பதட்டமாய் காணப்பட்ட ஷ்ருதி, அன்று விரைவாகவே கல்லூரிக்கு வந்திருந்தாள். எந்நேரமும் இன்ஸ்டாகிராமிலிருக்கும் தன் தோழியுடன் இருந்த அவள், என்ன பேசுவதெனத் தெரியாமல் மோதிரம் மின்னும் தனது விரல்களைக் கித்தார் வாசிப்பது போலத் தடவினாள். தன்னைத் தானே கிள்ளிக்கொண்டாள். ராமுக்காக நெடுநேரம் காத்திருக்க நேர்ந்தால் அப்படிச் செய்வது வழக்கம். ஒரு மணி நேரத்திற்கு முன்பே வகுப்புக்கு வந்துவிட்டு, அவன் மீது பழி சுமத்துவதில் நியாயமில்லைதான். இருந்தாலும் அவளது சொல்லுக்குக் கட்டுப்படாமலிருந்த அவனைத் தற்காலிகமாக வெறுத்தாள். எவ்வளவு தற்காலிகம் என்றால், அவன் வரும் வரை.
ராம் வந்ததும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. பேகைக் கழட்டியபடி உள்ளே வந்த அவன், ஷ்ருதியின் தோழியைக் கண்டு கொஞ்சம் கடுப்பானான். அவர்களின் உறவில் தோழி ஒரு புறாவாகச் செயல்படுவதை அருவருத்தான். குறுந்தொகை பாடங்களில்கூட ஆர்வமில்லாதவன் அவன். ஷ்ருதியுடனான முதல் டேட்டில் தோழி, உடன் வந்திருந்தபோதே அவனுக்கு வெறுப்புணர்வு வந்துவிட்டிருந்தது. அப்போதே ஷ்ருதி ரெட் ஃப்ளாக்-ஆக இருப்பாளோ என அஞ்சினான். ஆனால் அவளது பெண்மை குணம், ராமை வாட்டியெடுத்தது. ஷ்ருதியின் சிறு தவறுகளைக்கூட மன்னிக்கச் செய்தது. சிகப்புக் கொடிகள் எவ்வளவு அதிகரித்தாலும் ஷ்ருதியைப் போன்ற எழிலுக்கு முன் ராம் போன்ற ஆண்கள் மண்டியிட்டுத்தானே ஆக வேண்டும். ராம் முழுப் பலம் கொண்டவன் இல்லையென்றாலும் அரை பலம் கொண்டவன், முழுப் பலம் கொண்டவர்கள் போல் முட்டாள் இல்லை; ராமுக்கு மூளை கொஞ்சம் வேலை செய்யும். ஷ்ருதியைத் தொடர்ந்து டேட் செய்தான். வெறும் டேட்டிங்; காதல் இல்லை.
இதை ஷ்ருதியிடம் நேரடியாகச் சொல்வதற்குத் தயங்கினான். தனது சிறு சொல்கூட பேரழகியைக் காயப்படுத்திவிடக்கூடாது என்று எண்ணும் சிம்ப் ஆண் அவன். யார் செய்த அதிர்ஷ்டமோ! ஷ்ருதியாகவே அதைச் சொன்னாள் : “எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. But I think it’s too soon to get into a relationship. Shall we date? இன்னும் கொஞ்ச நாளைக்கு?”
அடடா! இரண்டாவது டேட்! க்ரீன் ஃப்ளாக்!
“நானும் அதேதான் சொல்லலாம்னு நினைச்சேன். என்ன ஒரு வேவ்லெந்த்!” என்றான்.
ராம் ஷ்ருதியின் இறுக்கமான முகத்தைக் கண்டு, “என்னாச்சு?” என்றான்.
“என்ன ஒருத்தன் ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டே இருக்கான். கேன்டீன்ல, பஸ்லலாம் ஸ்டாக் பண்றான். முக்கியமா நீ இல்லாதப்போ!” என்றாள் ஷ்ருதி.
“So?” என்றான் ராம். தோழி ஒருகணம் ராமைப் பார்த்தாள். தமிழ் சினிமாவில் இடம்பெறும் ஸ்டாக்கிங் பற்றி விமர்சித்துக் கடந்த வாரம் ராம் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த ரைட்டப்பை நினைத்து ஏளனமாகச் சிரித்தாள்.
“நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீ Soங்கிற!”
“இப்போ என்ன? நான் அவனை என்னன்னு கேட்கணும். அவ்வளவுதானே?” என்று சோர்வடைந்த குரலில் கேட்டான்.
“ஆமா” - இது தோழி.
“அதைக் கேட்க நான் யாரு? We’re Just Dating, right?” என்று ராம் சொன்னதும் இப்போது ஷ்ருதியே ஏளனமாகப் பார்த்தாள். ‘சபாஷ்டா பும்ட’ என்று ‘டான்’ படத்தில் சமுத்திரக்கனி கைதட்டும் டெம்ப்ளேட் அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது. இருந்தாலும் சிரிக்கக்கூடிய நிலைமையில் அவள் இல்லை.
“டேய்! போய் கேளுடா” என்று தோழி உசுப்பேத்திவிட்டாள். இதுதான் ராமுக்குப் பிடிக்காதது. ஷ்ருதி சொல்ல நினைப்பவற்றைத் தான் மட்டுமே சொல்லாமல் தோழியையும் சேர்த்துக்கொள்வாள். இரு பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் போனால் ஒருவனது ஆண்மை கேள்விக்குறியாகும் என்ற உளவியல் இருவருக்குமே தெரிந்திருந்தது. அந்தப் படிப்பைத்தான் அவர்கள் படித்து வந்தனர்.
ராம் தமிழ் சினிமா ஹீரோ போல மாஸாக ஸ்லோ மோஷனில் சென்றான். ரொம்ப நேரம் ஸ்லோ மோஷனிலேயே சென்றுகொண்டிருந்ததால் ஷ்ருதிக்குக் கடுப்பாகிவிட்டது. “சீக்கிரம் போலாமா? அட்டெண்டென்ஸ் போயிடப்போகுது” என்றாள். ஷ்ருதிக்கு போர் அடிக்கிறதெனப் புரிந்துகொண்ட ராம், உடனே ஸ்பாட்டிஃபையிலிருந்து ஒரு மாஸான தீம் ம்யூசிக்கை ஓடவிட்டான். இப்போது கொஞ்சம் தேவலாம்.
அதன்பிறகு நீண்ட தூரம் வேகமாகவும் ஒன்றிரண்டு அடிகள் ஸ்லோ மோஷனிலும் சென்றான். பிற மாணவர்கள் இந்தக் காட்சியைக் காணும்போது சண்டைக்கான அறிகுறியை யூகித்துவிட்டனர். யூகித்த மறுகணமே கண்டுகொள்ளாமல் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர். அவன் அவனுக்கு எவ்வளவு ப்ராஜெக்ட், டெஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்ப்பார்களா அல்லது சண்டையை வேடிக்கை பார்ப்பார்களா?
இன்னமும் ராம் நடந்துகொண்டே இருந்தான். ஷ்ருதிக்குத் தன்னைத் தொந்தரவு செய்தவன் எந்த வகுப்பெனத் தெரியாததால் ராம் அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இது தெரிந்திருந்தால் முன்பே ஸ்லோமோவை வெட்டியெடுத்திருக்கலாம்.
ஒருவழியாக ராம் அந்த மிருகத்தைக் கண்டுபிடித்துவிட்டான். ஒரு முக்கியமான குறியீட்டைச் சொல்ல மறந்துவிட்டேன். ராம் வெள்ளை சட்டை அணிந்திருந்தான்; ஷ்ருதியைப் பின்தொடர்ந்த அரக்கக் குணம் படைத்தவன் கறுப்பு சட்டை அணிந்திருந்தான். கறுப்பு சட்டை அணிந்திருந்தாலும் கையில் ஒரு வெள்ளைக் கட்டுக் கட்டியிருந்தான். அதில் குருதி வழிகிறதா என அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தான். இதைக் கண்டுகொண்ட ராம், அவனிடம் பேச எத்தனித்தான். வந்து நின்று ஒரு வார்த்தை சொல்வதற்கு முன்பே அந்த மிருகத்தின் நண்பர்கள் சூழந்துவிட்டனர். நிறையப் பேர் அல்ல, ஐந்து மிருகங்கள் இருக்கக்கூடும். ராம் அந்த மிருகத்தின் ஐடி கார்டை தூக்கிப் பெயரைப் பார்த்தான். வெள்ளை சட்டை அணிந்திருப்பவனின் பெயர் ராம் என்றால் கறுப்பு சட்டை அணிந்திருப்பவனின் பெயர் அதுவாகத்தானே இருக்க வேண்டும். அதேதான்!
“ராவணா, இவ பேரு ஷ்ருதி. நீ பண்றது இவளுக்கு சுத்தமா புடிக்கலா. நான் சண்டை போட வரல”
“வார்ன் பண்ணிட்டுப் போலாம்னு வந்திருக்க?!” என்றான் ராவணன்.
நிற்க! பெண்ணுக்கு மட்டும் ஏன் ஷ்ருதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என இப்போது நீங்கள் நினைக்கலாம். அவளுடைய உண்மையான பெயர் சீதாதான் என்று சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை. முன்னாள் காதலன், ப்ரேக் அப் செய்த பிறகு ‘வல்லவன்’ சிம்பு சொன்ன பிரபலமான வசனத்தை டிக்டாக் செய்து பதிவிட்டதாலும், அந்த டிக்டாக் அதிக லைக்ஸ் பெற்றுவிட்டதாலும்தான் ஷ்ருதி தனது பெயரை மாற்றிக்கொண்டாள் என்று சொன்னாலும் நம்பப்போவதில்லை. போகட்டும்!
“இல்ல, ஜஸ்ட் சொல்லிட்டுப் போலாம்னு வந்திருக்கேன்” என்றான் ராம்.
“சொல்லிட்டல்ல, கிளம்பு” என்றான் ராவணன்.
ராமும் ஷ்ருதியும் புறப்படத் தயாரானார்கள். ‘அடங்கோ! என்னடா கிளம்புன்னதும் கிளம்புற’ என்று நினைத்துக்கொண்ட ராவணன், நிறுத்தும் விதமாக “சரி.. இதையெல்லாம் சொல்ல நீ யாரு?” என்றான். ராவணன் சண்டைக்காகக் காத்திருப்பவன். அவனுக்கு வெள்ளைக் கொடியெல்லாம் பிடிக்காது.
”இவளோட லவ்வர்” என்று ஷ்ருதியைச் சுட்டிக்காட்டிச் சொன்னான் ராம். ‘அப்படியா?’ எனக் கண் பார்வையிலேயே கேட்டான் ராவணன். அந்தப் பார்வைக்குக் கட்டுப்படும் விதமாகக் குணிந்து தலையசைத்தாள். எல்லாம் சுமுகமாக முடிய ஷ்ருதி பொய் சொல்ல வேண்டியிருந்தது. சொல்லக்கூட வேண்டாம். மறுக்காமலிருந்தாலே போதும். ராவணன் விடுவதாய் இல்லை.
“சரி லவ்வரா இருந்தா என்ன? வெறும் லவ்வர்தானே” என்றான் ராவணன். நியாயமான பேச்சு என ஷ்ருதிக்குத் தோன்றியது. வெறும் காதலன்தானே? தந்தையா அல்லது கணவனா? இவன் சொன்னால் இன்னொரு ஆண் கேட்டுவிட வேண்டுமா? அடுத்து என்ன நடக்கப்போகிறதென ஷ்ருதிக்கு சுவாரசியமாக இருந்தது.
“வேணும்னா ரெண்டு பேரும் சிங்கிள்ஸ் போட்டுக்கோங்கோ. நீ ஜெய்ச்சிட்டா ராவணன் அந்தப் பொண்ணு பின்னாடி வர மாட்டான். ராவணன் ஜெய்ச்சிட்டா நீயும் அதே பண்றியா?” என்று கூட்டத்தில் ஒருவன் கேட்டான். அவனுக்குப் பெயர் இல்லை. சகுனி என்று வைத்துக்கொள்ளலாம். அவன் கேட்டது ராவணனுக்குப் பிடித்திருந்தது. ‘சண்டைக்கு ரெடியா?’ என்பது போல ராமைத் திரும்பிப் பார்த்தான். எந்த ஆணாலும் மறுக்கவே முடியாத கேள்வி அது. எல்லா விதிகளுக்கும் உட்பட்டு வன்முறையில் பங்கெடுத்தே ஆக வேண்டுமென்பது ஆண்களின் கொள்கை. அதில்தான் அவர்களின் ஆண்மையும் வீரமும் அடங்கியிருக்கிறது. நான்கு புத்தகங்களைப் படித்துவிட்டு தாக்குதல்களுக்கு எதிராகப் பேசுபவன் கோழை. ராம் உடனடியாக சிறிதும் யோசனையின்றி ஒப்புக்கொண்டான்.
“ஆனா சண்டை நியாயமா நடக்கணும். ஏன்னா நான் தனியா வந்திருக்கேன்” என்றான் ராம். ராவணன் சத்தியம் செய்தான்.
“Hey What? No!” என்றாள் ஷ்ருதி. ராம் தன் வாட்ச், ஐடி கார்ட், செயின் ஆகியவற்றைக் கழட்டி ஷ்ருதியிடம் கொடுத்தான். அப்போது ஷ்ருதி, “இது வேண்டாமே!” என்றாள்.
“நான் நிச்சயம் ஜெய்ப்பேன். என்னை நம்பு” என்றான் ராம்.
“நீ ஜெய்க்கிறது பத்தி இல்லை இது. எந்தப் பொண்ணு தனக்காக ரெண்டு பேரு அடிச்சிக்கிறதை விரும்புவா?”
ராமுக்கு அந்த வார்த்தைகள் காதில்கூட விழவில்லை. அவன் சண்டைக்குத் தயாரானான். வார்ம் அப் செய்யும் விதமாக தன் கழுத்தைத் திருப்பி நெட்டை உடைத்துக்கொண்டான். ஷ்ருதிக்கு இந்த சண்டையில் கொஞ்சமும் விருப்பமில்லை. அந்த இடத்திலிருந்து நூறு அடிகளாவது தள்ளிச் சென்று தனக்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லாதது போலக் கோபித்துக்கொண்டாள். தன் சொற்களை ராம் அவமதித்ததை ஷ்ருதியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
(இதற்கு மேல் இந்தக் கதையில் மூன்று சாத்தியங்கள் மட்டுமே உள.)
சாத்தியம் 1
இருவரும் நேருக்கு நேர் வந்து நின்றுகொண்டனர். ராவணனின் கைகளிலிருந்து ரத்தம் அதிகமாகச் சொட்ட ஆரம்பித்தது. ராமுக்கு அதைக் கண்டதும் கருணை ரசாயனம் சுரக்க ஆரம்பித்தது.
“ராவணா, உன் நல்லதுக்காக என் ஈகோவைவிட்டு ஒன்னு சொல்றேன். ஒடம்பப் பார்த்துக்கோ. இந்த சமயத்துல சண்டையெல்லாம் வேணாம். ஒரு பொண்ணுக்காக நம்ம ஏன் அடிச்சிக்கணும்? பாரு எவ்வளவு ரத்தம் வருது. ஏன் காலேஜ்லாம் வர? கொஞ்ச நாள் லீவ் போட்டு வீட்ல ரெஸ்ட் எடுக்கலாம்ல. ப்ளீடிங் ரொம்ப இருக்கும் போல. ஆப்பிள் நிறைய சாப்டு”
ராவணனுக்குக் கண்கள் கலங்கின. உடன் இருக்கும் எந்தத் தறுதலையும் ஆறுதலாக ஒரு வார்த்தைகூட கூறவில்லை.
“சாரி மச்சான். உன் ஆளு பின்னாடி சுத்தி... பசங்க வேற ஓவரா பேசிட்டானுங்க”
“அதெல்லாம் மனசுல வெச்சிக்கல ராவணா. பார்த்துக்கலாம் விடு. நான் கிளம்புறேன்” என்றான்.
தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஷ்ருதி ராம் தன்னை நோக்கி வருவதைக் கண்டுகொண்டாள். திரும்பிப் பார்த்தால் ராமுக்கு ராவணனும் அவனது நண்பர்களும் டாடா பாய்பாய் காண்பித்துக்கொண்டிருந்தனர்.
“ஹேய் வாடி போலாம். ப்ராப்லம் சால்வ்ட்” என்றான் ராம். ஷ்ருதிக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன?”
“பேசிட்டேன் டி. நம்ம பசங்க. தொந்தரவு பண்ண மாட்டாங்க”
“சண்டை போடலையா?” என்று கேட்டாள்.
“உன் பேச்சை மீறி என்னைக்காவது நடந்திருக்கேனா? அதான் கன்வின்ஸ் பண்ணிட்டேன்”
“டேய் பாடு! அவனுங்க என்னை வெச்சு ஏலம் போட்டிருக்காணுங்க. போய் நாலு அடி அடிச்சுட்டு வருவேன்னு பார்த்தா இப்படி கன்வின்ஸ் பண்ணிட்டு வந்து நிக்கிற. ஒரு பொண்ணுக்காக சண்டைகூடப் போட யோசிக்கிற நீ, நாளைக்கு எப்படி என்னை நல்லா பார்த்துப்ப!” என்று நறுக்கென்று நான்கு கேள்விகளைக் கேட்டுவிட்டு ராமை ப்ரேக்-அப் செய்துவிட்டுச் சென்றாள் ஷ்ருதி.
*
சாத்தியம் 2
இருவரும் நேருக்கு நேர் வந்து நின்றுகொண்டனர். ராவணன் முதலில் ராமைப் போட்டுப் பொலக்கத் தொடங்கினான். ராவணனை அடிப்பதற்கே ராம் தடுமாறினான். என்ன செய்வதெனத் தெரியாமல் ராம் ராவணனுக்கு அடிப்பட்ட இடத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். வலியில் துடித்துப்போனான் ராவணன். அவனது பலவீனத்தைக் கண்ட ராம், அதையே திரும்பத் திரும்பச் செய்து சண்டையில் முன்னிலை பெற்றான்.
கூட்டத்தில் ஒருவன் சண்டையின் விதியை மீறுவதற்காக முற்பட்டான். ஆனால் சகுனி முந்திச் சென்றவனைத் தடுத்து கடுமையாகக் கண்டனம் தெரிவித்தான். சத்தியத்திற்கு உண்மையாக இருக்க வேண்டுமென்பது அவர்களின் கொள்கை. அக்கொள்கையால் ராம் வெற்றி பெற்றான். ராவணன் சரணடைந்தான்.
ஷ்ருதியிடம் சென்று, தோள் மீது கை போட்டு ஓங்கி குரல் கொடுத்தான் ராம் : “ஹே, சண்டைல நான்தானே ஜெய்ச்சேன். இவ எனக்குத்தான். எனக்கு மட்டும்தான்” என்று கூச்சலிட்டான்.
ஷ்ருதியை அவனது கையைத் தட்டிவிட்டு, “அதைச் சொல்ல நீ யாரு?” என்றாள். ஒன்றும் புரியாமல் விழித்த ராமிடம், “நான் சொன்னதை எங்கேயாவது கேட்டியா? இப்போவே என் வார்த்தைக்குலாம் மதிப்பில்லன்னா பின்னாடி எப்படி…?” என்று தொடர்ந்தாள். பிறகு அங்கிருந்து புறப்பட்டாள்.
**
சாத்தியம் 3
இருவரும் நேருக்கு நேர் வந்து நின்றுகொண்டனர். ராம் அரை பலம் கொண்டவன் எனச் சொன்னேன். ராவணன் முழுப் பலம் கொண்டவன் என்பதைச் சொல்ல மறந்துவிட்டேன். அவனுடைய அப்பா ஷிவன் ஒரு பாடிபில்டர். ராவணனின் உடல்நலத்தைச் சந்தேகிக்க வேண்டுமா? ராமை எதிர்த்து போட்டியிடும் அவனுக்கு, ஒரு கை அடிப்பட்டிருந்தாலும் பரவாயில்லை. உடல் முழுவதும் பலத்தால் நிறைந்தவன் எப்படியாவது பிழைத்துக்கொள்வான். எதிரியை வீழ்த்திவிடுவான். ராவணன் அவ்வாறே செய்தான். ராமை வீழ்த்தினான்.
ஷ்ருதி என்ன ஆனாள்?
ராமும் ராவணனும் சண்டையிட்டதை ஓரக்கண்ணால் வேடிக்கை பார்த்தாள். ராம் கடுமையாகக் காயமடைந்தபோதும் அவள் உதவிக்குச் செல்லவில்லை. அவள் கண் முன்பே ராம், ராவணனிடம் வீழ்ந்தான். அன்றிலிருந்து ராவணன் ஷ்ருதியைப் பின்தொடரவில்லை. ஆனால் ஷ்ருதி ராவணனைப் பின்தொடர ஆரம்பித்தாள்.
***
Comentários