‘A kiss can be a comma, a question mark or an exclamation mark!’
அமெரிக்கப் பெண் எழுத்தாளர் Kate Chopin எழுதிய ‘The Kiss’ சிறுகதையை வாசித்தேன். பேரழகியான நத்தாலியாவுக்கு பணக்காரன் ப்ரன்டெயினுடன் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. நத்தாலியாவுக்கு ப்ரன்டெயின் மீது சற்றும் ஈர்ப்பில்லையெனினும் வசதியான வாழ்க்கையை அனுபவிக்க திருமணத்துக்கு ஒத்துக்கொள்கிறாள். அழகனும், நத்தாலியாவின் காதலனுமான ஹார்வி அவள் வீட்டினுள் நுழைந்து ப்ரன்டெயின் கண் முன்பே அவளை யதார்த்தமாக உதட்டில் முத்தமிடுகிறான். சங்கடத்தில் கூனிப்போன ப்ரன்டெயின் அங்கிருந்து விடைபெறுகிறார்.
ப்ரன்டெயினை அசௌகரியப்படுத்திவிட்ட குற்றவுணர்ச்சியில் ஹார்வியை வாய்க்கு வந்தபடி ஏசுகிறாள் நத்தாலியா. திருமண நிகழ்வில் ப்ரன்டெயினிடம், “அவன் (ஹார்வி) சிறுவயதிலிருந்தே என்னுடைய குடும்ப நண்பன். சகோதரன் போலானவன். அன்று நடந்ததை நீங்கள் தவறாக எண்ண வேண்டாம்” எனத் தலைகுனிந்து கூறுகிறாள்.
திருமண நிகழ்வின்போது ப்ரன்டெயின் இல்லாத நேரமாகப் பார்த்து நத்தாலியாவைத் தேடி வருகிறான் ஹார்வி. “உன் கணவன் என்னிடம் உனக்கு முத்தம் கொடுக்கச் சொல்லி அனுப்பியிருக்கிறான். நீ என்னைப் பற்றி அவனிடம் என்ன சொன்னாய் என்று தெரியவில்லை. ஆனால் இந்தத் திருமணத்தினால் நமக்கிடையே உள்ள காதலைத் தடுக்க அவன் விரும்பவில்லை” என்கிறான் ஹார்வி. இதைக் கேட்டதும் நத்தாலியாவுக்கு உள்ளம் பொங்குகிறது. அவள் உதடுகள் ஆசையில் துடிக்கின்றன. ஹார்வியின் தழுவலுக்காக ஏங்குகின்றன. அவளாகவே முத்தத்தை முன்னெடுக்கிறாள்.
அவளைத் தடுத்து நிறுத்திய ஹார்வி, “ஆனால் அவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல மறுத்துவிட்டேன். அதை உன்னிடம் மட்டுமே என்னால் சொல்ல முடியும். நான் பெண்களை முத்தமிடுவதை நிறுத்திவிட்டேன். அது ஆபத்தானது என்பதால்” என்று சொல்வதுடன் கதை முடிகிறது.
*
‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ பழமொழியைப் போல தனக்கு என்ன வேண்டும் என்பதை அறியாத பெண்ணின் கதை. நத்தாலியாவுக்கு ப்ரன்டெயினும் வேண்டும், ஹார்வியும் வேண்டும். அதன்பொருட்டு இருவருக்குமே துரோகமிழைக்கிறாள். ஆகவே இறுதியில் ஹார்வியால் நிராகரிக்கப்படுகிறாள். நத்தாலியாவை நிராகரிக்கும் ஹார்வியின் தைரியம், பொருள் வசதி படைத்த ப்ரன்டெயினிடம் இல்லாததை இருவிதமாகப் பார்க்கலாம். ஒன்று, திருமண ஏற்பாடு உண்டாக்கும் சமூக அழுத்தம். மற்றொன்று, பேரழகி மீது ஆண் கொள்ளும் மாயை. அது ஏற்படுத்தும் பலவீனத்தினால் ப்ரன்டெயினால் நத்தாலியா சொல்லும் பொய்யைக்கூட நம்ப முடிகிறது.
1890 காலகட்டத்தில் நிச்சயமற்ற பொருளாதார சூழலிலிருந்து பெண்கள் தப்பிச் செல்லும்பொருட்டு ஆத்மார்த்தமான காதலனைத் தவிர்த்து பண வசதி படைத்தவனை மணந்ததாகச் சொல்லப்படுகிறது. ‘The Kiss’ வாசிக்கும் நவீன வாசகனுக்கு, இக்காலத்தில் பெண் எவ்வளவு பொருளீட்டினாலும் அவளின் மணத் தேடல் மேலும் பொருள் வசதி படைத்தவனைச் சார்ந்தே இருப்பதைக் கவனிக்கும்போது இது சமூக, பொருளாதார சிக்கல் என்பதைத் தாண்டி பெண்களின் உயிரியல் இயல்பே தன்னைவிட உயர்ந்தவனிடம் சரணடைவது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
Comments