“மாப்ள, இப்போ ஒரு ஸ்க்ரிப் எழுதிட்டு இருக்கேன். நல்லா யங்ஸ்டர்ஸை கவர் பண்ற மாதிரி. ஃபுல்ல மிசாஜினிதான். பொண்ணுங்களோட முகத்திரையை கிழிக்குற மாதிரி இருக்கும் படம்” என்றான் நண்பன் ஒருவன். தற்போது அவன் உதவி இயக்குநராக பணியாற்றுகிறான்.
“நீ எப்படி வேணா படம் எடு. ஆனா அது ஒரு அஜெண்டா ஃபில்ம்மா ஆகிடாம பார்த்துக்கோ. அதே மாதிரி வியாபாரத்தைப் புரிஞ்சிக்கிட்டு படம் பண்ணு. இங்க ஒரு ஆம்பளை படம் பார்க்கணும்னு நினைச்சுட்டானா அவனும் அவன் ஃப்ரெண்ட் ஒருத்தனும் படம் பார்த்துப்பாங்க. ஆனா ஒரு பொண்ணு படம் பார்க்கணும்னு நினைச்சுட்டானா அந்தக் குடும்பத்துல நாலு பேருமே படம் பார்ப்பாங்க. உன்னை மிசாஜினி கதையே எழுத வேண்டாம்னு சொல்லல. அது எழுதுறதும் எழுதாததும் உன் விருப்பம். ஆனா அதைப் பெண்களுக்குப் பிடிக்கிற மாதிரி எழுது. உன் கதைல மிசாஜினி இருக்குன்னு அவங்க கண்டுப்பிடிக்கவே கூடாது. ரீசன்டா ஒரு ரெண்டு லவ் ஸ்டோரி ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆச்சு. ஒன்னு ‘லவ் டுடே’, இன்னொன்னு ‘பேபி’. ரெண்டு கதைலயுமே மிசாஜினி இருக்கு. ஆனா அந்தப் படத்தை அதிகம் பார்த்து ரசிச்சது பெண்கள்தான். ரெண்டு படமும் பட்ஜெட்டைவிட பத்து மடங்கு லாபம். இது ஒரு மாதிரி கத்தி மேல நடக்குற கதைதான். அதுனால பார்த்து…” என்றேன்.
சினிமா, தொலைக்காட்சி மட்டுமின்றி எல்லா வியாபாரமுமே பெண்களை மையப்படுத்தித்தான் நடக்கின்றன. தமிழ் சினிமாவில் ஆண்களை மட்டுமே டார்கெட் ஆடியன்ஸாக வைத்து கடைசியாகப் பெருவெற்றி அடைந்த படம் எதுவெனத் தெரியவில்லை. அதேபோல் தீவிர பெண்ணியம் பேசும் படத்திற்கோ அல்லது ஹீரோயின் சப்ஜெக்டிற்கோகூட இங்கு இடமில்லை. பாலினம், மதம், ஜாதி சார்ந்து எடுக்கப்படும் அஜெண்டா படங்களின் பருப்பு தென்னிந்திய சினிமாவில் வேகாது. அப்படி சமீபத்தில் வியாபார ரீதியாக பெரும் அடியைச் சந்தித்த படம்தான் #MenToo.
படம் வெளியான சில நாட்களிலேயே மோசமான விமர்சனம் காரணமாகத் திரையரங்குகளிலிருந்து தூக்கிவிட்டார்கள். ஆஹா ஓடிடியில் வெளியான பிறகும்கூட இப்படம் ஈ அடித்துக்கொண்டிருக்கிறது. பெண்ணியம் எனும் பெயரில் ‘ஆண் வெறுப்பு’ பேசும் போலி பெண்ணியவாதிகள் செய்யும் அதே தவற்றைத்தான் இவர்களும் செய்திருக்கின்றனர். ஆனால் இப்படத்தில் இதுவரை சினிமாவில் யாரும் தொடாத சில முக்கியமான விஷயங்களும் பேசப்பட்டுள்ளன.
படத்தில் கதாநாயகியின் காதலி ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியன். ஆண்களைக் கேலி செய்து கைதட்டல் வாங்குபவர். இவரின் ‘ஆண் வெறுப்பு நகைச்சுவைகள்’ எதுவுமே நாயகனுக்குப் பிடிக்காது. இதுபோன்ற தம்பதி ஒருவரை நிஜ வாழ்வில் கண்ணால் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் அடையாறு, பெசன்ட் நகர், மைலாப்பூர் பகுதிகளைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்ஸர்ஸ் இப்படியானவர்களாகத்தான் இருக்கின்றனர். காதலி இல்லாதபோது, “இந்தப் பொண்ணுங்க ஏன் இவ்ளோ கொடைச்சலா இருக்காங்களோ!” எனப் புலம்பிவிட்டு, காதலி திரும்பியதும் பெண்ணிய முகமூடியை அணிந்துகொண்டிருக்கும் பல காதலர்களை அறிவேன்.
படத்திலுள்ள ஆண்கள் படம் முழுக்கவே பெண்களை வசைபாடுகின்றனர்; குறை சொல்கின்றனர். ஆனால் சொல்லிக்கொள்ளும்படியாக அவர்களிடம் ஒரு பண்புகளுமில்லை. தினமும் பாரில் அமர்ந்து குடிக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் பேசும் சில பொருட்படுத்தக்கூடிய விஷயங்கள்கூட முக்கியத்துவம் இழக்கின்றன.
மூன்று ஆண்கள் கையில் பீர் பாட்டில் வைத்துக்கொண்டு சாலையில் நடந்து செல்கின்றனர். ஒரு பெண் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறாள். அதில் ஒருவன் அப்பெண்ணுக்கு உதவும் நல்லெண்ணத்துடன் அவளருகில் செல்கிறான். அப்பெண் அவனது நிலையறிந்து “உடனே இங்க இருந்து போ, இல்லைன்னா கத்திக் கூச்சல் போடுவேன்” என எச்சரிக்கிறாள். அப்போதும் அவன் நகராததால் பெப்பர் ஸ்ப்ரேவை அவன் மீது அடிக்கிறாள். இக்காட்சி மூலம் பெண்கள் எவ்வளவு குரூரமானவர்கள் எனச் சித்தரிக்கின்றனர். உண்மையில் பிரச்சனை பாலினத்தில் இல்லை; மதுவில். உலகிலுள்ள ஒட்டுமொத்த குற்றங்களை எடுத்துப்பார்த்தோமானால், 50% பேர் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது மது அருந்தியிருக்கின்றனர்; குற்றச்செயலால் பாதிக்கப்பட்டோரில் 50% பேர் சம்பவத்தின்போது மது அருந்தியிருக்கின்றனர். ஆகவே எவ்வளவு தூய்மைவாதியாக இருந்தாலும் மது அருந்தியிருப்போரிடம் பெண்கள் ஒரு விலக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியமானது.
அலுவலகங்களில் பெண்கள், பெண் என்ற ஒரே காரணத்திற்காகப் பல சலுகைகள் பெறுவதும் நிகழ்கிறது. என் அண்ணனுக்கே இது நடந்திருக்கிறது. என் அண்ணன் ஒரு தீவிர உழைப்பாளி; வேலைக்காரன். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் அவன் பணியாற்றிய அலுவலகம் ஒன்றில் சம்பள உயர்வு நாள் வந்தது. அதில் ஒரே அணியைச் சேர்ந்த ஒரே வேலையைச் செய்யும் நான்கு பேருக்கு வெவ்வேறு விதமான ஊதிய உயர்வு வந்திருந்தது. என் அண்ணனுக்கு ரூ.800. மற்றொருவனுக்கு ரூ.500. வட இந்தியாவைச் சேர்ந்த வெள்ளைத் தோல் கொண்ட பெண்ணுக்கு ரூ.4,000. இது பல இடங்களில் நடப்பதுதான். #MeToo புரட்சிக்குப் பிறகு இது இன்னும் சிக்கல் நிறைந்ததாக மாறியிருக்கிறது. இப்பிரச்சனையை இப்படத்தில் பேசியிருக்கிறார்கள். பொது ஜனத்திற்குப் போய்ச் சேர வேண்டிய முக்கியமான காட்சிகள் அவை. ஆனால் ஒரு அஜெண்டா படத்தில் வந்து மாட்டிக்கொண்டு கேட்பாரற்று கிடக்கின்றன.
ஒரு பெண்ணியவாதியைத் திருமணம் செய்துகொண்டால் ஒருவன் என்ன மாதிரியான அவலங்களையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதையும் இதில் பகடியாகச் சொல்லியிருக்கின்றனர். சில காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தன. மனைவி (மாதர் சங்கத் தலைவி) தொலைப்பேசியில் அழைப்பாள். கணவன் (Bar Owner) அதை எடுத்து, “என்ன?” என்று பதட்டத்துடன் கேட்பான்.
“ஏய் என்ன சத்தமா பேசுற?” என்பாள் மனைவி அதிகாரத் தோரணையில்.
“ஓத்த வைடீ போனை” எனக் கடுப்பாகிவிட்டுத் துண்டித்துவிடுவான் கணவன். இந்தக் காட்சியை மிகவும் ரசித்தேன். நானே என் வாழ்வில் நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறேன் என்பதால்.
கணவன் திட்டிவிட்டான் என்ற அற்பக் காரணத்தால் டொமஸ்டிக் வயலன்ஸ் எனப் புகாரளித்து விவாகரத்து கோருவாள் மனைவி. கணவனின் சொத்தில் பாதிப் பங்கை மனைவிக்குக் கொடுக்க வேண்டும் என்பதால் கணவன் Bar-ஐ விற்க வேண்டிய நிலை வரும். அப்போது மனம் தளராது எல்லா வலியையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு மது அருந்த வரும் இளைஞர்களுடன் புன்னகைத்துக்கொண்டிருப்பார் அந்த கணவன். முழு நீளப்படமாக எடுத்திருக்க வேண்டிய முக்கியமான பிரச்சனை இது.
படத்தில் ஜோர்டன் பீட்டர்சனின் வாசகங்களையெல்லாம் வார்த்தை மாறாமல் அப்படியே வசனமாக வைத்திருக்கிறார்கள். அதனாலேயே படம் பார்த்த உணர்வு இல்லாமல் யூடியூப் காணொளி பார்த்தது போல இருக்கிறது.
Comentários