‘இரண்டு ஏலியன்கள் எங்கள் தெருவில் சண்டையிட்டன; நான் சமாதானம் பண்ணினேன்’ என எழுதுவதற்கு ஒரு எழுத்தாளனுக்கு உரிமை உண்டு. அவன் காட்டுகிற உலகத்தில் அது இருக்கலாம். அவன் அதை நம்பகபூர்வமாகச் சொல்கிறானா என்பதுதான் முக்கியம். இந்த ஒரு முன் முடிவோடுதான் எந்தப் புத்தகத்தையும் வாசிக்கத் தொடங்குவேன்.
அந்த வகையில் பாலுவின் கதைகளில் வருகிற ஆண்கள் ஒரு வகையான இண்டெலக்சுவல்கள் தன்மை கொண்டவர்கள். ரயில் பெட்டிகளில் அமர்ந்து கவிதை எழுதுவார்கள். இசை கேட்பார்கள். அசோகமித்திரன் கதையிலிருந்து உதாரணம் தருவார்கள். தஸ்தயேவ்ஸ்கியைத் தெரிந்திருக்கும். உலக சினிமா பார்ப்பார்கள். காமம் பற்றிய தெளிவை அடைந்திருப்பார்கள்.
பெண்கள் நவீன உலகத்தின் பிரதிநிதியாக இருப்பார்கள். ஓபன் ரிலேசன்ஷிப் தெரிந்திருக்கும். காதலன் முன் டிண்டெர் பயன்படுத்துவார்கள்.
எல்லாக் கதைகளும் காதலுக்குப் பின்தான் தொடங்குகின்றன. காதல் அல்லது அதற்குப் பின்னர் உருவாகும் மனச் சிக்கல்கள், சஞ்சலங்கள் அடியொற்றியே கதை நிகழ்கிறது. பெரும்பாலும் பெண்களே காதலைச் சொல்கிறார்கள். காதலுக்கு முந்தைய, அது உருவாகிற காலகட்டத்தைப் பற்றிய விவரணைகளே இல்லை. அது கைகூடாமல் போகிற ஆண் அடைகிற அக நெருக்கடிகள் எங்குமே சொல்லப்படவில்லை. பெண்கள் பார்வையிலிருந்தே பெரும்பாலான கதைகள் முடிவை நோக்கிச் செல்கின்றன.
முக்கிய கதாபாத்திரங்களின் வயது பதினைந்திலிருந்து முப்பது வயதிற்குள் முடிந்து விடுகிறது. அபூர்வமாக சில பெரியவர்கள் வருகிறார்கள். பள்ளிகளில், கல்லூரிகளில், நகரத்து அபார்ட்மென்ட்களில் கதைகள் நிகழ்கின்றன.
‘கால வெளியிடை’யில் இருந்த ரொமான்டிசேசன் இதில் இல்லை. மொழி மேம்பட்டிருக்கிறது. உரையாடல்கள் கதையோடு இசைந்து வருகிறது.
எந்தக் கதையும் திட்டவட்டமான தீர்வைத் தருவதில்லை. கடைசிக் கதையைத் தவிர எல்லாக் கதைகளும் அதிர்ச்சியூட்டும் திருப்பங்கள் இன்றி எளிமையாகவே முடிகின்றன. சில கதைகள் வாழ்க்கையின் ஒரு பகுதியை கிராப் செய்தது மாதிரி இருக்கிறது.
கிராமப்புற பின்னணியில் இருந்து வாசிக்கிற ஒரு வாசகனுக்கு ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ அளிப்பது ஒரு அதிர்ச்சியை; இந்த கதைகள் அவன் வாழ்கிற காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதை அவன் அறிவான். ஒரு மொழி பேசுகிற நிலத்திலிருந்து எப்படி இவ்வளவு சிந்தனையின் வேறுபாடுகள் தோன்றியிருக்க முடியும்? நான் இதை என் நண்பர்களுக்குப் படிக்கக் கொடுப்பேன். அதில் பலர் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய மனநிலையில் இருப்பவர்கள். நவீன உலகத்தின் / சிந்தனையின் கொஞ்சத்தையாவது தெரிந்து கொள்ளட்டும்.
Comments