இந்த அற்புதமான மாலையில்தான் எனது இரண்டாவது புத்தகத்தை, அதாவது முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிடத் திட்டமிட்டிருந்தேன். இன்னும் சில மணி நேரங்களில் கொரிய நேரப்படி கிம் கி டுக்கின் பிறந்தநாள் வந்துவிடும். ஆனால் இந்தக் கொண்டாட்ட உணர்வை இரு நாட்களுக்கு முன்பிருந்தே அனுபவிக்க நேர்ந்தது.
புத்தகத்தைக் கையில் வாங்கிவிட்ட கொண்டாட்டத்தின்போது நண்பன் விஜய், ”Literatureல உங்க Motive என்ன?” என்றான். அந்தக் கேள்வி எனக்குத் துளியும் புரியவில்லை. அப்படி ஏதாவது இருக்குமா என நினைத்துக்கொண்டு, அவனைத் தெளிவாகக் கேட்கச் சொன்னேன். ”இல்ல… பணத்துக்காகவா, புகழா, இல்ல தீவிர ரைட்டர் ஆகனுமா…?” என்று அடுக்கிக்கொண்டே போனான். இலக்கியத்தில் மட்டுமல்ல, வாழ்வில் செய்யும் எல்லாவற்றிற்கும் ஒரேயொரு நோக்கம்தான்; கொண்டாட்டம். ‘நமதிந்தக் கொண்டாட்ட மனநிலையை இலக்கியம், எழுதுவது, வாசித்தல் மூலம் பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தத் தொகுப்பின் பெயர் ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ என்றே இருந்தாலும் இக்கதைகளிலுள்ள துயரம் புன்னகைக்க வைத்துக் கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச்செல்லும் நோக்கத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது’ என்றேன். மிகவும் நிறைவான பொழுதில் சோக இசையைக் கேட்டு தன்னை மேலும் மகிழ்வித்துக்கொள்ளும் கதைதான் இது.
இன்று காலைகூட அம்மாவின் பிணத்தை அறையில் வைத்துக்கொண்டு, சிகையலங்காரம் செய்தபடியே தன் அழகை மேலும் கூட்டிக்கொள்ள முயன்ற மகளைப் பற்றி அறிய நேர்ந்தது. சூழ்நிலைகள் துயரத்தின் துதியைப் பாடினாலும் மனிதர்கள் அவற்றிற்குத் துன்பமடைவதில்லை. அச்சூழ்நிலையை உண்மையில் ‘துயரம்’தான் என நம்பவைக்கும் வேலையைத்தான் கலைஞர்கள் காலங்காலமாக செய்துகொண்டே இருக்கின்றனர். இந்த நம்பவைக்கும் சிறுபிள்ளைத்தனத்தில் தோல்வியடையும் கலைஞர்கள்தான் உண்மையில் வெற்றி பெறுகின்றனர்.
இக்கதைகளைத் தொகுத்து முடித்துக் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதனை அணுகியபோது முதலில் சொன்ன நிபந்தனை, ‘இப்புத்தகத்தில் யாருடைய உரையும் இருக்காது; என்னுரை உட்பட’. புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பகிர நினைத்த நாளில் புத்தகத்தைப் பற்றி அல்லாமல் மனம் போன போக்கில் எதையோ எழுதிக்கொண்டிருந்தேன்; இப்போது எழுதிக்கொண்டிருப்பது போல. எழுதிய இரண்டு பக்கங்கள் ஏனோ மனதிற்கு நெருக்கமாக இருந்ததால் அதை ‘பிறழ்விசை’ என்ற தலைப்பில் என்னுரையாக இணைத்துள்ளேன். அதன் முதல் பத்தியைக் கீழே கொடுக்கிறேன்:
‘பிரபஞ்சத்தின் பேரின்பம் எதுவென வினவினால் சிந்தைக்கு இடமின்றி ஒழுக்கம் என்பேன். பிறரால் கட்டாயப்படுத்தப்படாமல், சுயமாகத் தேர்ந்தெடுத்துக் கடைப்பிடிக்கப்படும் ஒழுக்கத்திலிருந்து கிடைக்கக்கூடிய நிறைவே எனக்குப் பேரின்பம். சிறிய விஷயங்களிலிருந்து தென்படக்கூடிய அழகியலைச் சிற்றின்பம் என்றே சொல்லத் தோன்றுகிறது. அவை நம் வசம் ஆவதற்காக நம்மிடமிருந்து எவ்வித எத்தனங்களையும் கோருவதில்லை. ஆனால் ஒழுக்கத்தாலும் பயிற்சியாலும் கிடைக்கும் சந்தோஷத்திற்கு எப்படி விலையுண்டோ அதேபோல் அதன் சுவையளவும் சற்றே அதிகமாகும். உண்மையில் மக்களால் நம்பப்படும் அழகியல் என்பது கலைகளுக்கான கச்சாப்பொருளன்றி வேறெதுவுமில்லை. இந்தப் பற்றின்மை மனப்பான்மையோடு கூடிய யதார்த்தவாதிகள் இக்கதைகளில் என்னையும் மீறி உலாவிக்கொண்டே இருக்கின்றனர். பற்றின்மை கொண்டவர்கள் ஒன்றை விளக்க முற்படுவதற்குப் பதிலாக உலகத்தில் கேள்விகளின் கிளைகளை முளைக்கச் செய்துகொண்டே போகின்றனர்’
பிரபஞ்சத்தின் பேரின்பம் மட்டுமல்லாமல், உலகின் மாபெரும் கொண்டாட்டமும் எனக்கு ஒழுக்கம்தான். தொடர்ந்து கொண்டாட்டத்தை முன்னிறுத்தும் நான், இதுவரை ஒருபோதும் மது, புகை, கஞ்சா ஆகியவற்றை அருந்தியதில்லை. பெரும்பாலான Early 20’s இந்தியர்களைப் போல நானும் Sexually Inactive person. இப்படி இருக்கும் ஒருவன் கொண்டாட்டத்தை முன்னிறுத்தும்போது அவன் காதல் அல்லது பெண்களைக் குறிப்பிடுபவனாக இருக்கலாமென நினைப்போர் ஏராளம். காதலை அதிகம் உட்கொண்டவன், அது கொண்டாட்டம் அளிக்கக்கூடிய ஒன்றல்ல என்பதை நன்கறிவான். ‘கால வெளியிடை’க்கும் ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’விற்கும் இதுதான் வித்தியாசம். ‘கால வெளியிடை’ காதலையும் காதலிப்பவர்களையும் கொண்டாடியது. ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ அவற்றை ஏளனம் செய்கிறது. ஆனால் இதில் யதார்த்தங்களும் கொஞ்சம் கவித்துவமும் போட்டியிட்டுக்கொள்கின்றனவே தவிரத் துளியும் வெறுப்புணர்வற்றது. வெறுப்புணர்வோடு ஒன்றை மேற்கொள்ளும் Beta male செயலில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்பதைத்தான் ஒழுக்கமும் கொண்டாட்டமும் எனக்குக் கற்பித்துள்ளன. மற்றபடி, என்னைப் பொருத்தவரையில் நண்பர்களுடன் கலந்து காணாமல் போவதற்காக டோப் அடிப்பதும், காமத்தை வடிகாலாகப் பயன்படுத்துவதும் கொண்டாட்ட மனநிலைக்கு முற்றிலும் எதிரானது.
இப்புத்தகத்தை கிம் கி டுக்கிற்கு சமர்ப்பணம் செய்துள்ளேன். தவிர, குறிப்பிட்ட கதைகளை எஸ்.ராமகிருஷ்ணன், கலீல் ஜிப்ரான், ஆதவன், மனுஷ்ய புத்திரன், பாலு மகேந்திரா, தாமஸ் வின்டர்பெர்க், தென்னழகன், விஜய் சூர்யா உள்ளிட்டோருக்குச் சமர்ப்பணம் செய்திருப்பேன். அக்கதைகளில் இவர்களது தாக்கம் சிறிதளவில் இவர்களது தாக்கம் நிறைந்துள்ளது என்பதாலேயே இச்சிறப்பு சமர்ப்பணம் செய்ய வேண்டியிருந்தது.
‘எனதருமை டால்ஸ்டாய்’ தொகுப்பில் டுகோபார்ஸ் மக்களைப் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய விதம் ஒரு சமூகத்தையே கண்முன் நிறுத்தியது. நாம் வசிக்கும் இடத்திலிருந்து கடல் கடந்து வாழும் மக்களின் வலியையும், அதற்கு ஒரு மாபெரும் எழுத்தாளன் அளித்த உதவியும் பிரமிக்க வைத்தது. ‘D மைனரும் C மேஜரும்’ கதையைக் கலீல் ஜிப்ரான், ஆதவன், மனுஷ்ய புத்திரன் மற்றும் பாலு மகேந்திரா ஆகியோருக்குச் சமர்ப்பித்துள்ளேன். இதுகுறித்து விரிவாகத் தனி கட்டுரையில் எழுத விரும்புகிறேன்.
நானும் விஜய் சூர்யாவும் ஓர் இரவு முழுவதும் உறங்காமல் உரையாட ஒரு நிகழ்வை முழுவதுமாக புனைவு கலந்து ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ என்ற தலைப்புக் கதையில் எழுதியுள்ளேன். தென்னழகன் உயிரிழந்தவன் என்ற யதார்த்தத்தை நம்ப மனமின்றி அவனை நித்தியமாய் வாழும் ஜீவன் ஆக்குவதற்காகவே கலையில் கொண்டு வந்தேன். ‘மௌனம் ஒரு வன்முறை’ கதை குறித்து வெளியீட்டுக்கு முன்பே இவ்வாறு எழுதியிருந்தேன்:
‘நண்பர்களாகிய நாங்கள் ஓர் உலகத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டுக் கண்ணீர் ததும்ப அதுகுறித்து உரையாடும்போது, என் பள்ளியில் நிகழ்ந்த சுவாரசிய நிகழ்வொன்று நினைவிற்கு வந்தது. நான் நேரில் வேடிக்கை பார்த்த அனைத்து கோணங்களையும் புனைவோடு கலந்து எழுதியிருக்கிறேன். இந்தக் கதையை எனது பள்ளி நண்பர்கள் மட்டும் படித்தனர். எங்கள் நண்பர்களில் ஒருவன் மீது படிந்த கரை இக்கதை மூலமாகச் சிலருக்கு மத்தியில் அழிந்திருப்பதை எண்ணி மகிழ்கிறேன்‘
நாங்கள் விவாதித்த அந்த உலகத் திரைப்படம் ‘The Hunt’. அதனாலேயே இக்கதையை அப்படத்தை இயக்கிய தாமஸ் வின்டர்பெர்க்-ற்கு சமர்ப்பித்துள்ளேன். இவை அனைத்தும் கதை பிறந்த காரணங்கள், தோன்றிய பொறிகள் மற்றும் ஏற்படுத்திய தாக்கங்கள் ஆகும். மற்றபடி, எழுத்துமுறையில் எனக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சாரு நிவேதிதா. இலக்கியத்தில் வடிவ ரீதியாக என்னால் தைரியமாக Experiment செய்ய முடிகிறதெனில், அவரது எழுத்து கொடுத்த தைரியம்தான்.
‘கால வெளியிடை’க்கும் ‘துயரங்கள் விற்பனைக்கல்ல’ தொகுப்புக்கும் இடையிலுள்ள இரு ஆண்டுகள் இடைவெளியை நிரப்பியவர் ஆன்டன் செகாவ். அவரது பேனாவுக்கு ஒருவரது வாழ்க்கையை ஒரே நேரத்தில் வண்ணமும் சாம்பலும் நிறைந்ததாக மாற்றக்கூடிய வல்லமை உள்ளது. சிறுகதையின் தூய வடிவத்தை முழுவதுமாக செகாவிடமிருந்தும், மாப்பசானிடமிருந்தும்தான் கற்றுக்கொண்டேன். அவர்களைப் பற்றி இன்னும் நிறையத் தெரிந்துகொண்டு எதிர்காலத்தில் அவர்களுக்கென தனி நூலே எழுதும் கனவுகள் உள்ளன. எனது இந்தத் தொகுப்பின் கடைசிக் கதையை ஆன்டன் செகாவுக்கு tribute செய்திருக்கிறேன். ஒரு செக்காவியனாக நான் செய்த முயற்சியை உலகில் வேறு யாரேனும் செய்திருப்பார்களா என்று யோசித்தே பார்க்க முடியவில்லை. ரேமண்ட் கார்வரின் ‘Errand’க்கு அடுத்தபடியாக பாலு எழுதிய ‘விமர்சகன்’, செகாவ் குறித்து எழுதப்பட்ட முக்கிய சிறுகதை என்பதை ஒருவராவது குறிப்பிட வேண்டும் என்பதே எனது பேராசை.
தொகுப்பை வாங்கி வாசித்து, நிறை குறைகளைத் தாராளமாகப் பதிவிடுங்கள். சென்னைப் புத்தகத் திருவிழா மற்றும் காதல் மாதத்தின் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு அடுத்த பணியில் ஈடுபட உள்ளேன். அதற்கான ஊக்கத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். தொகுப்பு, புத்தகத் திருவிழாவிலும் அமேசானிலும் கிடைக்கும்.
For Orders : Whatsapp 9514243334 / 98409 67484
Comments