“செகாவ், மாப்பசானையெல்லாம் மிஞ்சியவர் கு.ப.ராஜகோபாலன்” என்று சாரு ஒரு நிகழ்வில் சொல்லியிருந்தார். கு.ப.ராவை மாப்பசானுடன் ஒப்பிட முடியாது என்றாலும் செகாவுக்கு இணையான எழுத்தாளர் என்பேன். செவாவைப் போலவே கு.ப.ராவின் பல கதைகளும் ஒன்று போலவே இருக்கின்றன. ஒரு கதையிலுள்ள கதாபாத்திரத்தை மற்றொரு கதையிலும் பார்ப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. செகாவைப் போலவே கு.ப.ராவின் எழுத்திலும் எள்ளலும் நகைப்புணர்வுகளும் அதிகமாகவே இருக்கின்றன. சார்லி சாப்ளின் படங்களைப் பார்ப்பது போலத்தான் இவர்களது கதை வாசிப்பதும்.
செகாவுக்கு அரசியல் நிலைப்பாடுகள் இருந்ததில்லை. நாளுக்கு நாள் அது மாறிக்கொண்டே இருப்பதால் மனிதர்கள் எப்படிக் காதலிக்கின்றனர், குழந்தை பெற்றுக்கொள்கின்றனர், சேர்ந்து வாழ்கின்றனர் என்பதையே தன் கதைகளில் அதிகம் எழுதியவர் செகாவ். இந்தப் பண்பு கு.ப.ராவிடமும் இருந்திருக்கிறது. இவ்வளவு ஒப்பீடுகள் இருந்தும் ஒரே விஷயத்தில் இருவரையும் வெவ்வேறு இடங்களில் வைக்கலாம். செகாவ் கள்ள உறவுகள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். திருமண உறவின் கசப்புகளை எழுத்தில் வெளிப்படுத்தியவர் செகாவ். அவரது தனிப்பட்ட கருத்தாகவும் அது இருந்தது. ஆகவேதான் அவரது திருமண முறை வித்தியாசமாக இருந்தது. திருமணத்தின் மீதிருந்த கசப்பின் காரணமாக அவரது திருமண வாழ்க்கையும் தோல்வியிலேயே முடிந்தது. கு.ப.ரா கதைகளில் கள்ள உறவுகள் இருக்காது (‘சிறிது வெளிச்சம்’, ‘மூன்று உள்ளங்கள்’ கதைகளைத் தவிர); கசப்புகள் இருக்காது. ஆனால் திருமண உறவின் பொருந்தா நிகழ்வுகளை இவரது கதைகளில் அதிகம் காண முடிகிறது. அவற்றை விடுத்து எப்படி இருவரும் வாழ்க்கை தொடர்ந்து மகிழ்ச்சியுடன் மேற்கொள்கின்றனர் என்பதையே இவரது கதைகள் பேசுகின்றன. பொதுவாகவே அந்த விட்டுக்கொடுக்கும் பண்பை இவரின் கதையில் பெண்கள்தான் கையாளுகின்றனர். வாழ்க்கையிலும் வெற்றிகரமான திருமணங்களுக்குப் பின் பெண்களின் விட்டுக்கொடுத்தல் பண்பு பங்களிக்கிறது.
தொகுப்பை வாசிக்கும்போதே இவரது கதைகளில் நவீனத்தன்மை எவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது எனக் கூர்ந்து நோக்க நுண்ணுணர்வு விழைகிறது. ‘பழைய ஆட்களுக்கும் நவீனச் சிந்தனை இருக்காது’ என்பதைப் போலி வாசகமாகக் கருதுபவன் நான். செகாவ், எம்.வி.வி. ஆதவன், ராஜேந்திர சோழன் போன்ற எழுத்தாளர்கள் அந்தக் காலத்திலேயே நவீனத்தை எழுதியவர்கள். ஆனால் கு.ப.ரா தனது சில கதைகளில் பாரம்பரிய மதிப்பீடுகளை விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார். பெரும்பாலும் ஆண் - பெண் உறவு முறை கதைகள் என்பதால் அவற்றிற்கு ஹேப்பி எண்டிங் கொடுக்க பாரம்பரிய மதிப்பீடுகளைக் கையிலெடுக்க வேண்டியிருக்கிறது. இது தவிர்க்க முடியாதது!
‘கனகாம்பரம்’ கதையில் கிராமத்து மனைவியின் பட்டிக்காட்டுத்தனத்தை வெறுக்கிறான் நகர வாழ் கணவன். ஆகவே அவளை மாற்றிக்கொள்ளச் சொல்லும்பொருட்டு, “வீட்டுக்கு யாராவது வந்தா என்ன ஏதுன்னு கேளு” என்கிறார். கணவனின் நண்பன் ஒருநாள் வீட்டிற்கு வரும்போது இவள், “உள்ளே வாங்க” என்று சொல்லிவிடுகிறாள். பதற்றமடைந்த கணவனின் நண்பன், உதிரிச் சொற்களைச் சிந்திவிட்டு ஓடிவிடுகிறான். கணவன் வீடு திரும்பியதும் இதை அவரிடம் சொல்கிறாள் மனைவி. உடனே கணவனின் நவீனத்தன்மை சிட்டாய்ப் பறந்து பழமைக்குச் சென்றுவிட்டது. ‘அவ்வளவு நவீனம் இல்லைம்மா, கொஞ்சம் கம்மியா’ என மனைவியை அவளது பட்டிக்காட்டுத்தனத்தில் தொடர அனுமதிக்கிறான். 1930களில் இது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை இக்கதையில் தெரிந்துகொள்ளலாம். பெரும்பாலான நவீன ஆண் பெண்ணியவாதிகள் இப்படிப்பட்ட குழப்பவாதிகளாகத்தான் இருக்கின்றனர்!
கூட்டுக்குடும்பங்கள் அழிந்துவிட்டதால் தம்பதிகள் எப்படியான சிக்கலுக்கு உள்ளாகின்றனர் என்பதை ‘புரியும் கதை’ சொல்கிறது. ஒரு எழுத்தாளனுக்கும் அவனது மனைவிக்கும் இடையேயான சண்டையே இக்கதை. கதை இறுதியில் இப்படி முடிகிறது : ‘என் தாய் இருந்தபொழுது, நாங்கள் தனியாக இல்லாத பொழுது சண்டை இல்லை! தாய்கூட இருந்தபொழுது இருந்த நிர்ப்பந்தத்தில் இருவருக்கும் ‘சண்டை’ போடச் சாவகாசம் இல்லை. மறைவிலேதான் மகிழ்ச்சி இருந்தது. நிர்ப்பந்தத்தில், கட்டுப்பாட்டில் இன்பம்! விடுதலையில் வெறுப்பு’. எழுத்தாளன் மனைவியைச் சமாதானப்படுத்த முயலும்போது அவள் சொல்கிறாள் : “நாளைக்கு, காலமே, அம்மாவை வரும்படி தந்தியடியுங்கள்!”
இதேபோல் ஒரு சச்சரவு ‘வேறு நினைப்பு’ கதையின் தம்பதிக்கு நடக்கிறது. “இனி என்னிடம் சண்டை பிடிக்காதே, கோபித்துக்கொள்ளாதே” எனக் கணவன் மன்றாடுகிறான். “பின் யாரிடத்தில் சண்டை பிடிப்பேன்” என்றாள் அவள்.
‘பெண்மனம்’ கதையில் கணவன், தன் மனைவியின் தோழியுடைய அழகை ரசிக்கிறான். கு.ப.ரா கதையில் நடந்த அதிகபட்ச ஒழுக்க மீறல் இதுதான். இதுவே மனைவியை வேதனைக்குள்ளாக்குகிறது. தான் ரசிக்கப்படுவதில் தோழிக்கு ஒரு பிரச்சனையுமில்லை; அவளுக்குத் தான் ரசிக்கப்படுகிற பிரக்ஞை இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை. ஆனால் ‘உங்களது பார்வை வெறுப்பூட்டுவதாக அவள் என்னிடம் சொன்னாள். ச்சை இப்படியா பார்ப்பது, நாய் மாதிரி என்றாள்” எனக் கணவனிடம் மனைவி சொல்கிறாள். கணவனின் மலர்ந்திருந்த முகம் அப்படியே வாடிவிடுகிறது. அதற்கு மேல் அவனை அவமானப்படுத்த வேண்டாம் என மனைவி சமாதானம் ஆகிறாள். இதுவே கு.ப.ரா பெண் பாத்திரத்தின் அதிகபட்ச பழிதீர்த்தல்.
பெண்ணின் தீராக் காமத்தை எழுதும் இடத்தில்தான் கு.ப.ராவின் நவீனத்தன்மை ஓங்குகிறது. ‘குரலும் பதிலும்’, ‘ஆற்றாமை’ போன்ற கதைகளில் பெண்களின் காமமும் அவர்களின் எதிர்பார்ப்பும் மிகச் சிறப்பாகவே கையாளப்பட்டிருக்கிறது.
‘யார் மேல் பிசகு?’ என்ற ஒரு அற்புதமான கதை. கணவன், நண்பனை உதவும்பொருட்டு தன் வீட்டிலேயே தங்க அனுமதிக்கிறான். ஒருநாள் தன்னந்தனியாக ஊருக்கும் கிளம்பிச் சென்றுவிடுகிறான். ‘அவன் நம்மைச் சந்தேகிப்பதற்காகத்தான் ஊருக்குச் செல்வது போல் நடித்துள்ளான். இன்றிரவு விரைவில் வந்துவிடுவான். நீ போய் விரைவாகத் தூங்கு’ எனக் கணவனின் நண்பன், மனைவியிடம் கூறுகிறான். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஆரம்பிக்கும்போது கணவன் வந்துவிட்டு தன் அரக்கக் குணத்தை அவிழ்த்துவிடுகிறான். உண்மையில் இங்குக் கள்ள உறவு நடக்கவில்லை. ஆனால் ஒருமுறை நண்பனுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது மனைவி அவனுக்கு மாத்திரை கொடுத்தாள். அப்போது அவர்களின் கை தெரியாமல் உரசிக்கொள்கின்றன. இதைக் கண்டதும் கணவனுக்குச் சந்தேகம் பீடிக்கிறது. கதை மிக அற்புதமாக முடிகிறது. ‘தான் இங்கு இவ்வளவு நீண்ட நாட்கள் தங்கியிருக்கக்கூடாது’ என நண்பன் மன்னிப்பு கேட்கிறான். ‘என் நண்பனையும் மனைவியையும் சந்தேகித்திருக்கக்கூடாது’ எனக் கணவன் மன்னிப்பு கேட்கிறான். ‘ஆயிரம் இருந்தாலும் மாற்றானின் மீது என் கை பட்டிருக்கக்கூடாது’ என மனைவியும் மன்னிப்பு கேட்கிறாள்.
கு.ப.ராவின் கதைகள் செகாவ் சிறுகதைகளுக்கு இணையானவை என்று சொன்னேன் அல்லவா! அவரது ‘இயற்கையின் வெற்றி’ கதை மட்டும் டால்ஸ்டாய்க்கு இணையானவை என்பேன். அப்படி ஓர் அட்டகாசமான கதை இது! இங்கிலாந்தில் கல்விப் படிப்பை முடித்த கணவனுக்கும், நம்மூர் பகுத்தறிவுடைய மனைவிக்கும் கர்ப்பத்தடை குறித்த விவாதம் எழுகிறது. கர்ப்பத்தடை சாதாரணம் என மனைவியும், அது மனிதக்குலத்திற்கே எதிரானது என்று கணவனும் சொல்கின்றனர். இந்த விவாதம் முற்றிப்போய் மனைவி தன் அண்ணன் வீட்டிற்கு வந்து தங்குகிறாள். அதாவது கணவனைப் பிரிந்து வாழ எத்தனிக்கிறாள். மனைவியின் அண்ணனும் விரைவில் வக்கீலைப் பார்த்து விவாகரத்து வாங்கிவிடுவதாக நம்பிக்கை தருகிறான். மனைவி இன்னும் தீர்மானமாக எந்த முடிவுக்கும் வரவில்லை. அவள் தன் அண்ணனின் வீட்டை கவனிக்கிறாள். கொஞ்ச நாட்களில் அண்ணனுக்கும் - அண்ணிக்கும் ஒரு கசப்புமில்லாததை ஆச்சரியத்துடன் உணர்கிறாள். காரணம், அண்ணி படிப்பறிவு இல்லாதவள், விவாதத்தில் ஈடுபடாதவள். அதைத் தாண்டி, குடும்பப் பொறுப்புகளுக்குக் குற்றஞ்சொல்லாதவள். அண்ணி கர்ப்பமானதும் சமையலுக்கு ஆள் வைத்துவிடலாமென அண்ணன் சொல்கிறான். “இருக்கட்டும்ங்க, இங்க எனக்கு என்ன வேலை இருக்கு? நானே பார்த்துக்கிறேன்” என்கிறாள் அண்ணி. இதைப் பார்த்ததும்தான் மனைவிக்குத் தான் குடும்ப வாழ்க்கையில் செய்த ஒவ்வொரு தவறுகளும் நினைவுக்கு வருகின்றன. குடும்ப உறவுக்குத் தேவையான பாரம்பரிய மதிப்பீடுகளிலிருந்து வெளியேறினால் அது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமென உணர்ந்ததும், அண்ணியிடம் ‘ஓ’வென அழுகிறாள். “ ‘இரவு மெயிலில் புறப்பட்டு வருகிறாள்’ என உங்கள் தங்கை புருஷனுக்குத் தந்தியடியுங்கள்” என்று அவள் மனதைப் புரிந்துகொண்டு அண்ணி சொல்கிறாள். இச்சிறுகதையில் மட்டுமின்றி, ‘உண்மைக் கதை’யிலும்கூட Feminine Nature-ஐ உயர்வாக எழுதியிருக்கிறார் கு.ப.ரா.
ஒரு சுமுகமான உறவுக்குப் பெண்ணின் பாரம்பரிய மதிப்பீடு இன்றியமையாததாக இருப்பதைப் பல கு.ப.ரா கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. நிச்சயம் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் பட்டியலில் இவரைச் சேர்ப்பேன்.
コメント