என்னிடம் விழாவொன்றில் இன்றைய தலைமுறையைப் பற்றி கேட்டபோது, “இந்த நூற்றாண்டில் வாழும் இந்த தலைமுறையை இனி ஆக்கிரமித்து அச்சுறுத்தப் போகும் உணர்வுகள் அச்சமும் பதற்றமும் தான். அதிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கான வழிகளைக் கண்டறிவதுதான் நம்முன் நிற்கிற சவால்” எனப் பதிலுரைத்தேன்.
அப்போது அரங்கு ஆழமான அமைதிக்கு தாவியதை உற்றுக் கவனித்தேன். நான் வாழும் இந்த வெட்டவெளியில் நாற்காலி ஒன்றைப் போட்டுக்கொண்டு அமர்ந்தபடி, முன்னும் பின்னும், விடாமல் கரையில் மோதுகிற கடலலையை பார்ப்பதைப் போலக் கடந்து வந்த காலத்தை, அமைதியாய் நோக்குகிறேன்.
மண்வெட்டியை கெட்டியாகப் பிடித்தபடி, ஒருசாண் வயிறு நிறைந்து விடாதாவென வான் நோக்கி, பரிதவிப்புடன் கூப்பாடு போட்ட என்னுடைய தாத்தாக்களின் தலைமுறையையும் கடந்து வந்துவிட்டேன்.
அவர்களைப் புதைத்த இடங்களில் எல்லாம் இப்போது நெடுநெல்லி மரங்களே வளர்ந்து விட்டன. சாமந்திப்பூ மணமாய் அவர்கள் வாழ்ந்த வாழ்வு நினைவில் தங்கியும் இருக்கிறது.
அதற்கடுத்து நிலமெனும் வட்டத்தில் இருந்து வெளியே கால்வைத்து இலட்சியவாதம் என்கிற உணர்வை நெஞ்சில் ஏந்தி, இருக்கிற இடத்தில் இருந்தபடியே முட்டி மோதத் துடித்த என் அப்பாக்களின் தலைமுறையையும் கடந்துவந்து விட்டேன். அடுத்ததாக என்னுடைய வாழ்வில் அதிகமும் என்னை எந்த உணர்வு ஆக்கிரமித்து இருந்தது? என அடியாழத்தில் இருந்து யோசித்தும் பார்த்தேன்.
எனக்குமே இலட்சியவாதம் என்கிற உணர்வு இருந்ததுதான் என்றாலும், சாகசம், பெருமிதம் ஆகிய உணர்வுகளே அதிகமும் ஆக்கிரமித்து என்னோடு ஒட்டிக்கொண்டு கூடவே ஓடி வந்ததையும் இப்போது என்னால் உணர முடிகிறது. வெறும் ஈய வட்டிலை வென்று, நிறைய சோற்றைப் பார்த்து விட்டோம் என்கிற பெருமிதம் அது. சோற்றைத் தாண்டி வேறென்ன என்கிற தேடல் கொண்ட சாகசமும் நிறைந்திருந்த காலமது.
குடிசைகள் ஓட்டு வீடுகளாகி, வான் பார்த்த கூரைகள் எல்லாம் எடுத்துக் கட்டிய மாடங்களானதால் வந்த உணர்வுகள் அவை எனவும் அறிகிறேன். பதினோரு ரூபாய் மொய்யைக் கொண்டு போய் விஷேச வீட்டில் கொடுத்துவிட்டு , வீட்டில் இருக்கிற ஏழு உருப்படிகளும், கூச்சநாச்சமின்றி வயிறாரச் சாப்பிட்ட, காலம்கூட இப்போது என் நினைவில் எழுகிறது.
அதில் இருந்து தப்பித்து தலைவாழை விரித்து விருந்து வைத்து, அதில் ஏழெட்டு பதார்த்தங்களை நிரவிப் பார்த்துவிட்டபிறகு என்ன உணர்வுதான் துள்ளிக்கொண்டு மேலெழும்? வழக்கமாகவே மனித வாழ்வில் ஒரு பிரச்சினையுண்டு. மனிதனுக்கு வயிறு மட்டும் நிறைந்துவிடவே கூடாது. அப்படி அது நிறைந்து விட்டால், உடனடியாகவே அவன் அடுத்தது என்ன? என இன்னொன்றைத் தேடிப் புறப்பட்டு விடுவான். என்னுடைய தலைமுறையிலுமே அது நடந்தது.
அடுத்தது என்ன என நாங்களும் தேடிப் புறப்பட்டோம்தான், மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அப்போதும் நிலத்தில் எங்களுடைய கால் அழுத்தமாகப் பாவியிருந்தது. நினைத்தாலும் உதற முடியாதளவில், அணிந்திருக்கும் செருப்பைப் போல, எப்போதும் நீர் பூக்கிற பொங்கு கரிசல் மண் பாதங்களில் ஒட்டியிருந்தது. நகரத்து சாலைகளில் காலைத் தேய்த்து அம்மண்ணை உதறி விட்டுத்தான் ஓடவே தொடங்கினோம்.
ஆனால் எங்களையும் அறியாமல் அந்த மண்ணும், மிச்சமான அதன் மணமும் எங்களது உடலெங்கும் ஒட்டியிருந்தது. உதறவே முடியாத உணர்வாக இன்றளவும் எங்களை தொட்டுத் தொடரவும் செய்கிறது. சில நேரங்களில் பாராம்பரியமாய். நெஞ்சிலிருந்து சொல்ல வேண்டுமெனில், சில நேரங்களில் துயரமாகவும்.
இந்த இடத்தில்தான் என்னுடைய அடுத்த தலைமுறையை நினைத்துக் கொள்கிறேன். வெறும் சில்வர் வட்டிலில் முகம் பார்க்கத் தேவையே இல்லாமல் திகட்டத் திகட்ட எல்லாமும் கிடைத்து விட்டன.
இலட்சியவாதம் என்கிற பூக்குழியில் என்றோ மரம் முளைத்துவிட்டது. இந்த தலைமுறைக்கு தேவைதான் என்ன இப்போது?
எல்லாமே மடியில் கிளிமூக்கு மாங்காய் போல விழுந்து விட்ட பிறகு வேறெதைத்தான் தேடி ஓடுவது? வேதாளம் தொற்றிக்கொள்ள அப்போது முருங்கை மரமாவது இருந்தது. அதுவும் அருகிப் போய்விட்ட காலத்தில் அந்த வேதாளம் எதைத்தான் இப்போது தொற்றிக் கொள்ளும்?
அதனால்தான், காலங்கள் கடந்தும் நிலைத்து வாழ்கிற அந்த வேதாளம் தற்காலத்தில், அதிகப்படியான சுகித்தலில் மூழ்கித் திளைத்து எழுந்து, அதனால் உருவாகும் கூர்விளைவுகளைக் கண்டு மிரண்டு அச்சம், பதற்றம் ஆகிய உணர்வுகளைத் தொற்றிக் கொண்டு விட்டது என எனக்குப் படுகிறது. இதை எழுதுகையில் ஆறாவது மாடியின் சன்னல் வழியாகப் பாங்கொலி என்னை வந்தடைகிறது.
அந்தவொரு காலத்தில், தர்காவின் வாசலில் அமர்ந்திருக்கிற பெரியவர் என் தலையை மயிலிறகால் வருடி, முகத்தில் தண்ணீர் தெளித்து விட்ட காட்சி இன்றும் என்னை ஆக்கிரமித்து இருக்கிறது.
சட்டென சிலிர்த்து தலையை ஆட்டி மறுபடியும் இந்த தலைமுறையின் கதையை உள்வாங்குகிறேன். இவர்களை எப்படி வகை பிரிப்பது?
இந்த வாழ்வெனும் மண் தடத்தை கடக்கிற ரெட்டை மாடுகள் பொருத்தப்பட்ட வண்டியை நினைத்துக் கொள்கிறேன். மனம், உடல் என்று திமிறுகிற இரண்டு காளைகள் அதை ஓயாமல் இழுத்துப் போகின்றன. இந்த தலைமுறை என்கிற அந்த வண்டி அந்த தடத்தில், எதிரெதிர் திசையில் இழுத்துப் போகிற சண்டிக் காளைகளைப் பூட்டிக் கொண்டதைப் போலத்தான் எனக்குத் தெரிகிறது.
மனம் எனும் மாயக்காரனைப் பற்றி கிஞ்சித்தும் அறியாத தலைமுறை இது. அது என்னவென அதன் முன்னோர் அதற்கு கற்றுக் கொடுக்கவும் செய்யவில்லை. அவர்களே எப்போதோ அந்த சூட்சுமத்தை உதறிவிட்டார்களே? வெறும் உடல்தான் இங்கே பிரதானம் இப்போது.
அதன் முழுமையான கொள்ளளவை அறியாத, விதம்விதமான உடல்களும் அது திமிறிக்காட்டுகிற சதைத் துடிப்புகளும் மடிப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன இங்கே.
உடலைக் கண்டு அஞ்சுகிறவர்கள் அல்லது உடலை ஒரு பொருட்டாகவே எண்ணாதவர்களை கொண்ட தலைமுறை இது.
கஞ்சா பொதிக்கப்பட்ட ரோலிங் பேப்பரை எவ்வாறு சுற்ற வேண்டுமெனத் தெரியும் அதற்கு. ஆனால் இறுதிமட்டுக்கும் கூடவே ஓடி வருகிற உடலை என்ன செய்ய வேண்டும்? என ஒருபோதும் அது உணர்ந்ததே இல்லை. உடலும் மனமும் என்ன செய்கிறது இந்த வாழ்வில்?
அதைப் பற்றி எல்லாம் பிரித்தறியச் சொல்லித் தருகிற தகுதிகூட இல்லாமல்தான் அவர்களுக்கு முந்தைய தலைமுறை வயிற்றை தள்ளிக்கொண்டு அலைகிறது. அதற்கு தேவையெல்லாம் உணவிற்கு முன்பு இருநூறு மில்லிகிராம் பணம்.
உணவிற்குப் பிறகு முன்னூறு மில்லி கிராம், பணம் மட்டுமே தருவதாய் கருதிக் கொள்ளும் அந்தவிடம். வேண்டா வெறுப்போடுதான் மாத்திரைகளைப் போல அது, அதனையுமே ஏந்திக்கொண்டு ஓடுகிறது.
இவ்வாறான சூழலில் அதனால் வேறு என்னதான் தன் காலடியில் முளைக்கிற செடிகளுக்கு கற்றுக் கொடுத்து விடமுடியும்? அதனால் அதன் கிளைகளில் இருந்து குற்றவுணர்வின் குழந்தைகளை மட்டுமே பிரசவிக்க முடியும் அல்லது குற்றவுணர்வு என்றாலே என்னவென்று அறியாத, வெயில்பட்டு வெம்பின பிஞ்சுகளை.
குழப்பம் சூழ்ந்த இந்த வெளியில், தப்பித்தலாய் எதை தொற்றிக் கொள்வது? எனக் காற்றில் கைகளை வீசி அலைந்தாடும் எனக்கடுத்த தலைமுறையை கவலையோடு உற்றுப் பார்க்கிறேன். அந்த குழப்பத்தில் இருந்து பிறந்ததுதான் பாலு எழுதிய சொனாட்டா என்கிற இந்த சிறு நாவலும்.
எனக்கு இந்த நேரத்தில் கவலையை தாண்டிக்கொண்டு ஆசுவாசமும் பிறக்கிறது. இதோ, இந்த தலைமுறையில் இதைப் பற்றியும் சிந்திக்க சிலர் புறப்பட்டு விட்டார்கள். தனக்கு என்ன நேர்கிறது? என்பதுகூடத் தெரியாமல் பணம், சுகித்தலென எல்லாவிதமான போதைகளிலும், தலைதாழ்ந்து அலைகிறவர்களுக்கு மத்தியில், நிறுத்தி நிதானமாக ஒருவர் அதுகுறித்து எல்லாம் சிந்திக்கத் தொடங்கி விட்டார் என்பதே எனக்கு நிம்மதியைத் தருகிறது.
அவரது சிந்தனையில் குறைநிறைகள், போதாமைகள் இருக்கலாம், கூடவே எழுத்திலும். ஆனாலும் அவர் அதுகுறித்து எல்லாம் சிந்திக்கத் தொடங்கி விட்டார் என்கிற உண்மையை எதனைக் கொண்டும் ஒளித்து வைக்க முடியாது அல்லவா? பாசாங்கின்றி அவர்களும் சொல்லத் துணிந்து விட்டார்கள், அவர்களுடைய கதையை.
கட்டற்ற போதையும் காமமும், இவற்றை தாண்டிய வெற்றுக்கலவியும் நீக்கமற நிறைந்திருக்கிற இந்த வெளியில் அதையெல்லாம் குறிப்பாய் உற்றுக் கவனிக்கிற பக்குவத்தை, இந்த தலைமுறையிலும் ஒருவர் அடைந்துவிட்டார் என்பதே குடுகுடுப்பைக்காரன் காட்டும் நல்ல சகுனம்தான்.
இசைக்கலைஞன் ஒருத்தனின் வாழ்வாய் விரியும் இந்த நாவலில், நான் மேற்சொன்ன அத்தனையையும் தனக்குக் கிடைத்த வாழ்வியல் அனுபவங்கள் வழியாக கூர்மையாய் உற்றுக் கவனித்து, தன்னளவில் முடிந்தமட்டிற்கும் நேர்மையாகச் சொல்லி இருக்கிறார் பாலு. மீமனிதனாக (நீட்சேவின்…), தன்னைப் பாவித்துக்கொண்டு அல்லாடுகிற ஒருத்தனின் கதையாகவும் இது விரிகிறது.
பாலுவா அந்த நாவலில் இருக்கிறார் என தேடிக் கொண்டே இருந்தேன்.
ஆமாம் பாலுவுமே இருக்கிறார். பாலுவைப் போல எனக்குத் தெரிந்த பலருமே இருக்கிறார்கள். எனக்கு நன்றாகவே தெரிந்த நீலப்பட நாயகி மடில்டாவும் இருக்கிறாள். பூஜையறையில் வைத்துக் கும்பிடுகிற தோதில் நான் நினைத்துக் கொள்கிற காதலியும் இருக்கிறாள். இந்த இரண்டு புள்ளிகளையும் இணைக்கிற இசையும் இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து வருகிற நரம்புத் தளர்ச்சியும் மனத் தளர்ச்சியுமேகூட இதில் இருக்கிறது. முழுக்கதையை எதற்காக நான் சொல்ல வேண்டும்? நான் எதையெல்லாம் பதறிக் கடந்தேனோ, அவையெல்லாமே இந்த நாவலிலும், உதறவே முடியாத ஒன்றாய் ஒட்டிக் கிடக்கிறது. ஒருவகையில் பாலு அச்சத்தோடு தான் வெளியில் இருந்து பார்த்துக் கடந்து வந்த வாழ்க்கை ஒன்றை இதனுள் விரித்து வைத்திருக்கிறார்.
அவருக்கு அதில் சங்கடங்கள் எதுவுமே இல்லை என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எது குறித்தாவது அச்சப்பட்டால் அதில் நீங்கள் விரைவில் பொத்தென விழப்போகிறீர்கள் என அர்த்தம் என்று ஒருசமயத்தில் எழுதி இருக்கிறேன். இன்னொரு சமயத்தில் எதிலிருந்தாவது விடுபட விரும்பினால் அதை துச்சமாக நினை என்றுகூட எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு எல்லைகளையுமே துல்லியமாகக் கவனித்து அடுத்த கட்ட விசாரணைக்குக் கொண்டு போய் இருக்கிறார் பாலு.
வழக்கமாகவே என்மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. எதைப் பார்த்தாலும் யோசிக்காமல் உடனடியாகவே வியந்து விடுகிறேன் என. ஆமாம் குறைநிறைகளோடு இருந்தாலும் நேர்மையாய் சொல்லப்படுகிற எதைக் கண்டும் வியக்கிறவன்தான் நான். யாருக்கும் உபயோகம் இல்லை எனச் சொல்லப்படும் தாத்தாப்பூவைக்கூட கையில் ஏந்தி நீண்டநேரம் ரசித்துப் பார்க்கிறவன். அந்த வகையில் நானறிந்து வெளிப்படுத்தாத வாழ்வு ஒன்றைக் குறித்து என் இளையோர் ஒருத்தர் எழுதியதன் பொருட்டு மகிழவே செய்கிறேன்.
இன்னொரு விஷயத்தை ஆழமாக குறிப்பிட விரும்புகிறேன். எழுத்துகளில் இருக்கிற பல்வேறு வடிவங்களைக் குறித்து அஞ்சுகிற காலத்தையும் கடந்து மீண்டவன் என்கிற முறையிலும் இதைச் சொல்கிறேன். பாலு, நாவல் என்கிற வடிவத்தைக் கண்டு அஞ்சவில்லை என்பதைக் குறுநகையுடன் பார்க்கிறேன். இரண்டு வெவ்வேறு உலகத்தை தொழில்நுட்பத்தோடு, ஒன்றாய் இணைக்க முடிந்திருக்கிறது அவரால், முதல் நாவல் என்ற போதிலும்.
இதை எழுத அவரை உந்தித் தள்ளியது நானெழுதிய அஜ்வா, ரோலக்ஸ் வாட்ச் நாவல்கள்தான் என்று சொன்னார். அந்த சமயத்தில் என்னுள் அந்தப் பழைய பெருமிதம் வந்தடங்கியது. நான் போன அந்த யானை வலசை போகிற தடத்தில் இன்னொருத்தரும் பின்பற்றி வந்துவிட்டார்.
இந்தக் காடு அவருக்கு ஒருபோதும் இனி அச்சமூட்டாது. பயமும் பதற்றமும் நிறைந்த அவருடைய தலைமுறை மனிதர்களை அவர் தன் எழுத்தின் வழியாக மீட்டெடுக்கப் போராடுவார் என்கிற நம்பிக்கையும் கிடைக்கிறது.
ஒருவகையில் மனதையும் உடலையும் உற்றுப் பார்க்கிற பழக்கம் வாய்த்து விட்டது அவருக்கு. அதுவொரு யோகச் செயல்தான். இறுதியாய் சொல்ல இன்னொன்றும் உண்டு. தன்னை அலைக்கழித்த எவற்றில் இருந்தும் தப்பித்து இந்த நாவலின் நாயகன் தொற்றிக்கொண்டு மீண்ட கயிறு, விளையாட்டு என்பது.
ஒரு விளையாட்டுக்காரனாகவும் இந்தப் புள்ளியில் நான் திருப்தி அடைந்து விட்டேன். உடலையும் மனதையும் ஒரே நேர்கோட்டில் வைத்திருக்கிற தியானமென்கிற விளையாட்டைப் பற்றிக் கொண்ட எவரையும் பரந்த அந்த மைதானம் கைவிட்டதே இல்லை. என்னைக் கைவிட்டதில்லை. அதைப் போல பாலுவையும் அது கைவிடப் போவதில்லை.
உண்மையாகவே இந்த நாவலைப் படித்து முடிக்கையில், மனம் ஆசுவாசமாக உணர்ந்தது.
இன்னொரு தலைமுறையின் வாழ்வு என்கிற வகையில் குறைநிறைகளைத் தாண்டி எல்லோரையுமே இந்த உழைப்பைக் கூர்ந்து பார்க்க கோருகிறேன். இப்போதைய காலத்தின் தேவையென்னவெனில், உற்று நோக்குவதுதான், உடலையும் மனதையும் தள்ளிநின்று. அதைத்தான் இந்த நவீன வாழ்வு கோரவும் செய்கிறது.
அது ஒருவகையிலான மந்திரச் சாவி. வேதாளம் உண்மையிலேயே தொற்றிக்கொள்ள விரும்புகிற முருங்கை மரமும். நம்மிடமிருக்கிற ஒரே நல்நெறியும். அது மட்டுமே நம்முடைய இறுதி மீட்பும்கூட.
இந்த நாவலில் ஒரு வசனம் வரும். “முதல் முறை தொடுகையில் ஆர்வம் வருகிறது என்றால், மகத்துவம் வாத்தியத்தில் இருக்கிறது. ஆயிரமாவது முறை தொடும் போதும் அதுவே வருகிறதென்றால் மகத்துவம் உன்னிடம் இருக்கிறது” என.
முதல்முறை ஆர்வத்தோடு இலக்கியம் என்கிற வாத்தியத்தைத் தொட்டு இருக்கிறார் பாலு. ஆயிரமாவது முறை தொடும்போதும் அது அவருள் நீடிக்கட்டும் என அந்தப் பேருண்மையிடம் உள்ளபடியே இறைஞ்சுகிறேன்.
ஓர் ஆரம்பக்கட்ட வாசிப்பாளராக பாலு என்ற எழுத்தாளரை கண்டடையந்ததிலிருந்து அவரது எழுத்தின் மீதும் அவரது பகிர்வுகள் மீதும் என்றுமே ஈர்ப்பும் ,ஆச்சரியமும் இருந்துள்ளது.
நாளடைவில், அவர் இளம் வயதிலிருந்தே கொண்ட ஆழ்ந்த வாசிப்பனுபவமும் அவரது இசை பயிற்சியும் இதற்கான காரணமாக இருக்கக்கூடும் என்று கருதினேன்.
இவ்வாறாக அவரின் இந்த முதல் நாவலான சொனாட்டாவை எதிர்ப்பார்த்து வாசித்து முடித்தேன்.
இதில் வரும் மைய கதாபாத்திரமான ருத்ர பிரதாப்பின்
மனநிலையை நம்முள் கடத்தி அவன் விரும்பும் மற்றொரு பரிணாம வளர்ச்சியை எட்டும் தருணத்திற்க்குள் நடக்கும் போராட்டங்களை பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்வோடு பொருத்தி பார்ப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றே கருதுகிறேன்.
நான் இந்த நாவலில் மிகவும் ரசித்த பகுதியாக அமைந்தது பச்சையப்பன் கல்லூரியும் அதன் மாந்தர்களும்.
அதில் வரும் அந்தோணி தாஸ், பிரதாப் குழுவின் தோழமையும் அவர்களின் எண்ணங்களும், செயல்களும் அவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் அமைந்தது.
மேலும் அவர்களின் நட்பும் ,பாந்தமும் அடுத்த தலைமுறையிலும் நீண்டு ருத்ர பிரதாப்பிற்கு உதவுவது நெகிழ்வை உண்டாக்குகிறது.
இதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்கள் இணையத்தில் அறியப்பட்ட "அடோனிஸ் - ஜெஃப்ரி" பண்புகளை…
சொனாட்டா - வாசிப்பனுபவம்
ஓர் ஆரம்பக்கட்ட வாசிப்பாளராக பாலு என்ற எழுத்தாளரை கண்டடையந்ததிலிருந்து அவரது எழுத்தின் மீதும் அவரது பகிர்வுகள் மீதும் என்றுமே ஈர்ப்பும் ,ஆச்சரியமும் இருந்துள்ளது.
நாளடைவில், அவர் இளம் வயதிலிருந்தே கொண்ட ஆழ்ந்த வாசிப்பனுபவமும் அவரது இசை பயிற்சியும் இதற்கான காரணமாக இருக்கக்கூடும் என்று கருதினேன்.
இவ்வாறாக அவரின் இந்த முதல் நாவலான சொனாட்டாவை எதிர்ப்பார்த்து வாசித்து முடித்தேன்.
இதில் வரும் மைய கதாபாத்திரமான ருத்ர பிரதாப்பின்
மனநிலையை நம்முள் கடத்தி அவன் விரும்பும் மற்றொரு பரிணாம வளர்ச்சியை எட்டும் தருணத்திற்க்குள் நடக்கும் போராட்டங்களை பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்வோடு பொருத்தி பார்ப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றே கருதுகிறேன்.
நான் இந்த நாவலில் மிகவும் ரசித்த பகுதியாக அமைந்தது பச்சையப்பன் கல்லூரியும் அதன் மாந்தர்களும்.
அதில் வரும் அந்தோணி தாஸ், பிரதாப் குழுவின் தோழமையும் அவர்களின் எண்ணங்களும், செயல்களும் அவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் அமைந்தது.
மேலும் அவர்களின் நட்பும் ,பாந்தமும் அடுத்த தலைமுறையிலும் நீண்டு ருத்ர பிரதாப்பிற்கு உதவுவது நெகிழ்வை உண்டாக்குகிறது.
இதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்கள் இணையத்தில் அறியப்பட்ட "அடோனிஸ் - ஜெஃப்ரி" பண்புகளை…