லெனின் எழுதிய ‘பாலியல் தொழிலை ஆதரிப்பது முற்போக்கா?’ எனும் கட்டுரையின் எதிர்வினை
*
கடந்தாண்டு ஒரு மகளிர் கல்லூரியின் நிகழ்வில் என்னைப் பேச அழைத்திருந்தனர். அப்போது “Prostitution” என்ற சொல்லை உச்சரித்தபோது உடனடியாக நிறுத்திவிட்டு “Sex Worker” என்று சொல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஒவ்வொரு பத்திரிகைகளுக்கும் அகராதி இருப்பதுபோல் இக்கல்லூரியின் அகராதியில் ‘Sex Worker’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் என்று நினைத்தேன். அவர்கள் Political Correctness பார்த்திருப்பது சில நாட்கள் கழித்தே புரிந்தது. இது எனக்கு மட்டுமல்ல; எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கும் நிகழ்ந்திருப்பதாக எழுதியிருக்கிறார். அவர் மாற்றுச் சொல்லைப் பயன்படுத்தக் கடுமையாக மறுத்திருக்கிறார். முற்போக்காளர்கள் இந்த விஷயத்தில் சொற்களில்கூட அங்கீகாரத்தை எதிர்பார்க்கும்போது அவர்களே குழம்பிப்போயிருப்பதைக் காண முடிகிறது. பாலியல் தொழிலாளியும், எழுத்தாளருமான நளினி ஜமீலா ‘விபச்சாரம்’ என்ற சொல்லை எதிர்க்கவில்லை; ‘தேவடியா’, ‘ஐட்டம்’ போன்ற கொச்சையான சொற்களையே எதிர்க்கிறார். விபச்சாரத்தை ‘பாலியல் தொழில்’ என்று மட்டுமே குறிப்பிடும் பலர் அத்தொழிலை ஆதரிக்கவே செய்கின்றனர். அல்லது ஆதரிப்பதால்தான் சொற்களில்கூட கவனமாக இருக்கின்றனர்.
கொரோனா காலத்தில் நளினி ஜமீலாவின் சுயசரிதையைப் படித்ததும் இதுகுறித்துச் சமூக வலைதளங்களின் நேரலையில் உரையாடியிருக்கிறேன். அப்போது பாலியல் தொழிலை ஆதரிப்பவனாக இருந்திருக்கிறேன். நான் எழுதிய அல்லது நண்பர்களுடன் உரையாடிய அற்பத்தனமான வாக்கியம் நினைவிற்கு வருகிறது. ‘உலகில் முதன்முதலில் பேசப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழ் இன்றியமையாதது எனில், உலகில் முதன்முதலில் செய்யப்பட்ட தொழிலான விபச்சாரமும் இன்றியமையாததே’.
பாலியல் தொழிலைப் பழம்பெருமை பேசி ஆதரிப்பது பயனற்றது. உலகளவில் நிகழ்ந்த நவீன சமூக மாற்றங்களைக் கருத்திற்கொள்ளாமல் விபச்சாரத்தை அங்கீகரிப்பது குறித்து உரையாடுவது சரியல்ல. பாலியல் தொழிலை முற்போக்கின் பேரில் ஆதரிப்பவர்களைவிட, அதனால் வன்புணர்வு குற்றங்கள் குறையும் என்று நம்பி ஆதரிப்பவர்களே அதிகம். பொனாக்ரஃபி காலத்தில் அது சாத்தியமில்லை.
மக்களிடையே ஆபாசப்படங்கள் மற்றும் சுய இன்பப் பழக்கம் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து அதன் நன்மைகளை விளக்கம் கட்டுரைகள் இணையத்தில் வெளிவரத் துவங்கின. ‘சுய இன்பம் செய்வதால் பாலியல் தொற்று ஏற்படாது; யாரையும் துன்புறுத்த வேண்டியதில்லை. சுயமாகவே இச்சையைத் தீர்த்துக்கொள்ளலாம்’ என்பது போன்ற படுமுட்டாள்தனமான வாதங்கள் அவற்றில் கூறப்பட்டிருக்கும். லெனின் சொன்னது போல், எப்படி கணவனுக்கு மனைவியை மீறி விபச்சாரி தேவைப்படுகிறாளோ அதேபோல் தொடர்ந்து சுய இன்பம் செய்பவன் பெண் பித்தனாகவே உருவெடுப்பான். காரணம் சுய இன்பம் இச்சைப் பசியைத் தீர்ப்பதைவிட அதற்கான சங்கிலித் தொடரை உருவாக்கும். அதுவே சுய இன்ப அடிமைத்தனம். எவ்வளவு பசியாறினாலும் போதாமை உணர்வில் வைத்திருக்கும்.
சமீபத்தில் ஒரு செய்தி எழுதினேன். மும்பையைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன், ஆபாசப் படங்களைப் பார்த்துவிட்டு அதுபோலவே தன் நண்பனிடம் முயன்று கைது செய்யப்பட்டிருக்கிறான். இப்படியான சூழலில் பாலியல் தொழில் சட்டப்படி அனுமதிக்கப்பட்டால் பெண்களின் நிலை என்ன? நவீனக் காலத்தில் வெறும் கலவிக்காக யாரும் விபச்சாரியிடம் செல்லப்போவதில்லை. ‘வெறும் கலவி’ என்பது இப்போது பலரது தேவைகளிலும் இல்லாமல் போய்விட்டது. அதையும் மீறி ஏதாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஆபாசப்படங்கள் அதிகரித்துவிட்டன. செக்ஸில் எப்போது Novelty உள்ளே வர ஆரம்பித்ததோ அன்றிலிருந்து காமம் சார்ந்த பிரச்சனைகள் மனிதர்களிடையே அதிகரிக்கத் துவங்கியது. ஆகவே விபச்சாரியை நாடும் ஒருவன், தான் போர்னில் கண்ட புதிய விஷயங்களை முயன்று பார்ப்பதற்காகவே வருவான்.
பொனாக்ராஃபி என்பது பாலியல் கல்வியின் காணொளி வடிவம் என்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் இன்றும் உண்டு. அதாவது அதைக் கலவிக்கான பயிற்சியாகப் பார்க்கின்றனர். கால்பந்து வீரன் அனுதினமும் பயிற்சி செய்தால் மட்டுமே சிறந்து விளங்க முடியும்; காமத்திற்கும் அது பொருத்தமா என்றால் கிடையாது. ஆனால் அப்படி நம்புபவர்கள் ஏராளம். எனவே வெறும் கலவிக்காக அல்லாமல் மனிதர்கள் தங்களுக்கு இருக்கும் Fetishes, fantasies, ஆபாசங்களில் நுகர்ந்த Categories ஆகியவற்றை முயல்வதற்கே விபச்சாரியைப் பயன்படுத்துவார்கள். இதில் பெரும்பாலான ஆண்கள் குடிகாரர்களாக இருப்பார்கள்.
பொனாக்ராஃபி காட்டும் காம உலகம் அபாயகரமானது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் என்றாலும், அதனுடன் பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படப் போவது பெண்களாக இருப்பார்கள்.
ஒருவேளை பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக்கப்பட்டால் அதை முழுநேரத் தொழிலாக ஏற்றுக்கொள்ள விரும்புபவர்களும், அத்தியாவசியங்களுக்குக்கூடப் பணமில்லாத ஏழைப் பெண்கள் மட்டுமே பங்கெடுப்பார்களா என்று கேட்டால் உறுதியாகச் சொல்ல முடியாது. ‘Only Fans’ தளத்தில் கணக்கு வைத்திருக்கும் பலர் நவீன இளம்பெண்கள் என்பதால் அதன் தாக்கம் நம் ஊரிலும் பின்பற்றப்படலாம். ஏற்கெனவே சமூக வலைதளங்களின் அடிமைத்தனத்தால் டேட்டிங் வாழ்க்கை வறண்டு போய்க்கொண்டிருக்கும் சூழலில் விபச்சாரத்திற்கு அனுமதி கிடைத்தால் ‘மனிதர்கள் வெறும் சதைகளின்றி வேறல்ல’ என்ற அவல நிலை வரும்.
நளினி ஜமீலா கோருவது போலப் பாலியல் தொழில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் நடந்தால், பாலியல் தொழிலாளியாக இருப்பதற்கான குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்படும். ஆண்கள் மீதும், திருமணம் மீதும் பிடிப்பற்றுப் போகும் பல பெண்கள், எதிர்காலத்தில் தேவைக்காக இத்தொழிலையும் கையிலெடுக்கலாம். காதல், உறவு, திருமணம், இனப்பெருக்கம் எனப் பல அடிப்படைகள் பாதிக்கப்படும். வன்புணர்வு குற்றங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கும்.
பாலியல் தொழில் அங்கீகரிப்பு என்பது தற்கால ஆண்களை இன்னும் பலவீனமாக்கும். மனைவி, குழந்தை இருக்கும்பட்சத்தில் ஆண்களால் நீண்ட காலத்திற்குப் பிடிப்புடன் உழைக்கவும், ஓடவும் முடியும். அதன் வழியே அவன் தன் தகுதியை மேம்படுத்திக்கொள்ளலாம். இனப்பெருக்கத்திற்குப் பிறகு உயிரியல் கழிவாக மாறாமல் காத்துக்கொள்ளலாம்.
இன்ஸ்டாகிராமில் பெண்களுக்காகவும், செக்ஸுக்காகவும் வொர்க்-ஔட் செய்யாதீர்கள், உங்களுக்காகச் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லும் பல க்ரிஞ்ச் ரீல்ஸைப் பார்க்க முடியும். எதிர்பாலினத்தவரும், செக்ஸும் ஒருவனைப் பலமானவனாகத் தக்கவைத்துக்கொள்ள உந்துதலாக இருக்கிறதெனில் அது தவறில்லை என்பேன். ஆதரித்தாலும் எதிர்த்தாலும் செக்ஸை அடைவதற்காக ஆண் தன்னை மேம்படுத்திக்கொண்டே போவான். இந்த உயிரியல் கூறுக்கு முன்பு எந்த முற்போக்காளர்களின் பாட்சாவும் பலிக்காது. அப்படியிருக்கும் நிலையில், விபச்சாரம் சட்டமாக்கப்பட்டு எல்லா ஆண்களுக்கும் கலவிக்கான வாசல் எளிதாகத் திறக்கப்படுமானால் பெண்ணை Earn செய்ய வேண்டிய நிலையே இல்லாமல் போகும். பணத்தைச் சம்பாதித்தல் போதுமானதாகும். மேம்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமற்ற நிலைக்கு ஆண்கள் வரும்போது இன்னும் பலவீனமடைவர். யாருக்காகவும் ஓட வேண்டியில்லாததால் சோம்பேறிகளாவார்கள். தானே சம்பாதித்துத் தானே சாப்பிட்டு தன் காசில் காமத் தேவையைத் தீர்த்துக்கொள்ளும் சூழலால் கொஞ்சமும் Social Skills இல்லாத மனிதர்களே நாட்டில் நிறைந்திருப்பார்கள். உயர்தர மனிதர்களின் எண்ணிக்கை 10%லிருந்து 1%க்குக் குறையும்.
Ullu, Only Fans போன்ற தளங்களுக்குப் பணம் செலுத்தி வெறும் திரையில் இச்சைகளை நுகரும் கீழ்மையான ஆண்கள், விபச்சாரம் சட்டமாக்கப்பட்டால் நிச்சயம் அதை டாஸ்மாக் அளவுக்கு பெரிய வணிகமாக மாற்றுவார்கள். இந்த விவகாரத்தில் ஒழுக்கத்தை (Moral) கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. ஆனால் இச்சைத் தொழிலாளிகளாலும், வாடிக்கையாளர்களாலும் ஒருபோதும் உயர்தர மனிதராகத் தங்களை முன்னிறுத்திக்கொள்ள முடியாது. காமத்திற்குப் பணம் கொடுப்பவனாலும், பணம் பெறுபவராலும் வாழ்வில் மகத்தான காரியங்களைச் செய்ய முடியாது.
Comments