top of page
Search
Writer's pictureBalu

ஓல்ட் மங்க்

வீட்டில் யாருமில்லாத போதிலும் தர்மன் அதையொரு ரகசிய செயலாகவே மேற்கொண்டார். லுங்கியில் மறைத்து வைத்துக் கட்டியிருந்த ஓல்ட் மங்க் மதுவை எடுத்து அதன் லோகோவை பார்த்தார். தினசரி அருந்தும் அதே மதுதானெனினும், அதனுடைய லேபிளின் வசீகரம் கொஞ்சமும் குறையவில்லை. அதிலுள்ள பெரியவரின் புகைப்படத்தைப் பார்த்து லேசாக மனதுக்குள் சிரித்துக்கொண்டார். இருபதுகளில் குடிக்கத் தொடங்கிய ப்ராண்ட் அது. இப்போது கிட்டத்தட்ட அந்தப் பெரியவரின் முதுமையை எட்டியிருக்கிறார் தர்மன். 

வீட்டில் மனைவி இல்லாதபோது கிடைக்கும் தற்காலிக சுதந்திரத்தில் மிதந்தார். எழுபது வயதானாலும் கணவர்களுக்கு அதிலோர் அலாதி இருக்கவே செய்கிறது. மனைவிகளுக்கும்தான்!

அவரின் மனைவி கடைசிக் காலத்தில் சொந்தங்களுடன் கோயில் கோயிலாகச் சுற்றி வருவதால்தான் இப்படிப் பட்டப்பகலில் வீட்டில் நிம்மதியாகக் குடிக்க முடிகிறது. மனைவியின் சந்தோஷம் அதில்; தர்மனின் சந்தோஷம் இதில். 

குடி மட்டுமே அவரின் சுகமல்ல; மிகத் தீவிர கிரிக்கெட் பிரியர் அவர். குடிக்கு முன்பே கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிவிட்டதால் அதுவே அவரின் மொத்த உலகமும். இளமையில் வானொலி கிரிக்கெட் வர்ணனை கேட்பதுதான் அவரின் முக்கிய பொழுதுபோக்கு. அப்போதெல்லாம் இந்தி வர்ணனை மட்டுமே கேட்கக் கிடைக்கும். ச்சார், சாத், கேந்த் போன்ற இந்தி வார்த்தைகளை மட்டுமே கற்று, அதை வைத்து போட்டியின் முடிவுகளை ஓரளவு யூகித்துக்கொள்வார்.

முப்பது ஆண்டுகளாகச் செய்து வந்த அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை தர்மனுக்கு. அனுதினமும் மதுவே கதியாகக் கிடந்தார். ஓய்வு பெற்ற முதல் சில நாட்களில் முன்கோபங்களைக் கையாள முடியாமல் மனைவியைப் படுத்தி எடுத்துவிட்டார். பின் சம்பாதிக்காத குற்றவுணர்வில் குடும்பத்துக்கு பாரமாகிவிடக்கூடாதென்பதற்காகச் சண்டையிடுவதை நிறுத்தினார். உணவில் உப்பு கூட குறைய இருந்தாலும் பொறுத்துக்கொண்டு சாப்பிடுவார். கோபம் தலைக்கு சுர்ரென்று ஏறினாலும் குவாட்டர் அடித்துவிட்டு எதுவும் பேசாமல் போய்ப் படுத்துறங்கிவிடுவார்.

ஓய்வூதியப் பணத்தில் ஐந்தாயிரம் ரூபாயைக் குடிப்பதற்காகவும் எடுத்து வைத்துக்கொண்டு மீதி பணத்தை மனைவியிடம் கொடுப்பார் தர்மன். பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டிருந்ததால் அவர்களுக்குப் பணம் எதுவும் தராமல் பேரன்களுக்கு மட்டும் அவ்வப்போது சாக்லேட், கேக் என வாங்கிக்கொடுத்துக் கொஞ்சி விளையாடுவார். எவ்வளவு இறுக்கமிருந்தாலும் பேரன்களைப் பார்த்ததும் எல்லா பாரமும் கல்லடி பட்ட காக்கைகளைப் போலப் பறந்து போய்விடும். 
அன்றைய நாள் மதியம் ஒரு மணி இருக்கும். சுற்றிமுற்றிப் பார்த்து ஓல்ட் மங்க் மதுவை ரகசியமாய் அருந்திவிட்டு இந்தியா - இங்கிலாந்து விளையாடும் உலகக்கோப்பை போட்டியைக் காண ஆர்வமாய் அமர்ந்தார். தர்மன் கிரிக்கெட்டை உணர்ச்சிகளோடு பிணைத்துப் பார்ப்பவர். இளம் வயதில் ஆட்டக்காரராக இருந்தபோதும் அப்படித்தான். அடிக்க வேண்டிய பந்துகளைத் தவறவிட்டால் லேசில் எடுத்துக்கொள்ள மாட்டார். வழிதவறிய விலங்கைப் போலக் கத்திக் கூச்சலிட்டு கவனம் சிதறி மேலும் சொதப்புவார். விளையாட்டில் பிறந்த இந்த குணம் பிற்காலத்தில் வாழ்விலும் அவரின் இயல்பாகவே ஒட்டிக்கொண்டது. இந்திய வீரர்கள் சிறு பிழை செய்தால்கூட கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தெடுப்பார். உணவின் சுவை முன் பின் இருந்தாலும் மனைவியைத் திட்டி அவரின் நாளினையே பாழாக்குவார்.

இந்திய வீரர்கள் முதல் பவர்ப்ளேயில் மூன்று விக்கெட்டுகளை இழந்ததும் தர்மன் வசைகளாகப் பொழிந்தார். விரக்தியில் கட்டிங் போட்டபடி மேல்மாடம் வந்து நோட்டமிட்டார். தர்மனின் மகன் சதீஷ், முதலாம் வகுப்பு படிக்கும் தன் மூத்த பிள்ளையைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்திருந்தான். மேலே தர்மனைப் பார்த்ததும் பேரன் வாய்நிறைய ஆசையாய் “தாத்தா” எனக் கத்தினான்.

“டேய் பஜ்ஜு, ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு போய்த் தூங்கு” எனக் குரல் கொடுத்தார் தர்மன்.

சதீஷ் தந்தையை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு வீட்டின் கீழ்ப்பகுதியிலுள்ள தனது அறைக்குச் சென்றான். சதீஷ் சிறு வயதில் தர்மனிடம் நிறைய அடி வாங்கியிருக்கிறான். அப்போதெல்லாம் அவர்தான் சதீஷை கணக்கு வீட்டுப்பாடம் எழுத வைப்பார். ‘நான்குடன் நான்கைப் பெருக்கினால் எவ்வளவு?’ என்கிற கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்தபோது ஸ்கேலால் கை விரல்களில் வாங்கிய அடியை சதீஷால் இன்றும் மறக்க முடியாது. சதீஷுக்கு தர்மன் என்றுமே ஒரு கொடுமைக்காரத் தந்தைதான்.

“ஸ்கூல்லதான் டீச்சர்ஸ் அடிக்கிறாங்கன்னா வீட்லேயும் அவர்கிட்ட அடி வாங்கணுமா?” என அம்மாவிடம் புலம்பி அழுவான். 

“நீ நல்லா படிக்கணும்னுதானே அப்பா அடிக்கிறாரு” என்பாள் அம்மா.

சதீஷ் சமாதானமடைய மாட்டான். அவன் வெறும் படிப்புக்காக மட்டும் உதை வாங்கியதில்லை. பத்தாம் வகுப்பு இறுதி நாளில் வெள்ளை சட்டையை இங்க் கறையாக்கி வந்ததற்காக சதீஷை விரட்டி விரட்டி அடித்தார் தர்மன். ஒருமுறை பள்ளி முடிந்து இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததற்காகவும், புதுப் பேனாவைத் தொலைத்ததற்காகவும் துடைப்பத்தால் அடித்து மிதித்திருக்கிறார். இவை எல்லாம் தர்மன் போதையிலிருந்தபோது நடந்ததால் அடுத்த நாளே முழு முற்றாக மறந்துவிடுவார்.

இந்தியா மேலும் ஒரு விக்கெட்டை இழந்ததும், “ஐபிஎல்னா மட்டும் காசை வாங்கிட்டு ஆடுவானுங்க பொறம்போக்குங்க” என்று கடுப்பில் முணுமுணுத்தார். அந்நேரத்தில் தர்மனின் மூத்த பேரன் மேலே இருந்த அவரது அறைக்கு வந்தான். 

“இன்னாடீ பஜ்ஜு தூங்கலையா நீ?” என்றார் போதை மொழியில்.

“தூக்கம் வரல”

“சனிக்கிழமைகூட ஸ்கூலா இப்போலாம்”

“தாத்தா… இதோட ஃபோர் டேஸ் லீவு”

“அப்படியா? சரி கீழ போய் படு கொஞ்ச நேரம். சாயங்காலம் தாத்தா டோனட் கேக் வாங்கித் தரேன்”

“எங்க வீட்ல யாருமே இல்ல” என்று சொல்லியபடி தொலைக்காட்சி ரிமோட்டை எடுத்து யூடியூப் வைத்தான்.

பேரனுக்கு எந்நேரமும் ஸ்பைடர்மேன்தான். அது இல்லாமல் ஒரு வாய் சோறுகூட உள்ளிறங்காது. தர்மனுக்கு எப்படிக் குடியோ அது போல் பேரனுக்கு ஸ்பைடர்மேன். சொல்லப்போனால் தர்மனைவிட மோசம். கொரோனா ஊரடங்கு சமயத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த போதெல்லாம் தர்மன் ஒரு சொட்டு மதுகூட அருந்தவில்லை. நூற்று ஐம்பது ரூபாய் மதிப்புள்ள ஓல்ட் மங்க் குவாட்டர் அப்போது ஐந்நூறு ரூபாய்க்கு கறுப்புச் சந்தையில் கிடைத்தபோதிலும். அவர் குடியிலிருந்து விலகியிருந்ததைக் கண்டு ஒட்டுமொத்த குடும்பத்துக்கே ஆச்சரியமாய் போய்விட்டது.

“இவரால குடிக்காம இருக்க முடியும். இவராத்தான் வீம்புக்குன்னு குடிக்கிறாரு. ப்ளாக்ல கெடச்சும் காசு செலவு பண்ண மனசு வருதாப்பாரு உங்கப்பனுக்கு” எனப் பிள்ளையிடம் சொல்வாள் தர்மனின் மனைவி.

ஆனால் தர்மனின் மூத்த பேரனால் பூகம்பமே வந்தாலும் ஸ்பைடர்மேன் பார்க்காமல் இருக்க முடியாது. மார்வெல் தயாரிப்பிலிருந்து ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிவிட்டால் போதும். போய் பார்த்தே ஆக வேண்டுமென சதீஷைப் பாடாய்ப்படுத்திவிடுவான். சதீஷின் இளைய மகனுக்கு ஒன்றரை வயதிருக்கும். அவனுக்கு கார் என்றால் கொள்ளை பிரியம். மூத்தவனுக்கு காரே ஆகாது. தலை கிறுகிறுவென சுற்ற ஆரம்பித்துவிடும். மார்வெல் படத்துக்கு அழைத்துச் செல்ல அடம்பிடிப்பதோடு சேர்த்து, “கார் வேணாம். பைக்ல கூட்டிட்டுப்போ” என உயிர் எடுப்பான். 

“எங்கடா போயிருக்காங்க உங்க வீட்ல” என தர்மன் கேட்டார்.

“கடைக்குப் போயிருக்காங்க”

“நீயும் போக வேண்டியத்தானே”

“அவங்கலாம் கார்ல போயிருக்காங்க. எனக்கு கார்னாலே புடிக்காடு” எனச் சொல்லி ஸ்பைடர்மேனை ஓடவிட்டான்.

தர்மன் சதீஷைத் தொடர்புகொண்டு விசாரித்தார். மளிகை சாமான் வாங்க கோயம்பேடு வரை போயிருப்பதாகவும், பேரனைப் பார்த்துக்கொள்ளும்படியும் சொன்னான் சதீஷ். தந்தையிடம் தேவைக்கு மீறி ஒரு வார்த்தை பேசியதில்லை அவன். என்னவென்றால் என்ன என்கிற அளவில் மட்டுமே இருந்தது அப்பனுடனான உறவு.

பேரனைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் தர்மனால் அன்று மதியம் உறங்கவும் முடியவில்லை. “உங்கப்பாம்மா எப்போடா வருவாங்க” எனப் பேரனை நச்சரித்துக்கொண்டே இருந்தார். சதீஷும் அவன் மனைவியும் எடுத்த காரியத்தை உடனடியாக முடித்துவிட்டு வரமாட்டார்கள். பருப்பு வாங்குவதாய் இருந்தால்கூட இரண்டு மூன்று கடைகள் ஏறி இறங்கி விலை ஒப்பிட்டுத்தான் வாங்குவார்கள். 

என்ன செய்வதெனத் தெரியாமல் மனைவிக்குத் தொலைப்பேசியில் அழைத்துப் பேசினார் தர்மன். சதீஷும் மருமகளும் அங்காடிக்குப் போயிருக்கும் விஷயத்தைச் சொன்னார்.

“பாப்பா வீட்லதான் இருக்கானா? நீங்கபாட்டுக்கு தூங்க போயிடாதீங்க. அவன் போரடிக்குதுன்னு ஃப்ரிட்ஜ்ல இருக்கிற முந்திரிப்பருப்பெல்லாம் தின்னு காலி பண்ணிடுவான். பார்த்துக்கோங்க அவனை” எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள். தர்மனால் கிரிக்கெட் போட்டியும் பார்க்க முடியவில்லை, நிம்மதியாய் உறங்கவும் முடியவில்லை. பேரனிடம் ரிமோட் வாங்குவது தாத்தாக்களுக்கு என்றுமே பெரும்பாடு.

மணி இரவு எட்டு ஆகியிருந்தது. கடாயில் வெந்தது போல் கடுகடுப்பாய் இருந்த தர்மன், உள்ளுக்குள் மகனையும் மருமகளையும் திட்டிக்கொண்டே இருந்தார். வாசலில் கார் வரும் சத்தம் கேட்டதும்தான் அவரின் இறுக்கங்கள் தளர்ந்தன. “ஹேய் உங்கப்பாம்மா வந்துட்டாங்க பாரு. கிளம்பு” எனப் பேரனை விரட்டிவிட்டு போட்டியைக் காண ஆரம்பித்தார். அவர் போட்டியைக் காணத் தவறிய இடைவெளியில் இந்தியா ஓரளவு நன்றாகவே விளையாடியிருந்தது. சிறிது நேரத்தில் சதீஷ் தன் கைப்பேசி சார்ஜர் எடுப்பதற்காக மேலே தர்மனின் அறைக்கு வந்தான்.

“ஏண்டா சதீஷு. போனீங்களா வந்தீங்களான்னு இருக்க மாட்டீங்களா? அஞ்சு மணி நேரமாவா மளிகை சாமான் வாங்குவீங்க?” என ஆரம்பித்தார்.

“நான் சொல்லிட்டுத்தானே போனேன். லேட் ஆகும்னு”

“உனக்கு லேட் ஆகும்னா என் நிம்மதியா ஏண்டா கெடுக்கிற?”

“என்ன கெடுத்தாங்க இப்போ?”

“உன் புள்ளையை ஏன் இங்க விட்டுட்டுப் போற? கூட்டுட்டுப் போ அவனை”

“அவன் கார்னு சொன்னாலே மயக்கம் வருதுன்னு அழுறான். நான் என்ன பண்ண முடியும்?” - சதீஷின் குரல் சற்று உயர்ந்தது.

“என்ன பண்றதுன்னா? ஓத்தா ரெண்டு தட்டு தட்டி கூட்டிட்டுப் போடா. அதுக்கு வக்கில்லையா உனக்கு?” என தர்மனின் குரல் ஓங்கியது.

“அவனுக்குப் பிடிக்கலைன்னா விட்டுடேன்”

“நாங்கெல்லாம் அப்படியா விட்டோம். எங்கே போனாலும் உன்ன இட்டுனு போகல? நீயும் உன் பொண்டாட்டியும் இன்னும் லவ்வர்ஸா என்ன? தனியா போய் கொஞ்சிக் கொலாவிக்கிறத்துக்கு? நானும் என் பொண்டாட்டியும் உன்னை அப்படி எங்கேயாவது விட்டுட்டு போயிருக்கோமா சொல்லு?” 

“உனக்கு விட்டுட்டு போக ஆள் இல்லை, எனக்கு ஆள் இருக்கு. கஷ்டமா இருந்தா சொல்லு, மாமியார் வீட்ல விட்டு்க்கிறேன்” என்றான் சதீஷ்.

“அப்போகூட அவனை இட்டுனு போக மனசு வராதுல உனக்கு?”

“அவனுக்கு கார் புடிக்கலைன்னா நான் என்னப்பா பண்றது?” எனக் கத்தினான் சதீஷ்.

“தவடைலயே ரெண்டு போட்டா வரப்போறான்”

“என்னால அடிக்க முடியாது. எனக்கு அதுக்கு வக்கில்லைன்னே வெச்சுக்கோயேன். எங்கப்பா என்னை அடிச்சு வளர்த்தாரு, எனக்கு அதோட வலி இருக்கு. என்னால அந்த வலியை என் புள்ளைக்குக் கடத்த முடியாது. எங்கப்பா வேற நான் வேற. என் புள்ள உன்னை நிம்மதியா மேட்ச் பார்க்க விடல, தூங்க விடல, அவ்ளோதானே? இனி அவன் உன் முகத்துலயே முழிக்க மாட்டான். போதுமா? எங்களுக்கு ஒரு ஆறு மாசம் டைம் கொடு. எங்கேயாவது தனிக்குடித்தனம் போய்க்குறோம். நாங்க யாரும் உனக்கு பாரமா இருக்க மாட்டோம்” 

“டேய் சூத்த மூட்றா. பெரிய மயிறு மாதிரி பேசுறே. ஓத்தா யார்ரா நீயி? ஆஃப்ட்ரால் என் விந்து” என தர்மன் அழுத்தமாகச் சொன்னதும் சதீஷ் வேகவேகமாக அறையைவிட்டு வெளியேறினான். போகும் முன் வாசற்கதவை ஓங்கியடித்து மூடினான். 

முப்பதாண்டுக் கால திருமண வாழ்க்கையில் முதன்முறையாக மனம் தேம்பி கண்ணீர் விட்டு அழுதார் தர்மன். எரிமலை வெடிப்பும் பனிச்சரிவும் சேர்ந்து நிகழ்ந்தது போல் அவரது உள்ளம் குழைந்தது. தான் அடித்து வளர்த்ததை மகன் தவறாகப் புரிந்துகொண்டதை எண்ணி வருந்தினார். சதீஷ் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் தர்மனைச் சுட்டன. தழலாய் கொதிக்கும் அவரின் உள்ளக் கூப்பாடுகளை நீராய் அணைப்பது அவரின் பேரன்கள்தான். அவர்களை அள்ளியணைத்துக் கொஞ்சாமல் ஒதுங்கியிருப்பதை தர்மனால் கற்பனையே செய்யவே முடியவில்லை. மட்டுமின்றி, மகன் தன் கண் பார்வையில் நன்றாக வாழ்வதைத் தான் என்றோ செய்த புண்ணியமாய் எண்ணி இன்புறுகிறார். கடைசிக் காலத்தில் ஒவ்வொன்றாக தன்னைவிட்டுப் பிரிவதாக எண்ணி வேதனையடைந்தார். 

ஆனால் அவர் பயந்தது போல் அடுத்த நாள் ஒன்றும் நடந்துவிடவில்லை. பேரன்கள் ஆசையாசையாய் வந்து தாத்தாவை அணைத்துக்கொண்டனர். போன உயிர் வந்துவிட்டது போல் தர்மன் ஆசுவாசமடைந்தார். இருந்தாலும் அன்றைய சம்பவத்தால் தர்மன் கடும் துயரத்துக்குள்ளானார். கோயில் பயணத்திலிருந்து திரும்பிய மனைவிக்கு தர்மனை அப்படிப் பார்க்க மனமே இல்லை. ஒருபோதும் அவர் தன் கணவனை இவ்வளவு மனமுடைந்து கண்டதில்லை.

“சரி விடுங்க. நம்ம புள்ளதானே, ஏதோ கோவத்துல பேசிட்டான். நீங்களும்தான் குடிச்சுட்டு கண்டதையும் உளறி வெக்குறீங்க. இத்தனை வருஷமா நாங்க எதையாவது மனசுல வெச்சுட்டு இருக்கோமா என்ன?”

“நீ வேறடீ. அவன் பேசினதிலேயெல்லாம் எனக்கு வருத்தமில்லை” எனச் சொல்லி ஆழ்ந்து யோசித்துக்கொண்டே குடித்தார்.

“வேற என்னவாம்?” என மனைவி கேட்டதும் தர்மன் மௌனம் காத்தார். இந்தளவுக்கு அவர் யோசனைகளால் ஆட்கொள்ளப்பட்டதே இல்லை. 

வழக்கமாக குவாட்டரோடு நிறுத்திக்கொள்ளும் தர்மன், அன்று திகட்டத் திகட்டக் குடித்தார். நிற்க முடியாத போதை, தெளிவாய் உச்சரிக்க முடியாத குழறல், கண்ணெடுத்துப் பார்க்க முடியாத சோர்வு எனப் பிரக்ஞையே இல்லாமல் போனார். மனைவி கைதாங்கலாகக் கொண்டு போய் அவரைப் படுக்க வைத்தார். வார்த்தைக்கு வார்த்தை மனைவியின் பெயரைச் சொல்லிக் கூச்சலிட்டார்.

”அய்யய்யோ என்ன தாத்தா கத்துறது இங்கே கேக்குது” எனக் கீழ் வீட்டிலிருந்த பேரன் அப்பாவிடம் கிண்டலாய்ச் சொன்னான். 

சதீஷ் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு பிள்ளைகளை உறங்கச் செய்யத் தயார்ப்படுத்தினான். எல்லா விளக்குகளும் அணைக்கப்படும்போது வீட்டில் நிசப்தம் ஏற்றப்படுகிறது. தந்தையின் குறட்டை சத்தத்தையும் போதைக் கூச்சல்களையும் சதீஷால் ஓரளவு கேட்க முடிந்தது. இந்த மொடாக்குடிக்குத் தானும் ஒரு காரணம் என உணர்ந்த சதீஷ், தந்தை புலம்புவதைக் கூர்ந்து கேட்டான்.

“டேய் சதீஸே, அப்பன் அடிக்காத புள்ளைய ஊர் அடிக்குமுடா” என்கிற தர்மனின் புலம்பல் துல்லியமாக இவன் காதில் விழுந்தது. அன்றிரவு முழுவதும் உறங்காமல் அதையே யோசித்துக்கொண்டிருந்தான் சதீஷ்.

*



91 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post
bottom of page