மதியம் அருணிடமிருந்து கண்ணன் இறந்துவிட்டதாக அழைப்பு வந்திருந்தது. பூரணனிடம் இந்தச் செய்தியைத் தெரிவித்ததும், அவன் எனக்கும் சேர்த்து அலுவலகத்தில் விடுப்பு வாங்கினான். காதல் தோவிக்காகவெல்லாமா ஒருவன் தற்கொலை செய்துகொள்வது! இத்தனைக்கும் அவன் ஒரு வாசகன். நல்ல படங்களை மட்டுமே பார்ப்பவன். சமூகத்தின்மீதும் அரசியல் குறித்தும் தனித்துவமான பார்வையும் புரிதலும் கொண்டவன். இன்டெலக்ஷுவல். முந்தாநாள்கூட அழைத்து நன்றாகத்தான் பேசினான். மனித மனதில் இரண்டே நாட்களில் மரணத்தின் வாசல் திறக்கும் அளவிற்கு மாற்றங்கள் நிகழுமா என்ன? அல்லது கண்ணன் தன் சோகங்களைப் புதைத்துக்கொண்டு எங்களிடம் இயல்பாக இருப்பது போல் நடித்தானா?
இந்தச் செய்தியை ராணாவிடம் தெரிவித்தேன். கண்ணனின் சொந்த ஊரான மதுராந்தகத்திற்கு நாங்கள் நால்வரும் சென்றோம். அவனது உடல் மதியம் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட உள்ளதாகப் பேசிக்கொண்டனர். அந்தத் தெருவில் ஆம்புலன்ஸ் நுழையும்போது அதன் சைரன் ஒலியைவிடக் கண்ணனுடைய தாயாரின் அழுகுரலே உரக்க ஒலித்தது. நண்பனைப் பிணமாகப் பார்க்கும்பொழுது துயரம் எங்களை இறுக அணைத்துக்கொண்டது.
இரண்டு மணி நேரம் அழுத களைப்பில் மதியம் பக்கத்துத் தெருவிலுள்ள மரத்தடியில் உறங்கினோம். அந்தக் கிராமமே வெக்கையில் வெந்து தணிந்தாலும் வந்து வீசிய மரத்தடி காற்றில் நன்றாகவே இளைப்பாறினோம். காற்றில் அம்மரத்தின் இலைகள் எழுப்பிய சலசல ஓசை எங்களைத் தாலாட்டியது. மதிய தூக்கக் கனவில் கண்ணன் வந்தான். நான் எதுவும் பேசாமல் அவனையே பார்த்தேன். "கண்ணா, நீ..."
"நான் விருப்பப்பட்டு எடுத்த முடிவுதான் மச்சா. இந்தக் காதல் கருவேப்பிலையெல்லாம் வேண்டாம். புரியுதா?"
"ஆனா நீ இப்டிச் செய்வேன்னு..."
"புரிது. நான் அவளை அளவுக்கு மீறி காதலிச்சுட்டேன், நண்பா. அதே அளவுக்கு வெறுக்கவும் செஞ்சுட்டேன். அவளை என் வாழ்க்கைல இருந்து மொத்தமாக அழிக்கணும்னா நான்தான் அழியணும்”
எனக்கு உறக்கம் களைந்திருந்தபோது ராணா தேநீர் கொண்டு வந்தான். அருண் அங்கிருந்த ஒரு பாறையில் அமர்ந்து தேநீர் குடித்தான். தூரத்து மலைதனில் மறைந்த சூரியனில் நாங்கள் கண்ணனை உணர்ந்தோம். சிறிது நேரம் கழித்து பூரணன் எங்களுக்குச் சாப்பாடு வாங்கி வந்தான். பயங்கரமான பசியிலிருந்த எனக்கு அதை எப்போது பிரித்துச் சாப்பிடப் போகிறோம் என்று இருந்தது. நான் கண்ட கனவை நண்பர்களிடம் சொன்னேன். ஒருவேளை கண்ணன், தான் சொல்ல நினைத்ததைக் கனவில் வந்து சொல்கிறானோ என ராணா நம்பினான். பூரணன், "அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது. இவன் ஆழ்மனம் காதலை மறுக்குது. கண்ணன் இறந்ததற்கு இதுதான் காரணமா இருக்குமோன்னு இவன் நம்புறான்" என்று என் கனவை ஆராய்ந்தான்.
"ஆனா கண்ணன் இப்டி முட்டாள்தனமான முடிவெடுப்பானென நினைக்கவே இல்லை" என்றான் அருண்.
"எது முட்டாள்தனம்? தற்கொலையா? அது ஒரு கலை. அந்தக் கலையை செய்ய தைரியம் வேணும். அதை அவன் சரியாவே செஞ்சிருக்கான். பிறப்பைதான் தேர்ந்தெடுத்துக்க முடியல. மரணத்தையாவது தேர்ந்தெடுத்துக்க முடிஞ்சுதே"
"வாழ தைரியமில்லாம தற்கொலை செஞ்சுகிட்ட கோழைக்கு நீ வக்காளத்து வாங்காத" என்றான் அருண்.
"உங்களுக்குத்தான் அவங்க வாழ தைரியம் இல்லாத கோழைங்க. அவங்களுக்கு நாம சாக தைரியம் இல்லாத கோழைங்க."
"இவ்ளோ கஷ்டத்தையும் சகிச்சிட்டு வாழ்றவங்க உனக்குக் கோழையா! நல்லாருக்குடா" என்றான் ராணா.
"மரணத்தின்மூலம் மட்டுமே ஒருவன் நித்தியத்தை அடைய முடியும்; கடவுள்தன்மையையும். நாம நிச்சமற்ற வாழ்வை வாழ்ந்துட்டு இருக்கிறவங்க. ஆனா கண்ணன் இப்போ நிரந்தரமாய் மரணித்தவன். அவனோட இந்த நிலை ஒருபோதும் மாறப் போறதில்லை. அவன் வாழ்ந்த இத்தனை வருஷத்துல - உத்தமனாவோ இல்ல அபத்தமானவனாவோ, எப்படி இருந்திருந்தாலும் - அவனுக்குக் கடவுள் உருவம் கிடைச்சுடும். அவன் ஃபோட்டோவுக்கு மாலை போடுவாங்க. வாழ்ந்த காலத்தில இது மாதிரி மரியாதையைப் பெற அவன் ஏதாவது ஒரு துறையில பெருசா சாதிச்சே ஆகணும். சிக்கல்களைப் போராடி வாழ்ற உங்களை நான் குறை சொல்லல. ஆனா தற்கொலை செஞ்சுக்கிறவங்களை ஏன் முட்டாள் பட்டியல்ல சேக்குறீங்க?"
"கண்ணன் செஞ்சது சரின்னு சொல்றீயா?" என்றேன்.
"அவன் விருப்பம்னு சொல்றேன். அவன் தற்கொலை செஞ்சுகிட்டது தப்புன்னு சொல்லல. காதலுக்காகத் தற்கொலை செஞ்சுகிட்டான் பார். அதுலத்தான் எனக்கு உடன்பாடு இல்ல"
"ஏன், காதலுக்காக தற்கொலை செஞ்சுக்கிறதென்ன அவ்ளோ கேவலமா?" என்றான் அருண்.
"இல்லை, அவன் செஞ்சதுக்குப் பேர் காதலே இல்லைன்னு தெரியாமலே செத்துட்டான்"
"அவன் உணர்வை ஏன் கொச்சைப்படுத்துற?" என்றான் ராணா.
"அவனை மட்டும் சொல்லவில்லை. நாம் எல்லோரும்தான்"
"புரியல"
"நாம யாருமே நேசிக்கிறதில்லை. யாரையாவது சொந்தம் கொண்டாடத்தான் நினைக்கிறோம். ராணாக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சுது. கொஞ்ச நாள் அவளோட பழகினான். திடீர்னு அவளோட பேச்சை நிப்பாட்டிட்டான். ஏன்னு கேட்டா, அவ வேற ஒருத்தனோட காதலியாம். இப்போல்லாம் ஒரு பொண்ண நெருங்கவே அவளோட ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ்தான் முக்கியமா இருக்கு"
"கமிட்டட்னு தெரிஞ்சதும் விலகியிருக்கான். இதுல என்ன தப்பு?" என்றான் அருண்.
"இவனுக்குத் தேவை, இவன் சொல்றதை கேட்டுட்டு இவனையே நினைச்சுட்டு இருக்கிற, இவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பொண்ணு, அவ்வளவுதான். அதுக்கு ’காதல்’னு ஒரு பேர் வெச்சுக்கிறான். இவன் பேசாத நாள்ல இருந்து அந்தப் பொண்ணு ஒன்னும் புரியாம இருக்கா" - பூரணனின் சொற்கள் ராணாவை சுட்டிருக்கக் கூடும். அவன் தலை தாழ்த்தியபடி எதுவும் பேசாமல் இருந்தான். பூரணன் என்னை நோக்கித் தொடர்ந்தான்.
"அருணுக்கும் அவன் காதலிக்கும் சண்டை! ஏன் தெரியுமா? தெரிஞ்சா சிரிப்ப. ஒருநாள் நைட் 12 மணி வரை ஃபோன் பேசியிருக்காங்க. அவ 2 மணி வரை ஆன்லைன்ல இருந்தாளாம். இவன் சந்தேகப்பட்டு அவளைத் திட்டியிருக்கான். இதுக்குப் பேர் காதலா ஆதிக்கமா?"
"நாங்க இன்னைக்கு அடிச்சிப்போம், நாளைக்குக் கொஞ்சிப்போம். அதுக்கெல்லாம் உனக்கு ஜஸ்டிஃபிகேஷன் கொடுக்கணும்னு அவசியமில்ல. என் காதலுக்கு யாரும் சர்ட்டிஃபிகேட் கொடுக்க வேண்டாம்" - கோபமடைந்தான் அருண்.
”பூரணா. அவன் இந்த ரிலேஷன்ஷிப்ல சீரியஸாத்தான்டா இருக்கான்" என்றேன். நான் சொன்னதை கேட்ட பூரணன், அருணிடம் திரும்பி, "ஓ! அப்டியா? அதாவது, அவளோட ஆசை, கனவு, குடும்பம், லட்சியம் எல்லாத்தையும்?"
"ஆமா. அவமேல நான் ஆதிக்கமெல்லாம் செலுத்தல. அவளுக்கு சுதந்திரம் கொடுக்கிறேன்"
"சுதந்திரம்... கொடுக்கிறீயா? ஓத்தா! சரி, அப்போ ஒரேயொரு கேள்வி கேக்குறேன். உங்க எல்லாருக்கும்தான். நீங்க காதலிக்கிற பொண்ணு உங்களுக்கு ரொம்ப தூரத்துல இருந்து ஃபோன் பண்ணி, 'எனக்கு இப்போ செக்ஸ் வெச்சிக்கணும் போல இருக்கு. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான். நான் அவனோட வெச்சுக்கவா?'ன்னு உங்ககிட்ட உங்களை மதிச்சு அனுமதி கேட்டா - யாரும் அப்படிக் கேட்டுட்டெல்லாம் இருக்க மாட்டாங்க - ஒருவேளை கேட்டா, அவளுடைய ஆசையை மதிக்கிற காதலனா என்ன சொய்வீங்க?"
பூரணனுடைய இந்தக் கேள்வி எங்களை அதிர வைத்தது. பெற்றோர் கலவி கொள்ளும் சத்தத்தை அரைத் தூக்கத்தில் கேட்கும் குழந்தையைப் போல இந்தக் கேள்வி எனக்கு அப்பட்டமாக இருந்தது. மதுராந்தகத்தைவிட்டு நாங்கள் இறுக்கத்தோடு வெளியேறினோம். பூரணனின் கேள்வி என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. என் காதலி அப்படிக் கேட்டால் நான் அதை எப்படி எதிர்கொள்வேன்? தெரியவில்லை.
அந்தக் கேள்வி கேட்கப்பட்ட பல ஆண்டுகள் கழித்து, நான் உட்பட எங்கள் நண்பர் கூட்டத்திலிருந்த அனைவரும் இறந்தே போயிருந்தோம். எங்கள் வாழ்க்கையிலும் காதல் இருந்தது. ஆனால் எங்கள் மறைவுக்கு அது காரணமாக இருக்கவில்லை.
Deep🖤