புத்த பிக்குகளுக்கான மாரத்தான் போட்டி ஒன்று உண்டு. அந்த மாரத்தானில் எதிராளி என எவருமில்லை. தன்னைத்தானே தோற்கடித்து வெற்றி பெறுவதே அப்போட்டியின் இலக்கு. போட்டியின் அடிப்படை விதிமுறையே நவீனக் காலத்தின் மிகப்பெரிய தத்துவத்தை வைக்கிறது. நமக்கு எதிரிகளென யாரும் வெளியில் இல்லை. இந்தப் போட்டியில் நிலைத்திருப்பதற்குத் தேவையான அடிப்படைத் தகுதி பொறுமையும் சகிப்புத்தன்மையும்.
ஹெய் மலையில் சுமார் 7 ஆண்டுகள் நடைபெறும் இந்த மாரத்தானில் 27,000 கிலோமீட்டர் அடிகள் நடந்தே சென்று இலக்கை அடைய வேண்டும். கிட்டத்தட்ட பூமியின் மொத்த தூரத்தைவிட அதிகம். அதுவும் எல்லோரும் உறங்கிய யாமத்தில் நடந்து சூரியன் உதிக்கும் பகற்பொழுதில் நடையை நிறுத்திக்கொள்ள வேண்டும். பிறகு அடுத்த இரவுக்கான நடைக்காகத் தயாராக வேண்டும். போட்டியாளனுக்குக் காலணி தயாரிக்கவும், உணவு சமைத்துக் கொடுப்பதற்கும் ஒரு குழுவே ஆதரித்துக்கொண்டிருக்கும். இந்த ஒழுக்கத்தை அவன் எங்காவது தவறினால் என்றால் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள வேண்டும்.
7 ஆண்டுகள் நடந்துவிட்டால் அத்துடன் மாரத்தான் முடிந்துவிடாது. அதன்பிறகு 12 சிறப்பு நாட்கள் இருக்கும். ஆனால் 7 ஆண்டுகள் இந்த ஒழுக்கம் கடைப்பிடித்தவர்களைப் பொதுமக்கள், கடவுள் போல் வணங்கி ஆசீர்வாதம் வாங்கிக்கொள்வார்கள். அவர்கள் ஒரு மனிதனைக் கடவுளாக வழிபடும் முறையிலும் தத்துவம் இருக்கிறது, பாருங்கள்! வாழ்க்கைமுறையில் ஒழுக்கம், சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியவற்றை வகித்துக்கொள்பவனையே அவர்கள் வணங்குகின்றனர். இந்தப் போட்டியை ஆரம்பிக்கும்போது, தங்களது உடலுக்கு நிகழப்போகும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மனதளவில் தயாராகிவிடுவார்கள். (சமீபத்தில் எனது தொண்டைப் பிரச்னை ஒன்றுக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அந்த டாக்டர் சொன்ன விஷயத்தை இவ்வரியில் நினைவுகொள்கிறேன் : “இது நோயெல்லாம் ஒன்றுமில்லை. இதற்கு மருத்துவமும் இல்லை. நம் உடல் இப்படித்தான் என்பதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறெந்த வழியுமில்லை)
இந்த மாரத்தானில் பங்குகொள்ளும் புத்த பிக்குகள் மட்டுமே விளையாட்டு வீரனைப் போல வேகமாகவும், அதேசமயம் ஆன்மீகவாதியைப் போல நிதானமாகவும் செயல்பட முடியும். இலக்கு முடிந்ததும் விரத நாட்கள் தொடங்கும். உணவு, தண்ணீர், உறக்கம், ஓய்வு என எல்லாவற்றையும் துறந்து 12 நாட்கள் புனிதத் தலத்தை வழிபட வேண்டும். உடல் தன்னிலிருந்து வெளியேறி வெறும் ஆன்மாவாக மட்டுமே உயிர்த்திருக்கும் வரத்தை அவன் அப்போது பெற்றிருப்பான். 12 நாட்கள் முடிந்ததும் விரதத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைக்கும் வழிமுறை மேற்கொள்ளப்படும். முதலில் சூப் அருந்துவதிலிருந்து துவங்கும். முழுமையான இலக்கு நிறைவடைந்ததும் அவன் ‘வாழும் புத்தன்’ என்று அழைக்கப்படுவான். இதுவரை 46 பிக்குகள் மட்டுமே அப்பெயரைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு அவனால் ஒரு சுடரின் நுணியைக்கூடி அவ்வளவு துல்லியமாக உணர முடியும். மேகங்கள் நகரும் வேகத்தையும் திசையையும் வைத்தே அன்றைய வானிலையை அவனால் கணிக்க முடியும்.
இந்த ஆவணப்படத்திலிருந்து நான் எடுத்துக்கொண்டது: ஞானம் என்பதை மனதைக் கட்டுப்படுத்துவதின்மூலம் அடையக்கூடியது. உடலைக் கட்டுப்படுத்துவதன் மூலமாக மனதை ஒடுக்கி அடையக்கூடிய ஒன்றாகும். இதுவரை நானறிந்த புத்த பிக்குகள் கதைகள் எதுவுமே உடலுழைப்பைப் பற்றிப் பேசியதே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் உடலுழைப்புக்காகவே ஒருவன் தனது வாழ்க்கையின் ஒரு பகுதியை வாழ்கிறான். (இந்த இடத்தில் ‘இழக்கிறான்’ என்று எழுதினால் அது தத்துவப் பிழை ஆகிவிடும்)
2022 தொடங்கியதும், ஏப்ரல் மாதத்திலிருந்து உடற்பயிற்சிக்கூடத்திற்குச் செல்லலாமெனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஒழுக்கத்தைத் தவறிய குற்றவுணர்வுடன் சேர்ந்து வாதைக்கு உள்ளாகிவிட்டேன். அதனால் உடனடியாக அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டிய அவசியமிருந்ததால் செகாவின் பிறந்தநாளன்று உடற்பயிற்சிக்கூடத்தில் இணைந்தேன். கடந்த வாரம் பருவ மாற்றத்தால் மீண்டும் வாதைக்கு உள்ளாக நேர்ந்தது. இந்த 50 நாட்களில் முதன்முறையாக ஒருவாரம் முழுவதும் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போய்விட்டது. உடலுழைப்பின் ஒழுக்கம் தவறிவிட்டதால் தியானத்தையும் தொடரமுடியவில்லை. உணவுப்பழக்கத்தை மட்டும் தவறாமல் தொடர்ந்தேன். ஆனால் இந்த ஒரு வாரத்தில் நான் 6 மாதங்களுக்கு முன்பு செய்த கிறுக்குத்தனங்கள் சிலவற்றைச் செய்ய நேர்ந்தது. உடல் வாதையில் சோர்ந்து படுத்திருந்தபோது சலிப்பு வந்து ஒட்டிக்கொண்டது. அதைப் போக்கிக்கொள்வதற்காக மனம் காமக் கதைகளை நாடியது. அதைப் படித்துக்கொண்டிருந்ததன் தொடர்ச்சியாக டெலகிராமில் ஸ்காண்டல்ஸ் காணொளிகள் சிலவற்றைப் பார்த்தேன். ஆனால் நல்லவேளையாக ஆபாசங்களை நினைவூட்டும் அக்காட்சிகளும் சப்தங்களும் இம்முறை எனக்கு அறுவறுப்பையே தந்தன. இருந்தாலும் அது ஒரு பழக்கமாக 3 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்துகொண்டிருந்தது. உடல் மீண்டும் குணமாகி உடற்பயிற்சி செய்யத் தொடங்கியதும்தான் ஒழுக்க கட்டமைப்புக்குள் வர முடிந்தது.
நான் உடற்பயிற்சிக்கூடத்திற்குச் சென்றதன் நோக்கமே கர மைதுன அடிமைத்தனத்திலிருந்து வெளி வருவதற்காகத்தான். ஆனால் உடற்பயிற்சி செய்யத் தொடங்கிய சில நாட்களில் எனது நோக்கமும், நான் ஆர்வம் காட்டும் விஷயங்களும் மாறிவிட்டன. என் உடலமைப்புகளில் சில முன்னேற்றத்தைக் காண முடிந்ததும் அதை மேலும் மெருகேற்றுவதிலேயே எனது முழுக் கவனமும் குவிந்திருந்தது. உடலமைப்புகள் முன்னேறினாலும் ஒரு மாதத்தில் உடல் எடை ஒரு கிலோ கூடக் கூடாததை எண்ணிக் கவலைப்பட்டேன். அதன்பிறகு இந்தக் காய்ச்சல் தொற்றிக்கொண்டது. காய்ச்சலுக்குப் பிறகு நடந்த அசிங்கங்களை வென்றுவிட்டு மீண்டும் உடற்பயிற்சிக்குச் சென்றதும் அதனால் ஏற்பட்ட வலிகள் அனைத்தும் அவ்வளவு இன்பமாக இருந்தது. அந்த அசிங்கமான எண்ணங்கள் எதுவும் ஒழுக்கக் கட்டமைப்புக்குள் வந்த பிறகு துளியும் இல்லை. எல்லோரும் உடலின் நன்மைக்காக மட்டுமே உடற்பயிற்சிக்கூடங்களுக்குச் செல்வதில்லை.
Comments