ஆண்டு தொடக்கத்தில் எனக்கிருந்த மிகப்பெரிய பிரச்சனை எப்படியேனும் ஆபாசங்களின் அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக வெளிவந்துவிட வேண்டும். 100 நாட்கள் தொடர்ச்சியாக அவற்றிலிருந்து துண்டித்துக்கொண்டால் மீண்டுவிட்டதாக அர்த்தம் என்று அற்பத்தனமான ஒரு விளையாட்டு விளையாடினேன். எனது ஆளுமையை மாற்றி எழுதியது அந்த அற்பத்தனம்தான்.
கடந்தாண்டு இறுதியில் மூன்றாண்டுக் கால காதலுறவு ஒன்று நிறைவுக்கு வந்தது. அது என்னை மிகவும் வருத்தினாலும், ஆபாசங்களால் ஆட்கொள்ளப்பட்டதே பொருட்படுத்தக்கூடிய சிக்கலாய் இருந்தது. காதல் போய்த்தொலைகிறது; எப்படியாவது எனது பாலியல் பித்து பிரச்சனை சரியாகிவிட்டால் போதும் என்றிருந்தது. இதற்கான ஒழுக்கத்தை மிக நேர்த்தியாய் 2021 டிசம்பரிலிருந்தே கடைப்பிடித்து வந்தேன். புத்துணர்ச்சியுடன் 2022ஐ வரவேற்றேன். Progress இருந்தும் ஜனவரி மாதத்தின் முதல் மாதத்திலேயே பழைய அழுக்குக்குத் திரும்பினேன். யோசித்துப் பாருங்கள், எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கும்போது ஆண்டின் முதல் வாரத்திலேயே பிழை செய்யும்போது ஓர் இளைஞனுக்கு என்ன தோன்றும்? ‘இதுவே என் நிரந்தர ஆளுமை போலும்’ என்று நினைத்தேன். அதனால் மனதளவில் ஏற்பட்ட குற்றவுணர்வு உடல்நலனைப் பாதித்தது. கொரோனா அதிதீவிரமாய்ப் பரவிக்கொண்டிருந்த சமயம் அது.
அந்நாட்களில் படுத்து உறங்கியதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை. அதற்கு முன்பு வீட்டிலேயே 6 கிலோ டம்பிள்ஸ் வைத்துப் பால்வாடி பயிற்சிகளைச் செய்தேன். காய்ச்சலால் எந்நேரமும் யோசனைகளால் நிரம்பியிருந்தேன். அப்போது சில முக்கியமான முடிவுகளை எடுத்தேன். என் ஆளுமையை நிச்சயம் நான் மாற்றியே ஆக வேண்டும். அடுத்த பத்து நாட்களுக்கு ஓய்வெடுப்போம். செகாவின் பிறந்தநாளிலிருந்து எல்லாவற்றையும் புதிதாகத் தொடங்குவோம். முன்னாள் காதலியை முழுமையாக மறக்க ஆரம்பிப்போம். உடலளவிலும் மனதளவிலும் அரக்கனாக மாறுவோம்.
பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்க ரேஷன் கடை க்யூவில் நின்றுகொண்டிருந்தபோது பௌன்சர் போல் ஒருவன் கறுஞ்சட்டை அணிந்தபடி வரிசையில் நின்று போன் பேசிக்கொண்டிருந்தான். யாரெனப் பார்த்தால் என் பால்ய கால நண்பன். என்னைவிட ஒள்ளியாக இருந்த அவனை, அந்தத் தோற்றத்தில் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. அவனிடம் பேசும்போது, ஜிம் போனதிலிருந்து அதிகளவில் உணவுகளை எடுக்கத் துவங்கியதால் மாறிவிட்டதாகச் சொன்னான். அதாவது, திட்டமிட்டே மாற்றத்தை நிகழ்த்தினான். அதுநாள் வரையில் மாற்றத்தைத் திட்டமிட முடியும் என்ற எண்ணமே எனக்கு இருந்ததில்லை.
ஜனவரி 17, 2022 - திங்கட்கிழமை - செகாவ் பிறந்தநாள். காலை எழுந்ததும் மழை தூறிக்கொண்டிருந்தது. குடை எடுத்துக்கொண்டு பக்கத்துத் தெருவிலிருக்கும் உடற்பயிற்சிக்கூடத்திற்குச் சென்றேன். வாழ்வில் எடுத்த மறக்க முடியாத மிக முக்கியமான முடிவு அது. முதலில் Crossfit போட்டதற்கே மயக்கம் வந்துவிட்டது. எவ்வளவு பலவீனமாக இருக்கிறேன் என மாஸ்டர் என் நண்பனிடம் வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார். அன்றிலிருந்து என்ன ஆனாலும் வாரத்திற்கு ஐந்திலிருந்து ஆறு நாட்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிடுவேன்.
ஜிம் செல்லத் தொடங்கியதும் சில வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்தே ஆக வேண்டிய அவசியம் இருந்தது. நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுத்து அதில் அதிக கலோரிகள் சாப்பிட வேண்டியிருந்தது. வாரத்திற்கு மூன்று முட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்தவன், வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது நாளுக்கு 2 முட்டை சாப்பிட்டேன். ஜிம் போகத் தொடங்கியதும் அது நாளுக்கு ஐந்தாக மாறியது. உடலின் அமைப்பு பயிற்சிகளுக்கேற்ப மாறியிருந்தது. ஆனால் எவ்வளவு முயன்றும் கோடையில் உடல் எடையை அதிகரிக்க முடியவில்லை. மழைக்காலம் வந்ததும் பீனட் பட்டர், பால், மாஸ் கெயினர் எனக் கலந்து அடித்துக் குடித்ததில் மாற்றம் தெரிந்தது. பல ஆடைகளை சைஸ் சரியாக இல்லாததால் தூக்கி எறிந்துவிட்டேன்.
அறையில் படுக்கை இருந்தும் கோடை முழுவதும் தரையில் உறங்கினேன். ஸ்படிக மணி போட்டுக்கொண்டேன். வாரத்திற்கு 3 நாட்களாவது இளநீர், கற்றாழை ஜூஸ், பழ ஜூஸ் போன்ற பானங்களைத் தவறாமல் குடித்து வந்தேன். கோடைக்காலம் முழுவதும் மாதுளைப்பழம் சாப்பிட்டேன். மஞ்சள் வாழையை விட்டு செவ்வாழைக்கு மாறினேன். பரோட்டா, சிக்கன் ரைஸ் மற்றும் பிற துரித உணவுகளை நுகர்ந்துகூடப் பார்த்ததில்லை. கேஎஃப்சி, மெக்டொனால்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் உணவுகள் மீதெல்லாம் எப்போதும் நாட்டம் இருந்ததில்லை. இந்தாண்டு அதுபோன்ற குப்பைக்கூடங்கள் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
கடந்தாண்டிலிருந்தே தியான பழக்கம் இருந்தாலும் 2022ல் அதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டேன். இந்தாண்டு, குறைந்தது 200 நாட்களாவது தியானம் செய்திருப்பேன். ஒருநாளுக்கு 10 நிமிடங்கள் என்ற கணக்கில் 2000 நிமிடங்கள், அதாவது ஒன்றரை நாள் தியானத்தில் ஈடுபட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெற்றுடம்பில் சூரியனை உள் வாங்கிக்கொண்டேன். காலை எழுந்ததும் கண்களை நன்றாகத் திறந்து சூரியனைப் பார்த்துவிடுவதால் அது அடுத்த நாள் தூக்கத்திற்கு உதவுகிறது. பெரும்பாலான நாட்கள் 8 மணி நேரம் நிம்மதியாக உறங்கியிருக்கிறேன்.
என் கைப்பேசியிலிருந்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சமூக வலைதள செயலிகளையும் நீக்கிவிட்டேன். சமூக வலைதளங்களை லேப்டாப்பில் அதிகபட்சம் நாளுக்குப் பத்து நிமிடங்கள் பார்ப்பேன். ஏதாவது போட்டோ, ஸ்டோரி பதிவிட வேண்டி இருந்தால் இன்ஸ்டாகிராமை இன்ஸ்டால் செய்துவிட்டு உடனே நீக்கிவிடுவேன். பெரும்பாலானவர்களை unfollow செய்தே வைத்திருப்பதால் Mental Health ஜோராக இருந்தது. பிரயோஜனமில்லாமல் பதிவிடுபவர்களைப் பின்தொடர்வதில்லை. இதுவே பல சிக்கல்களுக்கு முடிவாய் அமைந்தது. முந்தைய காதல் வாழ்க்கையிலிருந்து முழுமையாகத் துண்டித்துக்கொள்ளவும் உதவியது. யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமற்ற சுதந்திரத்தை உணர்ந்திருக்கிறீர்களா? அதுவே, முக்கியமற்ற எதையும் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டி இல்லாத பக்குவத்தைக் கொடுத்தது.
இந்தாண்டு திரைப்பட நுகர்வு குறைவாகவும், புத்தக வாசிப்பும் எழுத்தும் அதிகமாகவும் இருந்தது. 2022ல் அதிகபட்சம் 25 படங்கள் பார்த்திருப்பேன். அதில் 20 தமிழ்ப் படங்கள். இதுவும் நான் எடுத்த முக்கியமான முடிவு. திரைப்படங்களிலிருந்து ஒதுங்கிவிட்டதால் எதையும் இழந்த உணர்வு ஏற்படவில்லை. சொல்லப்போனால் இன்னும் நன்றாகவே மேம்பட்டவனாகவே உணர்கிறேன். அடுத்தாண்டு இன்னும் குறைந்த படங்களைப் பார்க்க வேண்டும் என்பதே இலக்கு.
அதேபோல அதிகம் கிரிக்கெட் பார்க்கக்கூடாது என்பதையும் இலக்காக வைத்திருக்கிறேன். விராட் கோலி, கே.எல்.ராகுல், பேட் கம்மின்ஸ், ட்ரென்ட் போல்ட், ஜாஷ் ஜேசல்வுட் போன்ற சில வீரர்களின் ஆட்டத்தைக் கண்டால் மட்டும் போதும் என்று நினைக்கிறேன்.
பொதுவாகப் புத்தாண்டு சபதங்களைப் பொங்கல் சமயத்தில்தான் எடுப்பேன். கடந்த 2 ஆண்டுகளும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. 2021ல் தினமும் நாட்குறிப்பு எழுத நினைத்தேன். அது எனக்கு மோசமான ஆண்டாக இருந்தாலும் சபதத்தை நிறைவேற்றினேன். 2022ல் ஜிம் போக நினைத்தேன். இன்று வரை கன்சிஸ்டென்சியாக அது தொடர்கிறது. நான் எதிர்பார்க்காத சில விஷயங்களும் பணிச்சூழலில் நடந்தன. எதிர்பார்த்ததைவிட அதிகளவில் ஊதிய உயர்வு கிடைத்தது. கார் வாங்கினேன். முதன்முறையாக Promotion பெற்றேன்.
கடந்த மாதம் எழுத்துப் பணி நிறைவடைந்துவிட்டதால் 2023 முதல் Gratitude Journaling செய்யலாம் என்று இருக்கிறேன். 2021 நாட்குறிப்புகளைப் பதிவேற்றியதைப் போல இதையும் ஒவ்வொரு மாதமும் பதிவிடுகிறேன். ஆனால் இதில் சுவாரசியம் இருக்குமா என அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாள் காலை எழுந்ததும் நன்றியுணர்வு வெளிப்படுத்தும் விஷயங்களின் பட்டியலை எழுதப்போகிறேன். இதற்கு விதிமுறைகள் உள்ளன. ஒருநாளுக்கு ஒன்றுதான்; எழுதிய விஷயத்தையே மீண்டும் எழுதக்கூடாது. ஒருவேளை நான் நன்றியுணர்வு வெளிப்படுத்தும் குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டி இருந்தால் நிச்சயம் பத்தியாக எழுதுகிறேன். அது எப்படி இருக்கப்போகிறது என்று இப்போதே சொல்லிவிடுகிறேன்.
Jan 1 - I’m Grateful for ******
Jan 2 - I’m Grateful for ******
Jan 3 - I’m Grateful for ******
ஒவ்வொரு நாள் காலை இப்படிப் பட்டியல் போட்டு எழுதுவதில் சில நன்மைகள் உள்ளன. நாட்கள் கடக்கும்போதும் நம் வாழ்வில் இவ்வளவு கொண்டாடத்தக்க விஷயங்கள் இருக்கின்றனவா என்று பிரமிப்பு ஏற்படும். அது இயல்பாகவே, இல்லாததை எண்ணி வருந்தும் செயலை அகற்றும். இதை இரவில் எழுதக்கூடாது. நன்றியுணர்வை நாளின் தொடக்கத்திலேயே வெளிப்படுத்தும்போது மொத்த நாளும் புத்துணர்ச்சியாக இருப்பதைக் காணலாம். இயல்பாகவே பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே யோசிக்கும் குணாதிசயம் விட்டொழியும்.
அடுத்த சபதம், உணவுமுறையில் இன்னும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். எனக்கு டீ, காஃபி குடிக்கும் பழக்கம் இல்லை. சாக்லேட், ஐஸ்க்ரீம், பிஸ்கட் சாப்பிடுவதில்லை. ஆதலால் சர்க்கரை உட்கொள்ளுதல் குறைவு. இந்தாண்டு நாளுக்கு 11g சர்க்கரை (ஒரு ஸ்பூன் பீனர் பட்டரில் இருக்கும் சர்க்கரையின் அளவு) உட்கொண்டிருக்கிறேன். 2023 முதல் 0% சர்க்கரைக்கு மாறிவிடலாமென இருக்கிறேன். அதிகளவில் பழங்கள், காய்கறிகள், பயிர் வகைகளை உட்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன். இந்தாண்டு போல் அல்லாமல் குறைவான (தேவையான) கொழுப்பை உட்கொள்ள எண்ணியிருக்கிறேன். மேலும் உடற்பயிற்சியில் குறைவான எடையும், அதிக Rep-யும் செய்வதாகத் திட்டம்.
2023 முதல் வாரத்திற்கு ஒருமுறையேனும் ஓட்டப்பயிற்சி செய்யப்போகிறேன். முதலில் 1 கிமீ ஓடினால் போதும். உடல் பழகியதும் 10 கிமீ ஓட வேண்டும். அதை எவ்வளவு நேரத்தில் கடக்கிறேன் என்று பார்த்து அதற்கேற்ப அடுத்த இலக்கை மாற்றியமைக்க வேண்டும். 2022ல் பலத்தைப் பெற்றிருக்கிறேன். 2023ல் இன்னும் சிறப்பான உடலமைப்பையும் கூடுதல் ஸ்டமினாவையும் பெற வேண்டும். அதற்கு ஓட்டம் நல்ல பயிற்சியாக அமையும்.
அறிந்தவரையில் 2022ல் ஒருநாள்கூட சோகமாக இருந்ததில்லை. ஒரு சில நாட்கள் சலிப்பாகவும், சோர்வாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் Depression, Stress, Anxiety போன்ற சொற்கள் அர்த்தமிழந்துள்ளன. மகிழ்ச்சியை முதன்மைப்படுத்தும் எனது இந்தத் தனிப்பட்ட தேர்வை வரும் ஆண்டுகளில் தொடர வேண்டும்.
இவை எல்லாவற்றையும் எனக்கு நிறைவளிப்பது என்னவெனில், குறைந்தபட்சம் 10 இளம் ஆண்களாவது மாற்றத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியதற்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன். 2022 is a cult year.
Comments