காதல், தேவா
காலை எழுந்ததிலிருந்து எல்லாமே தாமதம். மகனைப் பள்ளியில் இறக்கிவிட்டு ட்ராஃபிக்கைக் கடந்து அலுவலகம் செல்ல எப்படியோ அரை மணி நேரம் தாமதம் ஆகிவிடும். நானும் அவனும் வேக வேகமாக அப்பார்ட்மன்ட் லிஃப்டை அடைந்தோம். கீழ்த்தளத்திற்குச் சென்றவுடன் லிஃட் கதவு திறக்கப்பட்டபோது, என் எதிரே அவள் நின்றிருந்தாள்.
நீலிமா!
பதினைந்து ஆண்டுகளாக என் மனதில் அகலாமல் பதிந்திருப்பவள். கல்லூரியில் என்னால் காதலிக்கப்பட்ட வசப்படா யட்சி.
நான் லிஃட்டிலிருந்து வெளியேறியபோது உள்ளே நுழைய இருந்த அவள் என்னைப் பார்த்ததும் நின்று விட்டாள். அதுதான் அவள் எனக்களித்த அதிகபட்ச கவனம். இருவரும் அதிர்ச்சி பார்வை பரிமாறிக்கொண்டிருந்த சமயத்தில் என் அலுவலக அவசரம் எட்டவில்லை. தாமதமாகச் சென்றால்தான் என்ன? மீண்டும் இந்தத் தருணம் கிடைத்துவிடவா போகிறது? தசாப்தத்திற்கு மேலாக இருந்த ஏக்கம் நிறைவேறி அல்லவா இருக்கிறது.
"நீலிமா.. இங்க?"
"இங்கேதான் தங்கியிருக்கேன்" - முதன்முறையாக அவளது குரலை நேரில் கேட்டேன்.
"எப்படி இருக்க நீலிமா?" - முறுவலிட்டாள்.
மகனை அறிமுகம் செய்தபோது லிஃட் மீண்டும் வந்திறங்கியது. நாங்கள் எங்களது அறை எண்களைத் தெரியப்படுத்திக்கொண்டு கிளம்பினோம். அங்கிருந்து மகனின் பள்ளியை அடைந்தேன். அவனை இறக்கிவிட்டு அப்படியே என் அலுவலகத்துக்குச் சென்று வேலையைத் துவங்கினேன். என் மனம் மட்டும் கீழ் தள லிஃட் வாசலிலேயே இருந்தது. அன்று நாள் முழுவதும் என் கல்லூரி வாழ்க்கையை எண்ணிச் சிலிர்த்தேன்.
கல்லூரி சேர்ந்த முதல் நாளே நீலிமாவைப் பார்த்தேன். அவள் தன் தோழிகளுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். வெறும் பார்வைகளை வீசியே என் கல்லூரி காதலைக் கடந்தேன். நீலிமாமீது எனக்கிருக்கும் ஆர்வத்தை அவளும் அறிந்திருந்தாள். பலமுறை என்னிடம் புன்னகைத்திருக்கிறாள். அது போதாதா, என்னைக் காதலிப்பதற்கு சாட்சியாக? போதாதுதான்! ஆனால் எனக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
தினமும் அவளுக்காகப் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் காத்திருப்பேன். ஆண்டுக்கு 200 நாட்கள் கல்லூரி என்ற கணக்குப்படி, அவளுக்காக 600 மணி நேரம், அதாவது சுமார் ஒரு மாத காலத்தை என் வாழ்வில் வீணாக்கியுள்ளேன். நான் உருகிக்கொண்டிருந்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாத என் நண்பன் ஒருவன், நீலிமாவின் கைப்பேசி எண்ணைக் கண்டுபிடித்துக் கொடுத்தான். அதனை மனப்பாடம் செய்துகொண்டேன்; அழைக்கவில்லை. எனக்கு அவள் பார்வையின் ஸ்பரிசமே போதுமானதாக இருந்தது. ஆனால் கல்லூரியின் இறுதிக் காலம் நெருங்க நெருங்க நீலிமாவை இழந்து விடுவேனோ என்ற அச்சம் உண்டாகியது. அவளுடைய நெருங்கிய தோழியான ராகவியிடம், ‘கல்லூரியின் கடைசி நாளன்று நீலிமாவை எனக்காகக் காத்திருக்கச் சொல். நான் அவளிடம் பேச வேண்டும்’ என்றேன்.
கடைசி நாள் அன்று எனக்குப் பிடித்த சட்டையை அணிந்து வந்திருந்தேன். விரைவாகப் பரீட்சையை முடித்துவிட்டு அவளுக்காகக் காத்திருந்தேன். அன்று நீலிமா என்னைப் பார்க்கவே வரவில்லை. கல்லூரி வாழ்க்கை அழகான கவிதையாக முடிய வேண்டும் என்று எண்ணியே இச்சந்திப்பை ஏற்படுத்தினேன். ஆனால் அது துர்மிகு கவியாகுமென நினைக்கவில்லை. கல்லூரி முடிந்த இரண்டு மாதத்தில் அவளுக்குப் பிறந்தநாள் வந்தது. சரியாகப் பன்னிரண்டு மணிக்கு அவளுக்கு அழைத்தேன்.
"ஹலோ, தேவா பேசுறேன்"
"ஹான்" அவளுக்கு மூச்சு வாங்கிய சப்தம் நன்றாகவே கேட்டது.
"Happy Birthday"
"Thanks. நம்பர் எப்படிக் கிடைச்சுது? பர்த்டே எப்படித் தெரியும்?"
"இதகூடத் தெரிஞ்சிக்காமலா தினம் உனக்காக மணிக்கணக்கா வெயிட் பண்ணிட்டு இருப்பேன்"
"ம்"
"நீலிமா, உன்னைப் பார்க்கணும். நாளைக்கு மதியம் வீட்டுக்கு வரவா?
"ம்"
அடுத்த நாள் அவளுடைய வீட்டிற்குச் சென்றபோது, எனக்காக வாசற்கதவு திறந்தே இருந்தது. அவள் அறையிலிருந்து ஒரு பெரிய ஜன்னலின் வழியே காணப்பட்ட மரம், ஓர் ஓவியத்தைத் தரிசிப்பதுபோல் இருந்தது. அவள் அந்த அழகிய காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது நான் அவளெதிரே சென்றேன். அப்போதும் அக்காட்சியிலிருந்து அவள் தன் பார்வையை விளக்கவில்லை.
"நீலிமா, என்னால உன்னைப் பார்க்காம இருக்க முடியல. அதான் வந்துட்டேன்"
" "
"உனக்குப் புரியுதுல? உனக்கும் அப்டிதானா?"
" "
"நீ எனக்கு இல்லாம போய்டுவியோன்னு பயமா இருக்கு"
" "
"ஏன் எதுவும் பேசாம இருக்க?"
" "
அவள் கண்களில் தேடலும், வலியும், நிராகரிக்கத் தெம்பில்லா பலவீனமும் தெரிந்தன. நீண்ட புல்வெளியில் ஒரு பனைமரத்தைச் சுற்றிச் சில கிளிகளையும் குருவிகளையுமே அவளது கண்கள் தொடர்ந்து நோக்கிக்கொண்டிருந்தன. என் காதலை மறுக்கும் உவமையாக அழகியல்மீது கவனத்தை வைப்பதெல்லாம் ரசித்தலாகாது; வெறும் பார்த்தல். இவ்வளவு அழகான காட்சியை ஒருவனுடைய காதலை நிராகரிப்பதாகப் பார்ப்பது என்பது இறைவன் படைத்த இயற்கைக்கு மனித உயிரினம் செய்யும் துரோகம். என்னைப் பார்க்கக்கூடத் தயங்கும் அவளிடம் அன்பை வரமாக நாடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.
“இப்படி எதுவும் பேசாம இருக்க என்னை ஏன் வர சொல்லனும்? உன்னை நினைச்சு பகல் கனவாவது கண்டுட்டு இருந்திருப்பேன்!”
“அதுக்குத்தான் வர சொன்னேன். எனக்குத் தெரியும், நீ என்னை நினைச்சுப் பகல் கனவு கண்டுட்டு இருந்திருக்கேன்னு. ஆனா அதெல்லாம் உண்மை இல்லைல? நீ கற்பனை உலகத்துலையே வாழ்றது உனக்கு நல்லதில்ல. நான் வர சொன்னதை யதார்த்தத்தை காண்பிக்கிறதா எடுத்துக்கோ!”
“அதுதான் எனக்குப் பிடிக்கலை. நான் கனவுலையே சந்தோஷமா வாழ்ந்துட்டுத்தான் இருக்கேன். நீ ஏன் எனக்கு இதைப் பண்ணுற?”
”குற்றவுணர்ச்சி. என்னை நினைச்சிட்டு ஒருத்தன் இப்படி இருக்கானேன்னு…”
“Please Don’t, நீலிமா”
“Don’t What?”
“Don’t Change Anything. Let it be how it is”
" "
அதன்பிறகு ஒரு நிமிடம்கூட அந்த இடத்தில் நிற்க விரும்பவில்லை.
இன்று, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறேன். இன்னும் நீலிமாமீதுள்ள காதலும், அவளுடன் வாழ எத்தனிக்கும் ஆசையும் துளியும் குறையவில்லை.
நான் முதன்முதலில் அவளைப் பார்க்கும்போது, நீலிமா ஒருத்தியுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். அப்போதே நீலிமாவை மணந்துகொள்ள மனம் துடித்தது. ஆனால் அவள் யாருடன் பேசிக்கொண்டிருந்தாளோ அவளைத்தான் என்னால் கல்யாணம் செய்துகொள்ள முடிந்தது. அதனால்தான் என்னவோ இத்தனை ஆண்டுகள் கழித்தும் நீலிமாவை மறக்க முடியவில்லை. நீலிமா என்னைக் காதலித்தாளா என்று இந்நாள் வரை அறிய முடியவில்லை.
நான் காதலித்த பெண்ணை என்னால் சொந்தமாக்கிக்கொள்ள முடியாததால், என்னைக் காதலித்த பெண்ணுக்குச் சொந்தமாகிவிட்டேன்.
காதல், நீலிமா
புது அப்பார்ட்மன்ட்டிற்குக் குடி வந்து ஒரு மாதம் மேலாகிவிட்டது. இன்றுதான் தேவாவைப் பார்த்தேன். அவனுடைய மகன் அழகாக இருந்தான்; ராகவியைப் போலவே. ஐந்து நிமிடங்கள் கூடுதலாகப் பேசியிருந்தால் அவன் தன் மனைவியைப் பற்றிச் சொல்லியிருப்பான். நிச்சயம் அழுதிருப்பேன்.
கல்லூரியில் எனக்குக் கிடைத்த முதல் தோழி ராகவி. புது சூழலில் எனக்கிருந்த தடுமாற்றம், பயம், கூச்சம், தாழ்வு மனப்பான்மை என மொத்தத்தையும் உடைத்தெறிந்து எளிமையாக உணர வைத்தவள். அவளிடம் என் பள்ளியில் நடந்த கூற்றுகளைச் சொல்லிச் சிரித்துக்கொண்டிருக்கும்போதுதான் தேவாவை முதன்முதலில் பார்த்தேன்.
அடுத்த நாள் முதல், அந்தக் கண்களால் ரசிக்கப்பட வேண்டுமென விரும்பினேன். எனக்குத் தேவாவைப் பிடித்திருந்தது. அது காதலா…? தெரியவில்லை. ஆனால் பிடித்திருந்தது. நாங்கள் காதலித்தால் எப்படியிருக்குமென சில அபூர்வ கற்பனைகள் செய்தேன். அதில் ஏதோவொரு குறை இருந்ததை மிக நன்றாகவே உணர முடிந்தது. அந்தக் கற்பனையில் நான் எதையோ இழந்த வலியின் துயரத்தில் ஆழ்ந்தேன். அது காதல் தோல்வியினால் ஏற்படும் துர் கனவைப் போல் நெஞ்சைக் குத்தியது. எதனால் அவனுடன் இருப்பது போன்ற கற்பனையில் வலியை உணர்கிறேன்? அப்போது அவனுடன் இருந்தால் நான் ஏதோவொன்றை இழக்க நேரிடும்.
ராகவி!
தேவாவுடன் நேரம் செலவழித்தால் ராகவியை இழக்க நேரிடும். தேவாவா? ராகவியா? ராகவிதான். அவளுடைய இருப்பு ஏன் எனக்கு இவ்வளவு முக்கியமாகப் படுகிறது? நான் ராகவியைக் காதலிக்கத் தொடங்கியிருந்தேன்! அவளுக்கும் அப்படித் தோன்றியிருக்குமா?
எனது பத்தொன்பதாம் பிறந்தநாளன்று என்னைவிட ராகவியே சந்தோஷமாக இருந்தாள். கேக் வெட்டி முதலில் அவளுக்கு ஊட்டியதும் என் கன்னத்தில் முத்தமிட்டாள். அது காதலி காதலிக்குக் கொடுக்கும் முத்தமா அல்லது தோழி தோழிக்குக் கொடுக்கும் முத்தமா? அவளிடம் காதலை வெளிப்படுத்தலாமென முடிவெடுத்தேன். என் அன்பை அவள் ஏற்கவில்லையென்றாலும்கூடப் பரவாயில்லை. என்னை வெறுத்துவிடக்கூடாது. நாங்கள் தனியாக இருந்தபோது எனக்குப் பதட்டத்தில் வியர்த்தது.
"நீலிமா, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். ரொம்ப நாளா சொல்லாமலே இருந்துட்டேன். நீ எப்படி எடுத்துப்பங்கிற தயக்கம்"
"எப்டியும் எடுத்துக்க மாட்டேன், சொல்லு"
"நான் தேவாவை லவ் பண்றேன். நீ அவனைப் பத்தி ரெண்டு மூனு தடவ என்கிட்ட பேசியிருக்க. தெரில எனக்கு... உனக்கும் அவனைப் பிடிச்சிருந்தா நான் விலகிக்குறேன். இல்லனா..."
" "
"நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா?"
"ச்ச ச்ச, எனக்கு தேவா மேல எந்த இதுவும் இல்ல"
ராகவியின் காதலை அப்போது தேவா ஏற்கவில்லை. அந்நாட்களில் ராகவி தொடர்ந்து என்னுடன் நேரம் செலவழித்ததாள். கல்லூரி காலம் முடிந்தவுடன் அவள் இன்மை என்னைக் கொன்றது.
நான் அவளையே நினைத்துக்கொண்டிருந்தேன்.
அவள் தேவாவை நினைத்துக்கொண்டிருந்தாள்.
தேவா என்னையே நினைத்துக்கொண்டிருந்தான்.
என் இருபத்தொன்றாம் பிறந்தநாள் இரவு ராகவியிடமிருந்து அழைப்பு வருமென எதிர்பார்த்தபோது, தேவா அழைத்து என்னைச் சந்திக்க வேண்டுமென்றான். எனக்கும் ஆறுதல் வார்த்தைகள் தேவைப்பட்ட சமயத்தில் அவன் காதல் வார்த்தைகள் பேசியதால் அவனது கண்களைத் தவிர்த்தேன். இல்லையெனில், அவனிடம் என் சோகத்தைச் சொல்லி அழுதிருப்பேன். ராகவிமீதிருந்த காதலை அவனிடம் சொல்லி அழுதால் அவன் என்னை வெறுத்திருக்கக்கூடும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவங்களை நாள் முழுவதும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். ராகவி வீட்டிலில்லை என்பதை அறிந்து, மாலை அவள் வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் தேவாவும் அவனுடைய மகனும் இருந்தனர்.
"நீ என்ன லவ் பண்ணியா, நீலிமா?"
"உன்னப் பிடிச்சுது"
"அது லவ் இல்லையா?"
"நீ இன்னும் என்னை லவ் பண்றியா?"
"உன்கூட சேர்ந்து வாழணும் நீலிமா. Why Can't we start a Life. Let's Live Together”
"அது கஷ்டம் தேவா"
"ஏன்?"
"உனக்குக் கல்யாணமாகி ஒரு பையன்..."
"அப்போ என்கூட வாழ உனக்கு ஆசை இருக்கு!"
" "
"உனக்கு விருப்பம் இல்லன்னு நீ சொல்லல"
" "
"சரி நான் என் குடும்பத்தை விடல. போதுமா?"
"நாளை பின்ன எனக்கு உடம்பு சரி இல்லன்னாகூட நீ என்னைப் பார்க்க உன் பொண்டாட்டிகிட்ட பொய் சொல்லிட்டு வர வேண்டியிருக்கும்"
"உனக்கு நான் நிச்சயம் டைம், ப்ரயாரிட்டி கொடுப்பேன். நீ அதை..."
"வேண்டாம் தேவா"
"சரி விடு. இப்படியே இருந்திடலாம். இத்தனை வருஷம் இருந்துட்டேன். இனிமேலும் இருக்க முடியும்"
"Let's be a Sex Partners”
அரை மணி நேரத்திற்கு மௌனம் நிலவியது. நீண்ட நிசப்தத்தைத் தாங்க முடியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தேன். நான் அவனது தோளில் சாய்ந்து அழுதிருக்கக்கூடாது. என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தன்னுடன் வந்துவிடுமாறு கேட்டான். அதற்கு ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது.
நான் காதலித்த பெண்ணை என்னால் சொந்தமாக்கிக்கொள்ள முடியாததால், என்னைக் காதலித்தவனுக்குச் சொந்தமாகிவிட்டேன்.
காதல், ராகவி
நான் காதலித்த என் கணவனான தேவாவும், என்னைக் காதலித்த என் தோழியான நீலிமாவும் சேர்ந்து எனக்குத் தெரியாமல் ரகசிய வாழ்க்கை வாழ ஆயத்தமாகிவிட்டனர். இவையெல்லாம் எனக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பது என் கணவனுக்குப் பெரும் கவலையாக உள்ளது. இவையெல்லாம் எனக்குத் தெரிந்துவிட்டது என்பதை என் கணவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வதே எனக்கிருக்கும் கவலை. ஏனென்றால்...
Comments