துயரங்கள் விற்பனைக்கல்ல composed by பாலு *
ஓர் அனுபவம்.
நகர்ப்புற சாதாரண இளைஞர்களைப் பற்றியும், அவர்களின் பிரச்னைகள் குறித்தும் தமிழ் இலக்கியத்தில் தேடினால் சொற்பமான கதைகளையே கண்டறிய முடியும். அவ்வகையில் பாலுவின் இந்தத் தொகுப்பு இக்காலத்து இளைஞர்களின் வாழ்வில் நிகழும் காதல், காமம், பால்யம் அதன்பின் நிகழக்கூடியவற்றை, நேர்த்தியான மொழியில் வெளிப்படுத்தக் கூடிய கதைகளைக் கொண்ட தொகுப்பு.
கதாபாத்திரத்திங்களின் சித்திரத்தை ஒரு சில வரிகளில் விவரித்துவிட்டு கதைக்குள் சென்றுவிடும் பாலு, கதை நிகழும் நிலம் குறித்தான விவரணைகளைக் கச்சிதமாகக் கூறவில்லையோ என்ற சில கதைகள் தோன்றுகிறது. இருப்பினும் அதுவொரு பெரும் குறையாக இல்லை. காதலென்பது ஒருத்திக்கும் ஒருத்தனுக்கும் இடையில் மட்டுமே நிகழும். அது இப்படித்தான் இருக்கும். இத்தனை நாட்கள் காதலிக்கத் தேவைப்படும் என்று நாம் உருவாக்கி/ கட்டமைத்து வைத்திருக்கும் பெரும்பாலான கருத்துக்கள் இக் கதாபாத்திரங்கள் கட்டுடைக்கின்றன.
அசாதாரண விஷயங்களைக் கூர்மையான மொழியில் சிக்கல் இல்லாமல் கதைகள் சொல்லப் படும்போது, அக்கதைகளிலிருந்து எவராலும் விலக முடியாதென்றே நினைக்கிறேன். சிறுகதை என்றால் வெறும் கதை மட்டுமே சொல்ல வேண்டும் என்றில்லாமல், கவிதை, இசை குறித்த ரசனை என கதாபாத்திரத்திங்களுக்கு தேவையானவற்றைக் கையாண்டுள்ளது சிறப்பு. தொகுப்பில் உள்ள சில கதைகள் தொடர்புடையவை போன்றும் தோன்றாமல் இல்லை.
பேனாவைத் தொலைத்துவிட்ட சதீஷ் எனும் பையன், தொலைத்த பேனாவிற்காக தன் அப்பாவிடம் அடி வாங்கப் போவதை முன்கூட்டியே அறிந்துகொள்கிறான். அவனுடைய மனநிலை இந்த நான்கு வரிகளில் பளிச்சென்று வெளிப்படுகிறது. மேலும், இவ்வரிகள் நம் பால்யத்தை நினைவுபடுத்தவும் தவறவில்லை
"முதன்முறையாகப் பள்ளியின் கடைசி மணி சத்தத்தைக் கேட்டு அச்சமுற்றான். பள்ளிக்கூடம், விட்டுப் பிரிய விருப்பமில்லாத தாத்தா வீடு போல் தோன்றியது. வீடு, நரக வாசலைப் போல் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது"
அன்பின் பாலே கதையில் எழக்கூடிய கேள்விக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது. அதுகுறித்து நாம் இன்னும் இன்னும் சிந்திக்க வேண்டும். பட்டாம்பூச்சியைப் போல கதை மெதுவாக, சிக்கல் இன்றி வளரத்தொடங்கி இறுதிக் கட்டத்தை அடையும்போது அக்கதை எல்லோரையும் ஒரு உரையாடலுக்கு அழைக்கிறது. நீ அங்கு இருந்தால் என்ன செய்வாய்? அந்த மனநிலையில் மனிதர்கள் எம்மாதிரியான மனநிலைக்குச் செல்கிறார்கள் என்பதை முழு முற்றாக விளக்கிக் கூறாமல் கதாபாத்திரத்தின் மறு பாதியை நம்மிடம் தந்துவிடுகிறார் பாலு.
சிறுகதை தோன்றிய காலங்களில் ஒரு கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை இருந்தது. இன்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் உள்ளார்கள். கதை முடிவில் அவர்கள் துப்பாக்கியை வெடிக்க வைக்கிறார்கள். ஆனால், தேய்ந்து போன பழைய பாதையிலேயே பயணிக்காமல் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். மனைவியால் கைவிடப் பட்டவன் கதை அதற்கொரு சான்று. கதை நிகழும் களம்: இ மெயில்.
தொகுப்பில் சில கதாபாத்திரங்கள் தங்களின் காதல் பிரிவுக்கான காரணத்தைத் தேடுகிறார்கள். அதைக் கண்டடைந்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லையென்றாலும் அதைத் தேடுவதில் அவர்களுக்கு அவ்வளவு ஆர்வம்.
இறுதியில் இப்படி முடிக்க நினைக்கிறேன். வாழ்வென்பது உருட்டுக் கட்டையில் விழக்கூடிய எண்களைப் போல நிச்சயமற்று இருக்கையில், இதுதான் சமூகம். இது இப்படித்தான் என்று கட்டமைப்புக்குள்ளேயே இன்னும் எதற்கு அடைந்து கிடக்க வேண்டும். முடிந்த அளவு மகிழ்ச்சியாக உருட்டி விளையாடுவோமே இவ்வாழ்வை. மேலும், இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் ஏதேனும் ஒன்று/ஒரு பத்தி/ஒரு வரி உங்களின் பகடையில் விழுந்த எண்ணை உங்களுக்கு நினைவுபடுத்தலாம்.
புத்தகம் : துயரங்கள் விற்பனைக்கல்ல விலை: ரூ. 150 தொடர்புக்கு : 9514243334 பதிப்பகம்: கலக்கல் ட்ரீம்ஸ்.
Comentarios