சமீபத்தில் தமிழில் வெளியாகியிருந்த காமம் சார்ந்த இரு நூல்களை வாசித்தேன். லதா எழுதிய ‘கழிவறை இருக்கை’ (அ-புனைவு) மற்றும் தரணி ராஜேந்திரன் எழுதிய ‘சாண்ட்விச்’ (புனைவு).
ஏனோ நமது மொழியில் எழுதப்படும் காமம் சார்ந்த எழுத்துகளில் மட்டும் ஆழம் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. இதில் சாரு நிவேதிதா மட்டும் விதிவிலக்கு. இருப்பினும், ‘தேகம்’ நாவலில் சில கேள்விகளை எழுப்பி, அது சார்ந்து இணையத்தில் தேட வைத்துவிட்டார். ஆனால் புனைவெழுத்துக்கு அதுதான் தேவை. செகாவே தனது பதிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்:
In 'Anna Karenina', not a single problem is solved, but they satisfy you completely because all the problems are correctly stated in them. It is the business of the judge to ask the right questions, but the answers must be given by the jury according to their own lights.'
ஆனால் அ-புனைவு நூல்களும் இதுபோலக் கேள்விகளை மட்டுமே அடுக்கிக்கொண்டு சென்றால் அது எனக்குத் தேவையற்றதாகத்தான் படும். என்னிடத்தில் கேள்விகளுக்குப் பஞ்சமில்லை. அதற்கான விடையைத் தேடித்தான் நான் அ-புனைவு நூல்களையோ அல்லது இணையக் கட்டுரைகளையோ நாடுகிறேன்.
‘கழிவறை இருக்கை’ நூல் மொத்தமும் நாம் கேட்டு வளர்ந்த அதே நவீனக் கால பெண்ணியப் புகார்தான். ‘பெண்களின் உச்ச இன்பங்களை ஆண்கள் கண்டுகொள்ளவே மறுக்கின்றனர்’. இந்தப் புகார் முன்வைக்கப்படுவதில் எனக்கு எந்த முரணுமில்லை. அதற்கான பல்வேறு பின்னணிகளைக் கட்டுரைகளாக அடுக்கிக்கொண்டே போய் கடைசியில் அதே புகாரில் வந்து நிற்கிறது. ஒரு சில கட்டுரைகளில் மட்டும் குடும்பத்தார் நிகழ்த்தும் பாலியல் துன்புறுத்தல் (அல்லது தீண்டல்). ஒரேயொரு கட்டுரை மட்டும் நிபந்தனைகள் சார்ந்த சமூக கட்டமைப்புகளை உடைத்துத் திறந்த உறவு பற்றி எழுதப்பட்டிருந்தது. அந்த ஒரு கட்டுரையைத் தவிர்த்து இதில் பாலியல் கல்வி என எதுவுமில்லை. காமம் குறித்த அடிப்படைகள் துளியும் அறியாதவர்களுக்கு இது செக்ஸ் எஜுகேஷன் நூலாக இருக்கலாம். ஆனால் அதன் பின் இருக்கும் உளவியலை அறிந்துகொள்ளத் துடிப்பவருக்கு இந்நூலிலிருந்து பெற்றுக்கொள்ள ஏதுமில்லை. புத்தகத்தின் ஓரிடத்தில்கூட ‘Clitoris’ மற்றும் ‘G Spot’ ஆகிய வார்த்தைகள் இடம்பெறவில்லை என நினைக்கிறேன்.
‘சாண்ட்விச்’ நாவலில் சிவாவும், நவிராவும் கலவி கொள்ளும் (கொள்ளாத) அந்த ஓர் அத்தியாயம் மட்டும் சிறப்பு. ஒட்டுமொத்த நாவலில் அந்த ஓரிடத்தில் மட்டும் செக்ஸ் எஜுகேஷன் இருந்ததை எண்ணும்போது, அதைச் சொல்வதற்கு சில பக்கக் கட்டுரைகளே போதுமானதெனத் தோன்றியது. அதற்குப் பின்பு எழுதப்பட்ட அத்தியாயங்கள் எல்லாம் புகார்கள்தான்.
நவீனப் பெண்ணியம், காமம் குறித்துக் கட்டமைத்து வைத்துள்ள கருத்தியல்களால் சிக்கலுக்கு ஆளாகப்போவது ஆண்கள்தான். அந்தக் கருத்தியல்கள் காமத்தின் இன்பத்தைக் கோருவதாக எண்ணி மேலும் இறுக்கமடைகிறது. வாழ்வில் காமத்தையே அனுபவித்திடாத ஒருவனது செவிகளில் தொடர்ந்து இப்புகார்களை வைத்துக்கொண்டே இருந்தால் அவன், தான் அப்புகாருக்கு ஆளாகக்கூடாது என்று எண்ணுவானே ஒழிய, கலவி என்பது ஓர் அனுபவம், பகிர்தல் என்பதையே அவன் மறக்க நேரிடும்.
துணையின் இன்பத்தைக் குறித்துத் துளியும் கவலை கொள்ளாமல் சுயநலமாகக் காமத்தில் ஈடுபடும்போதுதான் இருபாலரும் திருப்தி அடையக்கூடும். இதில் முன்விளையாட்டு சமாச்சாரமெல்லாம் தவறவிடக்கூடாத அடிப்படை. பொதுவாக, விறைப்புத்தன்மையை நீட்டித்து வைக்க முடியாத காரணத்தால் ஆண்கள் முன்விளையாட்டுகளைத் தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது. எனவே ஆபாசப் படங்கள், தினமும் கர மைதுனம் மற்றும் மது/புகை அடிமைகளை இங்கு ‘ஆண்கள்’ என்றே கணக்கில் கொள்ள வேண்டாம். ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரப்பவர்களை எப்படி ‘ஆண்கள்’ எனக் கருத?
Comments