‘சொனாட்டா’ நாவலில் தாஸ் ஏன் ருத்ராவுக்கும் மானசிக்கும் வொர்க் அவுட் ஆகாது என்று சொன்ன காரணத்தைச் சொல்ல முடியுமா?
மானசி பிடிக்கவில்லை என்று கூறி, தான் தனியாக இருந்திருந்தால் தாஸ் இவ்வாறு கூறி இருக்க மாட்டார் என்று தோன்றியது. ஆனால் மானசியின் பொறுமையின்மையால் இன்னொரு ஆணை டேட் செய்யத் தொடங்கி விட்டிருந்தாள். அதுவும் அவனுடைய நண்பனை உறவில் இருக்கும்போதே. குற்ற உணர்ச்சி தலையை நெறித்துக் கொன்று விடக்கூடாது என்பதால் ருத்ராவிடம் தெரிவித்தது போலத் தோன்றியது. ஒருவேளை இதனால் தாஸ் கூறியிருக்கலாம். ஓர் உறவில் இருக்கும்போது காதலி இவ்வாறு செயல்படுவது பெரிய Red Flag ஆக தாஸ் கண்டு இருக்கலாம்.
அப்படி இல்லை என்றால் Alpha Man ஆக இருக்கும் தாஸ்க்கு நண்பன் வென்று விட்ட பெண்ணை ருத்ரா மீண்டும் அந்தப் பெண்ணுடன் உறவில் ஈடுபடுவது சரிப்பட்டு வராது என்று நினைத்திருக்கலாம்.
நவீன்.
*
’சொனாட்டா’ நாவலின் அந்தக் காட்சியை தீர்மானமாகவோ தர்க்க ரீதியாகவோ எதையோ சொல்ல முனைந்து எழுதவில்லை. ஆகவே வாசகர் அதனை எப்படி வேண்டுமானாலும் உருவகித்துக்கொள்ளலாம். நான் அக்காட்சியை வெளியிலிருந்து வாசித்துப் பார்த்த வாசகனாக மட்டுமே சொல்கிறேன். நாவலாசிரியனாக அல்ல.
தாஸ் நேரடியாகக் கண்டது ருத்ராவைத்தான், மானசியை அல்ல. அவருக்குத் தெரிந்த மானசியெல்லாம் ருத்ரா காட்டும் மானசிதான்.
ஒரு உதாரணம். நான் மிக மோசமான காலகட்டத்தில் கேட்ட பாடல்களை, அந்த மோசமான காலத்திலிருந்து மூள முனையும் அடுத்த ஓராண்டுக்காவது அந்தப் பாடலைக் கேட்க மாட்டேன். ஏனெனில் நான் உள்வாங்கிய பாடல் என் ஆளுமையில் கலந்துவிடுவதாக எனக்கொரு மூடநம்பிக்கை இருக்கிறது. ஆகவே மீண்டும் அதே இசையில் திளைக்கும்போது இருண்மை என்னை சூன்யம் போல் சூழ்வதாகத் தோன்றும். ஆகவே எனது தேடல் அனைத்தும் புதிய ஒன்றை நோக்கியே செல்லும். இசை ரசிகனாக இருப்பதைவிட இலக்கிய வாசகனாக இருப்பதன் சாதகம் இதுதான். ஒரு பாடல் நம்மைப் பின் தொடர்ந்து அடுத்த சில மாதங்களுக்கு வந்துகொண்டே இருக்கும். ஆனால் எப்பேர்ப்பட்ட மிகச்சிறந்த நூலாக இருப்பினும் அதை மீள் வாசிப்பு செய்வதற்கு அரை தசாப்தமாவது ஆகும். இந்த உத்தியை இங்கு மானசியிடமும் பார்க்கலாம். மானசி ஒரு மகத்தான இசையின் உவமையாகத் தோன்றுகிறாள். ருத்ரா மீட்சியை ருசித்த அந்த முன்பனிக் காலத்தில் அவனுக்குப் பழையது எதையும் தரக்கூடாது, அது அவனுக்கு நல்லதல்ல என்று தந்தை ஸ்தானத்திலிருந்து தாஸ் அவனுக்கு அதை அறிவுறுத்துகிறார்.
இன்னொரு வாழ்வனுபவ உதாரணம். எனது முந்தைய காதல் ஆகஸ்ட் 2021இல் முறிந்துபோனது. அதன்பிறகு நான் அப்பெண்ணுடன் நட்புறவிலிருந்திருக்கிறேன். வெளியே சுற்றியிருக்கிறேன். காதலின் அந்தரங்கத் திரையை விலக்காமல் காதலர்கள் செய்யும் அனைத்து கேளிக்கையிலும் ஈடுபட்டிருக்கிறேன். காலம் செல்ல செல்ல அதன் வீரியம் குறைந்து இன்று நாங்கள் யாருமற்றவர்கள் எனும் கட்டத்தை அடைந்திருக்கிறோம். சமூக வலைதளங்களில் காணப்படுவது போல் முழுத் தீவிரமாக மட்டுமே அல்லாமல் நிஜ வாழ்க்கையில் நான் மிகத் துள்ளலான மனிதனாக இருப்பேன். தன்னம்பிக்கையான மனிதனும்கூட. என்னுடன் பேசும் அனைவருக்குமே தெரியும், என் குரலில் உற்சாகம் ஊற்றெடுத்து ஓடும். ஆனால் நான் என் முன்னாள் காதலியிடம் பேசும்போது மட்டும் கூனிக் குறுகிவிடுகிறேன். பலவீனனாகிவிடுகிறேன். என் குரலில் எதையோ இழந்தவனின் துயர் ஊசலாடுகிறது. அது நானே அல்ல என்றும் தோன்றுகிறது. கடந்த ஈராண்டுகளில் ஒட்டுமொத்த ஆளுமையும் மாற்றி மகத்தான மீட்சியை அடைந்த பிறகும் முன்னாள் காதலியிடம் குழைந்து நிற்கும் என்னை, அவ்வளவு தன்னம்பிக்கை குறைவானவனாகப் பார்க்க விரும்பாததாலேயே அவளிடம் பேசுவதை மெல்ல மெல்ல முற்றிலும் தவிர்த்து வருகிறேன். இந்தத் தன்னம்பிக்கை குறைவும் குறுகலும் ருத்ராவின் மீட்சிக்கோ அவன் இசை வாழ்க்கைக்கோ ஒருவகையிலும் உதவாதென்பதை எண்ணி மானசியுடன் அவன் மீண்டும் சேருவதை தாஸ் அறிவுறுத்தவில்லையென நினைக்கிறேன்.
இந்த இடத்திலிருந்துகூட என்னை தாஸாக புனைந்துகொண்டு ருத்ராவுக்கு நானளித்திருக்கும் அறிவுரையாக அது இருந்திருக்கலாமென இப்போது நீங்கள் கேட்டதும் தோன்றுகிறது. ஒருவேளை நிஜ வாழ்க்கையில் ஒருவன் வந்து அப்படியான கேள்வியைக் கேட்டிருந்தால் தாஸ் என்ன சொன்னாரோ அதையே நானும் சொல்லியிருக்கக்கூடும். தாஸாகிய நான் ருத்ராவாகிய எனக்கு சொல்லிக்கொண்டதைப் போலவே.
Comments