How do you Manage your Time?
*
‘2022’ பற்றி எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு ரஞ்சித் என்னிடம் கேட்ட கேள்வி இது. காலை முதல் இரவு வரை எனது ஒரு நாள் எப்படி நகரும் என்பதே அவர் கேட்க நினைத்தது. நான் பத்திரிகைத்துறையில் பணியாற்றுபவன் என்பதால் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஷிஃப்டில் வேலை செய்ய வேண்டி வரும். இந்த நேரத்தில் இதைத்தான் செய்வேன் என்று சொல்ல முடியாது என்றாலும், எனது 24 மணி நேரத்தில் என்னவெல்லாம் இருக்குமென எழுதுகிறேன். 8 மணி நேர உறக்கம், 9 மணி நேரம் அலுவலகப் பணி போக மீதமுள்ள 7 மணி நேரத்தை எப்படிக் கழிப்பேனெனச் சொல்கிறேன்.
காலை எழுந்ததும் முதல் வேலையாகச் சூரியனை வெறும் கண்களால் பார்த்துவிடுவேன். விழித்துக்கொண்டதுமே உடலை அசைக்க வேண்டுமென்பதால் பல் துலக்குவதை நடந்துகொண்டே செய்வேன். காலை பத்து மணிக்குள் டி-ஷர்ட்டைக் கழட்டிவிட்டு வெற்றுடம்பில் 20 நிமிடங்கள் Sunbath எடுப்பேன். இந்நேரத்தில் புத்தகங்களை வாசிப்பேன். சூரியனைவிட அதிசிறந்து மருந்து எதுவுமில்லை. பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வைட்டமின் டி குறைபாடு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆகவே சூரியனைக் கண்டு அஞ்சி ஓடும் பழக்கம் முற்றிலும் போய்விட்டது. வெய்யிலின் கவிதை வரியொன்று நினைவுக்கு வருகிறது.
‘பனைமரங்கள் சூரியனுக்கு அஞ்சுவதில்லை
அம்மையே
எங்களை மேலும் கறுப்பாக்கு.’
இதன்பிறகு 10 நிமிடங்கள் தியானம். கைப்பேசியில் அலார்ம் வைத்துக்கொண்டு என் அறைக்குள் கண்களை மூடி அமர்வேன். தியானத்தின்போது எனக்குள் நிகழ்வதை பிறகு விரிவாக எழுதுகிறேன். தியானம் முடிந்ததும் காலை உணவு. எழுந்ததிலிருந்து இவை அனைத்தையும் முடிப்பதற்கு 1 மணி நேரம் ஆகும்.
ஞாயிற்றுக்கிழமையைத் தவிர்த்து ஒவ்வொரு நாளும் தவறாமல் ஒன்றரை மணி நேரம் தீவிர உடற்பயிற்சி. ஜிம் முடித்துவிட்டு வீடு திரும்பியதும் குளியல். அதன்பிறகு சப்ளிமென்ட் அல்லது ஏதேனும் உணவு/பழங்கள் எடுத்துக்கொள்வேன். இது முடிய 2 மணி நேரம் ஆகிவிடும்.
எழுத்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு மாதங்களில் ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம் எழுதினேன். அது இல்லாத நாட்களில் அந்த நேரத்தை வாசிப்புக்கு அளித்தேன்.
மதிய உணவு, இரவுணவு நேரத்தைச் சேர்த்து ஒரு மணி நேரம் என்று வைத்துக்கொள்வோம். மீதமுள்ள ஒரு மணி நேரம் சமூக வலைதளங்களுக்காக ஒதுக்கப்பட்டது. அதில் தினமும் இரவு அல்லது காலை அன்றைய நாளின் ஹம்சா பதிவிட்ட காணொளியைப் பார்த்துவிடுவேன். மீதமுள்ள 40 நிமிடங்களில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகியவற்றை நுகர்வேன்.
இவை அனைத்தும் எல்லா நாட்களும் ஒரே நேரத்தில் நடக்குமெனச் சொல்ல முடியாது. தியானம், உடற்பயிற்சி ஆகியவற்றை சில நாட்கள் காலையும், சில நாட்கள் மாலையும் செய்வேன். இந்த நேர அளவு தோராயமானது. கொஞ்சம் முன் பின் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில விஷயங்கள் தவறியும் போகலாம். விடுமுறை நாளில் யாரையாவது சந்திக்கச் சென்றுவிடுவேன்.
இப்போது Gratitude Journaling செய்வதால் காலை எழுந்ததுமே நன்றியுணர்வை வெளிப்படுத்தும் ஒரு விஷயத்தைத் தேதி போட்டு எழுதுகிறேன். இந்தாண்டிலிருந்து சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகு அதிகம் சாப்பிட வேண்டாமென முடிவெடுத்திருக்கிறேன்.
Comments