‘சொனாட்டா’ நாவலை வாசித்துவிட்டு நண்பர் நவீன் எழுதிய கடிதம்
***
அன்புள்ள பாலு,
நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் அனைவரும் நலமா?
நானும் உங்களது நெருக்கமான நண்பராக இருந்திருந்தால் கண்டிப்பாகக் கெட்ட வார்த்தை பயன்படுத்தியே தங்களைப் பாராட்டியிருப்பேன். ’சொனாட்டா’ எனது எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்தது. இந்தப் புத்தகத்தில் தங்களின் எழுத்து நடை மற்றும் கதை சொல்லல் விதம் அப்டேட் செய்யப்பட்டு பாலு வெர்ஷன் 2.0 மாதிரி இருந்தது.
தங்களின் கட்டுரைகளைப் படிக்கும்போது மீட்சியின் எண்ணம் என்னுள் தோன்றும். ஆனால் சில நாட்களிலேயே அந்த வீரியம் போய்விடும். ஆனால் ‘சொனாட்டா’வில் இருக்கும் வீரியம் அதிகம். இம்மாதிரியான புத்தகத்தைப் படித்துவிட்டு எளிதில் கடக்க முடியாது. ஏற்கெனவே ‘முகமூடிகளின் பள்ளத்தாக்கு’ நாவலிடம் பெற்ற குற்றவுணர்வே இன்னும் தீர்ந்தபாடில்லை.
நிச்சயம் மீண்டு வர வேண்டும்; இந்த வீரியத்தை எப்போதும் அணையாத சுடர் போல என்னுள் இருக்க வேண்டும்; கண்டிப்பாக இருக்கும். புத்தகத்தின் ஒவ்வொரு வரிகளும் என்னைச் சீண்டிப் பார்ப்பது போலத் தோன்றியது. உதாரணமாக 29ஆம் பக்கத்தில், ‘சிற்றின்பத்தைப் பேரின்பமாய் பாவித்துக்கொண்டாலும், எங்கோ ஒருவன் இதை உண்மையில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறான்; நான் அதை ஒரு திரையில் கண்டு கை அடித்துக்கொண்டிருக்கிறேன் என்ற கீழ்மை உணர்வு என்னை வாட்டியது' என்ற வரி.
ருத்ராவாக எண்ணிப் படித்ததால் என்னை நேரடியாகப் பாதித்தது. ஒவ்வோர் ஆணும் தான் கையாலாகாதவன் என்று ஒப்புக்கொள்ளவே மாட்டான். மீட்சியிலிருந்து திரும்புவதற்கு இது முக்கியமான ஒரு வரிகளாக நான் பார்க்கிறேன்.
29ஆம் பக்கத்திலேயே இந்தப் புத்தகத்தின் நோக்கத்தை நான் பெற்றுவிட்டேன். இந்தப் புத்தகத்தின் இந்த வரிகளை நான் மிகவும் முக்கியமான வரிகளாகப் பார்க்கிறேன். மற்றொன்று, பக்கம் 151ல் அச்சத்தைக் கொடுக்கும்படி இவ்வரிகள் அமைந்திருந்தன.
‘உடலால் செயல்படும் ஒருவன் முதலில் தான் கீழானவன், அடிமை, இயலாதவன் என்ற அடையாளங்களிலிருந்து விடுபட்டு மாஸ்டர் என்ற நிலையை அடைகிறான். அவனுக்கு அவனே மாஸ்டராகிறான். தன்னை ஆளத் தெரியாதவர்களால் ஒருபோதும் பிறரை ஆள முடியாது. அவனின் பிள்ளைகளுக்கு ஒருநாளும் உத்தமத் தந்தையாக, காட்ஃபாதராக, ஹீரோவாக இருக்க முடியாது.’
99ஆம் பக்கத்தில் ‘மன்னித்துக்கொள்ளுங்கள் மகாபுருஷர்களே’ என்கிற பத்தியைப் படித்தவுடன் ‘நக்கல்யா உனக்கு” எனச் சொல்லிக்கொண்டேன். இந்த இடத்தில் எழுத்து நடை மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. மற்றும், 51வது பக்கத்தில் மானசியைப் பற்றி அவனது கற்பனையின் பின்னல்கள் மற்றும் இம்மாதிரி நிறைய இடங்களில் தங்களின் எழுத்தின் வேட்டை உக்கிரமாக இருந்தது.
தொடக்க அத்தியாயத்தின் முடிவில் ருத்ராவின் வீழ்ச்சியும் இயலாமையும் இடம்பெறுவது போல அடுத்த அத்தியாயத்தில் ஆரோக்கிய தாஸின் எழுச்சியும் வலிமையும் மாறி மாறி படிக்க, இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளை நன்றாக உணர முடிந்தது.
இரு கதைகளும் இணையும் புள்ளியை நோக்கிப் படிக்கும் ஆர்வம் என்னை இழுத்துச் சென்றது. இப்படி அடுக்கிக்கொண்டே நிறைய பக்கங்களைப் பற்றிப் பேசலாம். அவ்வாறு புத்தகம் முழுவதும் சிக்ஸ் அடித்துள்ளீர்கள்.
புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் ‘லக்ஸ் ஏடர்னா’வை ஒலிக்கவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். நிறைவாக இருந்தது.
என்றும் அன்புடன்,
நவீன்.
Comments