‘சொனாட்டா’ படித்து முடித்தேன். ஒட்டுமொத்தமாக ப்யூட்டிஃபுல்லாக இருந்தது. ருத்ராவின் கதாபாத்திரம் இன்ஸ்பையரிங்காக இருந்தது. மீட்சியை நோக்கி ஓடும் ருத்ராவின் வீழ்ச்சியையும் ஈகோவையும் புரிந்துகொள்ள முடிந்தது.
பொதுவாகக் கமல் படங்களின் கதாநாயகன் சொல்லிக்கொள்ளும்படி பெரும் நாயகனாக இருக்க மாட்டான். பொதுவாக அவர் படங்களில் கதாநாயகன் தவறான வழிக்குச் சென்று பட்டுத் திருந்தி நல்லவனாவான். ‘விருமாண்டி’, ‘ஹே ராம்’, ‘தேவர் மகன்’ போன்ற படங்கள் உதாரணம். அதுதான் கதாநாயகனை எழுதுவதற்கான சிறந்த வழி என்று நினைக்கிறேன். எல்லாருமே பிறந்ததிலிருந்து வாழ்வது வரை நல்லவர்களாகவே இருப்பதில்லை. ஒருவன் தவறான வழிக்குச் சென்று பட்டுத் திருந்தி நல்லவனாகும்போது அவன் சாதாரண நல்லவனைவிட மேலான இடத்துக்குச் செல்வான். ஏனெனில் அவன் இரு துருவங்களைப் பார்த்தவனாக இருக்கிறான். நல்லது கெட்டது இரண்டையும் பார்க்கும் இடத்தில் அவன் நீ சொல்லியிருப்பது போலப் பேராண்மையான ஒருவனாக மாறுகிறான்.
நீலப்படங்கள் ஒருவனின் வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கும் என்பதை இதைவிடச் சிறந்த வடிவத்தில் எப்படி எழுத முடியுமெனத் தெரியவில்லை. அவ்வளவு ப்யூட்டிஃபுல்லாக இருந்தது. உளவியல் ரீதியாக பார்னோக்ராஃபி ஒருவனை எப்படி பாதிக்கும், அது அவனை எப்படி எல்லாவற்றையும் பார்க்க வைக்கும், அது அவனை எவ்வளவு தாழ்வுணர்ச்சிக்குக் கொண்டு செல்லும், எந்தளவுக்கு இன்செக்யூரிட்டீஸை அவனுக்குக் கொடுக்கும், அவனுடைய நிஜ காம வாழ்க்கையை அது எந்தளவுக்குப் பாதிக்கிறது போன்றவற்றை ரொம்ப ப்யூட்டிஃபுல்லாக எழுதியிருந்தாய்.
இந்நாவலில் எனக்குப் பிடித்த சில இடங்களைச் சொல்கிறேன். ருத்ராவுக்கு சிறில் துரோகமிழைக்கிறான். அப்போது பிரதாப் “அவன் உனக்கு துரோகம் செஞ்சிருக்கான். இந்த மாடர்னிட்டில உனக்குத் தெரியல” எனச் சொல்வார். எனக்கு ரொம்பப் பிடித்த இடம் இது. இங்குதான் ஒரு எழுத்தாளனாக நீ வென்றுவிட்டாய் எனத் தோன்றியது.
அதைத் தாண்டி நிறைய இடங்கள் எனக்கு இன்ஸ்பையரிங்காக இருந்தது.
‘உலகின் எத்தனையோ இடங்களில் மழை பெய்யலாம். அங்கிருக்கும் கலைஞர்கள் இதை கச்சாவாகப் பயன்படுத்தி படைப்புகளைச் செப்பனிட்டுக்கொண்டிருப்பார்கள். நானோ கேவலம் சுய இன்பம் செய்வதற்காக தெருநாய் போல அலைகிறேன்.’
‘தன்னை ஆளத் தெரியாதவர்களால் ஒருபோதும் பிறரை ஆள முடியாது. அவனின் பிள்ளைகளுக்கு ஒருநாளும் உத்தமத் தந்தையாக, காட்ஃபாதராக, ஹீரோவாக இருக்க முடியாது.’
- நாவலிலிருந்து
தியானத்தின் டீட்டெயிலிங் பயங்கரமாக இருந்தது. சத்தங்களைக் கவனிப்பது, மூச்சில் கவனம் செலுத்துவது, நிகழ்காலத்தில் இருப்பது, சிறில் பந்துவீசும்போது தாஸ் ஈகோவில் பந்துவீசாதே எனச் சொல்வது என ஏகப்பட்ட இடங்கள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தன.
ஏனெனில் நான் ஒரு ஈகோயிஸ்டிக் ஆள் என்பதாக என்னால் இதைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது. நான் கடந்த ஒன்றிரண்டு மாதங்களாக என் ஈகோவை அமைதிப்படுத்த ரொம்பப் போராடிக்கொண்டிருக்கிறேன். என் ஈகோவும் இன்செக்யூரிட்டீஸும் திரும்பத் திரும்ப என்னை ட்ரிக்கர் செய்துகொண்டே இருக்கிறது. அதை எதிர்கொண்டு எதிர்கொண்டு அமைதிப்படுத்தப் பார்க்கிறேன். அதை அமைதிப்படுத்த முடியவில்லையெனினும், அதற்காக முயன்றுகொண்டிருக்கிறேன். அதற்கு தியானம் ஒன்றே தீர்வு. ‘சொனாட்டா’ படிக்கும்போது அது எனக்குப் புரிகிறது.
நான் பொதுவாகவே அதிகம் விவாதத்தில் கலந்துகொள்பவன். உனக்கே தெரியும், கல்லூரிக் காலத்தில் நாம் எவ்வளவோ விவாதித்திருக்கிறோம். பள்ளிப் பருவத்தில் நான் அப்படித்தான் இருந்திருக்கிறேன். அது எல்லாமே ஈகோதான் என்பதை உணர்ந்ததே கடந்த ஜனவரியில்தான். நான் ஏன் அவ்வளவு விவாதித்திருக்கிறேன் என்றால், அடுத்தவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாத என்னுடைய ஈகோவால்தான். அந்த ஈகோவின் அடுத்த லேயர் என்பது இன்செக்யூரிட்டி. அவன் சொன்னதை ஒத்துக்கொண்டால் நம்மைவிட அவன் மேலானவன் ஆகிவிடுவானோ என்பதற்காகவே நாம் எதிர்க்கிறோம். அந்த இன்செக்யூரிட்டியை மறைத்து வைக்க ஒரு ஈகோ. அதுதான் என்னை ரொம்பவும் Arguemental & Judgmental நபராக மாற்றியது.
நாம் பணியாற்றிக்கொண்டிருப்பது போட்டி நிறைந்த கிரியேட்டிவ் துறை. இதில் நம் ஈகோ அடிக்கடி ட்ரிக்கர் ஆகிக்கொண்டே இருக்கும். தாஸ் ஈகோவில் பந்துவீசாதே எனச் சொல்வது போல நான் இப்போதெல்லாம் ஈகோவில் பணியாற்றாமல் இருக்கிறேன்.
ருத்ரா கஞ்சா அடித்துவிட்டு கற்பனை காணுவதெல்லாம் ‘ஆளவந்தான்’ படத்தை நினைவுபடுத்தியது. தன் சித்தியையே அவன் தவறாகப் பார்த்ததெல்லாம் பார்ன் அடிக்ஷனின் தீவிரத்தின் உச்சம்.
தாஸ் & குழு இடம் அழகாக இருந்தது. அது ஒரு தனி உலகம். அந்த அரசியல், லோகு, சம்பத்துடனான சந்திப்பு எல்லாமே படிப்பதற்கு சினிமாட்டிக்காக இருந்தது. லட்சுமி இருவர் மீது ஆசைப்பட்டது நல்ல இடம். ஒரு பெண்ணின் பெண்மை பேராண்மை மிக்க ஆணால்தான் வெளிக்கொணரப்படுகிறது. நீ பேராண்மை பற்றிப் பேசிய இடங்களெல்லாம் சரியான வாதம்தானெனத் தோன்றியது. கேஷுவல் செக்ஸ் பற்றிச் சிறப்பாக எழுதியிருந்தாய்.
- காமத்துக்குப் பயிற்சி, அதைப் பயிலாமல் இருப்பதுதான்.
- மகிழ்ச்சிக்கு அடிபணிவது அடிமைத்தனம்.
- நாய் மேல் இருக்கும் பயத்தைப் போக்க அதன் தலையைத் தடவிக்கொடுக்க வேண்டும்.
- வாழ்க்கை ஒருமுறைதானே வாழக்கிடைக்கிறது எனச் சொன்னதற்கு சிறில் கொடுத்த பதில்.
இப்படி எண்ணற்ற இடங்கள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தது.
மொத்தமாக ஒரு கதாபாத்திரம் ஒரு மிகப்பெரிய தவற்றைச் செய்கிறது. பிறகு குற்றவுணர்வில் தத்தளிக்கிறது. பின் மீட்சியை நோக்கி ஓடுகிறது என்பது முழுமையடைந்திருந்தது. இது உன்னுடைய பக்குவப்பட்ட எழுத்தாகத் தோன்றியது. குறிப்பாக தாஸ் வீட்டுக்கு ருத்ரா வந்தது உன் எழுத்தின் பரிணாமம் வேறொரு இடத்தைச் சென்றடைந்திருந்தது. வாழ்த்துகள்.
Commenti