top of page
Search
Writer's pictureBalu

துயரங்கள் விற்பனைக்கல்ல - ஈராண்டுகள்

எனது இரண்டாம் நூலான ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ என்கிற சிறுகதைத் தொகுப்பு வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகின்றன. மனதளவில் மிகவும் உடைந்து போயிருந்த காலத்தில் எழுதப்பட்ட கதைகள் என்பது தொகுப்பின் பெயரிலேயே தெரிந்திருக்கும். ஒரு சில கதைகள் எப்போதோ எழுதப்பட்டவையாக இருந்தாலும் மனமுடைவை எதிர்கொண்ட காலத்தில் திருத்தி எழுதப்பட்டதால் அதில் துயரத்தின் அளவு சற்றே கூடியிருக்கும். துயரத்தின் வாசிப்பின்பத்தை இந்நூலில் உணர முடியும். ‘கால வெளியிடை’ எனும் என் முதல் நூலிலிருந்து முழுமையாக வெளிவந்த பிறகு அதீத தன்னம்பிக்கையுடன் இதை வெளியிட்டேன். முதல் நூலைவிட இதற்கு வாசகர்களின் வரவேற்பு அதிகமாக இருக்கும் என நினைத்தேன். எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை என்றாலும் நண்பர்கள் கைவிடவில்லை. இப்போதும் என் எழுத்தை யாருக்காவது அறிமுகப்படுத்தும்போது, “கால வெளியிடை வேண்டாம். துயரங்கள் விற்பனைக்கல்ல வாங்கிப் படிங்க” என்றே சொல்வேன்.

டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ நாவலை வாசித்துக்கொண்டிருந்தபோது அதன் சிறைச்சாலை அத்தியாயம் என்னை பெரும் உணர்ச்சிக்கொந்தளிப்புக்குள் தள்ளியது. பள்ளிக் காலத்தில் நான் ஸ்லட் ஷேம் செய்த ஒரு பெண்ணிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரத் தோன்றியது. தொடர்புகொள்ள முடியாத தூரத்துக்கு அவள் போய்விட்டாள் என்பதால் அதன் பிராயச்சித்தமாக ‘உயிர்த்தெழுதல்’ கதையை எழுதினேன்.


‘நீயா நானா’ நிகழ்ச்சியில் ஆடை சார்ந்த தாழ்வு மனப்பான்மையை ஒரு கல்லூரி பெண் முன் வைத்த விதம்தான் ‘உடுத்துவதொன்றே’ கதையை எழுதத்தூண்டியது. ‘குறுந்தொகை’ பாடல்களை வாசித்துக்கொண்டிருந்தபோது சட்டெனப் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு ஒரே மூச்சில் எழுதி முடித்த கதை ‘அன்பின் பாலே’. ‘தி ஹன்ட்’ படத்தைப் பார்த்துவிட்டு நண்பர்களுடன் விவாதித்தபோது அதையொத்த பழி சார்ந்த நிகழ்வு ஒன்று என் பள்ளியில் நடந்தது நினைவுக்கு வந்தது. அதை மையமாகக் கொண்டு ‘மௌனம் ஒரு வன்முறை’ எழுதினேன். செகாவ் எழுத நினைத்து எழுதாமல் போன ஒரு கதையை அவரின் மாணவனாக ‘விமர்சகன்’ கதையில் நிறைவேற்றியிருக்கிறேன்.


என்னால் இனி ஒருபோதும் ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ போன்ற மென்கவித்துவ சோகத்தைப் பாடும் நூலை எழுதவே முடியாது. அந்த பாலு இப்போது இல்லை. ஆகவே இந்நூலை நண்பர்கள் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.



15 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page