வீட்டில் குழந்தைகள் இருப்பவர்களுக்குத் தெரியும். அதனிடம் அதிகமாகப் பாசத்தைக் காட்டினால் அது நம்மை அவமதிக்கத் துவங்கிவிடும். அதை ஆண் - பெண் உறவில் பரிசோதித்துப் பார்த்து மாஸோ எழுதிய நாவல் ‘காதல் தேவதை’. ‘முகமூடிகளின் பள்ளத்தாக்கு’க்குப் பிறகு ஒவ்வொரு வரிகளையும் ரசித்து அதிகம் ஹைலைட்டர் பயன்படுத்திப் படித்த நாவல். மாஸோத்துவம் என்ற முக்கியமான தத்துவத்தைக் கொண்ட, பள்ளத்தாக்கின் ரிலேஷன்ஷிப் வெர்ஷன். இரு நாவல்களையும் வாசித்தவர்களால் இரண்டுக்குமான தொடர்பை புரிந்துகொள்ள முடியும். ஆண்மை vs அடிமைத்தனம் என்ற இரு வெவ்வேறு நாவல்களிலுள்ள தொடர்ச்சியைப் புரிந்துகொள்ள Reading between lines திறனைத் தாண்டி Masculinity பற்றிய அடிப்படை புரிதல் வேண்டும்.
சமீபத்தில் வாசித்ததால் ‘பள்ளத்தாக்குடன்’ ஒப்பிடுகிறேன். பொது வாசகர்களால் தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ நாவலுடன் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. இரண்டிலும் கதை சொல்லி ஒரு கனவுலகவாசி, கோழை, உணர்ச்சிவசப்படக்கூடியவன். தஸ்தயேவ்ஸ்கியிடம் மென்கவித்துவசோகத்தைக் கழித்துவிட்டால் மாஸோ மிஞ்சுவார். ‘வெண்ணிற இரவுகள்’ நாவலின் காதல் ஒருவகையான மயக்க நிலை கொண்டது. பனிக்கால நள்ளிரவில் குளிர் காதுக்குள் ஊசி போல் நுழையக்கூடிய உணர்வை ஏற்படுத்தும் நாவல் அது. ‘காதல் தேவதை’ அப்பட்டங்களின் தொகுப்பு. கசப்பான உண்மைகளைப் பேசக்கூடியது. கதாபாத்திரங்களின் மனம் காளி தெய்வம் போல் ஆட்டம் போடக்கூடியது.
இது நிச்சயமாக எனக்குப் பிடித்த நூல்களின் வரிசையில் இடம்பிடிக்கும். ஆனால் பிறருக்குப் பரிந்துரைக்க யோசனையாக உள்ளது. தான் பலமானவன் எனும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் மாஸோவையும் மாப்பசானையும் வாசிக்க வேண்டாம் என்றே சொல்வேன். வாழ்வின் அழுக்குகளைச் சுத்தம் செய்த பிறகு இவர்களை வாசிக்கலாம்.
நவீனுக்கு எழுதிய கடிதத்தில் ‘முகமூடிகளின் பள்ளத்தாக்கு’ நாவலைச் சரியான காலகட்டத்தில் வாசித்திருப்பதாகவும், கடந்தாண்டு வாசித்திருந்தால் அதன் நுண்ணியங்கள் புரிந்துகொள்ள முடியாமல் போயிருக்கும் என்று எழுதியிருந்தேன். இதுவும் கிட்டத்தட்ட அது மாதிரியான நாவல்தான். ‘காதல் தேவதை’யைக் கடந்தாண்டு வாசித்திருந்தால் அது எனக்குப் புரியாமல் போயிருக்காது; மாறாக அபாயகரமான வடிவில் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும். வாழ்வில் இன்னும் பன்மடங்கு வீழ்ந்திருக்கக்கூடிய வாய்ப்பிருந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக எனது முதுகெலும்பைக் கூர்தீட்டிய பிறகு வாசித்ததால் தனிப்பட்ட உண்மைக்குப் பதிலாக முழுமுற்றான உண்மையை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.
செவரின் இருவகையான பெண்களை மட்டுமே ரசிப்பவர்; முழு பத்தினி மற்றும் தனக்கான விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கும் பெண். அரைப் பத்தினிகளை, ஏமாற்றும் மனைவிகளை வெறுப்பவர். அவர் வாண்டா எனும் ராட்சஸியைச் சந்திக்கிறார். வாண்டா இப்படியாக அறிமுகமாகிறாள்:
“ஆண் ஆசைப்படுகிறான். பெண் ஆசையாகிறாள். இதுதான் பெண்ணுக்குக் கிடைத்த சாதகம். ஆடவனின் உணர்ச்சியால் இயற்கை அவனைப் பெண்ணின் கையில் ஒப்படைத்துள்ளது. அவனைத் தன் உடைமையாக்கிக்கொள்ளாத, அடிமையாக்கிக்கொள்ளாத, ஒரு புன்னகையால் அவனைப் புறக்கணிக்காத பெண் அறிவுடையவள் அல்ல.
மிகுந்த அர்ப்பணிப்புடன் ஒரு பெண் தன்னை வெளியிடும்போது ஆண் அவளை எளிதாக எடுத்துக்கொண்டு ஆக்கிரமிக்கிறாள். அவனைக் குரூரமாக நடத்தி, அவள் விசுவாசமின்றி இருக்கும்போதும், அவனை மிக மோசமாகக் கையாளும்போதும், அவனுடன் இரக்கமின்றி விளையாடும்போதும், அவன் மீது துச்சமான கருணையே காட்டும்போதும் அவன் ஆர்வத்தை அதிகம் தூண்டி விடுபவளாகிறாள். அதிகம் நேசிக்கப்படுகிறாள். அவனால் ஆராதிக்கப்படுகிறாள்.
ஆண் பெண் உறவு நீடித்திருக்கும் என்று இயற்கை எந்த உத்தரவாதத்தையும் வழங்கவில்லை.
பெண்ணை ஒரு புதையல் போல் பாதுகாத்து வைப்பது ஆணின் அகங்காரம்தான். எவ்வளவு முயன்றாலும் காதலில் நிரந்தரம் என்பது மனித வாழ்வில் சவாலான விஷயம். மதச் சடங்குகளை மீறி, சட்டத்தையும் சத்தியப் பிரமாணத்தையும் மீறி அது மூழ்கிப் போய்விட்டது.”
இப்படியான வாண்டா மீது செவரின் காதலில் விழுகிறாள். இருவரும் காதலிக்கின்றனர். செவரின் தன்னை வாண்டாவின் பாதங்களில் ஒப்படைக்கிறான். பொதுவாக இதுபோன்ற ஆண்களைக் காண்பது கடினம். ஆனால் இப்போது சமூக வலைதளங்களில் இவர்களே குப்பைகளாகக் கொட்டிக் கிடக்கின்றனர். செவரின் ஒரு விந்தையான குணம் கொண்டவர். பெண்ணின் கையில் தன்னை ஒப்படைத்து, அவளிடம் அதிகாரத்தையும் வழங்குபவர். வாண்டா முதலில் அதை மறுக்கிறாள். பெண் என்பதால் அல்ல; அவள் அதிகாரத்தை ரசிப்பவள். அதிகார ஆற்றல் தன்னுள் நிரம்பி வழிவதால் செவரினை அடிமையாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறாள். அது உறவைப் பெருமளவில் பாதித்துவிடுமென்ற யதார்த்தம் புரிந்தவள். இருப்பினும் செவரின் விடுவதாய் இல்லை. காதலனின் ஆசையை நிறைவேற்றாமல் இருப்பது காதலிக்கு அழகல்ல எனக் கருதி ஏற்றுக்கொள்கிறாள். செவரின் அடிமைப்படுத்தச் சொல்லித் தொந்தரவு செய்வது குறித்து இந்நாவலிலும் இடம்பெறாத ஓரிடம் 'Venus in furs' படத்தில் வசனமாக அமைந்திருக்கும். வீனஸ் எனும் வாண்டா அவனிடம், “அடிமைத்தனம் செய்யச் சொல்லி நீ என்னை வற்புறுத்துகிறாய். நீ எந்த முறையில் அடிமைப்பட வேண்டும் என்பதை நீயே முடிவு செய்வதற்குப் பெயர் அடிமைத்தனமா அதிகாரமா?” என்பாள்.
சில நாட்களில் பெண்களின் உயிரியல் கூறு அவளிடமிருந்து வெளிப்படுகிறது.
“ஒரு ஆணிடம் என் வாழ்நாள் முழுவதையும் ஒப்படைத்துவிடுவேன். ஆனால் அவன் முழுமையான ஆணாக இருக்க வேண்டும். என்னை ஆளுமை கொள்பவனாக இருக்க வேண்டும். தன் அக ஆற்றலால் என்னைக் கட்டுப்படுத்த வேண்டும். என்னை மண்டியிடச் செய்யும் ஆணிடம்தான் நான் காலம் முழுவதும் விசுவாசமாக இருக்க முடியும்” எனத் தன் முன் மண்டியிட்டிருக்கும் செவரினிடம் கூறுகிறாள்.
உள்ளுக்குள் திடுக்கிடும் செவரின், வாண்டாவை அடைவதற்காக அவள் விரும்பும் ‘ஆணாக’ இருக்க முயல்கிறான். ஆனால் பெண்ணுக்கும், அவளின் அழகுக்குள் காதலுக்கும் மண்டியிடும் அவனுடைய அடிமை குணம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
வாண்டாவும் செவரினும் அறிவுப்பூர்வமான உரையாடல்களை வைத்துக்கொள்வார்கள். அதுபோன்ற சமயங்களில் மெய்க்காதல் உயிர்ப்பித்திருக்கும். ஆனால் தும்மல் வருவதைப் போல இருவரும் ஒரு கணப்பொழுதில் சந்திரமுகியாக மாறிவிடக்கூடியவர்கள். வாண்டாவின் ஆதிக்கம் அவனுக்குப் போதவில்லை. அவளை அடுத்தடுத்த நிலைக்குக் கெஞ்சல் மூலம் அழைத்துக்கொண்டே செல்கிறான்.
“பெண்கள் புதுமையில் நாட்டமுள்ளவர்கள். ஜாக்கிரதையாக இரு. உன் லட்சியப்பெண்ணைக் கண்டு நீ சரணடையும்போது நீ விரும்புவதைவிடக் கூடுதலாக அவள் உன்னைக் கொடுமைப்படுத்துவாள்” என்கிறாள் வாண்டா. தனித்திருக்கும் ஆண்கள், பெண்ணின் வாசத்தையே கண்டிருக்காத ஆண்கள் தங்களுக்கு வாய்க்கப்போகும் இணை பற்றிய எதிர்பார்ப்பு நிறைந்த கனவு வார்த்தைகளை என்னிடம் பகிர்ந்திருக்கின்றனர். அதையெண்ணி ஒருகணம் சிரிப்பை அடக்கிக்கொண்டேன்.
செவரின் வாண்டாவிடம் அதிக காதலையும் பாசத்தையும் காட்டுகிறான். முதலில் சொன்ன குழந்தைகளின் குணாதிசயத்தைப் போலவே வாண்டா செவரினை அவமதிக்கத் தொடங்குகிறாள். செவரினும் குழந்தைதான்; ஆண் அல்ல. சில நாட்களில் மிகச்சிறந்த ஆண்மகன் ஒருவனைக் காண்கிறாள் வாண்டா. செவரினுக்கு அவனை எண்ணிப் பொறாமை இருந்தாலும் உடலில் இன்பப் பெருக்கு ஓடுகிறது. அதுவே மாஸோத்துவத்தின் உச்சம். அவன் பொறாமைப்படும் ஆண் கிரேக்க நாட்டைச் சேர்ந்தவன். அவர்களின் கடவுள்களைப் போலவே உடல் ரீதியாக பலமானவன். செவரினால் அவனைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அவ்வியப்பு ஏற்படும்போதெல்லாம் உள்ளுக்குள் கூசிப்போகிறான். கட்டுடலைக் காணும்போது தான் வெறும் மூளை உழைப்பாளி என்று தாழ்த்திக்கொள்கிறான். கிரேக்கக் கடவுளை ஆணே வியக்கும்போது வாண்டாவால் சும்மா இருக்க முடியுமா?
“அந்தப் பெண் சிங்கத்துக்கு என்ன ஆனது?”
“அந்த சிம்மம் படுத்தபடி சண்டையை வேடிக்கை பார்க்கிறது. அதன் ஆண் ஜோடி கடுமையாகக் காயமடைந்தபோதும் அது உதவிக்குச் செல்லவில்லை. அதன் இணைச் சிங்கத்தை மற்ற சிங்கம் சாகடித்துவிடுகிறது. பெண் சிங்கம் வெற்றி பெற்ற ஆண் சிங்கத்தைப் பின்தொடர்ந்து செல்கிறது. இதுதான் பெண்ணின் இயல்பு. பெண்ணுக்கு ஒரு தலைவன்தான் வேண்டும்; அடிமையல்ல. அவள் தன் நாயகனையே ஆராதிக்கிறாள்”.
இந்த ஆணின் வருகைக்குப் பிறகு வாண்டா செவரினிடம், “பெண் ஆணை நிமிர்ந்து பார்க்க எண்ணுகிறாள். ஆனால் என் காலடியில் உன் கழுத்தை வைக்கிறாய். அவள் பொம்மைகளை ரசிப்பாள். ஆனால் சலிப்படையும்போது தூக்கி வீசிவிடுவாள்.” என்கிறாள்.
செவரின் சவுக்கால் அடிபட அனுமதித்தான். சவுக்கடி அவனுக்குத் தகுதியான தண்டனையாகவும் அமைந்தது. ஒரு கட்டத்தில் விந்தையான குணாதிசயங்களை ஒதுக்கிவைத்துவிட்டுத் திரும்பிப் பார்த்தால் மகிழ்ச்சியான நிறைவான கணங்கள் என எதுவுமே இல்லை. ஆகவே இவற்றிலிருந்து வெளியேறிவிடுகிறான். வாழ்வில் அவனுக்கு விழுந்த அடி ஒரு தூண்டுதலை அளிக்கிறது. இதனால் கடும் உடலுழைப்பை மேற்கொள்கிறான். ஆம்! எல்லாவற்றிற்கும் தீர்வாக அமையும் அந்த மகத்தான காரியத்தில் அவனும் ஈடுபடத் துவங்கினான். ஆண்மையிழந்த வேதனையில் தத்தளித்த அவன் அதிலிருந்து மீண்டு அபாயகரமான வேலைகளைச் செய்து தன் ஆண்மையை மீட்டுக்கொண்டான். எனவே மீண்டும் இக்கதையை உதாரணம் காட்டிச் சொல்கிறேன். ஆண்கள் சொகுசாக வாழப் பிறந்தவர்கள் அல்ல; உணர்ச்சிகளுக்கு அடிமையாகக்கூடியவர்கள் ஆண்களே அல்ல.
செவரின் எதுவுமற்று சில நாட்கள் வாழ்ந்தான். ராணுவத்திற்குச் சேவை புரிய விரும்பினான். அது சாத்தியமாகவில்லை என்றாலும் அதுவே அவனது மீட்சியாக அமைந்தது. கடந்த காலத்தை நினைவுபடுத்தும் சித்திரத்தைக் கண்டபோதும் ஒரு புன்னகையால் அதைக் கடந்து சென்றுவிடக்கூடிய நிலையை எட்டியிருந்தான்.
சர்வ வல்லமை படைத்த தேவன் எவ்வளவு பெரிய முட்டாளாய் இருந்தால் ஒரு பெண்ணின் கையில் அவனை ஒப்படைத்திருப்பான்!
Comments