‘நாவல் எழுதும் கலை’ நூலை வாசித்தேன். முன்னுரையில், இது புதிதாக எழுத வருபவர்களுக்கும், ஏற்கெனவே ஒன்றிரண்டு நாவல் எழுதியவர்கள் அந்தக் கலை வடிவத்தை இன்னும் புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கான நூல் இது எனக் கூறியிருந்ததன் மூலம், இதன் வாசகர் வட்டத்தைக் குறைத்துக் கொள்கிறீர்களோ எனத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இது நாவல் என்ற வடிவத்துக்கே அளிக்கப்பட்ட ஒரு Tribute. எழுதவே விருப்பமில்லாதவர் இந்நூலை வாசித்தாலும் அவருக்கு ஏகப்பட்ட நாவல்கள் மற்றும் எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைக்கும். ஒரு நாவலை எப்படி எழுத வேண்டுமென்பதைத் தாண்டி ஒரு நாவலை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கான குறிப்புகளும் இதிலுள்ளதால் நாவலோடு பயணிக்கும் எல்லோரும் இதை வாசிக்கலாம்.
இந்தாண்டு சென்னை புத்தகக் காட்சியில் புத்தகங்களின் விலையுயர்வு பற்றிய அதிர்ச்சி வாசகர்களுக்கு இருந்ததைக் கவனித்திருப்பீர்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான் கவனித்த இன்னொன்றும் உண்டு. எனக்கு எப்போதுமே நாவலுக்கும் குறுநாவலுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன என்கிற குழப்பம் இருந்தது. சரவணன் சந்திரனிடம் இதைக் கேட்டபோது, “ஒரு ஊரில்...” என்றால் அது நாவல்; “ஒரு ஊரின் ஒரு தெருவில்...” என்றால் அது குறுநாவல் என்றார். இதுபற்றிய விரிவான விளக்கத்தையும் ஜெயமோகனின் கட்டுரைகளில் படித்திருக்கிறேன். இந்நூலில் நான் எதிர்பார்த்து, நீங்கள் சொல்லாமல் விட்டிருந்தது அவ்விரண்டுக்குமான வேறுபாட்டைத்தான்.
எல்லோரையும் போல நானும் ஆரம்பநிலை வாசகனாக இருந்தபோது பக்கங்களின் எண்ணிக்கைதான் இரண்டுக்குமான வேறுபாடு என நினைத்திருந்தேன். உதாரணமாக, சுமார் 100 பக்க அளவிலிருந்தால் அது குறுநாவல். 200 பக்கங்களுக்கு மேல் இருந்தால் அது நாவல் என. பிறகுதான் அவற்றின் வடிவ வித்தியாசங்களை புரிந்துகொண்டு வருகிறேன். நாவல் என்பதே விரித்து எழுதுவதற்கான களம்; எவ்வளவு விரித்து எழுதப்படுகிறதோ வாசகன் அவ்வளவு ஆழமாக அதனுடன் ஒன்றிப்போவான்.
வாசகனுக்கு நல்ல சிறுகதையைவிட ஒரு நல்ல நாவல் ஏன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை யோசித்திருக்கிறேன். ஒரு சிறுகதையை அதிகபட்சம் இருபது நிமிடங்களில் வாசித்துவிட முடியும். ஒரு பெருநாவலை வாசித்து முடிக்க, ஒரு வாரத்துக்கு மேல்கூட ஆகலாம். அதனுடன் நீண்ட நாட்கள் நாம் உரையாடுவதால் அது ஏற்படுத்தும் தாக்கம் நம்மைவிட்டு நீங்குவதில்லை. ஒரு மாத காலக் காதல் பிரிவதற்கும், ஓராண்டுக் காலக் காதல் பிரிவதற்கும் இடையேயான வித்தியாசம்தான் இது.
கடந்த ஈராண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் நான் கவனித்த ஒரு மாற்றமுண்டு. நாவலும் குறுநாவலும் அவற்றின் வடிவ அளவிலிருந்து குறைந்துகொண்டே போகின்றன. உதாரணமாக, 40 பக்கங்கள் கொண்ட ஒரு கதையைச் சிறுகதை எனச் சொல்லப்பட்டுதான் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது அது குறுநாவலாக வளர்ந்து நிற்கிறது. 100 பக்க கதை நாவலாக வளர்ந்து நிற்கிறது. மிகச்சிறிய நாவல்களை எழுதுவது கத்தி மேல் நடப்பது போல் சவாலானது, அசோகமித்திரன், இமையம் போன்ற வெகுசிலரே அதில் கைதேர்ந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இப்போது பலருமே அப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்,
இதற்கு முக்கிய காரணம், நீங்கள் சொல்லியிருப்பதுபோல படைப்பை முடித்துவிட வேண்டுமென்கிற அவசர மனநிலை. இரண்டாவது, நவீனக் கால வாசகர்களின் கவனக் குறைவு. இதுபற்றி சரவணன் சந்திரன், “அடுத்த பத்தாண்டுகளில் மனிதர்களின் கவனச்சிதறல்களுக்கேற்ப இலக்கியத்தின் வடிவம் இன்னுமே மாறக்கூடும்”’ என்றார். மூன்றாவதாகச் சந்தையும் ஒரு காரணமாக இருக்கலாமென நினைக்கிறேன். இன்று நான் ஒரு நாவலை விரித்தெழுதும் நோக்கில் 600 பக்கங்கள் எழுதினேன் என்றால் அந்நூலின் விலை ரூ.750க்கு விற்கப்படும். அவ்வளவு பணம் கொடுத்து என் நூலை வாங்கிப் படிக்க நான் ஒன்றும் ஜெயமோகனோ, மனுஷ்ய புத்திரனோ அல்ல; புதிதாக எழுத வந்திருப்பவன். ஆகவே முதற்கவனத்தைப் பெறுவதற்காகக் குறைந்த பக்கங்கள் எழுதுவது ஒரு ஆரம்பநிலை எழுத்தாளனுக்கு மறைமுக நிபந்தனையாக இருக்கின்றது.
உங்களுடைய இந்த நூல் பலவிதங்களில் எனக்குப் பயனளிக்கக்கூடியதாக இருந்தது. எனது அடுத்த நாவலைத் தீவிரமாகச் செப்பனிடும் ஊக்கத்தை இந்நூலின் மூலம் அளித்ததற்கு நன்றி!
コメント