நான் அன்னாவை மிகவும் வெறுக்கிறேன். ஆனால் ‘அன்னா கரீனினா’ நாவலைப் போல் இதுவரை எந்த நாவலையும் நேசித்ததில்லை. ‘வெண்ணிற இரவுகள்’ (சில) ரசிகர்கள் நாஸ்தென்காவை சபிப்பதுபோல நான் அன்னாவை ஒருபோதும் சபிக்க மாட்டேன். இது அன்பென்ற நாணயத்தின் மறுபுறம் காணப்படும் வெறுப்பு. அவளை மிகவும் நேசித்ததால், மனதார வெறுப்பதற்கும் உரிமையுள்ளது என நினைக்கிறேன். மணமான அவள், தன் கணவனை விடுத்து வேறொருவனைக் காதலித்து அவனுடன் சேர்ந்து வாழ்ந்ததற்காக நான் அவளை வெறுக்கவில்லை. சொல்லப்போனால் அதற்காகத்தான் அவளை நேசிக்கவே செய்தேன். நான் ஏன் அன்னாவை வெறுக்கிறேனெனில், ஓரிடத்தில் அவளைப் பற்றி இப்படியாக எழுதப்பட்டிருக்கிறது:
’தான் அவள்மேல் ஒரு மகத்தான காதல் கொண்டிருக்கும்போது, ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’, ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று அடிக்கடி அவளுக்குச் சொல்லி அவள்மேல் தனக்கிருக்கும் காதலை அவளுக்கு உறுதிப்படுத்தித் தருவதற்கு அவனுக்கு (காதலனுக்கு) வெட்கமாக இருந்தது. அதேசமயம் தான் உண்மையான காதலை அவள்மீது வைத்திருக்கும்போது இப்படி வார்த்தைகளால் சொல்வது அவசியமில்லாதது என்றும் அவனுக்குப் பட்டது. இருப்பினும் தன் அன்பு அன்னாவுக்காக அவன் அந்த வார்த்தைகளை அவளிடம் அடிக்கடி சொன்னான். ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று. அவள் அந்தக் காதலை ஆவல் தீர அள்ளிப் பருகினாள்’
பெண்களுக்கு எப்போதும் காதலைவிடக் காதலின் வாக்குறுதிகளும் சத்தியங்களும்தான் தேவைப்படுகிறது. அதில் தவறொன்றுமில்லையெனினும், அன்னா மீண்டும் மீண்டும் அதை மட்டுமே கேட்டு, தனக்குள் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கிக்கொண்டு, இறுதியில் தற்கொலையும் செய்து கொள்கிறாள். அன்னா தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே நாவல் முடிந்துவிட்டது. அதன்பிறகு எழுதப்பட்ட 40 பக்கங்கள் வெறும் வார்த்தைகளே.
அன்னா தற்கொலை செய்து கொண்ட சில நாட்களுக்கு முன்பு, அதாவது அவள் குழப்ப மனநிலையிலிருந்த அந்த இருண்ட நாட்களில் தன்னை எதனுடனாவது ஈடுபடுத்திக்கொள்ள நினைத்தாள். தொடர்ந்து புத்தகங்களாக வாசித்தாள். ஒரு புத்தகம் முடிந்த உடனேயே அடுத்த புத்தகத்தை எடுத்து வாசித்தாள். குழந்தைகளுக்கான ஒரு சிறார் இலக்கியத்தை எழுதினாள். அதனை யாருக்கும் படிக்கக்கொடுக்காமல் சிற்பத்தைப்போலச் செதுக்கி வந்தாள். அவளது வாழ்க்கை இப்படியிருந்தும் தற்கொலை செய்து கொள்கிறாளெனில், கலையின் அவசியம் என்ன? பொதுவாக நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ’இசை/சினிமா இல்லையெனில் என்றோ இறந்திருப்பேன்’ என்று. ஆனால் யதார்த்தம் வேறு மாதிரியல்லவா இருக்கிறது. கலை, இலக்கியம் எல்லாம் வாழ்வை இனிதாக்குவதற்குத்தானன்றி, அவையே நம்மை வாழ வைத்துவிடாது. அப்போது எதுதான் நம்மை வாழ வைக்கும்? ’கடவுள்’ என்ற நம்மை மீறிய சக்தி உள்ளதா இல்லையா என்பது போன்ற கேள்வி இது. வாழ்ந்தே ஆகவேண்டுமென்பது அவசியமில்லை. அன்னா பட்ட அவ்வளவு துன்பத்தைவிட மரணம் மிகச் சிறந்த மருந்து.
^ ’அன்னா கரீனினா’ கதை
கதை, ஸ்டீபம் - டாலி என்ற தம்பதியிடமிருந்து தொடங்குகிறது. அவர்களுக்குக் கிட்டத்தட்ட 5/6 குழந்தைகள். குழந்தைகளுக்கு French மொழியைக் கற்பிக்க ஒரு ஆசிரியை நியமிக்கப்படுகிறாள். அந்த ஆசிரியையுடன் ஸ்டீபம் கொண்ட காதல் உறவை, மனைவி டாலி கண்டுபிடித்து விடுகிறாள். கணவனைக் காதலிக்கும் மனைவிக்குக் கணவனது கள்ள உறவைப் பற்றி தெரிய வந்தாள் ஒரு பெண் எப்படி நடந்து கொள்வாளோ அதேபோல்தான் டாலியும் நடந்து கொள்கிறாள். அவளுடைய வார்த்தைகள் மூலமும் நடத்தைகள் மூலமும் ஸ்டீபனை குற்ற உணர்வு கொள்ளச் செய்கிறாள். கணவனையும் குழந்தைகளையும் இந்த சிற்றின்பத்திற்காகப் பிரியத் துளியும் அவளுக்கு மனம் இல்லையெனினும், பிரிய முடிவெடுக்கிறாள். ஸ்டீபனுக்கு இது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இங்குதான் அன்னா நமக்கு அறிமுகமாகிறாள். அன்னா, ஸ்டீபனின் தங்கை. அண்ணன், அண்ணியைச் சந்திப்பதற்காக ரயில் ஏறிப் புறப்பட்டு வருகிறாள். அவர்களது பிரச்சனையைப் புரிந்து கொண்ட அவள், டாலியிடம் அண்ணன் வாழ்க்கைக்காகப் பரிந்து பேசுகிறாள். இருவரையும் பிரிய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறாள். அன்னாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் டாலியின் மனதிற்கு ஆழமாக இறங்குகிறது. அவளை மனம் மாறச் செய்யும் உந்துதலாக அன்னாவின் வார்த்தைகள் அற்புதம் செய்தது. கள்ள உறவிலிருந்த கணவனை மன்னிக்கச் செய்கிறது. வந்த வேலை முடிந்ததும் புறப்படத் தயாராகிறாள்.
அடுத்ததாக லெவின், கிட்டி என்று இரண்டு கதாபாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். லெவின் - ஸ்டீபனின் நண்பன். கிட்டி - டாலியின் தங்கை. லெவின், கிட்டியை மிகவும் காதலிக்கிறான். ஆனால் கிட்டி, விரான்ஸ்கி (ஸ்டீபனின் மற்றொரு நண்பன்) என்பவனைக் காதலிக்கிறாள். ஆனால் விரான்ஸ்கி, அன்னாவைக் காதலிக்கிறான். ’காற்று வெளியிடை’ வருண் கதாபாத்திரம் போல விரான்ஸ்கியின் காதல் கிட்டியிடமிருந்து அன்னாவிடம் இதயம் மாறுகிறது. தனது அக்கா டாலி, திருமணத்திற்குப் பிறகு ஏமாற்றப்பட்டதைப்போல, தான் திருமணத்திற்கு முன்பே ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று துயரத்திலேயே ஆறுதல் அடைகிறாள். அந்த துயரத்துடன், ஆறுதலுடன் லெவினைத் திருமணம் செய்து கொள்கிறாள்.
விரான்ஸ்கி, ஏற்கனவே கரீனின் என்பவருக்குத் திருமணமான அன்னாவைக் காதலித்து விடுகிறான். கரீனினிடம் “நான் ஸ்டீபனைப் போலல்ல” என்று சொன்ன அன்னா, பின்பு ஸ்டீபனாகவே ஆகிவிடுகிறாள். அதாவது விரான்ஸ்கியைக் காதலித்து விடுகிறாள். இது கரீனினுக்குத் தெரிய வந்த பிறகும் அவர் கண்ணியம் தவறாது நடந்து கொள்கிறார். அந்தப் பெருந்தன்மை அன்னாவை மிகவும் வருந்த செய்கிறது. ஆனால் கரீனின் கோபம் வேறு விதமாக உருவெடுக்கிறது. (அது என்னவென்பதைத் தெரிந்து கொள்ள நீங்கள் கதையைப் படிக்க வேண்டும்) இந்த விஷயம் ஸ்டீபனுக்குத் தெரிய வந்த பிறகு, எப்படி தனது தங்கை தன் பிரச்சனைக்காகப் பரிந்து பேச வந்தாளோ அதேபோல் தனது தங்கைக்காகப் பரிந்து பேச கரீனினைச் சந்திக்கிறான். ஆனால் ஸ்டீபனின் வார்த்தைகள் எதுவும் கரீனின் இதயத்தைத் தொடவில்லை. அவனுடைய செவிக்குக்கூட எட்டவில்லை. முயற்சியில் தோல்வி அடைகிற ஸ்டீபம், ஏமாற்றத்துடன் தன் வீட்டிற்குத் திரும்புகிறான்.
டால்ஸ்டாய் இந்த Drama/Play மூலமாக இரண்டு முக்கிய விஷயங்களை முன் வைக்கிறார். ஒன்று, ஒரு ஆண் செய்யும் தவற்றுக்கு எளிதில் மன்னிப்பு கிடைத்து விடுகிறது. அதே தவற்றை ஒரு பெண் செய்தால் அவளை மன்னிப்பதற்கான வேண்டுகோளைக்கூட கேட்க மறுக்கிறது. ‘சமூகத்தாலும் மதத்தாலும் அமைக்கப்பட்ட, இவ்வளவு குறைகள் நிறைந்த குடும்ப அமைப்பு என்பது ஒரு தனி மனிதனுக்கு வாழ்க்கையில் அவ்வளவு அவசியமா?’ என்ற கேள்வி எழுகிறது! இரண்டாவதாக, ஒரு பெண்ணின் வார்த்தைகள் மூலம் ஒரு தவற்றுக்கான மன்னிப்பைக் கொடுக்க வைக்க முடிகிறது. அப்படியான அற்புதங்களை ஆணின் வார்த்தைகள் ஒருபோதும் செய்வதில்லை. ஒருவேளை ஸ்டீபனுக்குப் பதிலாக கரீனினிடம் டாலி சென்று பரிந்து பேசியிருந்தால், அவர் மனம் இலேசாகியிருக்குமோ என்னவோ!
^ Realisation
ஸ்டீபன் செய்த தவறு (தன் மனைவிக்குத் துரோகம் செய்தது) அம்பலமான இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் இவ்வாறு நினைக்கிறான்:
‘எல்லாம் என்னுடைய தவறுதான். நடந்தவை அனைத்துக்கும் நான் ஒருவனே பொறுப்பு. ஆனால் இதில் கொடுமை என்னவெனில், நான் செய்தது குற்றம் ஆகாது. அதுதான் இங்கு மிகப்பெரிய சோகம்’
இவர்களுக்காகப் பரிந்து பேச அன்னா வந்தபோது டாலியும் கூட ஓரிடத்தில் சொல்கிறாள், “குற்றம் செய்யாதவரைக் காட்டிலும் குற்றம் செய்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்”
அன்னாவும் இதேபோன்ற விஷயத்தைத் தனது காதலன் விரான்ஸ்கியிடம் சொல்கிறாள், “நான் என் கணவரிடம் நம் விஷயத்தைப் பற்றிச் சொல்லிவிட்டேன். அவர் மன அமைதியுடன் உள்ளார். நான் இங்கே தவியாய்த் தவிக்கிறேன்”
இதுதான் உணர்தல் என்பது. தவற்றை உணர்ந்த ஒருவருக்குத் தண்டனை அளிக்கப்படாததைவிடச் சிறந்த தண்டனை ஏதேனும் உண்டா என்ன?
^ அன்னா கரீனினாவும் ஆன்டன் செகாவும்
Anton Chekov-ஐ பற்றி நினைக்காமல் இந்த நாவலைப் படிக்கவே முடியவில்லை. Chekov ’நாய்க்கார சீமாட்டி’ என்று ஒரு கதையை எழுதியுள்ளார். 40 வயது ஆணும் 23 வயது பெண்ணும் ஒரு பயணித்தில் சந்தித்து காதல் கொண்டு விடுகின்றனர். இருவருமே ஏற்கனவே திருமணம் ஆனவர்கள். இருப்பினும் ஒருவரையொருவர் மனதார நேசிக்கின்றனர். பயண நாள் முடிந்ததும் அந்தப் பெண் தனது கனவுலகக் காதல் வாழ்க்கையிலிருந்து யதார்த்தத்திற்குத் திரும்ப வேண்டி இருக்கிறது. இருவரும் இட அளவில் பிரிகின்றனர்; ஆனால் மனதளவில் அல்ல. ஒருவரை விட்டு மற்றொருவரால் இருக்க முடியவில்லை. எனவே அவர்கள் சேர்ந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட முடிவு செய்கின்றனர். அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அன்று அவர்கள் எடுத்த முடிவு என்பது அவர்களது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு என்பதாக அக்கதை முடியும். ’அன்னா கரீனினா’வின் டீஸர்தான் ‘நாய்க்காரச் சீமாட்டி’ கதை. ஒருவேளை அப்பெண் கணவனை விடுத்து காதலனுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால் அவர்களுடைய வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்பதை நீங்கள் ‘அன்னா கரீனினா’வில் படிக்கலாம்.
இதையடுத்து, Anton Chekov, ‘At Christmas time’ என்று ஒரு கதை எழுதியுள்ளார். 4 பக்கங்கள் கொண்ட Classic சிறுகதை. எழுதப் படிக்கத் தெரியாத வயதான மூதாட்டி ஒருவள், எழுதத் தெரிந்த ஒரு ஆளை வைத்து, 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட தன் மகளுக்கு Christmas தினத்தன்று ஒரு கடிதத்தை எழுதுகிறாள். மகள் மீதுள்ள மொத்த அன்பும் அக்கடிதத்தில் வார்த்தையாக மொழியாகிறது. மகளுக்கும் அக்கடிதம் சென்றடைகிறது. அதனைப் படிக்கத் தெம்பில்லாத அவள் முதல் இரண்டு வரிகளிலேயே அழுது விடுகிறாள். பின்பு, மனதைத் தேற்றிக்கொண்டு முழுதாகப் படிக்கிறாள். தனது தாய்க்கு பதில் கடிதத்தையும் மிக உருக்கத்துடன் எழுதுகிறாள். அவள் எழுதிய பதில் கடிதத்தைத் தன் கணவனிடம் கொடுத்து அனுப்பச் சொல்கிறாள். ஆனால் அவளுடைய பொறுப்பற்ற கணவன் அக்கடிதத்தைத் தொலைத்து விடுகிறான்.
இந்தக் கதையை நான் எப்படிப் புரிந்து கொண்டேனெனில், அவள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்காக தன் பெற்றோரையும் விடுத்து இவனுடன் வந்தாளோ, அப்படியான வாழ்க்கையை அவள் வாழவில்லை. அதே நிலைமைதான் அன்னாவுக்கும். எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்காக தன் உயிருக்கும் மேலான தனது மகனையே விடுத்து விரான்ஸ்கியுடன் சென்றாளோ, அப்படியான வாழ்க்கையை அன்னா வாழவில்லை.
^ Contradiction
இந்த நாவலின் ஓரிடத்தில் பகுத்தறிவையும், வாழ்க்கையையும், மதத்தையும் முன்வைத்து சில பத்திகளை Tolstoy எழுதியுள்ளார். பகுத்தறிவைப் புறக்கணிக்கும் அவர், ‘அன்பு செலுத்துவது என்பது பகுத்தறிவுக்கு எதிரானது’ என்று ஒரு வரியை எழுதுகிறார். இந்த 1200 பக்க நாவலில் எனக்குப் பிடிக்காத ஒரே வரி அதுதான். எந்தப் பகுத்தறிவும் அன்புக்கு எதிராகப் பேசியதே இல்லை. சொல்லப்போனால், மதங்கள்தான் இயற்கைக்கு எதிரான திருமணம் என்ற சம்பிரதாயத்தைப் போதிக்கிறது. பகுத்தறிவு அதனை எதிர்த்து காதலையே முன்வைப்பதாகும் என்று நான் நினைக்கிறேன்.
மொத்தத்தில், ‘அன்னா கரீனினா’, Absurdism மற்றும் Nihilism என்ற இரண்டு முக்கிய தத்துவ மதிப்பீடுகளை முன்வைக்கும் காவியம். ‘அன்னா கரீனினா’ திருமணத்திற்கு எதிரான நாவல் அல்ல. ஆனால், ‘அன்னா கரீனினா’வைப் படிக்காமல் திருமணம் செய்துகொண்டவர்கள், செய்து கொள்ளப்போகிறவர்கள் அனைவரும் அந்த வாழ்வை வாழ்வதற்கே தகுதியற்றவர்கள்.
மிக தெளிவான சுருக்கம் 🖤