சதீஷ் பிறந்தது முதலே அவனது அப்பா அவனைத் தூக்கிக் கொஞ்சியதுகூட இல்லை. முத்தமிட்டதுமில்லை; வளர்ந்ததும் அவனுக்குப் பிடித்த படிப்பைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதித்ததில்லை. ஆனால் காதல் தோல்விக்காகவும் கட்டாயக் கல்யாணத்தாலும் அவர்களது குடும்பத்தில் நிகழ்ந்த பல தற்கொலைகள் காரணமாக அதற்குப் பயந்து சதீஷை அவன் காதலித்த பெண்ணுடனே திருமணம் செய்து வைத்தனர்.
சதீஷ் பிறந்த போதெல்லாம் அவனுடைய தாத்தா ஊரின் தலைவராக இருந்தார். தாத்தாவுக்கு சதீஷ்மீது கொள்ளை பிரியம். சதீஷுக்குக் கமரக்கட்டு என்றால் அவ்வளவு இஷ்டம். அவனுக்குக் கமரக்கட்டு சாப்பிட வேண்டும் போலிருந்தால் தாத்தா முதுகிலிருக்கும் பெரிய மருவைத் தடவுவான். அவர் புரிந்துகொண்டு பேரனுக்கு ஒரு ரூபாயோ அல்லது இரண்டு ரூபாயோ கொடுப்பார். வாங்கிவிட்டு கடைக்கு ஓடும்போது, ”ஹே தொங்கனா கொடுக்கா. வண்டி வரப்போது மெதுவா போடா படவா” என்பார்.
இவன் பிறந்தபோதெல்லாம் குடும்பத்தில் அவ்வளவு வறுமை. இவனுக்குத் தம்பி பிறந்த பிறகும் வறுமை தீர்ந்தபாடில்லை. குழந்தையே வேண்டாமெனத் தாயார் திடமாக இருக்க, குடும்பத்தினர் அனைவரும் அவளை எதிர்த்தனர். யாருக்கும் மசியாத அவள், மாமனாரின் வார்த்தைகளுக்கு மட்டும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர்மேல் அவளுக்கு மிகுந்த மரியாதையும் பயமும் இருந்தது. இரண்டாவது குழந்தை பிறக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு அவர் மறைந்துவிட்டார். குழந்தைப் பிறந்ததும், ‘தனது தந்தையே பிறந்துள்ளார்’ என்ற நம்பிக்கையில் தர்மன் தன் பிள்ளைக்குத் ‘ததாகதன்’ எனும் தாத்தாவின் பெயரை வைக்க வேண்டுமென நினைத்து, ‘சித்தார்த்’ என்று பெயர் சூட்டினார். ஊராரால் மதிக்கப்பெற்றவனே பிறந்துவிட்டதால் சித்தார்த்துக்கு அளவு மீறிய செல்லமும் சுதந்திரமும் கிடைத்தது.
சதீஷ் பிறக்கும் முன்பிருந்தே தர்மனும், அவனுடைய மனைவியும் வேலைக்குச் சென்று குடும்பத்தை வழிநடத்தி வந்தனர். அதனால் சதீஷின் மாலைகள் தனிமையிலும் ஏக்கத்திலும் கழிந்தன.
சித்தார்த் பிறப்பதற்கு முன்பே தனக்கு வரப்போகிறவன் தம்பிதானென முடிவே செய்து, ப்ரோமான்ஸ்களைக் கற்பனை செய்யத் துவங்கிவிட்டான் சதீஷ். அப்பா தனக்குக் கொடுக்கத் தவறிய முத்தங்களையும், அன்பையும் தனது தம்பிக்குக் கொடுத்தான். பல நாட்கள் சித்தார்த்துக்கு பிஸ்கேட் ஊட்டியுள்ளான்; ஆய் கழுவி விட்டிருக்கிறான். கொஞ்சம் வளர்ந்தவுடன், இருவரும் கட்டிலில் WWE விளையாடினார்கள். தம்பியின் சந்தோஷத்திற்காகக் கொஞ்சம் அடிவாங்குவான். தன்னுடைய பலத்தைக் காண்பிக்க எப்போதாவது அடிப்பான். வலித்துவிட்டால் சித்தார்த், ”அம்மாஆஆஆ…” எனக் கத்தி அழுவான். ”டேய் டேய் ப்ளீஸ் அழாதடா. அம்மாகிட்ட மாட்டி விடாதடா” என்று கெஞ்சுவான். “இப்போ நீ மட்டும் அம்மாகிட்ட மாட்டிவிட்டனா அப்புறம் நீ பூஸ்ட் எடுத்துத் திண்ணனு நான் சொல்றுவேன்” என்று சதீஷ் மிரட்டியதும், சித்தார்த் அடங்கிவிடுவான்.
சதீஷ் நன்றாகக் கிரிக்கெட் விளையாடுபவன் என்பதால் தெருவிலிருக்கும் பெரிய அண்ணன்கள் அவனை விளையாட்டில் சேர்த்துக்கொள்வார்கள். சித்தார்த், தன்னையும் சேர்த்துக்கொள்ளுமாறு கேட்பான். சிறுவனின் குரல் ஒலிக்கும்போது பெரியவர்களின் செவிகள் கேளாமல் அடைத்துக்கொள்ளும். சித்தார்த் தன் வயதொத்தவர்களுடன் விளையாடச் செல்லும்போதும் ஒதுக்கப்பட்டான். அழுதுகொண்டே நேராக வீட்டிற்கு வந்து அண்ணனிடம் நடந்ததைச் சொல்வான். உடனே சதீஷ் மைதானத்திற்குச் சென்று, “ஏன்டா இவன சேத்துக்க மாட்றீங்க? ஸ்டம்ப் வேணும்னா மட்டும் வந்து கேக்கத் தெரிதுல?” என்று சத்தமிட்டான்.
“ஆள் கரக்டா இருக்குணா. அதான்..” என்று மழுப்பினர்.
“ஆள் கரக்டா இருந்தா எவனையாவது உக்கார வெய்யு, இல்லனா டபுல் சைடா போடு. ஒழுங்கா இவன சேத்துக்குறீங்க. இல்லனா குச்சியதான் ஸ்டம்பா நட்டு வெளாட வேண்டியிருக்கும்” என்றான் சதீஷ்.
தினமும் வீட்டின் சந்தில் அண்ணனும் தம்பியும் கிரிக்கெட் விளையாடுவார்கள். எப்போதுமே சித்தார்த் பௌலிங்தான் வீசுவான். கொஞ்சம் வளர்ந்த பிறகு, அவனுடைய பந்துவீச்சின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் சதீஷால் தனது தம்பியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து விளையாடக் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் போகப் போகக் கூர்ந்து நோக்கத் தொடங்கிய சதீஷ், சரியாக பந்து கையிலிருந்து வெளியாகும் நேரத்தில் பேட்டை விடத் தொடங்கினான். தொடர் பயிற்சிகளுக்குப் பிறகு வேகப்பந்தை எதிர்கொள்வது அவனுக்குக் கைவசமாகிவிட்டது. அண்ணனின் ஆட்டத்தைத் திணற வைக்க முடியாமல் போன சித்தார்த் பந்து வீசுவதற்கே சோர்வுற்றான். “ஏன்டா எப்போ பாத்தாலும் பேஸே போட்டுட்டிருக்க? டக்குன்னு ஒரு ஸ்லோ பால்தான் போடேன்! பேட்ஸ்மேன் கன்ஃப்யூஸ் ஆவான்ல!” என்றான் சதீஷ். ‘உண்மையான வேகப்பந்து வீச்சாளன் தனது வேகத்தால் மட்டுமே விக்கெட் எடுக்க வேண்டும். ஸ்லோ பால் என்பது கையாலாகாதவர்களுக்கான நுணுக்கம்’ எனச் சொல்லி அந்தப் பந்தை வீச மறுத்துவிட்டான் சித்தார்த்.
இவர்களுடைய வெளியுலகம் இவ்வளவு வியர்வையும், வெளிச்சமுமாக இருக்க, குடும்ப உறவு மட்டும் இருண்டிருந்தது. குடும்பத்திலுள்ள நால்வரும் ஒரே அறையில்தான் உறங்குவார்கள். அதனாலேயே சதீஷும் சித்தார்த்தும் தேவைக்கு மீறி எதையும் தனது பெற்றோரிடம் வாங்கித் தரச் சொல்லி கேட்பதில்லை. அந்த வயதில் சதீஷ் விரும்பி கேட்ட பொருளென்றால் கிரிக்கெட் மட்டையும் ஸ்டம்பும்தான். ஆனால் எல்லோரும் ஒரே அறையில் படுப்பதிலுள்ள பாதகம் என்னவென்பது அவர்களுக்குத்தான் தெரியும். மதுவடிமை தர்மனால் இவர்கள் பல இரவுகள் தூங்க முடியாமல் அழுதிருக்கிறார்கள். அம்மா கணவனின் ஆதிக்கத்தால் நசுக்கப்படுவதை இருட்டில் கேட்டு வளர்ந்தார்கள். ஓரிரவில் தம்பிக்கு மட்டும் கேட்கும் குரலில் சதீஷ் சொன்னான்: “உனக்குக் கல்யாணம் ஆச்சுனா நம்ம அப்பா மாதிரி இருக்கக்கூடாது. அம்மா பாவம்ல? அதான், நம்ம அம்மா மாரி நம்மளால ஒரு பொண்ணு கஷ்டப்படக்கூடாது. சரியா?”
இந்தச் சண்டை அடுத்த நாள் இரவுணவு வரையிலும் தொடர்ந்தது. சமையலில் இல்லாத குறைகளைக் கண்டு கொண்டிருந்தார் தர்மன். அம்மாவும் அப்பாவும் மாறி மாறிக் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தனர். சாப்பிட்டு முடிக்காத தட்டை எடுத்துக்கொண்டு சதீஷ் வாசலுக்கு வந்தான். அப்போதும் அவர்களுடைய இரைச்சல் சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது. சந்து வழியாக வீட்டின் பின்புறம் சென்ற சதீஷ், கழிவறைக்குள் அமர்ந்துகொண்டு இரவுணவைச் சாப்பிட்டான். போதையில் பெய்யப்பட்ட தர்மனின் மூத்திர துர்நாற்றம் நாசியை எட்டி, தாங்க முடியாத தொந்தரவை ஏற்படுத்தினாலும் பெற்றோரின் இரைச்சலுக்குக் கக்கூஸின் அமைதி எவ்வளவோ மேலாக இருந்தது.
அப்போது சதீஷ் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவனது தலையின் சுழியிருக்கும் பகுதியில் இரண்டு ரூபாய் சில்லறைக் காசு அளவில் வழுக்கை விழுந்திருந்தது. தர்மன், சதீஷுக்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனையில் மாலை அப்பாயின்மென்ட் வாங்கியிருந்தார். பள்ளி முடிந்ததும் பேருந்து பிடித்துக்கொண்டு போவதாகத் திட்டம். சதீஷ் படிக்கும் பள்ளியின் பேருந்து நிலையத்தில் தர்மன் காத்துக்கொண்டிருந்தார். சதீஷுக்கு அப்பாயின்மென்ட் நேரம் தெரியாததால் நண்பர்களுடன் கதை பேசிவிட்டு சாவகாசமாக வந்தான். தர்மனுக்குக் கோபம் தலைக்கேற, என்.எஸ்.கே நகர் பேருந்து நிறுத்தத்தில் எல்லோர் முன்னிலையிலும் சதீஷை அடித்தார். மனைவி, தர்மனைத் தடுக்க முற்பட்டாள். கன்னத்தில் கை வைத்தபடி, அந்தப் பேருந்து நிறுத்தத்திலிருந்த அனைவரது கருணை மிகு முகங்களையும் கண்டான் சதீஷ். இவனுடைய பள்ளியில் படிக்கும் பல இளம்பெண்கள், அவன் அடி வாங்கியதைப் பார்த்துப் பரிதாபப்பட்டனர். அந்தப் பரிதாபப் பார்வை அவனுக்குக் கை கொட்டிச் சிரிப்பதைவிட அவமானமாக இருந்தது. அண்ணனுக்கு நிகழ்ந்த அவமானத்தை தனக்கு நிகழ்ந்ததைப் போல் நினைத்து அழுதான் சித்தார்த்.
அவர்கள் நேரத்திற்குச் சென்று மருத்துவம் பார்த்துவிட்டுதான் வந்தார்கள். இரவுணவு இறங்கிய பிறகு தர்மனுக்குக் கோபம் கரைந்துவிட்டது. அவர் வழக்கம் போலச் சரக்கடித்துவிட்டு உறங்கினார். அன்றிரவு அப்பா தன்னை எந்த மாதிரியான விஷயத்திற்கெல்லாம் அடித்திருக்கிறார் என சதீஷ் தனது தம்பியிடம் பட்டியலிட்டுக்கொண்டிருந்தான்.
ஒன்பதாம் வகுப்பின் கடைசி நாளில் சட்டையில் இங்க் தெளிந்தபடி வந்ததற்கு, எட்டாம் வகுப்பில் புதிதாக வாங்கிய ஐந்து ரூபாய் பேனாவைத் தொலைத்ததற்கு, தன் கிரிக்கெட் மட்டையை நண்பன் வீட்டில் வைத்துவிட்டு வந்ததற்கு எனப் பட்டியல் நீண்டுகொண்டே போனது. தொலைந்துபோன பேனாவுக்குப் பதில் இன்னொரு புதிய பேனாவை வாங்கித் தந்திருந்தால் தனது வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்திருக்குமென சதீஷ் எண்ணினான். அந்த நாளைக்கூட சதீஷால் மறக்கவே முடியாது.
அன்று காலை எழுந்ததுமே பேனா தொலைந்துவிட்டது எனத் தெரிந்ததும், “உனக்கு இன்னிக்கி ஒருநாள் டைம். நீ ஸ்கூல்ல போய் எங்க தேடுவியோ யார்கிட்ட பிச்ச எடுப்பியோ தெரியாது. சாய்ங்காலம் வரச்சொல்ல பேனாவோட வர” என்று அப்பா மிரட்டியதும், சதீஷுக்குத் திடுக்கிட்டது. அன்று நாள் முழுவதும் பாடத்தைக் கவனிக்காமல் பயத்திலேயே இருந்தான். மதிய உணவு இடைவேளையில் எல்லோருடைய பைகளையும், ஜியாமெட்ரி பாக்ஸையும் சோதனையிட்டான். பி.இ.டி பீரியடின்போது யாருமற்ற வகுப்பில், தனது பேனாவைப் போலவே வேறொரு பேனா இருந்தால் திருடிவிடலாம் என்று நினைத்தான். அப்போதும் அவனுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை. முதன்முறையாகப் பள்ளியின் கடைசி மணி சத்தத்தைக் கேட்டு அச்சமுற்றான். பள்ளிக்கூடம், விட்டுப் பிரிய விருப்பமில்லாத தாத்தா வீடு போல் தோன்றியது. வீடு, நரக வாசலைப் போல் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தது.
“எங்க தேடியும் கெடைக்கலப்பா” என்றான். அன்று அம்மா வேலைக்குச் சென்றிருந்தாள்; சித்தார்த் பள்ளி விட்டு வரவில்லை. வீட்டின் கதவு சாத்தப்பட்டது.
அடுத்த நாள் காலை குளிக்கும்போது, டப்பிலிருந்த தனது துவைக்காத ட்ரௌசரை எடுத்துப் பார்த்தான். அதிலிருந்த தொலைந்த பேனா கிடைத்த மகிழ்ச்சி, அவனது காயங்களை ஆற்றின. அப்பாவிடம் சொல்லலாமென நினைத்தான். ஆனால் சொல்லவில்லை. ஏனெனில்,
சதீஷ் நான்காம் வகுப்பு படிக்கும்போது, கணக்குப் பாடத்தில் சென்டிமீட்டர் அளப்பதற்கு எல்லா மாணவர்களையும் பெரிய அளவு ஸ்கேலை வாங்கச் சொல்லியிருந்தார்கள். வகுப்பில் எல்லோரும் கண்ணாடி ஸ்கேல் வாங்க, தர்மன் மட்டும் சதீஷுக்கு இரும்பு ஸ்கேல் வாங்கித் தந்தார். அதை சக மாணவர்களிடம் காட்டி தனது குழந்தைத்தனமான தனித்துவத்தை நிரூபித்துக்கொண்டான்.
பொதுவாகவே மாணவர்கள், வகுப்புத் தேர்வுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகளில் மட்டும் பெற்றோரின் கையெழுத்து வாங்க வேண்டுமென்பதற்காகக் கவனம் செலுத்துவார்கள். எனவே அன்று நடந்த தேர்வில் பத்துக்கு நான்கு மதிப்பெண்ணையும், Poor-ஐயும் வாங்கி அந்தத் தாளை தன் பையில் கசக்கிப்போட்டான் சதீஷ். அப்பா அதைப் பார்த்துவிட்டு, “ஏன் என்கிட்ட சொல்றதில்ல? அப்போ எல்லா டெஸ்ட் பேப்பரும் குப்பத்தொட்டிலத்தான் போதுல?” என்று வெளுத்து வாங்கினார். தினமும் மாலை ஆறு மணி முதல் ஏழரை வரை வீட்டுப்பாடம் எழுதுவதும், ஏழரை முதல் ஒன்பது மணி வரை படிப்பதும் சதீஷின் வழக்கமாக இருந்தது. அன்று ஏழரை மணிக்குத் தர்மன் சதீஷைக் கணக்குப் பாடப் புத்தகத்தை எடுக்கச் சொல்லி அவனருகிலேயே உட்கார்ந்து சொல்லிக்கொடுத்தார். அவன் டேபுல்ஸைத் தவறாகச் சொல்லியதும் முறைத்துவிட்டு, “உனக்கு ஒரு ஸ்கேல் வாங்கி கொடுத்தனே, எடு” என்றார். சதீஷுக்கு வியர்த்துவிட்டது. அவன் டேபுல்ஸில் கொஞ்சம் அரைகுறை. 2,5,6,8 மற்றும் 9 ஆகிய டேபுல்ஸ் எல்லாம் அவனுக்கு மனப்பாடம். மற்றவை ஒப்பிக்கக் கொஞ்சம் நேரம் எடுக்கும். ‘3x5?’ என்று கேட்டால் முழிப்பான். அப்படியே மாற்றி ‘5x3?’ என்று கேட்பார் தர்மன். இன்னொரு கணக்கில், ‘7x9?’ என்றதற்கு சதீஷ் குழம்பிப்போக, ‘9x7?’ என்றதும் விடை அறிந்துகொண்டான். அடுத்த கணக்கில், ‘4x4?’ எனக் கேள்வி எழுந்தது. சதீஷ் யோசிக்க நேரம் எடுத்துக்கொண்டான். மீண்டும் மாற்றிக் கேட்கும் தொனியில், ‘4x4?’ என்றார். அப்போதும் விடை தெரியவில்லை. சதீஷ் பயத்துடன் மனதிற்குள், “4x1=1; 4x2= 5,6,7,8. 4x3…” என எண்ணிக் கொண்டிருக்கும்போது, இரும்பு ஸ்கேல் முனையால் அவனது விரல்களில் சடாரென்று அடி விழுந்தது. அது அவன் வயிற்றையும், மூலையின் ஏதோவொரு நரம்பையும் பிடித்து இழுத்தது போல் வலித்தது. வரவிருக்கும் அழுகை மூச்சுத் திணறலில் சிக்கிக்கொண்டது. தொடர்ந்து தனது தோள்பட்டையில் இன்னோர் அடி விழ, ஆழ்கடலில் யாரோ கழுத்தைப் பிடித்து மூழ்கடிப்பது போல் உணர்ந்தான். “ஏன்டா, அந்தப் பொறம்போக்குங்களோட சேர்ந்து கிரிக்கெட்லாம் வெளாட்றியே, நாலு ஃபோர் அடிச்சா எவ்ளோ ரன்னுனு கூடவா தெரியாது?” என்றார் தர்மன். ஒரு வழியாக சரியான விடையைச் சொன்னான் சதீஷ். “ஹ்ம்ம், ஃபோர் ஃபோர்ஸ் ஆர் என்னது? 16. இனி ஃபோர் ஃபோர்ஸ் ஆர் என்னது யாராவது கேட்டா இந்த அடி ஞாபகம் வந்து 16ன்னு சொல்லனும்” என்றார். மணி ஒன்பது ஆகியிருக்கும் எனக் கணித்து சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். “அங்க என்ன பாக்குற? பதினோரு மணியானாலும் இந்த சம்மெல்லாம் முடிச்சுட்டுத்தான் நீ சாப்புட்ற” என்றார். பத்தே காலுக்கு அன்றைய பாடம் முடிந்தது. அடுத்த நாள் தமிழ்ப் பாடத்தில் ‘ஓ’ எழுதத் தெரியாததற்கு சில அடிகளை வாங்கினான். அடுத்த வாரம் நடந்த அரையாண்டு தேர்வில் வந்த ‘4x4’ கணக்குக்கு விடை தெரிந்திருந்தாலும் அதனைச் சாய்சில் விட்டான். ஒரு வாரம் கழித்து பரீட்சைத் தாள்கள் கொடுக்கப்பட்டன. வீட்டிற்குச் சென்றதும் தனது கணக்குப் பரீட்சைத் தாளைக் காண்பித்து, “ப்பா. நா மேத்ஸ்ல 99 மார்க்ஸ் வாங்கிருக்கேன். தோ பாருப்பா, கை எப்டி வீங்கிர்க்குன்னு. நீ மட்டும் அடிக்காம சொல்லிக் குடுத்துர்ந்தா 100 வாங்கிர்ப்பேனாம். மீனாட்சி மிஸ் சொன்னாங்க”
இதையெல்லாம் அண்ணனிடமிருந்து கேட்ட சித்தார்த்துக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘அப்பா தனக்கு மட்டும் இவ்வளவு சலுகைகளை வழங்கிவிட்டு அண்ணன்மீது வன்முறையைச் செலுத்துவதற்கானக் காரணம் என்ன? குடும்பத்தலைவனால் நேசிக்கப்படுவதால்தான் தனக்கு இந்தச் செல்லமும் சலுகையும் கிடைத்துள்ளது என்பதை எண்ணி அவன் வெட்கப்பட்டான். குடும்பத்தினர் மீதிருக்கும் அதிகார உணர்வும், வன்முறை குணமும் அப்பாவுக்குப் பதில் அம்மாவிடம் இருந்தாலோ அல்லது நான் அம்மாவால் நேசிக்கப்பட்டு, அண்ணன் அப்பாவால் நேசிக்கப்பட்டிருந்தாலோ அல்லது அண்ணனுக்கு முன் நான் பிறந்திருந்தாலோ அவனுக்குப் பதில் நான் இரையாகியிருப்பேன்’ என்ற தீர்மானத்திற்கு வந்ததிலிருந்து தனது தந்தைமீதும், குடும்ப வன்முறையை அனுமதிக்கும் சமூகத்தின்மீதும், சட்டத்தின்மீதும் மற்றும் குடும்ப அமைப்பு முறைமீதும் சித்தார்த் வெறுப்புணர்வு கொண்டான்.
சில ஆண்டுகள் கழித்து அவனுக்கும் கல்யாணம் நடந்தது; குழந்தைகள் பிறந்தன. பிள்ளைகள் அவனை, ‘அப்பா’ என்று அழைக்கும்போதெல்லாம் அவன் தன்னையே வெறுத்தான். இது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. அதீதமாக நேசிக்கும் தனது மகளை அவன் உள்ளுக்குள் வெறுக்கவும் செய்தான். தன் வன்ம உணர்வுகளுக்குப் போக்கிட வெளியாகக் கொண்டுள்ள தனது மகனை அவன் நேசிக்காமலும் இல்லை.
Comentarios