எனது அடுத்த நூலின் பணிகளைத் தொடங்குவதற்கான முழுமையான மனநிலையிலிருந்தாலும், அந்நூலிற்காக உடல் ரீதியாக என்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை எனக்கு நானே வகுத்துக்கொண்டேன். ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு ஒருவன் உடல்ரீதியாகத் தயாராவதைக் கேட்க விந்தையாக இருக்கலாம். ஆனால் கூர்மையான மனநிலை என்பது உடலால் அடையக்கூடியது என்ற நம்பிக்கையைக் கொண்டவன் நான். எனது உடலை நானே வதைத்துக்கொண்ட காலம் ஒன்றுண்டு. அந்த வதையின் தாக்கம் துளி கூட மிச்சமிருக்கக்கூடாது என்பதாலேயே இந்த இடைவெளியை எடுத்துக்கொண்டு என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறேன். என் உடல் மீது உரிமையின் பெயரில் சிறு அளவில் வன்முறை நிகழ்த்திய ஆட்களும் உள்ளனர். வார்த்தைகளால் அடி வாங்கியதை விட அது ஒன்றும் அவ்வளவு வலி மிக்கதாய் இல்லை. அவற்றிலிருந்தெல்லாம் வெளியேறி வந்து உடலைப் பேணிக் காப்பதைத் தியானத்தின் ஒரு பகுதியாய்க் கருதுபவன் நான்.
உண்மையில் இந்தத் தொகுப்பை வாங்குவதற்குக் காரணம் இதன் தலைப்பு மட்டுமே. அது பெண்ணின் உடல் மீதுள்ள ஈர்ப்பினாலோ அல்லது காமத்தை இலக்கியத்தின் வாயிலாக அறிந்துகொள்ளத் துடிக்கும் ஓர் இளைஞனின் வேட்கையினாலோ அல்ல. வாழ்வில் முதன்முறையாகக் கடந்த ஓராண்டாகவே எனது உடலுடன் அதிகம் உரையாடி வருகிறேன். கடந்த மூன்று மாதங்களாகத்தான் அது என்னிடம் திரும்பப் பேசுகிறது. நான் அதை நன்றாகப் பார்த்துக்கொள்ளத் தொடங்கியதிலிருந்து அது என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறது. இந்த உரையாடலின் காரணமாக எழுந்த ஆவலினாலேயே இத்தொகுப்பை வாங்கினேன்.
சமீபத்தில் தீனன் என்னிடம் பேசியபோது, ‘சிறுகதைத் தொகுப்புகளில் ஏன் அனைத்துக் கதைகளும் தலைப்புக்கு ஏற்றாற்போல் இல்லை? தொகுப்புக்கு ஏதோ பெயரிட வேண்டும் என்ற காரணத்தால் உள்ளே உள்ள சிறுகதைகளின் தலைப்பு ஒன்றை உருவி எடுத்து வைத்துவிடுவது போலிருக்கிறது. ‘அறம்’, ‘Men Without Women’ போன்ற சில தலைப்புகளே அதன் முழுத்தொகுப்பையும் நியாயப்படுத்துகின்றன’ என்றான். அவ்வரிசையில் ‘உடல்’ இணையும்.
பொதுவாகச் சிறுகதைகளின் தொடக்கங்களையும் முடிவுகளையும் முக்கியத்துவம் கொடுத்து கவனிப்பவன் நான். அவ்வகையில் அரிசங்கர் கதைகளின் முடிவுகள் என்னை ஈர்த்தன. குறிப்பாக ‘ஒலிக்குறிப்புகள்’ கதையின் முடிவு என்பது இலக்கியத்தில் மட்டுமே நிகழ்த்தக்கூடிய மேஜிக். நான் தீனனிடமும் சுப்புவிடமும் ஆடியோ ஃபில்ம் பத்தி நிறையப் பேசியிருக்கிறேன். சுப்புவுடன் அதுசார்ந்து பணியாற்றவும் செய்திருக்கிறேன். இக்கதை வாசித்துக்கொண்டிருக்கும்போது, இது ஒரு ஆடியோ ஃபில்ம்-க்கான Material என்று தோன்றியது. ஆனால் கதையின் முடிவு அந்த எண்ணத்தைப் போட்டுடைத்தது. இந்த ஒரு கதைக்காகவே தொகுப்பை வாசித்துப் பாருங்கள். இப்புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதை; மட்டுமல்லாமல் சமீபத்தில் நான் வாசித்த சிறந்த நவீன சிறுகதைகளில் ஒன்றாகும். இன்று அதிகாலை மூன்று மணிக்கு அக்கதையை வாசித்து முடித்ததும் அதன் முடிவு என்னைத் தூங்க விடாமல் செய்துவிட்டது என்று சொன்னால் அது மிகை; கதை வாசித்துவிட்டுப் பத்து நிமிடங்களில் உறங்கிவிட்டேன். என்ன செய்வது? உடல் தேவை.
‘காமுறுதல்’ கதைக்கு முன்பு எழுதப்பட்டிருந்த வாசகத்தைக் கதையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கலாமெனத் தோன்றியது. அந்த ஒரு வாசகமே கதையை எளிதாகக் கணிக்க வைத்துவிட்டது.
அலுவலகத்தில் நினைத்த நாளுக்கு விடுப்பு கிடைக்காததற்கே துவண்டுவிடும் தற்கால ஊழியர்களால் ‘மிக நீண்ட முடிவில்லாத முத்தம்’ கதையின் பெண்ணின் மனவோட்டத்தைப் புரிந்துகொண்டு தொடர்புப்படுத்திக்கொள்ளவும் முடியும். இவற்றைத் தவிர ‘உடல்’, ‘முகம்’ ஆகிய கதைகள் எனக்குப் பிடித்திருந்தன. நவீன சிறுகதைகள் மீது நாட்டம் கொண்டவர்கள் அவசியம் வாங்கி வாசியுங்கள்.
Comments