அன்புள்ள நவீன்,
நலமா? ‘இரவு’ நாவலை இரண்டாம் முறையாக வாசித்து முடித்தேன். நான் இரண்டாவது முறையாக வாசிக்கும் இரண்டாவது நூல் இது. நான்காண்டுகளுக்கு முன்பு கல்லூரி படித்துக்கொண்டிருந்தபோது முதன்முறை வாசித்தேன். அப்போது படிக்கும்போது இருந்த அதே பேரனுபவம் இப்போதும் இருந்தது. ஆனால் அப்போது நீலிமாவை ரொமான்டிசைஸ் செய்து யட்சியாகவே உள்வாங்கினேன். ஏனெனில் அப்போது இந்நாவலை நான் இரவில் மட்டுமே வாசித்தேன். இரண்டாவது முறை முழுதும் பகலில் மட்டுமே வாசித்ததால் அவளை யதார்த்த கோணத்துடன் மட்டுமே அணுகினேன்.
இரண்டாம் அனுபவத்தை ஒரு வாசிப்பனுபவ கட்டுரையாகவோ அல்லது மதிப்புரையாகவோ எழுதியிருக்கலாம். ஆனால் உங்களுக்குக் கடிதமாக எழுதினால் ஒரு நல்ல விவாதமாக இருக்குமெனத் தோன்றியது.
முதன்முறை படித்தபோது உங்களுக்கிருந்த அதே கேள்விகள், குழப்பங்கள், உணர்ச்சிக்கொந்தளிப்புகள்தான் எனக்குமிருந்தன. என் மனதையும் முடிவுகளையும் ஆராயும் ஒரு பரிசோதனைதான் இந்த மீள் வாசிப்பு. என்னைப் போலவே உங்களையும் சில ஆண்டுகளில் முற்றிலும் மாறுபட்ட பொழுதில் இந்நாவலை மீள் வாசிப்புக்கு உட்படுத்துமாறு பரிந்துரைக்கிறேன். நான் நிச்சயம் அடுத்த தசாப்தத்தில் மூன்றாம் முறையாக வாசிப்பேன்.
‘இரவு’ நாவலைப் படித்த அனைவரையும் இரவு வாழ்க்கை கவர்ந்திழுக்காமல் இருக்காது. நமக்கிருக்கும் முதல் கேள்வி, ‘நம்மைப் போன்றவர்கள் இரவில் வாழ உகந்தவர்களா?’
முதலில் இந்நூலை எழுதிய ஜெயமோகனே இரவில் வாழ்வதில்லை என்பதை உற்று நோக்க வேண்டும். அவர் அதிகாலை எழுந்த முதற்கணமே எழுதுகிறார். மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும் அந்த வேளையிலேயே தன் முக்கியமான பணிகளை ஆற்றிவிடுகிறார். அவர் இரவில் ஆறு மணி நேரமும் மதியம் இரண்டு மணி நேரமும் உறங்குபவராக இருக்கிறார். சூழலுக்கு உட்பட்டு இந்த சுழற்சிமுறை மாறலாம். அவர் ஒரு மேதையாகவே இருந்தாலும் யதார்த்தத்தை நிராகரிக்காதவராக இருக்கிறார். வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக்கொள்கிறார்.
இந்நாவலில் சொல்வது போலவே இரவில் வாழ்பவர்களுக்கு இருப்பது ஓர் அகங்காரம். மற்றவர்களைப் போல் நாம் அல்ல என்ற அகங்காரம். அதுவே அவர்களுக்குப் படுகுழியாகவும் அமைகிறது. பெரும்பாலானோரின் வாழ்க்கைமுறையை, நம்பிக்கையை விமர்சிப்பவர் எவரும் மீட்சியை அடைந்ததே இல்லை.
இந்நாவலின் ஒவ்வோர் அத்தியாயத்திற்கு முன்பும் எழுதப்படும் கவிதைகளை கவனியுங்கள். ஆரம்பத்தில் இரவை மெச்சும் கவிகளாக அவை இருக்கின்றன. போகப்போக இரவின் சாபத்தை அவை பாடுகின்றன. இரவில் எல்லாமே அதீதம்தான். அந்த சவாலை ஏற்றவர்களுக்கு மட்டுமே இரவு உகந்தது. மேனனே துரோகத்தைச் சந்தித்த பின்பு புறத்தோற்றத்தை மாற்றிக்கொண்டு அங்கிருந்து ஓடுகிறார். ஆண்களால் துரோகத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இரவில் நிகழும் துரோகம் பாம்பின் நாவில் அடங்கியிருக்கும் விஷம் போன்றது. இரவு எவ்வளவு அழகானதோ அவ்வளவு ஆபத்தானதும் கூட.
ஜெயமோகன் நாவல்களின் கடைசி அத்தியாயம் பெரும் திறப்பை அளிப்பவை. ‘இரவு’ நாவலின் இறுதியில் சரவணன் இவ்வாறு சொல்கிறார். நூற்றில் தொண்ணூறு பாகர்களில் யானைகளால்தான் மரணிக்கின்றனர். அதனால் இன்னொரு யானைப்பாகன் வராமல் இருக்கிறானா என்ன? இறந்தவனின் மகனே வருகிறானே! இரவில் வாழ்வதும் அப்படித்தான். அது ஒரு சவால். அது வீரர்களுக்கானது என்கிறார். புனைவில் தீர்மானங்களை வைக்கக்கூடாது என்கிற விதிமுறையை ஜெ கடைப்பிடித்திருக்கிறார்.
இப்போது கேள்விக்கு வருவோம்: நமக்கு இரவு வாழ்க்கை உகந்ததா?
நாமிருவரும் இளைஞர்கள். இரவு தரும் அதீதத்தை நம்மால் கையாள முடியாது. அதற்குண்டான பக்குவத்தை முதலில் யதார்த்தத்தில் வாழ்ந்து ஈட்ட வேண்டும். இது உழைப்பதற்கான வயது. குடும்பத்தைக் காக்கும்பொருட்டு பணத்தையும் பொருளையும் ஈட்ட வேண்டிய பருவம். என்றேனும் ஒருநாள் இந்த யதார்த்தத்தை நிராகரிக்க விரும்பினால் முதுமையில் இவ்வாழ்க்கையை நாம் தேர்ந்தெடுக்கலாம். அதுவரை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ‘இரவு’ நாவலை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டிருப்போம்.
பாலு
*
அன்புள்ள பாலு,
நலம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் அனைவரும் நலமா? உடற்பயிற்சி எவ்வாறு போகிறது ?
இரவு புத்தகத்தை வாசித்த அனைவரது மனதிலும் இரவில் வாழ வேண்டும் என்ற ஆசை வந்துவிடும்.
முதலில் நானும் இரவு வாழ்க்கையை வாழ ஆசை கொண்டவனாகத்தான் இருந்தேன். சில நிகழ்வுகளால் இரவில் இருக்கும் ஆபத்தை
உணர்ந்தேன்.
இரவு நேரங்களில் உணர்ச்சிகள் மேலோங்கி எழுவதை சில நேரங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். காதல் தோல்வி மற்றும் தனிமை, இவையெல்லாம் பகலில் பெரிதாக நம்மை நெருங்காது; இரவு நேரங்களில் நம்மை வாட்டி வதைக்கும்.
இரவு வாழ்க்கை நமக்கு உகந்தது இல்லை என்று தோன்றுகிறது. ஏனென்றால் இரவு, நாம் எதையோ ஒன்றைச் சார்ந்து (பெண் அல்லது மது) இருக்கும் தன்மை கொண்டதாக உணர்கிறேன்.
இரவு நேரங்களில் காணும் அழகை மாயையாகக் கருதுகிறேன்.
அது மெல்ல மெல்ல தன் வளையினுள் நம்மை இழுத்துக் கொள்ளும்.
எவ்வளவுதான் பயிற்சி எடுத்துக் கொண்டு அந்த வாழ்க்கைக்குள் ஈடுபட்டாலும் அதில் நாம் ஒரு வேடனாகத்தான் இருப்போம் என்று தோன்றுகிறது. சில மிருகத்தனமான குணங்களும் வந்தடையும். இவ்வாறு உயர்ந்து ஏழும் உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைப் பற்றி குழப்பமாக உள்ளது.
ஒரு சில நாட்கள் நான் அதிகாலையில் எழுவதுண்டு. அப்பொழுது தோன்றும் புத்துணர்ச்சி இரவில் எனக்குக் கிடைப்பதில்லை. ஆழமாக யோசிக்கையில் அது ஒரு போதையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. நீங்கள் கூறியது போலவே ஒவ்வோர் அத்தியாயத்தின் கவிதை இரவின் அழகிலிருந்து அதில் இருக்கும் அபாயத்தைக் குறிப்பிடுகிறது.
இக்கதையில் முடிவை இரண்டு விதமாகப் புரிந்து கொள்கிறேன்.
1. இரவை கையாளும் வல்லமையை சரவணன் பெற்று இருக்கலாம்.
2. அந்த மாயைக்குள் சரவணன் மூழ்கி இருக்கலாம்.
- நவீன்
Comments