சரவணன் சந்திரனின் ‘வெண்ணிற ஆடை’ நூலை நேற்றிரவு வாசித்து முடித்தேன். பெரும்பாலான அத்தியாயங்களை முடிக்கும்போது சென்னைவாசி உணர்ச்சிவசப்படும்போதெல்லாம் சொல்லும் அந்த ஒரு வார்த்தையைச் சொல்லித்தான் புத்தகத்தை மூடி வைத்தேன். உடனடியாக அடுத்த அத்தியாயத்துக்குச் செல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொரு கதைகளும் கணமாக இருந்தன.
‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் சரவணன் சந்திரன் இயக்குநராக பணியாற்றிய காலகட்டத்தில் அவர் சந்தித்த சில நிஜ மனிதர்களைச் சிறிது புனைவு கலந்து எழுதப்பட்ட நூல். நாவல், சிறுகதை, கட்டுரை, குறுங்கதை, அபுனைவு என எந்த வகைமைக்குள்ளும் அடங்காத எழுத்து.
இந்நூல் வாசித்ததும் முதலில், தமிழ் சினிமாவில் அல்லது இலக்கியத்தில் தமிழ் மக்களின் குற்றங்கள் ஆழமாக பதிவு செய்யப்படவில்லை என்றே தோன்றியது. பெரும்பாலான படங்களில் ஒரு கொலை நடக்கும், அதற்கான காரணம் என்ன என்கிற விறுவிறுப்பு நோக்கத்துடனே எடுக்கப்படுகின்றன. ஆனால் நமக்குத் தெரியாத அகோர நிகழ்வுகள் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கிடையே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. எவையும் அண்டர்க்ரௌண்ட் குற்றங்கள் அல்ல; இதிலுள்ள எல்லாக் குற்றங்களுமே வீட்டிலிருந்துதான் தொடங்குகின்றன. எனக்கு ஏற்கெனவே இருந்த ஓர் அவதானிப்பு இந்நூல் மூலம் இன்னும் ஆழமடைந்துள்ளது. நம் மாநிலத்தில் நிகழும் குற்றங்களுக்குத் தலையாய காரணமாக நிலம், உடைமை, ஜாதி, மதத்தைவிட பாலியலே அதிகமாக உள்ளது.
Comments