ஓர் ஆரம்பக்கட்ட வாசிப்பாளராக பாலு என்ற எழுத்தாளரை கண்டடைந்ததிலிருந்து அவரது எழுத்தின் மீதும் அவரது பகிர்வுகள் மீதும் என்றுமே ஈர்ப்பும், ஆச்சரியமும் இருந்துள்ளது. நாளடைவில், அவர் இளம் வயதிலிருந்தே கொண்ட ஆழ்ந்த வாசிப்பனுபவமும் அவரது இசை பயிற்சியும் இதற்கான காரணமாக இருக்கக்கூடும் என்று கருதினேன். இவ்வாறாக அவரின் இந்த முதல் நாவலான 'சொனாட்டா'வை எதிர்பார்த்து வாசித்து முடித்தேன்.
இதில் வரும் மைய கதாபாத்திரமான ருத்ராவின் மனநிலையை நம்முள் கடத்தி அவன் விரும்பும் மற்றொரு பரிணாம வளர்ச்சியை எட்டும் தருணத்திற்குள் நடக்கும் போராட்டங்களை பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்வோடு பொருத்திப் பார்ப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றே கருதுகிறேன். நான் இந்த நாவலில் மிகவும் ரசித்த பகுதியாக அமைந்தது பச்சையப்பன் கல்லூரியும் அதன் மாந்தர்களும். அதில் வரும் ஆரோக்கிய தாஸ், பிரதாப் குழுவின் தோழமையும் அவர்களின் எண்ணங்களும், செயல்களும் அவ்வளவு அழகாகவும், நேர்த்தியாகவும் அமைந்தது. மேலும் அவர்களின் நட்பும், பாந்தமும் அடுத்த தலைமுறையிலும் நீண்டு ருத்ராவிற்கு உதவுவது நெகிழ்வை உண்டாக்குகிறது. இதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்கள் இணையத்தில் அறியப்பட்ட ‘அடோனிஸ் - ஜெஃப்ரி’ பண்புகளை ஒத்திருந்தது நாவலுக்கு மேலும் சுவாரஸ்யத்தை அளித்தது.
இந்நாவலின் சில உன்னத வரிகளாக நான் கண்டவை:
"நமக்கான மதிப்பை சுயமாகத்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனும்பட்சத்தில் நான் எப்படி எனக்குப் பிடிக்கிறதோ அதைச் செய்துகொண்டிருக்க முடியும்?"
"பேனாவின் மையில் கண்ணீரைக் கலந்து எழுதப்பட்ட சிம்ஃபனிகளைவிட வியர்வை கலந்து எழுதப்பட்ட சிம்ஃபனிகளுக்கே என் சேவி கிறங்கும்"
"எதிர்மறைக்கு இணையாக நேர்மறையின் பட்டியலைக் காணும்போது மரணம் ஒரு தசாப்தத்திற்கு தள்ளிப்போகும்"
"உடல் வலிமை பெறுவதன் மூலம் உண்டாகும் அகங்காரம் மொத்தத்தையும் சேர்த்து வைத்து எவரெஸ்ட் உச்சிக்குச் சென்றதும் கொன்றுபோட வேண்டும்"
"விளையாட்டு வீரனாக இருப்பது என்றுமே ஒரு வரம். விளையாட்டு, உணர்ச்சிவசப்படக்கூடிய எனது அனைத்து குணாதிசயங்களையும் உடைத்துவிட்டது.உணர்ச்சி சார்ந்து சிந்திக்கும் கோழைத்தனத்தை முற்றிலும் தூக்கியெறிய அடிக்கடி மைதானத்திற்கு வர வேண்டும்"
"ருத்ரா சார். ஆம்பளைங்க குப்பைல உழலப் பிறந்தவங்க. மூனு மாசம் இங்கே இருந்தியே, ஒரு நாளாவது நீ டௌனா ஃபில் பண்ணும்போது நான் உனக்கு எமோஷனல் சப்போர்ட் கொடுத்திருக்கேனா? இல்லை.இருந்தாலும் நீ மீண்டு வரல! ஆணுடைய கண்ணீரைத் துடைக்க யாரும் வர மாட்டாங்க. நம்ம கண்ணீரைத் துடைக்க யாரையும் நாம அனுமதிக்கவும் கூடாது"
இவ்வகையில் அவரது முதல் நாவலான ‘சொனாட்டா’வின் மீது நான் கொண்ட எதிர்பார்ப்பைச் சிறப்பாக நிறைவு செய்தது.
அடுத்த படைப்பிலும் சிறக்க அன்பும், வாழ்த்துகளும், பாலு.
- மனோஜ் குமார்.
புத்தகக் காட்சிகளில் ‘சொனாட்டா’ வாங்க
திருநெல்வேலி 82,83
விழுப்புரம் 88
மயிலாடுதுறை 73,74
Comments