top of page
Search
Writer's pictureBalu

உடலைப் பேணுதல்

Updated: Jul 17, 2022

உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்லலாமென ஜனவரி மாதம் முடிவெடுத்ததும் நண்பன் ஒருவனிடம் அதைத் தெரிவித்தேன். “இணைய ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை கேள். ரூ.4,000 வரை செலவாகும். நீ எந்த நேரத்தில் எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டுமென்பதைச் சொல்வார்கள். நீ அதைச் சரியாகத்தான் செய்கிறாயா என்பதற்கு ஆதாரமாகப் புகைப்படம் கேட்பார்கள். தொடங்கும்போது உனது எடையைக் கேட்டறிந்துகொள்ளும் அவர்கள், உன் விருப்ப எடை எவ்வளவு என்பதையும் அறிந்துகொள்வார்கள். அதேபோல் உனக்கு லட்சிய உடலமைப்பு என ஏதேனும் இருந்தால் அதற்கேற்ற உடற்பயிற்சிகளைக் கொடுப்பார்கள். நீ அவற்றைக் காணொளி மூலம் பதிவு செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறு 4 முதல் 6 மாதங்கள் தொடர்ச்சியாகச் செய்தால் உனது லட்சிய உடலமைப்பையும், எடையையும் எட்டிவிட முடியும். நாம் கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்துகொண்டிருப்போம். ஆனால் அதற்கான பலனே கிடைக்கவில்லையெனில் அது நம்மை ஒரு விரக்தி நிலைக்கு இட்டுச் செல்லும். நமக்கு அந்த அளவுக்குப் பொறுமை இல்லை” என்றான்.


நான் ஊட்டச்சத்து நிபுணர்களுக்கு எதிரானவன் அல்லன். அவன் இவ்வாறு சொல்லிக் கேட்டதும் விந்தையாக இருந்தது. 6 மாதங்களில் லட்சியத்தை எட்டிவிடும் அளவுக்கு மனித உடலென்ன அவ்வளவு எளிமையானதா? நவீன மனிதர்கள், ‘பொறுமை’ எனும் மாபெரும் மூலாதாரத்தை இழந்துகொண்டிருக்கின்றனர். அவர்களின் இந்தப் பொறுமையின்மையை ஊட்டச்சத்து நிபுணர்கள் மட்டுமல்ல, எல்லாத்துறையைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்திக்கொண்டு பணம் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். ஏன்? என்னை எடுத்துக்கொள்ளுங்கள். நானுமே மனிதர்களின் பொறுமையின்மையைப் பயன்படுத்திக்கொண்டு பணம் சம்பாதிக்கும் ஒரு துறையில்தான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். அவர்கள் எப்போதுமே அப்படிப் பொறுமையில்லாதவர்களாகவும், சோம்பேறிகளாகவும் இருக்கவே நான் பொதுவாக விரும்புவேன். ஏனெனில், அது ஏதோவொரு கட்டத்தில் அவர்களின் மத்தியில் என்னைத் தனித்துக்காட்டும். அவன், “நமக்கு அந்த அளவுக்குப் பொருமை இல்லை” என்று சொல்லும்போது, “ ‘நமக்கு’ அல்ல; ‘உனக்கு’ ” என்று சொல்லத் தோன்றியது. போகட்டும்.


இன்றைய ‘நீயா நானா’ நிகழ்ச்சி பார்க்கும்போது இச்சம்பவம் நினைவுக்கு வந்தது. மனிதர்களின் அவசரத்தைப் பயன்படுத்திக்கொண்டு பணம் பார்க்கும் தரப்பினருக்கும், சோம்பேறிகளுக்கும் இடையேயான நல்ல கேலிக்குரிய விவாதமாக இருந்தது. அதிலும் ஒருவன் உடற்பயிற்சிக்கூடத்திற்குச் சென்றதிலிருந்து அதனால் ஏற்படும் பசியால் 2 பரோட்டாக்களைக் கூடுதலாகச் சாப்பிடுவதாகச் சொன்னபோதெல்லாம் சிரிக்க முடியாமல் இருக்க முடியவில்லை. உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்லும் ஒருவன் பரோட்டா சாப்பிடலாமா? அதை ஏழைகளின் உணவு என்றெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. பரோட்டாவின் அதே விலைக்குத்தான் 3 இட்லி அல்லது 1 செட் தோசை கிடைக்கின்றன.


உணவு விஷயத்தை விடுவோம். சமீப காலத்தில் என் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பற்றி பதிவுகளில் எழுதியிருக்கிறேன். அதில் ‘தற்காலிகமான கடைப்பிடித்தல்’ என எதுவுமே இல்லை. உடற்பயிற்சிக்கூடத்தில் சேர்ந்த புதிதில் அம்மா, “இது எத்தன நாளிக்குப் போகப் போற?” என்றார். “உடம்புல தெம்பு இருக்கிற வரை” என்றுதான் சொன்னேன். நான் வாழும்வரை ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்பேன்; கடைசி மூச்சுள்ள வரை ஒவ்வொரு நாளும் தியானம் செய்வேன்; இப்படிப் பல. வாழ்க்கைமுறை மாற்றம் என்பதற்குப் பெயர் இதுதானே! அதைவிட்டு வெறும் 6 மாதங்களுக்குச் செய்துவிட்டு எல்லாப் பலன்களையும் நோகாமல் நோம்பு கும்பிட ஆசைப்படுபவர்களை என்னவென்று சொல்ல? உடலை அவ்வளவு ஏளனமாக எடுத்துக்கொண்டால் அது நம்மையும் ஏளனம் செய்யும்.





நடிகர் சிம்பு உடலைக் குறைத்தபோது ஒருவர், ‘எப்படி ஒரே ஆண்டில் இதைச் செய்து முடித்தார் என்று வியந்துகொண்டிருக்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார். இன்று வரை அந்தப் பதிவு எனக்கு நினைவிருப்பதற்குக் காரணம், அவர் பயன்படுத்திய ‘ஒரே ஆண்டில்’ என்ற அச்சொற்கள். சிம்புவால் அதை எப்படிச் சாத்தியப்படுத்த முடிந்ததெனில் ஒழுக்கம், நிலைத்திருத்தல், நேரம் ஒதுக்குதல். உடலைப் பேணுவதற்காக எடுத்துக்கொண்ட நேரத்தில் அவர் எந்தப் படமும் நடிக்காமல் ஒரு நாளுக்கு 8 மணி நேரம் உடற்பயிற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. சிம்புவின் பயணம் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அதே அளவு உழைப்பை அவர் இப்போதும் போட வேண்டும். இல்லையெனில், அவர் மீண்டும் ‘AAA’ சிம்பு மாதிரி மாறிவிடுவார். ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், இப்போது கஷ்டப்பட்டு எதையும் செய்ய வேண்டியதில்லை. உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு முறை என்பதெல்லாம் பல் துலக்குவது போல அவரது அன்றாடத்தில் இணைந்திருக்கும். வாழ்க்கைமுறையில் மாற்றம் செய்த எவரும் முதல் சில மாதங்களுக்கு மாற்றங்களுக்காகக் காத்திருக்கவே கூடாது. எல்லாவற்றையும் முதலில் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். எனக்கு உடற்பயிற்சி என்பது அப்படித்தான். நான் ஜனவரியிலிருந்து உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்லத் துவங்கினாலும் அதற்கு முன்பு வீட்டிலேயே பயிற்சி செய்வேன். கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இன்று வரை வியர்வை வராமல் ஒரு நாளினைக்கூடக் கழித்ததில்லை. மனிதன் வியர்வைச் சிந்துவதெல்லாம் அடிப்படை; அதைப் பெருமையாகச் சொல்லித் தம்பட்டம் அடிக்கும் அளவுக்குக் காலம் மாறிவிட்டது. என்ன செய்வது! இன்று மாலைகூட ஒரு ரெட் பில் பதிவு பார்த்தேன்: ‘A Modern Man visits his favorite porn site more often than he visits a gym’.


என்னுடைய முன்னாள் காதலிக்கு நடிகர் ஹரீஷ் கல்யாணைப் பிடிக்குமென்பதால் எனக்கு அவர்மீது கொஞ்சம் பொறாமை இருந்திருக்கிறது. ஆனால் இப்போது எந்தப் பொறாமையும், அகங்காரமுமின்றி அவரை இணையத்திலும் திரையிலும் அணுக முடிகிறது. 2 காரணங்கள்: 1] அவள் இப்போது என் முன்னாள் காதலி ஆகிவிட்டாள் என்பதால். 2] ஹரீஷ் கல்யாணின் சமீபத்திய நேர்காணல் (channel : InStrength by Strength India Movement - Tamil). அவரது Body Transformation பற்றி அதில் பேசியிருப்பார். ஹரீஷ் கல்யாண் Body Transformation செய்யுமளவுக்கு அவரது உடல் ஒன்றும் கூடுதலாகவோ குறைச்சலாகவோ இல்லையே என நினைக்கலாம். ஆனால் நமது உடலைப் பிறர் அறிவதைவிட நாம்தான் அதிகம் அறிவோம்.


அவர், “இந்த Body Transformation செய்ய எனக்கு இரண்டரை ஆண்டுகள் எடுத்தது. இரண்டரை ஆண்டுகளாக உழைத்து நான் பெரிய ஹ்ரித்திக் ரோஷன் போல ஆகிவிட்டேனா என்றால் நிச்சயம் இல்லை; ஆனால் எனக்குப் பிடித்ததுபோல் ஆகியிருக்கிறேன். இதுவரை இல்லாத நானாக ஆகியிருக்கிறேன். இதற்கு இவ்வளவு கடுமையாக உழைத்துத்தான் ஆக வேண்டுமா, 3 அல்லது 6 மாதங்களில் அடைந்துவிடும் அளவுக்குக் குறுக்கு வழி எதுவுமில்லையா என்று டாக்டரிடம் கேட்டேன். இருக்கிறது, ஆனால் அவ்வாறு அடைந்தால் அதனால் உடல் என்ன பாடுபடும் என்பதையும் டாக்டர் சொன்னார். நான் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்தேன். ஒரு நாள் தவறவிட்டாலே மனம் என்னவோ போல் ஆகும். சில சமயம், படப்பிடிப்பு காரணத்தால் 2 அல்லது 3 நாட்கள்கூட உடற்பயிற்சியைத் தவறவிட்டிருக்கிறேன். ஆனால் அத்தனை நாட்கள் தொடர்ச்சியாகச் செய்த உடற்பயிற்சிகள் அந்த 2 நாட்கள் எனக்குப் பலனளித்ததை என்னால் உணர முடிந்தது” என்றார்.


இதுதவிர உடற்பயிற்சியால் மனதுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசியிருப்பார். இத்தனை நாட்கள் அவர் மீதிருந்த பார்வை இந்த நேர்காணல் மூலம் கொஞ்சம் மாறியது. பொதுவாகவே, உடற்பயிற்சிகள் ஒருவனது மனநிலையை எப்படி மேம்படுத்தும் என்பது குறித்துப் பேசுபவர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. சமீபத்தில் திவாகரைச் சந்தித்தபோது, “தினமும் காலை எழுந்து ஓட்டப்பயிற்சி செய்து முடித்துவிட்டு அந்நாளினைத் தொடங்கும்போது மனதுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். (இதைச் சொல்லும்போது அவரது முகம் மிளிர்ந்தது) நான் பொதுவாகவே ஒரு காலை பறவை. 5 அல்லது 6 மணிக்கு எழுந்துகொள்ளும்போது எனது குடும்பத்தினர் நன்றாக உறங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்க்கும்போது, நாமும் ஏன் இவர்களைப் போல் கொஞ்சம் கூடுதலாக உறங்கக்கூடாது என்று யோசித்திருக்கிறேன். ஆனால் இந்த ஓட்டப்பயிற்சியால் கிடைக்கூடிய மன இன்பம் என்பது அலாதியானது. எல்லா வகையான உடற்பயிற்சிகளாலும் கிடைக்கும் முக்கியமான பலனே இந்த மன அமைதிதான். மற்றபடி Bi, Chest, Shoulder எல்லாம் ஒரு Additional Benefits; அவ்வளவுதான்” என்றார். இதுபோன்ற தரமான மனிதர்கள் என்னைச் சுற்றியிருப்பதற்குப் பிரபஞ்சத்திடம் நன்றியுணர்வை வெளிப்படுத்த விரும்புகிறேன்.


இந்த Course-ன் கால அளவு 6 மாதங்கள் இல்லை நண்பா, ஒரு வாழ்வு!



113 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page