இலக்கியங்கள் மக்களுக்காகவா, இல்லை, கலைக்காகவா என்கின்ற விவாதம் காலம் காலமாக எல்லா காலகட்டங்களிலும் பேசப்பட்டு வருகிறது. நவீன இலக்கியத்தில் சிறுகதையும் நாவலும் தனி மனிதர்களின் அக உணர்வுகளையும், அவர்களின் பால் உள்ள தத்துவ விசாரங்களை ஒவ்வொரு முறையும் அலசி ஆய்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் பல படைப்புகள் எழுதப்பட்டு வருகிறது.
அந்த வகை படைப்புகளில் ஒன்றாகத்தான் இன்றைய தலைமுறையின் எழுத்தாளராக அறியப்படும் எழுத்தாளர் பாலு எழுதிய "சொனாட்டா" நாவலைப் பார்க்க வேண்டி உள்ளது. இந்த நாவலின் முன்னுரையிலே அவர் குறிப்பிட்டுள்ளபடி நாவலில் உள்ள கதாபாத்திரத்திகளில் தானும் நண்பர்களும் இருப்பதாகவும், ஆனால் அவை முழுமை ஆனது இல்லை என்றும் பேசி விடுகிறார்.
"சொனாட்டா" நாவலைப் பொருத்தவரை இன்று தனி மனிதனின் ஒழுக்கம், அறம் சார்ந்து அவர்களுக்குள் வினையாற்றும் காமத்தினை அவர்கள் எவ்வாறு கடந்து இந்த சமூகத்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் திறம்படக் கையாண்டு எழுதி உள்ளார்.
பாலு நாவலில் பல பக்கங்களை உயிர்ப்புடனும் உண்மைக்கு நெருக்கமாக எழுதியிருப்பது பாராட்டத்தக்கது.
இன்றைய இளைஞர்களின் மிகப்பெரிய பிரச்சினையை இந்த நாவலில் மையப்படுத்தி அதற்கான தீர்வையும் சொல்ல முற்பட்டு இருப்பது ஒரு வகையில் ஆறுதலான விஷயம்தான். முன்பெல்லாம் புரட்சியை நோக்கி இளைஞர்களும் மக்களும் நகர்ந்த காலங்களில் இவ்வாறான பிரச்சனைகள் அதிகம் பேசப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்று எல்லோர் கையிலும் தொழில்நுட்ப வளர்ச்சியால் மொபைல் போனால் எல்லாமே பரவலாக்கப்பட்டு நொடிப்பொழுதும் காமத்தில் கலந்து கழியும் அளவுக்குக் கொட்டிக் கிடக்கிறது.
இதில் வருங்கால தலைமுறை எப்படி இத்தனையையும் ஜீரணித்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்கின்ற ஐயம் ஒவ்வொரு வாசகனுக்கும் எழுத்தாளருக்கும் உண்டு.
எழுத்தாளர் பாலு ‘சொனட்டா’ நாவலின் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் முழுமையாக உடலுக்கும் மனதிற்குமான போராட்டத்தைப் பேசியிருக்கிறார். அந்த அத்தியாயத்தைப் போல ஏற்கனவே பலர் எழுதியும் உள்ளனர். அந்த அத்தியாயும் நாவலின் மையமாக மீண்டும் மீண்டும் வாசிக்கக்கூடிய ஒன்றாக அமைத்துள்ளது.
நாவலின் எழுத்து முறை விறுவிறுப்பான கதை சொல்லும் பாணியில் திறம்பட நகர்த்தி இருக்கிறார். நாவலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளபடி எது ஒன்றை முதல் முறை நீ தொடும்பொழுது ஆனந்தம் அடைகிறாயோ , அதை ஆயிரமாவது முறை தொடும் பொழுதும் உனக்குள் ஆனந்தமும் சிலிர்ப்போம் இருந்தால் அதுவே நாம் செல்ல வேண்டிய பாதை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கும் பாலுக்கு வாழ்த்துகள்.
இன்னும் பல வகையான படைப்புகளை எழுத்துலகம் இவரிடம் எதிர்பார்க்கலாம்.
Comments