top of page
Search
Writer's pictureBalu

‘இறவான்’ - வாசிப்பனுபவம்

பா.ராகவனின் ‘இறவான்’, சமீபத்தில்தான் ஒரு இசை நாவலென அறிமுகமானது. அவரது ‘யானி - ஒரு கனவின் கதை’ நாவலைச் சமீபத்தில் படித்து அதுகுறித்துப் பகிர்ந்திருந்தேன். பா.ராகவனின் மற்றொரு இசை நாவல் என்றதும் ஆர்வம் மிக, அந்நாவலை அறிந்த அன்றே விரைந்து வாங்கினேன்.


ஆப்ரஹாம் ஹராரி, எட்வின் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் கதாநாயகன், ஒரு மேதை. மாபெரும் இசைக் கலைஞன். அவன் தன்னை ஓர் யூதன் எனக் குறைந்தது நூறு முறையேனும் நிறுவிக்கொள்கிறான். இசைக் கலைஞன் என்பதைத் தாண்டிலும், யூத இசைக் கலைஞன் என்று சொல்லிக்கொள்ளவே விரும்புகிறான். அவனது தந்தை பிறப்பால் கிறித்தவராக இருப்பினும், அவனது அடையாளத்தை அவனே தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். அவ்வாறே நம்புகிறான். ஏன் அவன் தனது யூத அடையாளத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற கேள்விகளைத் தகர்த்துவிட்டு, அதனை இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உவமையாகக் கண்டோமெனில் இது நிச்சயம் ஒரு சிறந்த அரசியல் நாவலாக நம்மால் உணர முடியும். ஆனால் இந்தக் குறியீடுகள் எல்லாம் தனிப்பட்ட வாசிப்பனுபவத்தின்மூலம் உணரக்கூடியது. பொதுப்படையாக இப்புத்தகத்தில் நிறைந்திருப்பது, இசை, இசை, இசை. இந்நாவலின் தாக்கத்தில், தினமும் உறங்குவதற்கு முன்பு Felix Mendelssohn மற்றும் Franz Schubert ஆகியோரின் சிம்ஃபனிக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். பா.ராகவனே ஓர் இடத்தில் எழுதுகிறார், ‘இரவெல்லாம் ஒரு இசை மேதையை எண்ணிக்கொண்டிருப்பதைக் காட்டிலும் பெரிய தியானம் வேறென்ன?’


இதேபோல நான் ரசித்த மற்றொரு இடமுண்டு:


‘இசைக்குச் சொற்களே அவசியமில்லை என்பதை முதன்முதலில் நிரூபித்தவன் நான்தான். ஒரு கவிஞன் செய்த துரோகத்தில் வெறுப்பாகி, எனக்குப் பாடல் வரிகளே வேண்டாம் என்று முடிவு செய்தேன். Songs without words என்று இசை தெரிந்த யாரிடமாவது போய்ச் சொல்லிப் பார். சிலிர்த்துப் போய் நிற்பார்கள்.


உன்னால் எந்தச் சொற்களையும் போட்டு இந்த இசையை நிரப்ப முடியாது. ஏனென்றால் எதைக் கொண்டும் நிரப்பக்கூடிய வெற்றிடம் இந்த இசையில் இல்லவேயில்லை’.


ஃபெலிக்ஸ் மெண்டல்ஷானே மறுபிறவி எடுத்து ஆப்ரஹாம் ஹராரியாக வந்து இதைச் சொல்வதெல்லாம் கலையின் உச்சம். இதைப் படித்துவிட்டு Songs without Words சிம்ஃபனிக்களைக் கேட்கும்போது அக்கவிஞனின் துரோகத்திற்குப் பழி வாங்கிய சுகத்தை, கேட்கும் நம்மாலே உணர முடிகிறது.


ஆப்ரஹாம் ஹராரி எனும் எட்வினுக்கு எல்லாவற்றின்மீதும் ஓர் எள்ளல். இருந்தும், மரியா என்பவளது குரலில் தெய்வீகத்தைக் கண்டடைகிறார். எட்வின் ஒரு மேதை; மரியா சராசரி. இவனுக்குப் பெரிய பெரிய கனவுகள் இருக்கும் பட்சத்தில் அவளுக்குத் திரைத்துறையில் பாடிவிட வேண்டும் என்ற சொற்ப கனவே உள்ளது. இவள் ஆசையை நிறைவேற்றுவதற்காக தயாரிப்பாளரின் பெண்ணைக்கூடத் திருமணம் செய்யத் துணிந்தான் எட்வின். மரியா விரும்பியது போலவே அவளது குரல் ஊரெங்கும் ஒலித்தது. நாட்கள் கழித்து, வாரப் பத்திரிகையின் நேர்காணல் ஒன்றில், ‘எனக்கு எஸ்.ஜானகியைப் போல் பெரிய பாடகி ஆக வேண்டும்’ என்று போட்டி கொடுத்தால் மரியா. எட்வினுக்கு ச்சீ என்றாகிவிட்டது. அவள் அப்படிச் சொன்னதற்காக அவளை முழு முட்டாள் என்று திட்டுகிறான். ஒரு வகையில் உயரப் பறக்க இந்த எள்ளல் நல்லதென்றே தோன்றுகிறது. சாராமல் இருக்கவும் தேங்கி விடாமல் பார்த்துக்கொள்வதும் எள்ளல்தானே!


‘யாரையாவது சித்திரவதை செய்யாமல் எந்தக் கலைஞனும் வாழ்ந்ததில்லை. சித்திரவதை செய்ய யாருமில்லாதபோது அவன் தன்னையே வதைத்துக்கொள்ளத் தொடங்குகிறான். எத்தனைக் கவித்துவமான குரூரம்!


என் அன்பான ஜானவி! ஒரு கலைஞனைப் போன்ற கேவலமான மனிதன் இந்த உலகத்தில் இருக்க முடியாது. தன் கலைக்காக எல்லோரையும் உதறிவிட அவன் என்றுமே தயங்குவதில்லை. பதிலுக்குக் காலம் அவனைக் கைவிடுகிறது. கலை கைவிடாத வரை அவன் அதையும் சகித்துக்கொண்டு மேலே போகிறான். உனக்கு நான் இதை எப்படிச் சொல்லி விளக்க வைப்பேன்?’


‘எல்லாம் எல்லோருக்கும் புரிந்து என்ன ஆகிவிடப் போகிறது? புரிதலின் விடுதலையைக் காட்டிலும் பூடகங்களின் ரீங்காரம் நிரந்தரமானது. நான் நிரந்தரத்தை எப்போதும் விரும்புகிறேன். என்னை விரும்புவது போல’


- நாவலிலிருந்து…



மிகப்பெரிய மேதையான எட்வினுக்கும் சராசரியான ஒரு ஆளுக்கும் இடையே நாவலில் நிகழ்ந்த உரையாடலைச் சுருக்கமாகக் கீழே தருகிறேன்:


'எனக்குள் இறங்கும் சக்தியை ஒன்று நான் இசையாக உருமாற்றலாம். அல்லது விந்துவாக உருமாற்றி வெளியே அனுப்பலாம். இரண்டில் ஒன்றுதான் சாத்தியம் என்னும்போது நான் இரண்டாவதை எப்படித் தேர்ந்தெடுப்பேன்?' ( - இது மேதை)


'என்ன உளறுகிறாய்? கலைஞன் செக்ஸே வைத்துக்கொள்ளக்கூடாது என்கிறாயா?' ( - இது சராசரி)


'என்னால் முடியாது என்று சொல்கிறேன்.'


'முட்டாள். நீ என்ன இம்பொடண்ட்டா?'


இந்தக் கேள்வி வந்த மறுகணம் அவன் கோபம் கொண்டான். ’நானா இம்பொடண்ட்? இதோ, இதோ பார்.. இப்போது நடப்பதைப் பார்...!' என்று வெறி கொண்டு கத்தினான். அணிந்திருந்த அழுக்குப் பைஜாமாவை அவிழ்த்துவிட்டு அப்படியே தரையில் அமர்ந்து தனது குறியை உருவிவிட்டுப் பெரிதாக்கி, கைமைதுனம் செய்ய ஆரம்பித்தான்.


'ஏய், நீ என்ன செய்கிறாய்? எதற்கு இதெல்லாம்? ஐயோ போதும்!'


அவன் நிறுத்தவேயில்லை. ஐந்து நிமிடங்கள் ஆவேசம் வந்தவன் போலக் குறியைப் பிடித்து உலுக்கி, ஒரு உச்சத்துக்குப் போய் நிறுத்தினான். ஒரு அமிலக் குழாய் வெடித்தது போல விந்து பீய்ச்சி அடித்துச் சிதறிப் பரவி நிறைந்தது.


'போதுமா? பார்த்தாயா? திருப்தியா? வழித்து எடுத்துச்சென்று எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் பரிசோதனை செய்யச் சொல்லலாம். என்னால் எந்தப் பெண்ணுக்கும் ஒரு குழந்தை தர முடியும்.'


இதுதான் அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல். இந்தக் காரியத்தை யார் செய்திருந்தாலும் சகித்துக்கொண்டு படித்திருக்கலாம். ஆனால் ஒரு மேதையே இப்படிச் செய்யும்போது, ஆசிரியர் இந்தப் பகுதியைத் தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. நாவலின் 2வது பக்கத்திலேயே ‘இப்போது எனக்கு அடையாளச் சிக்கல் இல்லை. யாருக்கும் எதையும் நிரூபிக்கும் அவசியம் இல்லை. வாழ்நாள் முழுதும் நிரூபித்து நிரூபித்து அலுத்துவிட்டது’ என்று எழுதிய பா.ராகவன் ஏன் பிற்பகுதியில், ஆண்மையை விந்து சக்தியின் மூலம் நிரூபிக்கும் இதுபோன்ற அற்ப விஷயத்தை ஒரு மேதையை வைத்து எழுத வேண்டும்? அப்படி அவனும் ஆண்மையைக் குறியின் வழியாகத்தான் பார்க்கிறானெனில் மேதைக்கும் சராசரிக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது? மொத்த நாவலில் இந்த ஒரு பகுதி மட்டுமே விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்ததாக எனக்குப் பட்டது.


ஒரு கலைஞன் எத்தனை கலைகளைப் படைத்தாலும் அவனது மரணத்திற்குப் பிறகு நிற்கப்போவது சில படைப்புகள் மட்டுமே. அவன் அழியலாம். அவன் பெயர் அழியலாம். அவன் உடல் அழியலாம். அவனுடைய படைப்பு மட்டும் அவன் சாட்சியாக இவ்வுலகில் வாழ்ந்துகொண்டே இருக்கும். அதன் நுண்ணியங்களை ரசிப்பவன் அதைச் சாக விடாமல் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வான். கலைஞனுக்கு மரணமில்லை என்பது இப்போது க்ளீஷேவான வாசகமாக மாறிப்போயிருந்தாலும், அதில் ‘இறவான்’ விதிவிலக்கு. ஏனெனில், ஆப்ரஹாம் ஹராரி கதையின் இறுதியில் மரணித்த பிறகுமேகூட நம்மிடம் பேசிக்கொண்டே இருக்கிறான்.


'ஆபிரஹாம்! மனிதன் கனவுகளாலும் கவலைகளாலும் ஆனவன். நீ இரண்டையும் துறந்து கலையினால் உன்னை மறு வடிவமைப்பு செய்துகொண்டுவிட்டாய். கனவு கலையக்கூடியது. கவலை உருவழிக்கக்கூடியது. ஆனால் கலை, காலவெளியின் காற்றாக நிலைத்திருப்பது. காற்றுக்கும் காலத்துக்கும் அழிவில்லை என்றால் உனக்கும் அது பொருந்தும்'











93 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page