சமீபத்தில் ஒரு ராணுவ வீரனின் நேர்காணலைக் கண்டேன். விளையாட்டில் ஒருவர் செய்த சிறு பிழைக்காக ஒட்டுமொத்த அணிக்கும் 1,000 புஷ்-அப்ஸ் தண்டனையாகக் கிடைத்ததாகக் கூறியிருந்தார். அதை விவரித்ததும் அவர் கடைசியாகச் சொன்ன ஒரு வரி : “உடலை அவ்வளவு வருத்திய பிறகும் நாங்கள் உயிரோடுதான் இருந்தோம்”
அப்போது தொடங்கிய எண்ணம்தான் இது. நெட்ஸில் 100 பந்துகள் இடைவிடாமல் வீசி உடலைச் சோதனைக்கு உட்படுத்திப் பார்க்க நினைத்தேன். ஒருமுறை பொழுதுபோக்குக்காகப் பந்துவீசியபோது கால்களின் எலும்பு லேசாக வலித்தது. எனவே இக்காரியத்தில் ஈடுபடுவதற்கு முன் உடலளவில் தயாராக வேண்டியிருந்தது. பந்துவீச்சாளனுக்குக் கால்களே பலம் என்பதால் வாரத்திற்கு இரு நாட்களும் ஸ்குவாட்ஸைத் தவறாமல் செய்தேன்.
ஆண்கள் தினத்தன்று இதை நிறைவேற்ற முன்கூட்டியே திட்டமிட்டேன். அதற்கேற்ப புரத உணவுகளை அதிகம் எடுத்துக்கொண்டேன். பந்துவீசும்போது சோர்வடைந்தால் புத்துணர்வாக்கிக்கொள்வதற்காக ரெட் புல் கொண்டு செல்லலாமெனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஒரு துளி கஃபேன்கூட நாக்கில் படக்கூடாது என்பது தனிப்பட்ட கொள்கை. எனவே அதைக் கைவிட்டேன். பழங்கள்கூட வாங்கிச்செல்லவில்லை. பந்துவீசும்போது இடையில் இரண்டு முறை கால் டம்ளர் தண்ணீர். அவ்வளவுதான்! இடைவிடாத பந்துவீச்சு! சலிப்பாக இருந்தது; சோர்வாக இல்லை. எண்கள் கூடக்கூடப் பந்துவீச்சின் வீரியம் சற்று அதிகரித்தது. வீரியமாகப் பந்துவீசும் எண்ணமே இல்லை. மாரத்தான் வீரன் எப்படிச் செயல்படுவானோ அதே நிதானத்துடனே பந்துவீசினேன். இதனால் வேகத்திலோ அல்லது வீசும் லெந்த்திலோ கவனம் செலுத்த முடியவில்லை.
நான் வைத்திருந்த திட்டமே வேறு. ஃப்ரீ ஸ்டைல், யார்க்கர், பௌன்ஸ், ஸ்லோ பால், வைட் யார்க்கர் என ஒவ்வொரு பத்து பந்துகளையும் பத்து விதமாக வீச நினைத்தேன். உடலைக் கடுமையாகப் பயன்படுத்தியதால் அங்கு எண்ணங்கள் அழிந்தன; திட்டங்கள் மறந்தன. உடலை வருத்துவதன் மகத்துவம் இதுவே. ஒருமுறைகூட யோசனைகளில் மூழ்கியபடி விளையாட்டிலோ உடற்பயிற்சியிலோ ஈடுபட்டதே இல்லை.
கடந்த ஓராண்டாகத் திட்டமிட்டிருந்த எழுத்துப் பணியை இந்த வாரத்தின் தொடக்கத்தில் முடித்தேன். பந்துவீச்சு சாகசத்தை வாரத்தின் இறுதியில் நிறைவேற்றியிருக்கிறேன். ஒரே வாரத்தில் இரு மாபெரும் இலக்கை அடைந்த திருப்தியில் மிதக்கிறேன். அடுத்த சில நாட்களுக்கு ஓய்வு. மீண்டும் அடுத்த இலக்கு. 10 கிமீ ஓட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இதுவரை ஒருமுறைகூட ஓட்டப்பயிற்சி செய்ததில்லை. தயாராக வேண்டும்.
Comments