்பு போல இல்லை. அர்காரிதம் மாறிவிட்டது. நான் 2 கிரிக்கெட் நிபுணர்களைப் பின்தொடர்கிறேன். அவர்களின் வாயிலாக பலரின் கிரிக்கெட் ட்வீட்ஸைப் பார்க்க நேர்கிறது. கிரிக்கெட் ட்விட்டரில் விராட் கோலி ரசிகர்களைவிட ஒரு மோசமான ஜந்துக்களைப் பார்க்கவே முடியாது. ரிஷப் பண்ட் ரசிகர்கள் அளவுக்கு ஹை லெவல் ஜந்துக்கள் இல்லையெனினும், விராட் ரசிகர்களின் பதிவுகளைப் பார்க்கச் சகிக்காது. ஒரு நாளுக்குக் குறைந்தது 4 ட்வீட்டாவது இப்படிப் பார்த்துவிடுகிறேன். அதாவது விராட் 23வது வயதிலேயே ப்ரெட்லீ பந்தில் சிக்சர் அடித்தாராம், 24வது வயதில் 150 ஸ்ட்ரைக்ரேட் வைத்திருந்தாராம், 25வது வயதில் இத்தனை செஞ்சுரி அடித்தாராம்… வயதை வைத்துப் பெருமை பேசுவதில் அவர்களுக்கு இணை யாருமே இல்லை. அய்யா, அந்தச் சாதனைகளையெல்லாம் ஒரு வீரன் அந்த வயதில் படைக்காமல் வேறு எப்போது அய்யா படைக்கப் போகிறான்?
பொதுவாக எனக்குச் சாதனை படைத்தவர்களின் குறைந்த வயதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டுபவர்களைக் கண்டாலே ஆகாது. 15 முதல் 30 வரையிலான நமது வாழ்க்கை ஒரு Golden Era என்று சொல்லப்படும் பொது வாசகம் உண்டு. அதேபோல 30 வயதுக்குள் நமது ஆளுமை முடிவு செய்யப்பட்டுவிடும் என்று அறிவியல் சொல்கிறது. அதற்கு மேல் நினைத்தாலும் நமது ஆளுமையை மாற்றமுடியாது. இதனால் இளமையை மிகவும் ஜாக்கிரதையாகவும், பயனுள்ளதாகவும் அமைத்துக்கொள்ள வேண்டுமென நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. அப்படி இருக்கையில் விராட் கோலி இதைச் சாதித்தான், ரிஷப் பண்ட் அதைச் சாதித்தான் என இணையத்தில் நேரத்தை வீணடித்துக்கொண்டிருப்பவர்களைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஆபாசப்படங்களைப் பார்ப்பது போன்ற செயல்தான். அல்லது Voyeur Fetish இருக்கும் நபர்களாக அவர்களைக் கருதிக்கொள்ளலாம். அவர்கள் செயலில் ஈடுபட மாட்டார்கள். செயல்படுபவனைப் பார்த்துப் பாராட்டித்தான் உச்சமடைவார்கள். அவர்களால் அது மட்டுமே முடியும். எனவேதான் ஒருவனுக்கு எவ்வளவு ஸ்போர்ட்ஸ் அறிவு இருந்தாலும் விளையாட்டில் ஈடுபடாத வரையில் அவனுக்கு மதிப்பு கிடையாது.
ஐபிஎல் சமயங்களில் இந்த Voyeur-களின் பூமர்தனமான கிரிக்கெட் கருத்துகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கும். உதாரணமாக ரியான் பராக் என்ற ஓர் இளம் வீரன். மிகச்சிறந்த ஆட்டக்காரன், ஏகப்பட்ட சொதப்பல்களைச் செய்திருக்கிறான். கடந்தாண்டு RR ரசிகர்களே அவனைத் திட்டித் தீர்த்தனர். அதற்கு முந்தைய ஆண்டு CSK ரசிகர்களின் பொறாமையை வாங்கிக் கட்டிக்கொண்டான். கிரிக்கெட்டை விளையாடி அதை முழுமையாகப் புரிந்துகொண்ட ஒருவனுக்கு ரியானின் வீழ்ச்சிகளுக்குக் கருணை காட்டத் தெரிந்திருக்கும்.
விராட் கோலி மற்றும் தோனி ரசிகர்களிடம் மட்டுமே காணக்கூடிய விசித்திர பழக்கம் ஒன்றுண்டு. அவர்களது தலைவன் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டால் அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டு ‘ஆல்ஃபா’ என்று பதிவிடுவார்கள். இதைச் செய்யும் அனைவருமே பீட்டாவாகத்தான் இருக்க முடியும். உண்மையான ஆல்ஃபா மற்றவனை ஆல்ஃபாவாக ஒத்துக்கொள்ளவே மாட்டான். அவனுக்கு உலகிலுள்ள அனைத்து ஆண்களுமே போட்டியாளன்தான்; தன்னை உட்பட. இந்த Competitiveness-ஐ இன்றைய தலைமுறை கருணையின் பேரில் அல்லது சோம்பேறித்தனத்தின் பேரில் இழந்துவிட்டது. பெரும்பாலான இளைஞர்களிடம் இளமையின் வேகத்தைக் காண முடிவதே இல்லை. எவனைக் கேட்டாலும் இருத்தலியல் சிக்கல் என்கிறான். கிரிக்கெட் விளையாட வரும் ஒருவன் அன்றைய தினத்தில் 3 முறை சுய இன்பம் செய்ததாகச் சொல்கிறான். மற்றொருவன் பிரியாணி சாப்பிடுவதற்காக இரவு 1 மணிக்கு வண்டியை எடுத்துக்கொண்டு போரூர் கிளம்புகிறான். இணைய இளைஞர்களால் மகிழ்ச்சியைவிடத் துக்கமே முன்னிலைப்படுத்தப்படுகிறது. உடலுழைப்பைவிடச் சோம்பேறித்தனமே நியாயமாக்கப்படுகிறது. உண்மையான காமத்தைவிட பொனாக்ரஃபியே தேர்ந்தெடுக்கப்படுகிறது. Temporary Celibacy-ஐ விட Sexual Desperation-ஏ அதிகம் உணரப்படுகிறது.
என் முதல் புத்தகம் வெளியானபோது என் வயது 20. அப்போது வயது குறிப்பிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றேன். மேலும் முதல் புத்தகம் என்பதால் எதிர்பார்த்ததைவிட அதிகமான பாராட்டுகளையும், விற்பனையையும் பெற்றேன். ஆனால் ‘கால வெளியிடை’யைவிட 22வது வயதில் வெளியான ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ நல்ல புத்தகம். அதற்கு நான் எதிர்பார்த்த விமர்சனங்கள் கிடைக்கவில்லை. ‘கால வெளியிடை’ வெளியான சமயத்தில் ‘விரைவாகவே இந்தப் பயணத்தை ஆரம்பித்துவிட்டேன்’ எனத் தோன்றியது. இப்போது அது மிகத் தாமதமாகப் படுகிறது. ஃப்ரென்ச் எழுத்தாளர் விக்டர் யூகோ பதின்பருவத்திலேயே ‘ஆசான்’ என்றழைக்கப்பட்டார். பாரதியும் அப்படித்தான் என நினைக்கிறேன். இவர்களை விடுவோம், விவேக் பாரதி 12, 13, 14 வயதுகளில் எழுதிய கவிதைகளையெல்லாம் நீங்கள் படித்திருக்க வேண்டும். நவீனக் காலத்தில் எழுதப்பட்ட சிறந்த மரபுக் கவிதைகள் அவை என்பதை அடித்துக்கூற முடியும். கிண்டிலிலிருக்கும் ‘பேசுபொருள் நீயெனக்கு’ நூலைப் படித்துப் பாருங்கள். ஒவ்வொன்றும் உச்சம்.
இப்போதும் என் வயதைப் புதிதாகத் தெரிந்துகொள்பவர்களுக்கு முதலில் வருவது ஒரு சிறிய ஆச்சரியமே. நான் இப்போது பெற்றிருக்கும் அனைத்தையும் சற்று முன்கூட்டியே பெற்றுவிட்டதாக அவர்கள் நினைக்கக்கூடும். அப்படியல்ல, இது என் வாழ்வின் பொற்காலம். ஒவ்வொரு மணித்துளியும் நான் மேற்கொள்ளும் செயல்பாடுகள் ஏதோ ஒன்றின்மீது செய்யும் முதலீடு. ஏழு ஆண்டுகள் என் ஆளுமையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கிக்கொண்டிருப்பேன். அதைக் கொண்டு மீதி வாழ்வில் ஆளுமையை மேலும் செதுக்க முடியுமா எனப் பரிசோதிப்பேன். இயற்கையை வெல்ல முற்படுபவனும், அறிவியலை வெல்ல முற்படாதவனும் அர்த்தமற்றவன் அல்லவா!
இயக்குநர் வெற்றிமாறன் ஒரு நேர்காணலில் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. “All revolutions are done by men in their 20s & 30s. After that you can make only compromises; you can never make revolutions. Revolutionaries are young men”.
புரிந்துகொள்ளுங்கள், தயதுசெய்து இதைச் சொல்லிய காரணத்திற்காக வெற்றிமாறனைப் புகழ்ந்து தொலையாதீர்கள்.
留言