கே.ஆர்.மீராவின் ‘Jezebel' நாவலை வாசித்தேன். கே.ஆர்.மீரா ஒரு பெண்ணிய எழுத்தாளர் என்றே வாசகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அவரை வாசிக்கத் தொடங்கினேன். இதுவரை தமிழில் வெளியான அவரது கதைள் எதிலும் பெண்ணியக் கருத்தியலின் தீவிரத்தை உணரவில்லை. அவர் கதையையும் பெண்மையின் உணர்ச்சிகளையுமே பிரதானப்படுத்தியிருக்கிறார். ஆனால் ‘Jezebel' ஓர் அசல் பெண்ணிய வகை நாவல். ஹாலிவுட்டில் வெளியான ‘பார்பி’ வகையறாவைச் சேர்ந்த ஆண் வெறுப்புப் பெண்ணிய நாவல் என்பதாலேயே கே.ஆர்.மீராவின் வழக்கமான தரத்திலிருந்து இந்நாவல் சற்று தொய்வாகத் தெரிகிறது.
பாலினம் சார்ந்த கருத்தியல் என்பது ஒவ்வொரு தசாப்தத்துக்கும் மாறக்கூடியது. பாலச்சந்தர் காலத்தின் பெண்ணியத்தை இன்று நம்மால் நெருங்கி உணர முடியாது. அதேபோல் 2014 முதல் 2018 காலகட்டத்தில் பேசப்பட்ட பெண்ணியம், இப்போது பல்வேறு படிநிலைகளைக் கடந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த தசாப்தத்தில் எழுதப்பட்ட இந்நாவல் ஆரம்பக்கால வாசகர்களிடம் ஒரு கொந்தளிப்பை உருவாக்கியிருக்கலாம். இன்று வாசிக்கையில் நாவல் மொத்தமும் போலியாகவும் மிகையாகவுமே தெரிகிறது. ‘மீராசாது’, ‘The Angel's beauty Spot' நூல்களில் வாசகர்கள் உணரக்கூடிய எழுத்தின் தரம் ‘Jezebel' நாவலில் இல்லாததாலும், இது முற்றிலுமாக கருத்தியல் திணிக்கப்பட்ட படைப்பு என்பதாலும் வெளியான ஆறே ஆண்டுகளில் இந்தப் படைப்பு காலாவதியாகிவிட்டதை உணர முடிகிறது.
நீதிமன்ற விசாரணையில் தொடங்கும் இந்தக் கதை, கதாநாயகி ஜெசிபல் மீது கேள்விகளாக அடுக்கிக்கொண்டே செல்கிறது. அவளுக்கு நேரும் அநீதிகளையும் பொருட்படுத்தாது கேள்விகள் அவளை நோக்கி அடுக்கிச் செல்லும்போதே இது எவ்வகையில் யதார்த்தத்தை மீறிய நாவல் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இன்றைய காலத்தில் சட்டம் பெண்களுக்கு அவ்வளவு எதிராக இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. பெண்ணின் குரலுக்கு சிறப்புக் கவனத்தை நீதிமன்றங்கள் கொடுக்கத் தொடங்கிய இந்த நவீனக் காலத்தில் ‘Jezebel' நாவல் மிகப் பழையதாகத் தெரிகிறது.
அதேபோல் திருமண வாழ்வில் பெரும்பாலும் மனைவிக்கும் மாமியாருக்கும் முரண் உண்டாவது இயல்பானதே. எல்லாக் கனவான்களின் தாய்மார்களாலும் மருமகளை நெருக்கத்தில் வைத்துப் பார்க்க முடிவதில்லை. அப்படியிருக்கையில், ‘Jezebel' கதையில் மீரா மாமனாரையே கொடுமைக்காரராகக் காட்டுகிறார். நாவலின் எவ்விடத்திலும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு எதிராக இருப்பதே இல்லை என்பது விந்தையாக இருக்கிறது. ஒட்டுமொத்த பழியையும் ஆண் மீதும் சமூகத்தின் மீதும் போட நினைப்பது தேய்வழக்கான சிந்தனை. இந்த நாவலை எழுதுவதற்கு கே.ஆர்.மீரா தேவையில்லை; ஃபேஸ்புக்கில் பொழுதைக் கழிக்கும் யாராலும் எழுதிவிடக்கூடிய நாவல் இது!
தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த கதை ஒரு கட்டத்திற்கு மேல் நகரவில்லை. கே.ஆர்.மீராவின் வழக்கமான குறுநாவல் வகைமையில் இந்தக் கதை எழுதப்பட்டிருந்தால் நிச்சயம் சலிப்பின்றி ஒருமுறை வாசிக்க உகந்த நூலாக அமைந்திருக்கும். இந்த நாவலிலாவது ஒரு பெண்ணிய கருத்தியல் இருந்ததால் நாவலுடன் உரையாட முடிந்தது. கே.ஆர்.மீராவின் மற்றொரு நாவலான ‘The Unseeing idol of Light' ஆரம்பத்திலிருந்தே சொதப்பல். மிகவும் தட்டையாக எழுதப்பட்ட நாவல் அது. இவ்விரு நாவல்களுக்கும் வாசகர்களின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ள Goodreads தளத்திற்குச் சென்று பார்த்தேன். எனக்கிருந்த கருத்துதான் பலருக்குமே இருந்திருக்கிறது. குறிப்பாக, அந்தத் தளத்தில் கே.ஆர்.மீராவின் இவ்விரு படைப்புகளையும் கடுமையாக விமர்சித்த பெரும்பாலானோர் இளம்பெண்கள்.
Comments