இயக்குநர் வெற்றிமாறன் 5 தேசிய விருதுகளை வென்றுவிட்டார். ஒட்டுமொத்த சினிமா மோகக் கூட்டமும் வெற்றிமாறன் அடைந்த நிலையை அடைந்துவிட வேண்டுமெனத் துடித்துக்கொண்டிருக்கின்றனர். தற்கால சிறந்த இயக்குநர்களில் ராம், மிஷ்கின் போன்றவர்கள்மீது கூடப் பலருக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் வெற்றிமாறனைப் பொருத்தவரையில் தொழில்நுட்பங்கள் சார்ந்த சிக்கல்களைத் தவிர வேறு எவ்வித விமர்சனங்களையும் காண்பது கடினம். 14 ஆண்டுகளில் 5 படங்களில் அவர் அடையாத புகழில்லை.
இத்தனை ஆண்டுகளில் அவரது படங்களைப் பொழுதுபோக்க நினைக்கும் நேரங்களில் பார்த்துக் கொண்டாடியிருக்கிறேனே தவிர, அவரது நிலையை அடைய வேண்டுமென ஒருமுறைகூட எனக்குத் தோன்றியதில்லை. முதன்முறையாகக் கடந்த சில நாட்களாக அவர் அடைந்த ஒரு பெரும் உச்சத்தை அடைய வேண்டுமெனத் தோன்றுகிறது. கடின உழைப்பு இருந்தால் அது சாத்தியம் என்ற காரணத்தாலேயே இக்கனவைக் காண்கிறேன். ஆனால் அவர் அடைந்ததில் பிறர் கண்ட உச்சம் வேறு; நான் கண்டது வேறு.
வெற்றிமாறன் ‘பொல்லாதவன்’ படத்திற்கு முன்பு வரை ஒருநாளுக்கு 180 சிகிரெட் வரை பிடித்ததாகச் சொல்லியிருக்கிறார். அதுகூட அவர் வைத்துக்கொண்ட கணக்கில்லை என்பதால் நம்புவதற்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் உள்ளது. ஆனால் அவர் தன்னை எவ்வளவு வதைத்துக்கொண்டார் என்பதன் உவமையாகவே அக்கணக்கை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் உடல் நம்மிடம் பேசத் துவங்கும்போது நாம் அதற்குச் செவி சாய்க்க வேண்டும். அதை அவர் சரியாகவே செய்திருக்கிறார். இதுகுறித்து வெற்றிமாறன் சொல்லும் ஒரு முக்கியமான விஷயம், ‘முதலில் நாம் அதற்கு அடிமையாகியிருக்கிறோம் என ஒத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நம்மைவிட வலிமை கூடுதல் என்பதால் நாம் அதனிடம் போட்டியிட்டு விளையாடக்கூடாது. அதனை வெற்றியாளராக அறிவித்துவிட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, நான் புகையை விட்டுவிட்டேன்; ஆனால் 2 பாக்கெட் சிகிரெட்டை மட்டும் எனது வீட்டில் வைத்துக்கொள்கிறேன் எனப் பிடிவாதம் பிடிக்கக்கூடாது. அது, தோன்றும்போது எடுத்துப் புகைப்பிடிப்பதற்கான சாக்குப்போக்கே அன்றி வேறெதுவுமில்லை’ என்கிறார்.
மேலும் அடிமைத்தனத்திலிருந்து வெளிவரும் செயல்முறை குறித்து அவரிடம் ஒரு டாக்டர் பகிர்ந்துகொண்டதாக இவ்வாறு கூறுகிறார்; ‘முதலில் நாம் புகைப்பிடித்தலை நிறுத்துவதாக ஒரு தீர்மானம் எடுப்போம். அதிகபட்சம் ஒரு வாரம் புகைப்பிடிக்காமல் இருக்கலாம். பிறகு மீண்டும் ஒரு வாரம் பழைய நிலைக்குத் திரும்புவோம். அந்த ஒரு வாரம் நம்மையே எண்ணி நாம் கூசிப்போவோம். மீண்டும் புகையைக் கைவிடுவோம். இப்போது ஒரு மாதம் வரை புகைப்பிடிக்காமல் இருக்க முடியும். அந்த ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புதல்; மீண்டும் கூசிப்போதல்; மீண்டும் கைவிடுதல். இந்தச் செயல்முறை சுமார் 7 முறை தொடர்ந்து பிறகுதான் ஒருவனால் முழுமையாக அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர முடியும். அடிமைத்தனத்திலிருந்து வெளிவர நினைப்பவர், வெறும் அவ்வாறு நினைத்துச் செயல்படுத்தினால் மட்டும் போதாது. வாழ்க்கைமுறையில் பெறும் மாற்றங்களை நிகழ்த்த வேண்டும். நான் புகையை விட்ட பிறகு முதலில் உடற்பயிற்சி செய்யத் துவங்கினேன். அன்றிலிருந்து ஆரோக்கியமான உணவை மட்டும் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். சில ஆண்டுகள் கழித்து உடற்பயிற்சியைவிட்டு யோகாவிற்கு மாறினேன். பிறகு மிகவும் ஒள்ளியாகிவிட்டேன். இவ்வாறு நான் எனது உடலை Experiment செய்துகொண்டே இருந்தேன். புகையைவிட்ட சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் காலையுணவு சாப்பிட்டு முடித்து ஒரு கோப்பை தேநீர் அருந்தியதும் திடீரெனப் புகைப்பிடிக்கலாமெனத் தோன்றியது. ஒரு கணம் திடுக்கிட்டேன். இப்படித்தான் நான் என் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அதனிடம் சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறேன். புகைக்கு அடிமையாகியிருக்கும் ஒருவன் 10 ஆண்டுகளாவது புகைப்பிடிக்காமல் இருந்தால்தான் அவன் Non-Smoker. மற்றபடி, அவன் சில ஆண்டுகளாக புகைப்பிடிக்காமலிருக்கும் Smoker என்றே கருதப்படுவான். 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது அவனது Brain Systemலிருந்து வெளியேறும்.
ஓர் இயக்குநர் உடலைப் பேணுவது மிகவும் அவசியமென இயக்குநர் சத்யஜித் ரே, பாலு மகேந்திராவிடம் சொன்னதாக வெற்றிமாறன் கூறியிருப்பார். இயக்குநர் என்பவன் படப்பிடிப்பு தளத்தில் தலைவனாக இருக்க வேண்டும். மலையேற வேண்டுமெனில், அவன்தான் அப்பயணத்தில் முன்னிருக்க வேண்டும். தலைவன் பலமாக இருந்தால்தான் ஒட்டுமொத்த பணியாளர்களையும் வேலை வாங்க முடியும். தனது உடலை வதைத்துக்கொள்ளும் எவனுக்கும் தலைவனாகக்கூடிய தகுதியில்லை. ‘பொல்லாதவன்’ படம் பலருக்கும் பிடித்திருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரையில் ‘ஆடுகளம்’தான் ஒரு முழுமையான சினிமா. ஏனெனில் ‘ஆடுகளம்’ படத்தின்போது ஓர் இயக்குநருக்குத் தேவையான அடிப்படைத் தகுதி என்னிடம் இருந்தது. ‘பொல்லாதவன்’ படத்தின்போது நான் புகைக்கு அடிமையாகியிருந்ததால் என்னால் முழுமையான ஈடுபாட்டுடன் அப்படத்தில் பணிபுரிய முடியவில்லை.
யாராவது என்னிடம், ‘வாழ்வில் என்ன சாதித்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டால், புகையைக் கைவிட்டேன் எனப் பெருமையுடன் சொல்லிக்கொள்வேன். ஏனெனில், அது அவ்வளவு எளிதல்ல.’
உண்மையில், அடிமைத்தனத்திலிருந்து வெளிவர வேண்டுமானால் அதை நம் வாழ்விலிருந்து நீக்குதல் எனும் செயல்முறை சாத்தியமற்றது. அதை வேறொன்றால்தான் நிரப்ப முடியும். புகைப்பிடிக்காமல் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பதற்குப் புகையைப் பிடித்தே விடலாம். மாறாக, அச்சமயத்தில் வேறொன்றில் நமது கவனத்தை முன்வைப்பதே இதற்கான சிறந்த பயிற்சியாகும். இதற்கு ‘கவனத்தைத் திசைதிருப்புதல்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்கூட தன்னம்பிக்கைக் குறைபாட்டினைத்தான் காண்கிறேன். கைவிடுதலின் உறுதி மனதில் இருக்க வேண்டுமே தவிர, எந்நேரமும் அதையே சிந்தித்துக்கொண்டிருப்பது நம்மை எங்கும் கொண்டு சென்று நிறுத்தாது.
இந்தப் புகை விஷயத்தில் வெற்றிமாறன் எனக்குப் புரிய வைத்த மிகப்பெரிய பாடம் எதுவெனில், அடிமைத்தனத்தில் வெளிவரும்போது அதற்கு வெற்றி என்ற இலக்கே இல்லை. ட்ராவுக்காக விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் வீரனைப் போல ஒருவன் தோல்வியிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டே இருப்பதுதான் இங்கு வெற்றி. டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது நாளின் 90வது ஓவர் வரை அவ்வீரன் போராட வேண்டிய அவசியம் இருப்பது போல, அடிமைத்தனத்திலிருந்து வெளிவர விழைபவன் மரணம் வரை அதிலிருந்து தப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அவனுக்குக் கிடைக்கும் பேரமைதியே இதன்மூலம் அவன் ஈட்டிக்கொள்ளும் மாபெரும் செல்வமாகும்.
நல்லப் பதிவு பாலு. கொஞ்சம் பெருசா, அப்ஸ்டிராக்ட்டா சொல்லலாமா? வெற்றிமாறன் ஒரு naive expressionஇல் இருந்து ஒரு conscious, profound உலகியல் பார்வையை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்னு?